இம்முறை நடைபெற்ற  கோவில் சடங்குகள்:           சில அவதானங்களும் ஆலோசனைகளும்

இம்முறை நடைபெற்ற  கோவில் சடங்குகள்:  சில அவதானங்களும் ஆலோசனைகளும்

பேராசிரியர் சி. மௌனகுரு—

அறிமுகம்:

—————

இம்முறை  சிறப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற கண்ணகியம்மன் சடங்குகளை மாத்திரமன்றி குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற சில சடங்குகளையும் முகநூல் மூலமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. 

முன்னைய காலச் சடங்குகள் போல அன்றி அதிலே பல மாற்றங்களை என்னால் அவதானிக்க முடிந்தது.   நேரில் அவதானித்திருப்பின் இன்னும் ஆழமாக அவற்றை நோக்கியிருக்கலாம்;  இது ஒரு  முகநூல்  அவதானிப்பே.  அதாவது இன்னொருவர்  பார்வையில் ஒளிபரப்பப்பட்ட  காட்சிகளினை மையமாக கொண்ட அவதானிப்பே என்பதனை இங்கு அழுத்திக் கூற விரும்புகிறேன்.

 நான் முகநூலில் அவதானித்தவை வருமாறு..

1.நவீனத்துவம்

—————————-  

ஒன்று அந்தச்சடங்குகள் பெற்ற நவீனத்துவம் ஆகும். 

1-ஒலி பெருக்கிகள் முழங்க 

2-வர்ணஜால விளக்குகளுடன்

3-நவீன அலங்கார  வளவுகளுடன் அச்சடங்குகள் நடைபெற்றன.  

இதற்கு முன்னாலும் இந்த நவீனத்துவம் ஆரம்பித்து விட்டனவாயினும் இம்முறை  இவை மிக அதிகம் போன்ற  ஒரு தோற்றம் காட்டின. 

2.ஒழுங்கு முறை

—————————–

கோவிலை நோக்கிசென்ற  அல்லது தீர்த்தம்  எடுக்கச்சென்ற அல்லது  பூசைபெட்டி எனும்  மடைப்பெட்டி காவிச்சென்ற  சில ஊர்வலங்களில் ஒரு ஒழுங்கு முறை காணப்பட்டது.   வளர்ந்த பெண்கள் ஒரு வரிசை  சிறுமிகள் ஒரு வரிசை என  வரிசையில் செல்லுகையில் ஒருவர் பின் ஒருவராக  அணிவகுத்தும் சென்றனர்.  அந்த நடை கமெராவை நோகியதாகவே இருந்தது. சிலவேளைகளில் வீடியோ கமராக்காரன் அவ் ஊர்வலத்தை தனக்கு ஏற்ப  வழி நடத்தியிருக்கவும் கூடும். 

அந்தக் காலத்தில் நான்  இச்சடங்குகளில் சிறு  வயதில் ஆர்வமாகப் பங்குகொண்டுள்ளேன்.      அக்காலத்தில்  கிராமங்களில்   சடங்குகளில் இந்த  ஒழுங்குமுறையை  நான் சுவாமி ஊர்வலங்களில் காணவில்லை. ஒழுங்கீனமே அங்கு ஓர் ஒழுங்காக அன்று  இருந்து, 

அந்த ஒழுங்கீனத்தில்  பங்குகொண்டோரின் பக்தி  உணர்ச்சி மிகுந்திருந்தது.   அதிலே ஒரு உண்மை  அர்ப்பணம் இருந்தது.  அவர்களின் குரவை ஓசை,  “அம்மாளே” எனும் அழைத்தல்  ஒலி அங்கு ஓர் பரவச நிலையைத் தரும். அது ஓர் கூட்டிசை. ஆனால் ஒழுங்கு வந்தால் ஒழுங்கிலேதான்  கவனம் குவியுமேயொழிய  உணர்ச்சி ஓடி விடும். அதாவது   உணர்ச்சி குறையும். உணர்ச்சி குறைந்தால் காட்சியே அங்கு பெரிதாகும், அந்தக் காட்சிப்படுத்தலே எனக்கு அதிகம் தெரிந்தது.   

பெண்களும் சிறுமிகளும் மடைப்பெட்டிகள் தலையில் தாங்கியும் குத்துவிளக்குகள்  கையில் கொண்டும் வரிசை வரிசையாகச் சென்றார்கள். இந்த ஒழுங்கு முன்னர் நாம் காணாத ஒன்று. அவர்கள் உடைகளிலும் நிறங்களிலும் கூட ஓர் ஒழுங்கு தெரிந்தது. 

3.ஊர்வலத்தில் ஆடல்கள்

—————————

ஊர்வலத்திலே இம்முறை பல புதிய ஆட்டங்களுடனும் கோல உடைகளுடனும் சிலர் செல்லக் கண்டேன்.  முகமூடி அணிந்தும்  மயிலாட்டத்துடனும் சிலர்  சென்றமை தென்னிலங்கை  சடங்குகளை நினைவூட்டின. பக்தி போய் ஒரு பெரும் கொண்டாட்ட  உணர்வே  மேலெழுந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. 

சில வேளைகளில் அந்த ஊர்வலங்கள் ஒரு சினிமா படம் பார்ப்பது போல எனக்கு தெரிந்தது. நாங்கள் இப்போது சினிமாக்களாலும்

டிவி சீரியல்களினாலும்

ஐ போன்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு பிம்ப உலகிலே வாழுகின்றோம்.  அதாவது ஒரு போலி  உலகிலே  வாழ்கிறோம். 

அந்த பிம்பங்களின் நகல்களை இந்தச் சடங்குகளிலே காணக் கூடியதாக இருந்தது. 

சினிமா நிஜமாகிவிட்டதை நேரில் காண்கிறோம். 

தொடர்பு சாதனங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள்

நகல்—-simulakra

நகலே உண்மையாதல் —- simulation, காலப்போக்கில் உண்மையைவிட நகலே  உண்மையாக நினைக்கப்படுவது—–   Hyper reality என்று மூன்று கட்டங்களைக் குறிப்பிடுவார்கள். 

சினிமா, தொலைக்காட்சி, ஐ போன் ஆகிய ஊடகங்கள் நகலை உண்மை போல காட்டி உண்மையான அந்த மூலத்தை மறக்க செய்து விடும் தன்மையன. 

இதனால் ஒறிஜினல் எனப்படும் அந்த மூலம் மறைந்துவிடுகிறது,   போலியான அல்லது புதிதாக  உருவாக்கப்பட்ட இந்த புது  விம்பமே உண்மையில் நிஜமானது என்ற கருத்து  விதைக்கப்டுகிறது.

 இது பிம்மபங்களின் காலம்,   உண்மையின் காலம் அல்ல என்பர். இதற்குப் பின்னால் ஒரு  நுகர்வுப்பண்பாடு இருக்கிறது. 

அது இலாபமீட்டும் பிம்பம். 

அதன் இலாபம் யாருக்கோ சென்று விடும். ஒரு வகையிலான பொருளாதாரச்  சுரண்டல். இந்தத்தன்மையை அந்தச் சடங்குகள் நமக்கு காட்டின. 

5,குடிப்பெருமைகளும் குடித் தனித்துவங்களும்

——————————

இன்னொன்றையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. சில கண்ணகி அம்மன் கோயில்களிலே குடிப் பெருமைகள் பேசப்பட்டன. மட்டக்களப்பின்  சமூகங்கள் சில குடி வழியில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தக் குடிவழி அழுத்தப்படும் இடங்கள் சில கோவில்களாகும். இம்முறை சில கண்ணகையம்மன் கோவில் ஊர்வலங்கள்கூட குடி குடியாக  நிகழ்த்தப்பட்டன. ஒரு குடி மற்றொரு குடியை விஞ்சும் வண்ணம் ஒரு குடிப்போட்டி நடந்ததையும் அவதானிக்க முடிந்தது. முன்னரும் இவை  உண்டு; ஆயினும் இவ்வளவு  அழுத்துமாக குடிப்பெருமை கூறப்பட்டமை குறைவு. 

சாதிப் பிரிவினைகளும்  குடி   வாதங்களும் மெல்ல  மெல்ல அகன்று, சமநீதி  சமத்துவம் என்ற கருத்துகள்  மேலோங்கும் இன்றைய கால கட்டத்தில் மீண்டும் பாரம்பரியம்  என்ற போர்வைக்குள் புகுந்து சாதிகள், குடிகள் எனப் பழமை நோக்கிச்  செல்வது போலவும்   வளர்ந்துவரும்  நமது இளம் குருத்துகளுக்கு அந்த பேதங்களை  ஊட்டுவது போலவும் அது காணப்பட்டது.   

அதற்கு ஒரு வலுவான அரசியல் சமூகப்பின்னணியும் உண்டு.  அது தனியாக ஆராயப்படவேண்டியது. 

மட்டக்களப்பின் சில பகுதிகளில்  சில சமூகத்திடையே குடி முறைகள் இன்றும் வழக்கில் உள்ளன. 

குடிமுறை என்பது பண்டைய  சமுக அமைப்பு மரபுகளில் இன்றும் எஞ்சி நிற்கும் சில எச்ச சொச்சங்கள். 

அவை பல இடங்களில் மாறி  வருகின்றன. 

குடிகளுக்குள்ளேயே சடங்கு நிலையில் ஓர் அசமத்துவம் உண்டு. 

சில கோவிகளில் சில குடிகளுக்கு முன்னுரிமைகளும் உண்டு. 

சில குறிப்பிட்ட குடிகளின் பெருமை வெளியில் வரக்கூடிய வகையில் சில ஊர்வலங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

ஓர் ஊரிலே நடைபெற்ற ஒரு சடங்கிலே சன்னியாசி குடி என்ற ஒரு குடி கூறப்பட்டது.   

அந்தக் குடியோடு ஏனைய குடிகளும் சேர்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இவ்வண்ணம் குடிப் பெருமையை சில கோயில் சடங்குகள் வலியுறுத்த 

அனைத்து குடிகளையும் சேர்த்துச் செல்லும் பண்பை இன்னும் சில கோயில்கள் வெளிப்படுத்தின. ஒரு மாற்றம் சடங்குகளில் தென்படுகின்றது. 

இங்கே பல குடிகள்  ஒன்றிணைந்து செல்லும் ஒரு  புதிய இணைப்பையும்  போக்கையும் அவதானிக்கக்  கூடியதாக இருந்தது.    

இந்த குடியும் அது ஏனைய குடிகளை இணைத்துச் செல்வதும் நுணுக்க ஆய்வு மேற்கொள்ளும் ஓர் ஆய்வாளனுக்கு கிடைத்த முக்கிய தரவுகளாகும். 

6,சடங்கிலே  சில புதுமைகள்

——————

சில சடங்கு முறைகளிலேயே பழமைகள் சென்றுவிட புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. 

உதாரணமாக உடுக்கு ஒலியோடும் சில வேளைகளில் பறையோடும் சொர்ணாளியோடும் ஆட வேண்டிய நாகதம்பிரான் ஆட்டங்கள் சில இடங்களில் நட்டுவ மேளத்தோடும் நாதசுரங்களோடும் நடைபெற்றன. 

மடைகள் வைக்கும் முறையிலும்  

அம்மன் அலங்காரங்களிலும் 

அம்மன் பாடல்கள் இசைக்கும் முறையிலும் அதற்கான பின்னணி இசையிலும்

உருவேறும் முறையிலும்

ஆடும் முறையிலும்

பூசாரியார்  குடம் வைக்கும் முறையிலும் சாட்டை அடி வாங்கும் முறையிலும்

கோவில் சோடனைகளிலும்  சில  மாற்றங்கள் தென்பட்டன. 

பூசாரிமார் தோற்றங்கள் சில  இடங்களில்  மாறி  இருந்தன. 

ஆடல்  ஆடல் ஆடல்  அதிகம்

—————————-

பறைகள் முழங்கின இன்னும் சில கோவில்களில் கேரள செண்டை மேளம் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.   

அவர்கள் மிகவும் வேகமாக அதனை அடித்தனர், அந்த ஒலி அனைவரையும் அதிரப்பண்ணின. 

அவர்களின் உடல் மொழியும்  அவதானிப்பிற்குரியது.  இந்த மேள ஒலிகளுக்கு தக சில இளசுகள் ஆணும் பெண்ணும் தாங்கள் அணிந்திருந்த  உடைகளுடன் ஆடிக்கொண்டு சென்றமை அவதானிப்பிற்குரியதானது.   

சிறு தெய்வக் கோவில்கள் என அழைக்கப்படும் இக்கோவில்களில் மாத்திரமல்ல  பெரும் தெய்வக்கோவில்கள் என அழைக்கப்டும் கோவில்களிலும் இந்த   அலங்காரங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஆடல்களும் அளவுக்கதிகமாகி விட்டனவோ  என்ற  எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் கோவில் செய்ற்பாடுகள் மிகுந்திருந்தன. 

அது சரியா பிழையா என்ற விவாதங்களும் முக நூலில் நடந்தேறின. 

இவை யாவும் ஒரு ஆராய்ச்சியாளனின் அவதானங்கள் இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும்  

வாழும் தமிழ் மக்களிடையே  இன்று கோவில்களில் நடைபெறும் நவீன சடங்கு முறைகளை ஆராய்வதும் சடங்குகள் மாற்றம் பெறும் காரணங்களையும்  சமூகவியல் உளவியல்  நோக்கில் ஆய்வதும் ஆய்வாளர்களின் கடமையாகும். 

அந்த ஆய்வு ஒரு சமூகப் புரிதலுக்கு வழி சமைக்கும். 

வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களின் கடமைகள்

————————–

இதனைச் செய்ய வேண்டியவர்கள் நமது பல்கலைக்கழகங்களில்   

இந்துவியல், சமூகவியல், மானிடவியல், உளவியல், நுண்கலை கற்பிக்கும் முது நிலை விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆவர். 

அவர்களிடமிருந்து சமூகம்  மாறிவரும் சடங்குகள் சம்பந்தமாக சமூகவியல், மானிடவியல், உளவியல், இந்துவியல், நுண்கலை

ஆய்வுகளை வேண்டி நிற்கிறது.  

சடங்குகள் போல வருடா  வருடம் நடக்கும்

ஆய்வு மாநாடுகள்

—————————-

பன்னாட்டு ஆய்வு மாநாடுகளை ஒரு சடங்கு போலவே வருடாவருடம் நடத்தி முடிக்கும்  சில பல்கலைக் கழகங்கள்

 மாறிவரும் சடங்கு முறைகள்  எனும் கருப்பொருளில் ஒரு ஆய்வு மாநாடு நடத்தலாமே. 

பல்கலைக் கழகம் மாத்திரமே இதனைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்களிடம் இதற்கான வசதி வாய்ப்பு, ஆட்பலம், பணபலம் உண்டு  என்பதனாலேயே இங்கு நான் பல்கலைக்கழகங்களைக் குறிப்பிட்டேன். 

 அவர்களை விட ஆய்வு நோக்கமுடைய எவரும்   இதனைச்செய்யலாம். 

நம்மைச்சூழ நடக்கும் மாற்றங்களையும்

அதன் ஆணி வேர்களையும்

புரிந்து கொள்ளும் முயற்சியாக அவை அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *