— அ. வரதராஜா பெருமாள் —
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)
இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள். இது ஒரு புறமிருக்க, பொதுமக்களின் அனைத்து எதிர்பார்க்கைகளையும் ஓர் அரசாங்கம் சில ஆண்டுகளுக்குள் திருப்திகரமாக நிறைவேற்றிவிட முடியாதென்பது தெரிந்ததே. ஆனாலும், மிக அடிப்படையான அரசியல் பொருளாதார விடயங்களில் மிகக் கூடுதலான அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்டு அவற்றிற்கு உரிய செயற்திட்டங்களை அரசாங்கம் காலம் தாழ்த்தாது முன்னெடுத்து நிறைவேற்றிக் காட்ட வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் பல்வேறு அரசியல் பொருளாதார விடயங்களின் இன்றைய நிலை என்ன? அவை தொடர்பில் இப்போதுள்ள அரசாங்கம் எந்தளவுக்கு மக்கள் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்றக்கூடிய திசையில் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்வது மிக அவசியமெனினும், இக்கட்டுரையில் அவ்வாறான எல்லாவற்றையும் பேசு பொருளாக்குவது சாத்தியமில்லை. பரந்துபட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசாங்கம் எந்தளவுக்கு பொருளாதார ரீதியான உறுதிப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது – நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை சாதிப்பதற்கு அவசியமான அடித்தளங்களை எந்தளவுக்கு இட்டிருக்கின்றது – இட்டுக் கொண்டிருக்கிறது. என்பவை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை பெறும் நோக்கில் இங்கு பிரதானமாக, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கொண்டிருக்கும் வாழ்க்கைத்தரத்தினை நிர்ணயிப்பதில் பிரதானமான இடத்தை வகிக்கின்ற அவர்களது பணரீதியான வருமானமும், அந்த பண வருமானத்தின் கொள்வனவு சக்தியும் என்ன நிலையில் உள்ளன என்பது பற்றி சுருக்கமானதோர் ஆய்வினையே இக்கட்டுரை வரையறையாகக் கொண்டுள்ளது….
“கூலி உயர உழைப்பு உயரும்
உழைப்பு உயர தொழில்கள் உயரும்
தொழில்கள் உயர நாடு உயரும்”
பொதுவாக பொருளாதாரத் துறைகளை விவசாயத் துறை (Agricultural Sector), ஆக்கத் தொழிற் துறை (Industrial Sector) மற்றும் சேவைத்துறை (Service Sector) என மூன்றாகப் பிரித்து ஆய்வுகளை மேற்கொள்வதே வழமை. இலங்கையில் ஆக்கத் தொழிற் துறை மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்களில் ஒரு சிறு பகுதியினரே தமது பிரதானமான வருமானத்தை தமது மூலதனம், சுய ஆற்றல், நிலம் மற்றும் உடைமைகளைக் கொண்டு பெறுகின்றனர். அதேவேளை இந்த துறைகளிலுள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தமது உழைப்பை வழங்கி கூலியாக அல்லது சம்பளமாக வருமானம் பெறுவதே அவர்களின் மொத்த வருமானத்தில் பிரதானமான பகுதியாக உள்ளது.
அதேவேளை, இலங்கை உழைப்பாளர்களில் 25 சதவீதமானோர் விவசாயத்துறையில் உள்ளனர். இங்கு விவசாய நிலத்தை உடைமையாகக் கொண்டுள்ள விவசாயிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு ஏக்கருக்கும் குறைவான பரப்பளவு கொண்ட நிலத்தை உடமையாகக் கொண்ட சிறு விவசாயிகளாகவோ அல்லது ஏழை விவசாயிகளாகவோ உள்ளனர். இங்குள்ள சிறு விவசாயிகளில் கணிசமான பகுதியினரும், ஏழை விவசாயிகளில் பெரும்பாலானவர்களும் தமது நிலங்களில் பயிர் செய்து கிடைக்கும் வருமானம் போதாமையால் விவசாயத்துறையிலோ அல்லது ஏனைய துறைகளிலோ கூலிக்கு அல்லது சம்பளத்துக்கு வேலை செய்பவர்களாக உள்ளனர். விவசாயத்துறையில் உள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் நிலமற்றவர்களாக அல்லது மிகவும் சிறிய நிலப்பரப்பை மட்டும் உடமையாகக் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் அனைவரினதும் பிரதானமான வருமானம் தமது உடல் உழைப்பை வழங்கி பெறப்படும் கூலியாகவே உள்ளது. இவ்வாறாக இலங்கையின் விவசாயத்துறையை கூர்மையாக அவதானித்தால் இத்துறையில் உள்ளவர்களில் முக்கால்வாசியினரின் பிரதானமான வருமானம் விவசாயத் துறையில் கூலி உழைப்பால் பெறப்படுவதாகவே உள்ளது.
நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வியலில் முன்னேற்றங்களை அரசாங்கம் சாதிக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கான பதில் பரந்துபட்ட மக்கள் உழைத்து பெறும் வருமானத்தின் மெய்யான பெறுமானம் என்ன என்பதிலேயே தங்கியிருக்கின்றது. அதாவது, அவர்களின் வாழ்வில் – உணவு, உடை, உறைவிடம், உடல் ஆரோக்கியம், தரமான கல்வி, வசதியான போக்குவரத்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உருவானவைகளில் அவசியமானவைகள் போன்றவற்றிற்கான அவர்களது வருமானம் எந்தளவு உள்ளது என்பது பிரதானமாகும். அதாவது அவர்கள் வாழும் அந்தந்த சமூக காலகட்டத்திற்கேற்ப – அவர்களின் சமூக நிலைக்கேற்ப அவசியமான பண்டங்களை போதிய அளவு பெறுகின்ற வருமான ஆற்றலை கொண்டிருக்கிறார்களா என்பதிலேயே மக்களினது வாழ்வியல் முன்னேற்றங்களையும் நாட்டினது உண்மையான முன்னேற்றத்தையும் மதிப்பிட முடியும்.
இலங்கையின் மிகப் பெரும்பான்மையான உழைப்பாளர்கள் – அவர்கள் எந்தத் துறையில் தொழிலாளர்களாக அல்லது ஊழியர்களாக இருப்பினும், அவர்கள் தமது வருமானத்துக்காக, தமது சக்திக்கு ஏற்ற உழைப்பை வழங்குகிறார்கள் என்றே கொள்ள வேண்டும். எனினும் அவ்வாறாக உழைக்கும் மக்களில் எத்தனை சதவீதத்தினர் தமது வாழ்க்கைக்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற பண்டங்களை போதிய அளவு கொள்வனவு செய்வதற்கும், அத்துடன், ஏனைய அவசியமான செலவுகளை மேற்கொள்வதற்கும் குறைந்தபட்சம் போதிய அளவுக்கு கூலியை அல்லது சம்பளத்தை பெறுகிறார்களா என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. இலங்கை மக்களிற் கணிசமான சதவீதத்தினர் மூன்று நேரத்திற்கான உணவைப் பெற முடியாதவர்களாகவும் போசாக்கற்ற உடல் நிலை கொண்டவர்களாகவும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டியவர்களாகவும் உள்ளனர் என்பது இலங்கையின் பொருளாதாரத்தினுடைய தராதரம் பற்றிய பெரும் சந்தேகங்களை கிளப்புகிறது. அதேவேளை, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுபவர்களிலும் எத்தனை சதவீதமானோர் அவரவரது சமூக நிலைக்கேற்ற கௌரவமான பொருளாதார வாழ்வியலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வியும் திருப்திகரமான பதிலைத் தருவதாக இல்லை.
நாணயத்தின் பெறுமதி அதன் இலக்கமல்ல
அது வாங்கும் பண்டங்களிலேயே உள்ளது
இலங்கையில் சுமார் 50 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கான பொருள் மற்றும் நிதி உதவியை அரசாங்கம் மேற் கொள்கிறது என்றால் அதன் அர்த்தம் என்ன? செல்வம் கொழிக்கும் அரசாங்கம் மக்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது என அதனைக் கூற முடியாது. மாறாக இலங்கையில் ஏறத்தாழ 25 சதவீதமான குடும்பங்கள் அரச கணக்குப்படி வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இலங்கையில் ஏழை விவசாயிகளாக உள்ளவர்கள், விவசாயக் கூலிகளாக உள்ளவர்கள், பெருந் தோட்டத் துறையில் கூலித் தொழிலாளர்களாக உள்ளவர்கள், ஆடை உற்பத்தித் துறையில் உள்ள பெரும்பாலான பெண் தொழிலாளர்கள், நகரப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் இவ்வாறான வகை தொழிலாளர்களின் குடும்பங்களை கீழ்நிலை மத்தியதர வருமானம் (Lower Middle Income) பெறும் குடும்பங்கள் என வகைப்படுத்த முடியாது. மாறாக, உழைத்து வாழும் ஏழைகள் என்பதே சரியாகும்.
2026ம் ஆண்டு ஆரம்பத்தில் அரச கணிப்பானது, இலங்கையில் சராசரியாக (4 உறுப்பினர்களைக் கொண்ட) ஒரு குடும்பம் மிக அடிப்படையான தேவைகளை மட்டும் பெறுவதற்கு மாதாந்தம் குறைந்த பட்சம் 60000 ரூபாவை வருமானமாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது. பொருட்களின் இன்றைய சந்தை விலைகளின் நிலைமையில் மிக அடிப்படையான சத்துக்களை உடைய உணவு வகைகளை நுகர்வதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், குறைந்த பட்ச ஆடைகளுக்கும், குறைந்த பட்ச வசதியான வீட்டினைக் கொண்டிருப்பதற்கும் கூட ஒரு குடும்பத்திற்கு சராசரியாக இந்த 60000 ரூபா போதாது என்பதை கண்டு கொள்வது சிரமமானது அல்ல. இப்படியான நிலையில் மருத்துகள் உள்ளிட்ட மருத்துவம், பரீட்சைகளினூடாக முன்னேறிச் செல்வதற்கான கல்வி, போக்குவரத்து மற்றும் சமூக உறவுகளுக்காக கட்டாயமாக ஏற்படும் தேவைகள் போன்றவற்றிற்கான செலவுகளை எந்தக் கணக்கில் கொண்டு போய் சேர்ப்பது?
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களாக, அதாவது ‘அஸ்வெசும’ உதவித் திட்டத்தின் கீழ் உட்படுத்தப்படாத சுமார் 38 லட்சம் குடும்பங்களில் எத்தனை லட்சம் குடும்பங்கள் ஓரளவாயினும் திருப்தியான, நிம்மதியான, ஆரோக்கியமான, குறைந்த பட்சம் வசதியான வாழ்க்கையினைக் கொண்டிருக்கிறார்கள் என கள ஆய்வு செய்தால் அது 50 லட்சம் குடும்பங்கள் வாழும் நாட்டில் 10 லட்சம் குடும்பங்கள் என்ற எண்ணிக்கையைத் தாண்டுமா என்றால் சந்தேகமே.
ஆபத்துகள் ஓரமாக படுத்துறங்கையில்
கவர்ச்சிகள் நடுமேடையில் நடனமாடுகின்றன.
2022ம் ஆண்டோடு ஒப்பிட்டால் நாட்டின் தேசிய வருமானம் அமெரிக்க டொலர் கணக்கில் பார்த்தால் 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. 2022ல் 360 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாகி இலங்கை நாணய பெறுமதி உயர்ந்து விட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியின் கையிருப்பாக இப்போது சுமார் 700 கோடி டாலர்கள் உள்ளது, 2025ம் ஆண்டின் செலவுகள் போக அரசாங்க வருமானத்தின் எஞ்சிய கையிருப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாவை தாண்டிய அளவுக்கு அரசாங்கத்தின் வருமானம் உயர்ந்து விட்டது என்றெல்லாம் அரச கணக்குகள் காட்டுகின்றன.
மாதாமாதம் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பதாகவும், சுற்றுலாத்துறையால் வரும் வருமானமும், வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் இலங்கையர்கள் உழைத்து அனுப்பும் அந்நியச் செலாவணியும் பாய்ந்து பாய்ந்து உயர்ந்து கொண்டிருப்பதை மத்திய வங்கியின் அறிக்கைகள் காட்டுகின்றன.
அதெல்லாம் சரியா பிழையா? அவை ஒவ்வொன்றும் தொடர்பான அடுத்த பக்க கணக்குகளை பார்க்க வேண்டாமா? என்ற ஆராய்ச்சி வேண்டியதில்லை. அரசாங்க அறிக்கைகளையும் அமைச்சர்களின் வாக்குகளையும் நம்புவோமாக! ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் இந்த வளர்ச்சிகள் மற்றும் உயர்ச்சிகள் எந்தளவுக்கு நாட்டு மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றங்களாக பிரதிபலிக்கின்றன என்பதுதான்.
● நாட்டு மக்கள் பெற்றோலுக்கோ எரிவாயுவுக்கோ கியூவில் இல்லை:
● வேண்டிய அளவு காசோடு கடைக்குப் போனால் அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை:
● நாட்டு மக்கள் சிறிய அளவில் கூட அரகலய மாதிரியான கிளர்ச்சிகளில் ஈடுபடாது அடக்க ஒடுக்கமானவர்களாக இருக்கிறார்கள்:
இந்த காட்சிகளை வைத்து பரந்துபட்ட மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத்தரம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்று கூற முடியுமா?
பாய்ந்து உயரும் விலையும்
ஊர்ந்து நகரும் கூலியும்
பரந்து பட்ட இலங்கை மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றம் அவர்களின் 2026ம் ஆண்டு பொருளாதார வாழ்வியலில் எந்தளவுக்கு பிரதிபலிக்கின்றது என்பதை முதலில் 2021ம் ஆண்டில் அது கொண்டிருந்த நிலைகளோடு ஒப்பீட்டு நோக்குவதே சரியானதாகும். 2022 ம் ஆண்டோடு ஒப்பிடுவது சரியானதாகாது. 2022ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் எல்லா வகையிலும் திடீரென வீழ்ச்சி நிலைக்கு சென்றிருந்தது. அதனை விபரிக்க வேண்டியதில்லை. 2023ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து படிப்படியாக இலங்கையின் பொருளாதாரம், முன்னேற்றப் பாதையில் அல்ல மாறாக மீட்சிப் பாதையிலேயே பயணிக்க ஆரம்பித்தது. அந்த மீட்சிப் பயணத்தின் தொடர்ச்சியையே இன்று வரை பார்க்கிறோம். இந்த விடயத்தில் 2022 தொடக்கம் 2024 வரை திரு ரணில் விக்கிரமசிங்கா சர்வதேச நாணய நிதியக்காரர்களின் வழிகாட்டுதலின்படி உருட்டி விட்ட சக்கரமே இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே இன்றைய பொருளாதார நிலையின் தராதரத்தை 2021ம் ஆண்டில் நிலவிய கூலி அல்லது சம்பளத்தின் அளவு மற்றும் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இன்று இலங்கை மக்கள் முன்னேற்றகரமான பொருளாதார வாழ்வியல் கட்டத்திற்குள் ஏறி விட்டார்களா? இல்லை இன்னமும் காலடி வைக்க வில்லையா என்பது பற்றிகூறமுடியும்.
நாட்டின் பரந்து பட்ட மக்களின் மெய்யான வருமானம் 2021ம் ஆண்டில் இருந்த நிலைமையையும் கடந்து முன்னேறி விட்டதா? இல்லவேயில்லை. இன்னமும் அதற்குக் கீழேதான் நின்று அவதிப்படுகிறது. 2021ம் ஆண்டோடு ஒப்பிட்டால் அனைத்து வகை பண்டங்களினதும் விலைகள் 120 சதவீதம் தொடக்கம் 150 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்த நிலையிலேயே இரண்டு மாதங்களுக்கு முதலும் இருந்தன. மிக அடிப்படையான பொருட்களின் விலைகளை அரசாங்கம் மிகவும் சிரமப்பட்டு 120 சதவீதம் அதிகரித்த நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் 150 சதவீதத்துக்கு மேல் விலைகள் அதிகரித்த பண்டங்கள் அப்படியேதான் உள்ளன.
இதனை ஈடு கட்டும் விதமாக நாட்டு மக்களின் கூலி மற்றும் சம்பளம் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் சராசரியாக பார்த்தால் அவை மொத்தத்தில் 50 சதவீதம் தொடக்கம் 75 சதவீதத்துக்கு உட்பட்ட அளவுக்கே உயர்ந்திருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த கூலி மற்றும் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்ச்சி தொடர்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், சர்வதேச நிலைமைகள் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்படும் வீழ்ச்சி அல்லது வளர்ச்சியின்மை காரணமாகவும் அனைத்து பண்டங்களினதும் விலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து உயர்ந்து செல்வதற்கான நிலைமைகளே உள்ளன. அந்நியச் செலாவணி ஒவ்வொன்றினதும் பெறுமதி இலங்கை நாணயத்தில் தொடர்ந்து மெது மெதுவாக அதிகரித்தபடியே உள்ளது. தற்போது மேற்காசியாவில் நிலவும் யுத்த மேகங்கள் ஏற்கனவே இலங்கையின் அனைத்து பண்டங்களிலும் 15 தொடக்கம் 20 சதவீதம் விலையேற்றங்களை மேலதிகமாக ஏற்படுத்தி விட்டன. பொருட்களினுடைய விலைகளின் ஏற்றத்துக்கான காரணங்கள் தொடருகின்றனவோ, இல்லையோ ஏறிய விலைகள் குறைவதில்லை என்பதே மரபாக உள்ளது.
மக்களுக்கான பொருளாதார விடுதலையை
சூழலின் கைதியான ஜனாதிபதி சாதிப்பாரா?
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அரச கட்டமைப்பில் நிலவும் லஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகள் இல்லாது செய்யப்பட வேண்டும் என்பதுவும், பாதாள உலக பொருளாதாரம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதுவும் மிகவும் அவசியமானவையே. இந்த விடயங்களில் அரசாங்கம் முன்னெடுக்கும் கடும் முயற்சிகளெல்லாம் இறுதியில் அடைய வேண்டிய இலக்குகளை வெற்றிகரமாக சென்றடையும் என்றில்லை. ஏனென்றால் நோய் பிடித்த முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பின் எல்லைகளுக்குள்ளேயே ஜனாதிபதி அநுரா தனது இலட்சியப் பயணத்தை மேற்கொள்கிறார். என்றாலும் குறிப்பிட்ட விடயங்களில் அவரது ஆட்சி இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. ஆனால் அவை மட்டுமே நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சிகளையோ, நாட்டு மக்களின் வாழ்வியலில் தொடர்ச்சியான முன்னேற்றங்களையோ நிகழ்த்திவிட மாட்டா என்பதை புரிந்து கொள்வது இங்கு மிக அவசியமாகும்.
உள்நாட்டின் அடிப்படையான தேவைகளுக்கான உற்பத்திகளை சுயசார்பு நிலையை நோக்கி நகர்த்துவதற்கான விருப்பங்கள் அரசிடம் இல்லையென்று இங்கு விவாதிக்கவில்லை. ஆனால் அதற்கான ஆற்றல்கள் கொண்ட பொறிமுறைகள் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் இல்லை. இலங்கையின் உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்திகளின் வளர்ச்சிக்கும் ஏற்றுமதிகள் வகையாகவும் தொகையாகவும் உயர்ச்சிகளை அடைவதற்கும் தேவையான அளவுக்கு மூலப் பொருட்களை, இடைநிலைப் பொருட்களை, மூலதனப் பொருட்களை மற்றும் முன்னேறிய தொழில்நுட்பங்களை தாராளமாக இறக்குமதி செய்யும் நிலையில் இலங்கை இல்லை.
எப்படியாயினும் வேண்டிய பண்டங்களின் உற்பத்திகளை அதிகரித்து விட்டால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறிவிடும் என நம்புவோராக அதிகம் பேர் உள்ளனர். ‘உற்பத்திகளை அதிகரித்தால் அவை தானாகவே அவற்றிற்கான கொள்வனவாளர்களை தேடிக் கொள்ளும்’ என்பதெல்லாம் எப்போதோ குப்பைக்கு போய்விட்ட கோட்பாடு. வேண்டிய பண்டங்களின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான பொருளாதார நிர்வாக கட்டமைப்பு காத்திரமானதாக – செயலாற்றல் உள்ளதாக நாட்டில், இல்லை. தொழில் முயற்சியாளர்கள் உற்பத்திகளை அதிகரிக்கின்ற போது அவற்றை சந்தைகளை நோக்கி கொண்டு செல்கிற சங்கிலித் தொடர் பொறி முறைகளும் அவசியம். இலங்கையைப் பொறுத்த வரையில் அது மிகவும் பலயீனமான நிலையே உள்ளது. நாட்டின் முதலீட்டாளர்கள் இப்போது தாங்கள் மேற்கொள்ளும் உற்பத்திகளை அளவாக செய்து தங்களது இருக்கும் பொருளாதார நிலையை தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாக உள்ளனர். பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் ஊர்கள் தோறும் அடுக்கு மாடி கடைகளைக் கட்டி வாங்கி விற்கும் வியாபாரங்களே தமக்கு பாதுகாப்பானவை எனக் கருதுகின்றனர்.
உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கங்கள் கொண்ட அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் எல்லாம் அழகாக வடிவமைக்கப்படுகின்றன ஆனால் அவை எதுவும் உற்பத்தித் துறைகள் சார் உண்மையான முயற்சியாளர்களை சென்றடைந்து ஊக்குவிப்பவையாக இல்லை. அரச நிர்வாக கட்டமைப்பில் அனைத்து பொருளாதாரத் துறைகளுக்கும் பல இலாக்காக்கள் இருக்கின்றன – பல பத்தாயிரம் பேர்கள் அதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் சம்பளத்துக்காக அலுவலகங்களை நிறைத்து நிற்பவர்களாக மட்டுமே உள்ளனர்.
வருமானங்கள் முதலாளிகளிடம் குவிய
சிக்கனமாக சீவிக்கும் சாதாரண மக்கள்
இலங்கை வாழ் பொது மக்கள் 2021ம் ஆண்டு கொண்டிருந்த கொள்வனவு சக்தி நிலையிலிருந்து சற்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமானால் இப்போதுள்ள சம்பளம் மற்றும் கூலி அளவை குறைந்த பட்சம் 30 சதவீமாயினும் அதிகரிக்க வேண்டும். அதனை அரசாங்கம் பணத்தை அச்சடித்து உயர்த்த முடியாது. அரசாங்கத்தின் வருமானமோ:-
● அரச கடன்களுக்கு வட்டியைக் கட்டுவதிலும்,
● அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும்,
● இளைப்பாறிய அரச ஊழியர்களுக்கு பென்சன் கொடுப்பதிலும்,
● அரச நிர்வாக கட்டிடங்களையும் அரச வாகனங்களையும் பராமரிப்பதிலும்
முடிவடைந்து விடுகிறது. மக்களுக்கான உதவித் திட்டங்களுக்குக் கூட அரசாங்கம் கடன் வாங்கித்தான் செலவளிக்கிறது. இந்த பரிதாப நிலையில் வெளியில் தெரியாமல் இருக்கவே அரசாங்கம் அழகு நடை போடுகிறது. கத்தி முனையில் இலங்கையின் பொருளாதாரம் கரணமடித்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்றே.
2022ம் ஆண்டு ரணில் – ராஜபக்ச ஆட்சி பொது மக்களின் வயிற்றைச் சுற்றி கட்டிய கயிறு இன்னமும் கழற்றப்படவில்லை – அப்போது சாதாரண மக்களின் நாக்கில் போடப்பட்ட சூடு ஆறாமல் இன்னமும் புண்ணாகவே உள்ளது. ஆனால், தேர்தற் காலத்தில் ஜனாதிபதி அநுரா கட்டுக்கட்டாக வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்டார் என்பதற்காக, அவற்றையெல்லாம் செய்து முடிக்க அவரிடம் மந்திரக் கோலா இருக்கிறது என கேள்வியை திருப்பிப் போட்டு கேட்கிறார்கள் தேசிய மக்கள் சக்திக்காரர்கள்.
வேதாளம் மீண்டும் முருங்கை ஏறாது எனும்
நம்பிக்கையில் இன்னும் தளராத மக்கள்
மிகப் பெரும்பான்மையான மக்கள் இன்னமும் மதிப்பிற்குரிய தோழர் அநுரா அவர்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேறிச் செல்லும் பாதையில் கொண்டு சென்று நிறுத்தி உயர்ந்தெழுந்து ஓடச் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்கள் மத்திய வங்கிக்குள்ளும் திறைசேரிக்குள்ளும் தனது அதிக அளவான நேரத்தை செலவளித்தால் மெய்யான பொருளாதார முன்னேற்றங்களுக்கான வியூகங்களைக் கண்டறிய மாட்டார். சுற்றிச்சுற்றி மேலும் தொடரும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான பொறி முறைகளை பரிசோதிக்கும் கூடத்திலேயே அவரது காலம் கடந்து போகும். அரசியற் களத்தில் அவர் திறமைசாலி என்பதை தனது நாவன்மைகளாலும் உடல் மொழியாலும் தொடர்ந்து நிரூபிக்கிறார் ஆனால் நாட்டின் பொருளாதார களத்தில் அவர் தனது கால்களை இன்னமும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் வகையாக நிலத்துக்கு இறக்கவில்லை.
2029ம் ஆண்டு தேர்தலுக்கு முதலில் பரந்துபட்ட இலங்கை மக்கள் தமது பொருளாதார வாழ்க்கைத்தரத்தில் மெய்யான முன்னேற்றங்களை அவர்களாக உணரக்கூடிய அளவுக்கு கௌரவ ஜனாதிபதி அநுரா சாதிப்பாரா அல்லது உண்மையான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு 5 வருடம் போதாது என்று சொல்லி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு கேட்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிவதில் இலங்கையின் அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
