உண்மையைக் காணமறுக்காத ஒரு பத்திரிகையாளர் (டி.பி.எஸ். ஜெயராஜுக்கு  (1954–2026) ஒரு அஞ்சலி)

உண்மையைக் காணமறுக்காத ஒரு பத்திரிகையாளர் (டி.பி.எஸ். ஜெயராஜுக்கு  (1954–2026) ஒரு அஞ்சலி)

— லயனல் போபகே —

2026 மே 17 ஆம் திகதி  டி.பி.எஸ். ஜெயராஜ் தனது இறுதிக் கட்டுரையை  ‘தி மார்னிங்’ (The Morning) பத்திரிகையில் எழுதினார். பல வருடங்களாக அவரது கட்டுரைகள் வெளியாவதைப் போன்றே, எந்தவொரு ஆடம்பரமுமின்றி, தனது நீண்டகால நண்பரான வீரகத்தி தனபாலசிங்கத்தின் “பத்திரிகைத்துறையில் என் கதை” என்ற நூலுக்கு  ஒரு விமர்சனத்தை அவர் எழுதியிருந்தார்.  

சில வாரங்களுக்கு முன்னர் ஜெயராஜ் எழுதிய அந்த விமர்சனம் பத்திரிகையில் வெளியான தினம் அவரது மரணம் சம்பவித்தது. அவரது மறைவு, இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் அதன் ஒழுக்கம், நெறிமுறை சார்ந்த செயலூக்கம்  மற்றும் பரந்துபட்ட தன்மை ஆகியவற்றில் ஒப்பிட முடியாத ஒரு மாபெரும் படைப்புலகின் முடிவைக் குறிக்கிறது.

பலராலும் ‘டி.பி.எஸ்’ என்று அழைக்கப்படும் அவர், 1970களின் பிற்பகுதியில் ‘வீரகேசரி’ தமிழ் நாளிதழில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார். இலங்கை அதன்  ஒரு தலைமுறையினரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இன மோதலுக்குள் நுழையத் தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் இவருடைய பணியும் ஆரம்பித்தது. 

1980களின் முற்பகுதியில் இருந்து இலங்கை ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் குறித்து, ‘தி ஐலண்ட்’ (The Island), ‘தி ஹிந்து’ (The Hindu) மற்றும் பின்னர் ‘பி.பி.சி. தமிழ் சேவை’ ஆகியவற்றிற்கு விரிவான செய்திகளை அவர்  வழங்கினார்.

அவர் களத்திற்கு மிக அருகாமையில் இருந்து, பரந்த தகவல் தொடர்புகளின் உதவியோடு, மிக உன்னிப்பான கள ஆய்வுகளுடன் செய்திகளைத் தந்தார். நம்பகத்தன்மை என்பது மிகவும் அரிதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த ஒரு சூழலில், அவரது எழுத்துக்களை நம்பகமானதாக மாற்றியது இந்த உழைப்புதான்.

அந்த ஆபத்து ஒன்றும் சாதாரணமானது அல்ல. 1983 ஜூலையில் இலங்கையைக் உலுக்கிய தமிழர் எதிர்ப்பு இனக்கலவரம் (கறுப்பு ஜூலை), அவரது ஊடகக் குரலை வடிவமைத்தது. அப்போது நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்யும் உறுதியுடன் அவர் செயற்பட்டார்.. 

1987 அக்டோபரில், இந்திய இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக  இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சி.ஐ.டி.)  அவர் கைது செய்யப்பட்டார். இது அவருக்கு தீவிரவாத அமைப்புகள் மீது இருந்த ஆதரவினால் அல்ல, மாறாக அதற்கு நேர் எதிரானது. உத்தியோகபூர்வ அரசாங்கத் தகவல்களுக்கு முரணாக இருந்த, விடுதலைப் புலிகளின் தலைவர் மாத்தையாவுடனான ஒரு நேர்காணலை அவர் வெளியிட்டதே அதற்குக் காரணம்.

கடுமையான பொது அழுத்தங்களுக்குப் பிறகே ஜெயராஜ்  விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் 1988 ஆண்டின் பிற்பகுதியில் புலமைப் பரிசில் பெற்று  ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர், இறுதியில் கனடாவில் குடியேறினார். அங்கிருந்தபடியே, பாதுகாப்பான தூரத்திலிருந்து இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புடன் கூடிய எழுத்துப் பணியைத் தொய்வின்றி அவர் தொடர்ந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தபடியே, 1990களின் நடுப்பகுதியில் ‘மஞ்சரி’ என்ற சுதந்திரமான தமிழ் வார இதழைத் தொடங்கினார். அது இலங்கையின் அப்போதைய நிலைமைகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகப் பதிவு செய்தது. கடுமையான தாக்குதல்களும், நிதி நெருக்கடிகளும் 1995 ஆம் ஆண்டில்  அதனை மூடக் கட்டாயப்படுத்தின. இருப்பினும், அவர் தனது எழுத்தை நிறுத்தவில்லை. 

இந்தியாவின் அரசியல் சூழல்,  தமிழ் மக்கள் கலாச்சாரம்,  அவற்றுக்கும் இலங்கைக்குமான அரசியல் வரலாறுகள் மற்றும் குடும்பப் பின்னணித் தொடர்புகள் குறித்தும் வாராந்த பத்திகளைத் தொடர்ந்து எழுதினார். அவர் ஓய்வு பெறவில்லை; தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவும் இல்லை. இறுதி மூச்சு வரை அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

டி.பி.எஸ்.  அவர்களை அவரது சமகாலத்தவர்கள் பலரிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டியது, அவரது அசாத்தியமான துணிச்சல் மட்டுமல்ல, மாறாகத் தன் சொந்தச் சமூகத்தையே தவறிழைக்கும் போது பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதியும்தான். ஸ்ரீலங்கா அரசினாலோ அல்லது  விடுதலைப் புலிகளாலோ  இழைக்கப்பட்ட அனைத்துக் கொடூரங்களையும் அவர் ஒரே மாதிரியான தடயவியல் துல்லியத்தோடு (forensic precision) ஆவணப்படுத்தினார்.

அவர் ‘துரோகியாக முத்திரை குத்துதல்’ (traitorisation) என்று தான் அழைத்த அந்தப் போக்கின் பின்னணியைக் கண்டறிந்து எழுதினார். அதனை ஒரு ‘கொடிய கொயபெல்சியப் பிரச்சாரச் செயல்முறை’ (terrible Goebbelsian process) என்றும் அவர் வர்ணித்தார். அதாவது, எவ்வித ஆதாரங்களுமின்றி, வெறும் அரசியல் எதிரிகளைப் பிரச்சார பலத்தின் மூலமாகவே துரோகிகளாகப் பொய் முத்திரை குத்தும் ஒரு செயல்முறையே அதுவாகும்.

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் காலம் தொட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின்  எழுச்சி ஊடாகவும், பின்னர் மாற்று அரசியல் பாதையை முன்வைத்த எவரையும் திட்டமிட்டு அழித்தொழித்த விடுதலைப் புலிகளின் காலம் வரையிலும் இச்செயல்முறை எவ்வாறு பரிணமித்தது என்பதை அவர் துல்லியமாகத் தேடிக் கண்டறிந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னர்  பலராலும் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு பத்தியில், இந்த நகர்வை அவர் மிகத் தெளிவான நையாண்டியோடு இவ்வாறு வரைபடமாக்கிக் காட்டினார் ;  “நாற்பதுகளில், ‘ஐம்பதுக்கு ஐம்பது’  என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தமிழனும் துரோகியாவான். சுதந்திரத்திற்குப் பின், சமஷ்டி (Federalism) ஆட்சிக் கோரிக்கையை  நிராகரித்த எந்தவொரு தமிழனும் துரோகியாவான். அதன் பின்னர், தனித் தமிழீழத்தை எதிர்த்த எந்தவொரு தமிழனும் துரோகியானான். அதற்கும் பிறகு, ஆயுதப் போராட்டத்தைக் கண்டித்த எந்தவொரு தமிழனும் துரோகியானான்.” 

அவரது பத்திரிகைத் தொழில், இத்தகைய முத்திரைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும், அந்த முத்திரையை எந்தத் தரப்பு குத்தியது என்ற பாகுபாடின்றி, சமமான துல்லியத்தோடும் தார்மீகப் பொறுப்போடும் ஆவணப்படுத்தியது.

பேச்சுவார்த்தை மற்றும் ஜனநாயகச் செயன்முறை மூலமாகவே முன்னோக்கி நகர முடியும் என்று நம்பிய தமிழ் தலைவர்கள் மீது  ஜெயராஜ் தனிக் கவனம் செலுத்தினார். விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் “ஏகப் பிரதிநிதிகள்” என்ற வாதத்திற்கு இத்தலைவர்களின் அரசியல் தகுதிகளும் சர்வதேச அங்கீகாரமும் பெரும் சவாலாக இருந்த காரணத்தினாலேயே, அவர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்தப் படுகொலைகளை டி.பி.எஸ் மிகுந்த தார்மீகத் தெளிவோடு ஆராய்ந்தார். தமிழர்களின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பை அவர்கள் கைவிட்டதால் அல்ல, மாறாக அதற்காக அவர்கள் உறுதியாக நின்ற காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் அவர்களைக் கொன்றனர் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதை அவர் பலமுறை, தன் சொந்தப் பாதுகாப்பைப் பணயம் வைத்து பகிரங்கமாகக் கூறினார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) போன்ற அமைப்புகள் ஜெயராஜின்  ஆவணங்களையே பெரிதும் நம்பியிருந்தன. புலம்பெயர்ந்து வாழ்ந்த பல வாசகர்கள் இவரை நாடி ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. வேறு எங்கும் கிடைக்காத, ஒருதலைப்பட்சமான ஒற்றை வாதங்களுக்குள் சுருங்காத, யதார்த்தச் சிக்கல்களைப் புரிந்து கொண்ட, தன் சொந்தச் சமூகத்தையே சுயவிமர்சனம் செய்யத் தூண்டிய ஒரு நேர்மையான பத்திரிகைச் செயல்பாட்டை அவர் மட்டுமே வழங்கினார்.

அவரது நம்பகத்தன்மை இன எல்லைகளைக் கடந்து நின்றது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் என அனைத்து இலங்கையர்களும்  அவரை வாசித்தனர்; அவரை நம்பினர். தசாப்த காலங்களாக உண்மைகளைத் திரித்துக் கூற மறுத்ததன் மூலமாகவே அந்தப் பேராதரவையும் நம்பிக்கையையும் அவர் சம்பாதித்திருந்தார்.

தன்னால் சரிபார்க்க முடியாத எதையும் பிரசுரிக்காத ஒரு மனிதராகவே அவர் சகலராலும் மதிக்கப்பட்டார். செய்திகளை உண்மைதானா என மிக நுணுக்கமாகச் சரிபார்க்கும் அவரது அணுகுமுறையை, அவரது சக ஊழியர்கள் அவரது தனித்துவமான அடையாளமாகக் குறிப்பிட்டனர் — முந்திக் கொண்டு செய்தியை வெளியிடுவதில் அவருக்கு ஆர்வமிருக்கவில்லை, மாறாகச் சரியாக வெளியிடுவதிலேயே அவர் குறியாக இருந்தார். 

பலதரப்பிலிருந்தும் பொய்ப் பிரச்சாரங்கள்  சூழ்ந்திருந்த ஒரு சூழலில், அவரது அந்தத் ஒழுக்கநெறி வெறும் தொழில்சார்ந்த பண்பு மட்டுமல்ல, அது ஒரு வகையான எதிர்ப்பின் வடிவமுமாகும்.

அவர் விட்டுச் சென்ற மரபு என்பது ஒரு மாபெரும் ஆவணக் காப்பகம் (archive) ஆகும். நான்கு தசாப்த காலங்களாக அவர் செய்த செய்திச் சேகரிப்புகள், விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் அனைத்தும், ஒரு தமிழரின் பார்வையில் இலங்கையின்  இனப் பிரச்சினை குறித்த மிக விரிவான பத்திரிகை ஆவணமாகத் திகழ்கிறது. 

வருங்கால வரலாற்றாசிரியர்கள் கண்டிப்பாக இதனை நாடி வருவார்கள். இது வன்முறைகளையும் அரசியல் தோல்விகளையும் மட்டுமல்லாமல், கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் தனிநபர்கள், இடம்பெயர்ந்த சமூகங்கள், தள்ளிப்போடப்பட்ட கனவுகள் ஆகியவற்றை அந்தச் சமூகத்தோடு ஆழமாகப் பிணைந்திருந்த ஒருவரால் மட்டுமே தரக்கூடிய துல்லியமான விபரங்களோடு பதிவு செய்துள்ளது.

தமிழ் சமூகங்கள் தங்களின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து நிரந்தரமாக சிதறடிக்கப்பட்டதையும், அதனுடன் தொடர்ந்த அரசியல் அவலங்களையும் வேறு எவரும் எட்ட முடியாத துல்லியமான ஆவண நெறியோடு அவர் பதிவு செய்தார்.

அவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் புலம்பெயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு நாடோடிப் போக்கிலேயே கழித்த போதிலும், இலங்கை  மீதான அவரது அன்பும், அதன் ஜனநாயக எதிர்காலம் மீதான அர்ப்பணிப்பும் ஒருபோதும் குறையவில்லை. உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், தனது மறைவுக்குச் சற்று காலம் முன்பு வரை தொடர்ந்து கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு தனது பணியில் உறுதியாக இருந்தார். 

 தளராமல் நீடித்த அந்த  நிலைத்தன்மை, சோர்வடைய மறுத்த குணம் ஆகியவை, பத்திரிகைத்துறை என்பது அதன் உச்சக் கட்டத்தில் எத்தகையதாக இருக்க முடியும் என்பதற்கான மிகச்சிறந்த சான்றாகும்.

ஒருவர் தன் சொந்தச் சமூகத்தை நேசித்துக் கொண்டே, அதைப் பற்றிய உண்மைகளையும் தயங்காமல் பேச முடியும் என்பதை டி.பி.எஸ் நான்கு தசாப்தங்களாக நிரூபித்துக் காட்டினார். அந்தத் தார்மீகக் துணிச்சல் என்பது சமூக ஒற்றுமையைக் காட்டிக் கொடுக்கும் துரோகம் அல்ல, மாறாக அதன் ஆகச்சிறந்த வெளிப்பாடாகும். நேர்மையை வற்புறுத்துபவர்கள் மீது மிக எளிதாக வீசப்படும் ‘துரோகி’ என்ற முத்திரை, அதை குத்துபவர்களின் தரத்தைத் தான் காட்டுகிறதே தவிர, யாருக்குக் குத்தப்பட்டதோ அவர்களைப் பற்றி அது எதையும் சொல்வதில்லை.

டி.பி.எஸ்.  உண்மைகளை உரக்கச் சொன்னதன் மூலமாகவே வாழ்வைக் கொண்டாடினார். தனது உயிருக்கே ஆபத்து வந்தபோதிலும், தனது பத்திரிகையை இழக்க நேரிட்ட போதும், அதன் பின்னர் தசாப்தங்களாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்திலும் அவர் அதைச் செய்தார். பத்திரிகைத் துறையாகவும், அதே சமயம் காலத்தின் சாட்சியமாகவும் நிமிர்ந்து நிற்கும் ஒரு மாபெரும் படைப்புலகத்தை அவர் புலம்பெயர் வாழ்விலும் கட்டியெழுப்பினார்.

அவர் விட்டுச் சென்ற அந்தப் பெருவெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஒருவேளை அது நிரப்பப்படாமலேயே கூடப் போகலாம். அவருடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் அவரை அறிந்த அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவர் விரும்பியபடியே, நாம் அவரை மிகவும் நிதானத்தோடும், நேர்மையோடும், அவர் நமக்கு விட்டுச் சென்ற உன்னதமான பணிகளுக்கான நன்றியுணர்வோடும் கௌரவிப்போம்.

( கட்டுரையாளர் ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி.) முன்னாள் பொதுச்செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *