புலம்பெயர் சமூகத்தின் ஆபத்தான நினைவேக்கம்

புலம்பெயர் சமூகத்தின் ஆபத்தான நினைவேக்கம்

— குமுளன் —

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அல்லது வசதியான மேலைநாட்டுப் புறநகர்ப் பகுதிகளில் காலிஸ்தான் ஆதரவுப் பேரணிகளைப் பார்க்கும் போதெல்லாம், இரத்தக் கறை படிந்த பின்னணியைக் கொண்ட ஒரு அரசியல் நாடகத்தை (cosplay) நான் பார்ப்பது போல உணர்கிறேன்.

கொடி பிடிப்பவர்கள். முழக்கங்கள். தியாகிகளின் சுவரொட்டிகள். மைக் முன்னால் கத்திக்கொண்டிருக்கும் ஆவேசமான மனிதர்கள். மிசிசாகா, சவுத்தோல், சர்ரே அல்லது மெல்போர்னில் பிறந்த இளைஞர்கள், தாங்கள் கூவி விற்கும் இந்த ‘விடுதலை’யினால் ஏற்படும் பின்விளைவுகளை ஒருநாளும் அனுபவிக்காதவர்களாய், அதீத நம்பிக்கையுடன் விடுதலை பற்றி முழங்குகிறார்கள்.

மத்திய வெப்பமூட்டும் (central heating) வசதியுள்ள வீடுகளில் அமர்ந்து கொண்டு புரட்சி பற்றிப் பேசுவது மிகவும் வீரமாகத்தான் இருக்கிறது. தெளிவாக இருப்போம். 

சீக்கியர்களின் கதை ஒரு வேடிக்கை கதையல்ல. 1984-ல் நடைபெற்ற ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ ஆயுத நடவடிக்கை ஒரு பெரும் துயரம். பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தமை  சீக்கியர்களின் ஆன்மாவையே  பிளந்து போட்டது. அதைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் படுகொலை, அதன் விளைவாக நடந்த சீக்கிய எதிர்ப்புப் படுகொலைகள்—அங்கே அப்பாவிச் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது, அல்லது அதற்குத் துணை போனது.

சீக்கியர்களின் வலியை யாரும் ஏளனம் செய்யக்கூடாது. அந்தப் போராட்டங்களை அவை ஏதோ கனடா நிலக்கீழ் அறையில் (அடித்தளத்தில் basement) அமர்ந்து உருவாக்கப்பட்டவை என்று யாரும் நினைக்கக்கூடாது.

ஆனால், வலி என்பது அரசியல் நிகழ்ச்சித் திட்டமாகாது. துக்கம் என்பது அரசியலமைப்பு ஆகாது. ஏக்கம் என்பது தேசத்தைக் கட்டமைக்காது.

காலிஸ்தான் இயக்கம் அதன் வன்முறைப் பாதையில் படுகொலைகளையும், பயத்தையும், பஞ்சாபையே முடக்கும் நிலையையும் உருவாக்கியது. பின்னர், 1985-ல் ஏர் இந்தியா விமானம் 182 அட்லாண்டிக் கடலுக்கு மேல் வெடித்துச் சிதறியது; அதில் 329 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் கனடியர்கள். இது இந்தியாவின் பேரழிவு அல்ல; கனடாவின் வரலாற்றில் மிக மோசமான வெகுஜனக் கொலை. இன்று பஞ்சாப் பெரும்பான்மையாக அதிலிருந்து மீண்டு முன்னேறிவிட்டது.

இந்தியாவில் வாழும் சராசரி சீக்கியர், பிராம்ப்டனில் இருந்து வரும் பிரிவினைவாத வாட்ஸ்அப் செய்திக்காகக் கத்தியைத் தீட்டிக்கொண்டு காத்திருப்பதில்லை. இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் இன்றும் தீவிரமான சீக்கியர்களாகவே இருக்கிறார்கள்—மதம், தலைமுடி, குருத்வாராக்கள், லங்கர், பஞ்சாபி பெருமிதம், தொழில் முனைவோர் திறன் என அனைத்தும் அப்படியே இருக்கின்றன.

ஆனால் அவர்கள் இந்தியர்களாகவும் இருக்கிறார்கள்.

இதைத்தான் புலம்பெயர்ந்த போராட்டக்காரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அடையாளம் என்பது தானாகவே பிரிவினையைக் கோருவதில்லை. இறந்தவர்களைக் கௌரவிக்க நீங்கள் கல்லறையை மீண்டும் தோண்ட வேண்டியதில்லை. 1984-ஐ நினைவுகூர, 2026-ம் ஆண்டில் 1984-ஐப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்க  வேண்டியதில்லை.

ஏனென்றால், நெருப்பை நேரில் கண்டவர்கள் நெருப்பை இனிமை தரும் உணர்வாக காண்பிக்க மாட்டார்கள். பழைய போர்களைப் பளபளப்பாகத் துடைத்து, சட்டமிட்டு, மாலை சூட்டி வைத்திருப்பது புலம்பெயர்ந்தவர்கள்தான்.

இங்கேயே ஈழத் தமிழர்களும் அதே ஓட்டைப் படகில் தான் அமர்ந்திருக்கிறார்கள்.

எங்களிடம் புலம்பெயர்ந்தவர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.

டோரண்டோ, பாரிஸ், லண்டன், சூரிச், ஒஸ்லோ மற்றும் சிட்னியில் வசிக்கும் இளைஞர்கள், என்றுமே இல்லாத ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ சீருடை போல LTTE டி-ஷர்ட்களை அணிந்து திரிகிறார்கள்.

அவர்கள், “நான் தமிழன். நான் ஈழத்தமிழன்,” என்கிறார்கள்.

அற்புதம். உணர்ச்சிகரமானது. நாடகத்தனமானது.

ஆனால், மன்னிக்கவும் மச்சான். ஈழம் என்பது நாடல்ல. அங்கே பாஸ்போர்ட் கவுண்டர் இல்லை. மத்திய வங்கி இல்லை. தேசிய விமான சேவை இல்லை. உங்கள் வருகையை முத்திரையிட்டு வரவேற்கும் சுங்க அதிகாரி இல்லை.

நீங்கள் இலங்கைத் தமிழர்கள்.

இது அவமானமல்ல. சரணாகதி அல்ல. இது புவியியல் உண்மை.

நீங்கள் இலங்கைத் தமிழராக இருந்து கொண்டே சிங்கள-பௌத்த அரசைத் தண்டிக்க முடியும். இனப்படுகொலை பற்றிப் பேச முடியும். முள்ளிவாய்க்காலை உங்கள் எலும்புகளில் சுமக்க முடியும். மக்களைக் கொன்று, ஒடுக்கி, காணாமல் போகச் செய்து, பட்டினி போட்டு, அவமானப்படுத்திய எந்தவொரு அரசாங்கத்தின் முன்னாலும் மண்டியிட மறுக்க முடியும்.

ஒரு கொடி இல்லையென்பதற்காக உண்மை துரோகமாகிவிடாது.

ஆம், நாங்கள் இனப்படுகொலைக்கு உள்ளானோம். ஆம், நாங்கள் ஒடுக்கப்பட்டோம். எங்கள் மொழி, கல்வி, நிலம், கண்ணியம் மற்றும் உயிர்கள் தாக்கப்பட்டன.

ஆனால், நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் மீட்சியை  வழங்கவில்லை.

தமிழகம் வரவில்லை. இந்தியா காப்பாற்றவில்லை. மேற்கத்திய நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டன. ஐ.நா கவலை தெரிவித்தது. உலகம் இதைப் பார்த்தது, விவாதித்தது, காலதாமதம் செய்தது, பிறகு மதிய உணவுக்குச் சென்றது.

இறுதியில், எங்களுடைய மக்கள் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், விதவைகள், அனாதைகள், காயமடைந்தவர்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுடன் விடப்பட்டனர். 

ஆனால் புலம்பெயர்ந்தவர்கள், குப்பைகள் முறையாக அள்ளப்படும் நகரங்களில் கொடிகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.

இப்போது என்ன?

அடையாளத்தைப் பாதுகாக்கப் பிரிவினைவாதமே ஒரே வழி என்று நாம் இன்னும் நடித்துக்கொண்டிருக்க வேண்டுமா?

இன்று அதனால் நமக்குக் கிடைப்பது என்ன?

ஒரு தபால் தலை? தேசிய கீதம்? மாலை அணிந்த ஜனாதிபதி? தேங்காய் அபிவிருத்தி அமைச்சர்? வெள்ளை வேட்டி அணிந்து வந்து ரவுண்டானாக்களைத் திறந்து வைக்கும் ஒருவர்? ஆனால்,அதே நேரத்தில் இளைஞர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் நிலத்தில் கோடு கிழித்து அதைத் தமிழ் மண் என்று  அழைத்தாலும், பிறகு என்ன? மற்றவர்களை நிலம் வாங்கவிடாமல் தடுப்பீர்களா? இடம்பெயர்வை நிறுத்துவீர்களா? நினைவுகளைச் சட்டமாக்குவீர்களா? முள்வேலி போட்டு கலாச்சாரத்தைப் பாதுகாப்பீர்களா?

இல்லை.

கலாச்சாரம் எல்லைகளால் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை.

கலாச்சாரம் அதிகாரத்தால் பாதுகாக்கப்படுகிறது.

இந்த நூற்றாண்டில், அதிகாரம் என்பது பொருளாதாரம்.

நாம் தமிழ் பகுதிகளைப் பாதுகாக்க விரும்பினால், நிலத்தை வாங்குங்கள். பள்ளிகளைப் பாதுகாக்க விரும்பினால், நிதி வழங்குங்கள். மொழியைப் பாதுகாக்க விரும்பினால், அதைச் சரியாகக் கற்றுக்கொடுங்கள். பழைய வீடுகளைச் சீரமைக்கவும். கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கவும். எழுத்தாளர்களுக்கு ஆதரவளியுங்கள். நூலகங்களைக் கட்டுங்கள். அருங்காட்சியகங்களை உருவாக்குங்கள். கல்வி உதவித்தொகை வழங்குங்கள். விவசாயத்தில் முதலீடு செய்யுங்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். நம் மக்களைப் பொருளாதார ரீதியாக யாராலும் புறக்கணிக்க முடியாதவர்களாக ஆக்குங்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் செல்வச் செழிப்பாக ஆக்குங்கள். கல்வி கற்ற சமூகமாக ஆக்குங்கள். அழிக்க முடியாத அளவுக்கு வலிமையாக்குங்கள்.

இதற்குப் பதிலாக, புலம்பெயர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?

பெரும்பாலும், ஒவ்வொரு கிராமத்திலும் அடுத்த கிராமத்தை விடப் பெரியதாக ஒரு கோயில் கட்ட மில்லியன் கணக்கில் பணத்தை அனுப்புகிறார்கள். நியான் விளக்குகள், பளிங்குத் தரை, பிரம்மாண்டமான ஸ்பீக்கர்கள், தங்க வண்ணம், கமிட்டிகள். ஈகோ. அதைவிடப் பெரிய ஈகோ.

மிகவும் ஆன்மீகம். மிகவும் சத்தம்.

இதற்கிடையில், நூலகங்கள் எங்கே? தொழில்நுட்பக் கல்லூரிகள் எங்கே? தமிழ் ஆராய்ச்சி மையங்கள் எங்கே? கல்வி உதவித்தொகை எங்கே? மனநல மையங்கள் எங்கே? ஒரு திருவிழா காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும் ஆவணக் காப்பகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் எங்கே?

“நாம் தமிழ் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

சரி. ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்போம்.

இலங்கைத் தமிழரின் அடையாளம் என்ன?

அது வெறும் தமிழ் மொழி மட்டுமா? அப்படியானால் தமிழகத்தவர்களிடமிருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? நம்முடைய உச்சரிப்பா? உணவா? வறண்ட நகைச்சுவையா? யாழ்ப்பாணத்தின் திமிரா? வன்னியின் மீள் எழுச்சியா? மட்டக்களப்பின் பாடல்களா? கல்வியின் மீதான மோகமா?

நம் பிள்ளைகளுக்குப் பால் புட்டு, ஒடியல் கூழ், பனை, குமுளமுனை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை பற்றித் தெரியுமா? அல்லது அவர்களுக்குக் கொடியைப் பற்றி மட்டும்தான் தெரியுமா?

கொடியை ஏந்துவது எளிது. கலாச்சாரம் என்பது கடினமானது.

ஒரு கையால் கொடியை ஏந்திக்கொண்டு, மறு கையால் உங்கள் பாட்டியின் மொழியை மறந்துவிட முடியும்.

அதுதான் பாசாங்குத்தனம்.

இப்போது LTTE பற்றிப் பேசுவோம், ஆனால் நம் வரலாற்றைச் தெருச்  சண்டையாக மாற்றாமல் பேசுவோம்.

பல தமிழர்களுக்கு, LTTE என்பது ஏதோ ஒரு தத்துவமல்ல. அது துக்கம், பாதுகாப்பு, தியாகம், பயம், பெருமை, இழப்பு, நினைவு மற்றும் உயிர்வாழ்வு ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அரசு கைவிட்டு, உலகம் புறக்கணித்த ஒரு சமூகத்தைப் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். அந்தத் தியாகத்தை மலிவாக எடைபோட முடியாது.

ஆனால், மரியாதை செலுத்துவது என்பது கண்மூடித்தனமாக இருப்பதல்ல.

ஆயுதப் போராட்டம் உண்மையான ஒடுக்குமுறையிலிருந்தே பிறந்தது. ஆனால், அது பல கடினமான கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது, அதை நாம் இன்றும் நேர்மையாக விவாதிக்கத் தயங்குகிறோம்: ஜனநாயகம், மாற்றுக்கருத்து, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், போட்டி தமிழ் இயக்கங்கள், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய பொதுமக்கள், சாதாரண குடும்பங்கள் கொடுத்த விலை.

முழக்கங்களாகச் சுருக்கி நம் இறந்தவர்களை நாம் கௌரவிக்க முடியாது.

கண்ணியத்துடன் உண்மையைச் சொல்வதன் மூலமே அவர்களைக் கௌரவிக்கிறோம்.

இதனால்தான், கனேடிய இளைஞன் ஒருவன் LTTE டி-ஷர்ட்டை வார இறுதி ஃபேஷனாக அணிவதை என்னால் பார்க்க முடியவில்லை. நான் மறந்ததினால் அல்ல, நான் நினைவில் வைத்திருப்பதால்தான். போரினால் குடும்பங்கள் என்னவாகின்றன என்பதை நான் அறிவேன். அடையாளங்கள் எவ்வளவு கனமானவை என்பதை நான் அறிவேன். தங்களின் பிள்ளைகள் சுவரொட்டிகளாக மாறுவதற்காகத் தாய்மார்கள் அவர்களை வளர்க்கவில்லை என்பதை நான் அறிவேன்.

அவன் அடையாளத்தைத்தான் பெற்றுக்கொண்டான், விளைவுகளை அல்ல. அதுதான் ஆபத்தானது.

கனடாவில் நடக்கும் காலிஸ்தான் முழக்கம் என்பது சீக்கியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. அது நமக்கான ஒரு கண்ணாடி.

புலம்பெயர்ந்த சமூகம் காலத்தின் சுவடுகளில் சிக்கிக்கொள்ளக்கூடும் (trapped in amber). தாயகத்தில் இருப்பவர்கள் வாழ்வாதாரத்தைத் தேர்ந்தெடுத்து நெடுங்காலத்திற்குப் பிறகும், புலம்பெயர்ந்தவர்கள் கோபத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். சத்தத்தை அதிகாரமென்றும், ஏக்கத்தைச் செயல்திட்டமென்றும், தியாகத்தை ஆட்சியென்றும், கொடியை எதிர்காலமென்றும் தவறாகப் புரிந்துகொள்ள முடியும்.

நாம் அப்படி ஆகிவிடக்கூடாது.

நமக்கு இன்னொரு போர் தேவையில்லை. நாம் இருப்பதைக் காட்ட இன்னொரு தபால் தலை தேவையில்லை. வெறும் குறைபாடுகள், முழக்கங்கள், தியாகி சுவரொட்டிகள் மற்றும் பழைய போர்க்கள வரைபடங்களை மட்டும் வைத்து வளர்க்கப்படும் இன்னொரு தலைமுறை நமக்குத் தேவையில்லை.

நமக்குக் கல்வி தேவை. பொருளாதாரம் தேவை. நில உரிமை தேவை. தீவிரமான அரசியல்வாதிகள் தேவை.

வீட்டிலேயே கலாச்சாரத்தைக் கற்றுக்கொடுக்கும் குடும்பங்கள் தேவை. அடையாளத்தை இறந்த போராளிகளிடமும், திருவிழாக் கமிட்டிகளிடமும் அடகு வைக்காத குடும்பங்கள் தேவை.

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைப் பாரிஸில் புலம்பெயர்ந்த ஒரு இளைஞன் அணிந்திருக்கும் புலி டி-ஷர்ட் காப்பாற்றாது.

கிளிநொச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெறும் ஒரு குழந்தைதான் காப்பாற்றும். முல்லைத்தீவில் தனது நிலத்தைத் தன் கைவசம் வைத்திருக்கும் விவசாயி காப்பாற்றுவார். யாழ்ப்பாணத்தில் பிரச்சாரமின்றி வரலாற்றைப் படிக்கும் சிறுமி காப்பாற்றுவார். புலம்பெயர்ந்து வாழும் தொழிலதிபர் கோயிலுக்கு ஒலிபெருக்கி வாங்குவதற்குப் பதில் வேலைவாய்ப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் காப்பாற்றுவார். முழக்கங்களை விட அறிவுள்ள அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள்.

நாம் வலிமையானவர்களாக, கல்வி கற்றவர்களாக, செல்வந்தர்களாக, வேரூன்றியவர்களாக, ஜனநாயகவாதிகளாக, கலாச்சார ரீதியாக உயிர்ப்புள்ளவர்களாக, பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்க முடியாதவர்களாக மாற வேண்டும்.

அடுத்த தலைமுறையை ஒரு வரைபடத்துக்காகச் சாகச் சொல்வதன் மூலம் அல்ல.

அவர்கள் வாழ்வதற்குத் தகுதியான எதையாவது பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதன் மூலம்.

நன்றி: JaffnaMonitor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *