— அழகு குணசீலன் —
“விடுதலைப்புலிகள் இன அடிப்படையில் நாட்டைப்பிரிப்பதற்கு முஸ்லீம்களே முதல் பெரும் தடையாக அமைந்தனர்.” என்று கூறியுள்ள ஷூரா கவுன்சில், விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலும், அரச படையினரின் போர் வெற்றியிலும் முஸ்லிம் சமூகத்தின் பங்கை மெச்சிப்புகழ்ந்திருக்கிறது.
முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரில் ஆற்றிய பங்குக்கு உரிமைகோரியும், அங்கீகாரம் கோரியும் தேசிய ஷுரா சபை( NATIONAL SHOORA COUNCIL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளது.
இலங்கையில் ஏக காலத்தில் வடக்கு கிழக்கில் போரின் தோல்வியை நினைவு கூர்ந்து தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவு கூர்ந்து கஞ்சியை தேங்காய் சிரட்டை யில் பகிர்ந்து கொண்ட இதயம் கனத்த வலியின் கணத்தில், தெற்கில் போர்வீரர்கள் தினம் -போர் வெற்றி தினமாக ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு படையினரை சிப்பாய்கள் என்று விழித்த ஜனாதிபதி இவ்வாண்டு ஒரு படி மேலேறி போர்வீரர்கள் என்று விழித்திருந்தார் என்பது அவர் இனவாத விமர்சனங்களுக்கு அடிபணிந்து விட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
மே 19, அன்று பத்தரமுல்லவில் 17 வது தேசிய போர்வீரர்கள் தின நினைவு விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை ஷூரா மேற்கோள் காட்டிய கடிதம் அது.
“இலங்கை மற்றொரு போரை சந்திக்க அனுமதிக்கப்படாது என்றும் நாட்டில் இனவாதத்தீவிரவாதத்திற்கு இடமிருக்காது என்றும், தேசம் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகச்சொந்தமானது” என்றும் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு தடவிக் கொடுத்துக் கொண்டு, போரில் – முள்ளிவாய்க்கால் அழிப்புக்கு முஸ்லீம்களின் பங்களிப்புக்கு பங்கு கேட்கிறது ஷூரா, என்றே கொள்ளவேண்டியுள்ளது.
சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இடையே மோதல்களையும் பிரித்தாளுகையையும் பேரினவாதம் எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு மாமேதை லெனின் கூறிய எச்சரிக்கை வாசகம் ஒன்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனினும் இந்த பதிவில் அதை மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
“மூன்று இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்த பின்னர் மூன்றாவது இனத்திற்கும் அதே கதிதான் நடக்கும்.” என்பது லெனினின் தேசிய இனப்பிரச்சினை குறித்த சிந்தனை.
இந்தக் கருத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து செயற்பட்ட காலத்தில் தங்கள் நிலைப்பாட்டிற்கு உரம் சேர்க்கவும் முஸ்லிம் சமூகத்தை எச்சரிக்கவும் மேடைகளில் அடிக்கடி பயன்படுத்தினார். இன்றைய முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அது அஷ்ரப்பின் வாசகம் என்று கூட தவறாக சொல்லும் அளவுக்கு அது பிரபல்யம் பெற்றும் இருந்தது.
லெனினின் இந்த வாசகத்தின் -எச்சரிக்கையின் உண்மையை யுத்தம் முடிவடைந்த சில ஆண்டுகளில் கொரனா காலத்திலும் கோத்தபாய ஆட்சியிலும் முஸ்லிம்கள் அனுபவித்தார்கள். இதை “தற்செயல்” என்று மூன்றாவது கண்ணும் எழுதி திருப்பி அடித்தால் அது அநியாயமானது. இன்றைய ஆட்சியிலும் முஸ்லீம்களின் வாழ்வில் மழைவிட்டும் தூவானம் ஓயவில்லை.
தேசிய ஷூரா சபையின் அந்த கடிதம் பேசுகின்ற முக்கியமான அம்சங்கள் இலங்கையின் சமகால அரசியலில் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. கடந்த காலத்தை திரும்பிப்பார்ப்பதற்கும் எதிர்காலத்தை நோக்குவதற்கும் அவசியமானவை.
ஷூராவின் கடிதம் பேசுகின்ற முக்கிய உள்ளடக்கங்கள் கீழே.
(*) விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயதப்படைகளின் வெற்றியை பாராட்டிய ஷூரா …… எனினும் இந்த நினைவுகூரல் ஆயதப்படைகளுடன் மட்டும் நின்று விடக்கூடாது என்று ஜனாதிபதியை கோருகிறது.
” ஈரான் மற்றும் பாகிஸ்தானின் அளவிடமுடியாத ஆதரவை மறந்து விடாமல், அப்போதைய ஜனாதிபதியின் பங்களிப்புகளையும், அரசு முழுமையாகவும், வெளிப்படையாகவும் அங்கீகரிக்க வேண்டும்.”என்று அந்த சபை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிடம் கோருகிறது.
(*).1990 ம் ஆண்டுக்குள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லீம்களின் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை (காத்தான்குடி 147, ஏறாவூர் 121, குருக்கள் மடம் 35, அலிஞ்சிப்பொத்தான 69), 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு * தற்செயலாக* சமமாக இருந்தது என்று அது கணக்கிடுகிறது.
ஷூராவின் இந்த எண்கணித சமப்படுத்தலை அது தற்செயலாக என்று குறிப்பிட்டாலும் அதற்குள் மறைந்துள்ள வன்மம் அதையும் மீறி வெளிப்படுகிறது. ஒரு வகையில் இந்த கருத்தில் மறைந்துள்ள வஞ்சகத்தின் மறுவாசிப்பு ஈஸ்டர் தாக்குதல்கள் புலிகளின் மேற்குறிப்பிட்ட கொலைகளுக்கு பழிக்குப் பழி / பலிக்கு பலி என்பதாக ஷூரா திருப்தியடைகிறது போன்று தெரிகிறது.
(*) விடுதலைப்புலிகளை ஆதரிக்காமல் பிரிவினை வாதத்திற்கு எதிராக போராடிய ஆயுதப்படைகளுடன் நின்றதாலேயே வடக்கத்திய முஸ்லிம்களை விரட்டியடித்து, கிழக்கத்திய முஸ்லீம்களைகொன்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்” என்பதும் அந்த கடிதத்தின் வரிகளாக உள்ளன.
இதுவரையான பல்வேறு பதிவுகளில் முஸ்லிம் தரப்பில் ஆயுதப்படைகளுடன் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் ஊர்க்காவல் படையினர், ஜிகாத்….. மற்றும் அமைப்பினரை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவர்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் முஸ்லிம் கல்விமான்கள், புதிதிஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒருதரப்பு அரசியல்வாதிகள் கூறிவந்த கருத்தை ஷூராவின் அறிக்கை நிராகரிக்கிறது. மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள் ஒரு சிறிய ஷஹாரான் பயங்கரவாத குழுவின் செயல் என்ற முஸ்லிம் சமூகத்தின் கருத்தையும் ஷூரா மறுதலிப்பதாக உள்ளது.
புலிகள் கூறியது போன்று “தமிழர்கள் தான் புலிகள் புலிகள்தான் தமிழர்கள்” என்ற ஒட்டுமொத்த சமூகத்தையும் புலிகளாக காட்டிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூகம் “ஊர்காவல்படை, ஜிகாத், ஷஹாரான் மற்றும் துணைப்படைகளை” தங்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற மறுப்பு நிலைப்பாட்டையே இதுவரை கூறி வந்துள்ளது. இந்த கருத்தை ஷூரா கேள்விக்குள்ளாக்கியுள்ளதன் மூலம் இந்த குழுக்களையும், புலிகளுக்கு எதிரான “தற்காப்பு” குழுக்களாக அன்றி புலிகளைப் போன்று குறுந்தேசியவாத பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது.
(*) அனைத்து தேசபக்தியுள்ள இலங்கையர்களுக்கும் நினைவிருக்கும், பல மலாய் முஸ்லிம்கள் ஆயுதப் படைகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளனர். அவர்களில் பலர் பெரும்பாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டனர்.
போரின் போது தரைப்படை, கடற்படை, விமானப்படை, மற்றும் படையணிகளின் ஆழ ஊடுருவும் பிரிவுகளில் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளே விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி கிழக்கில் முஸ்லிம்களை படுகொலை செய்யவும், அவர்களை வடக்கில் இருந்து விரட்டியடிக்கவும் தூண்டியது…..” என்று ஷூராவின் கடிதம் கூறுகிறது.
“தேசபக்தியுள்ள இலங்கையர்கள்” என்று ஷூரா இங்கு யாரை குறிப்பிடுகிறது. விமல்வீரவன்ச, சரத்வீரசேகர, உதய கம்மன்வெல , சரத்பொன்சேகா….. உள்ளிட்ட சில பௌத்த துறவிகளையும், ராஜபக்சாக்களையுமே அது பேசுகிறது. ஷூராவின் இந்த நிலைப்பாடு சுரேஷ் சாலே கைதுசெய்யப்பட்டபோது மேற்கூறிய தரப்பினர் கூறியதை இரைமீட்கிறது. சுரேஷ் சாலே மலாய் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இதுவரையும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு புலிகள் கூறாத ஒரு காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளின் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை நியாயப்படுத்தவே உதவும். ஏனெனில் ஏற்கனவே யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளை உள்ளிருந்து தாக்குவதற்கு முஸ்லிம் வட்டாரத்தில் ஆயுதங்கள் கொண்டு குவிக்கப்பட்டது என்றும் அதை அறிந்தே புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் என்றும் கூறப்பட்ட கருத்தை ஷூரா உறுதி செய்கிறது. புலிகளோ கிழக்கு தமிழர்களை காப்பாற்றுவதற்கான ஒரு அழுத்தமாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
(*). 1990 ம் ஆண்டளவில் இலங்கையை இன அடிப்படையில் விடுதலைப்புலிகள் பிளவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு முஸ்லீம்களே முதல் பெரும் தடையாக உருவெடுத்தனர் என்பதை வரலாற்றில் மறக்க முடியுமா? 21 இலட்சம் மக்களைக் கொண்ட இந்த சமூகம் உண்மையிலேயே உரியமுறையில் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்படத் தகுதியானது. ஒரு வேளை நாட்டின் ஆயுதப்படைகளுக்கு அடுத்த நிலையில் அவர்கள் இடம்பெறலாம்.
இதன் மூலம் ஷூரா புலிகளுக்கு எதிராக படையினருடன் இணைந்து போரிட்ட முஸ்லிம் கட்டமைப்பு உறுப்பினர்களை மட்டும் கௌரவிக்க கோரவில்லை. மாறாக ஒட்டு மொத்த 21 இலட்சம் முஸ்லிம் சமூகத்தையும் இதற்குள் இழுத்து விடுகிறது. உண்மையில் புலிகளின் அராஜகத்தால் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் யுத்தத்தின் பங்காளர்களாக இருக்கவில்லை.
இறுதிப்போரில் சர்வதேச, பிராந்திய சக்திகள் ஒரு திட்டத்துடன் செயற்பட்டு, கொழும்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கி புலிகளை தோற்கடித்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இது விடயத்தில் ஈரான், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளையும் மட்டும் பெயர் குறிப்பிட்டு போர் வெற்றியில் பங்குதாரர் ஆக்குவதற்கு பின்னணியில் உள்ள பிராந்திய பூகோள அரசியல் என்ன? இதன்மூலம் ஷூரா இறுதிப்போரில் இலங்கைக்கு ஆதரவளித்த மற்றைய நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும், இஸ்ரேலையும் சீனாவையும், அமெரிக்காவையும்,….. தனது மதவாத அரசியலுக்காக திட்டமிட்டு தவிர்த்திருத்கிறதா? இந்த நாடுகள் ஷூரா கூறுகின்ற பிராந்திய ஸ்த்திரத்தன்மையில் அக்கறையில்லாமல் இலங்கைக்கு உதவியவையா? ஷூரா பேசுகின்ற பொருளாதார உதவிகளில் கூட பாகிஸ்தான், ஈரானை விடவும் இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா, சீனாதானே அதிக போருளாதார உதவிகளைச்செய்துள்ளன. இதனால்தான் ஷூராவின் கடிதம் குறித்து சந்தேகம் ஏற்படுவதுடன்,இதற்கு பின்னால் உள்ள பிராந்திய, சர்வதேச சக்திகளின் ஊடுருவல் குறித்தும் சந்தேகம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் யுத்த வெற்றி போர்வீரர்கள் தினத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது பொது நோக்கில் என்.பி.பி.அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள கட்சி அரசியலை வெளிப்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் மலாய் சமூகத்தை சேர்ந்த படையினர் போரில் பெரும் பங்காற்றியிருப்பதை ஷூரா ஜனாதிபதிக்கு நினைவூட்டியிருப்பதும், அது ஏதோ ஒன்றை சிங்கள தேசிய வாதிகள் பாணியில் சொல்லவந்து வெளிப்படையாகச்சொல்லாமல் மறைக்கிறதா? சுரேஷ் சாலே மலாய் சமூகத்தை சேர்ந்தவர். அவரைத்தான் பெயர் குறிப்பிட்டு சொல்லாமல் சொல்கிறதா ஷூரா?
வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் போராளிகள் மாவீரர்களாகி இருக்கிறார்கள். மற்றைய முக்கிய போராட்ட அமைப்புகள் அனைத்திலும் முஸ்லிம் இளைஞர்கள் இருந்தார்கள் என்பது மட்டும் அல்ல முக்கிய பொறுப்புக்களிலும் இருந்தார்கள். ஈரோஸ் அமைப்பு தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படாத இரண்டு முஸ்லிம்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது. இவற்றை எல்லாம் பேசாமல் விட்டாலும், இந்த போரினால் முஸ்லிம்கள் மட்டும் அல்ல எல்லா இனச்சமூகங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. 17 ஆண்டுகள் கடந்து போர் வெற்றிக்கு உரிமையையும், கௌரவத்தையும் கேட்டு வாங்குகின்ற நிலைக்குவந்துள்ள ஷூரா அந்த போரினால் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களையும் சமமாக நோக்காது புலிகள் மற்றும் ஷஹாரானின் பயங்கரவாத அமைப்புக்களால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் “தற்செயல்” என்று சமப்படுத்துவது மனிதநேயத்தின் வறுத்தெடுத்த மத,இன காழ்ப்புணர்ச்சி.
முஸ்லீம்கள் மீது புலிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை என்ன காரணங்களை அதற்கு புலிகள் கூறியிருந்தாலும், புலிகளின் கொலை அச்சுறுத்தல்களையும் மீறி தமிழ்ச் சமூகத்தின் கணிசமான பிரிவினர் அன்றுமுதல் இன்று வரை அந்த படுபாதகச்செயல்களை கண்டித்து வந்துள்ளனர். இதே போன்று மனிதாபிமான முஸ்லிம் தலைமைகளும், புத்திஜீவிகளும், கல்வியாளர்களும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் தமிழ்சமூகம் மீதான தாக்குதல்களை ஒரு போதும் கண்டிக்கத்தவறவில்லை. அந்த மானிட நேயத்தை தமிழ் சமூகம் ஈஸ்டர் படுகொலைக்கு பின்னரும் இன்றும் நினைவுகூருகிறது.
யாழ்.பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர்குழு உயிரைப்பணயம் வைத்து இது விடயத்தில் பயணித்து இறுதியில் ராஜினியை இழந்தும் சகல இனங்களுக்குமான மனித உரிமைகளுக்காக போராடியது. பாரிஸில் சபாலிங்கம் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபொழுதும், கனடாவில் ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராசாவின் முழங்கால் அடித்து நொறுக்கப்பட்டபொழுதும், தேடகம் எரிக்கப்பட்ட பொழுதும், லண்டனில் ரி பி சி.வானொலி நிறுவனரும், ஒலிபரப்பாளர்களும் அச்சுறுத்தப்பட்டபொழுதும், சுவிஸ் மனிதம் அமைப்பினரும், மற்றும் தமிழ் ஏடு பத்திரிகையும்,அதன் ஆசிரியரும் கொலை அச்சுறுத்தல் உட்பட பல பிரச்சினைகளை புலிகளால் எதிர்கொண்ட பொழுதும் முஸ்லீம்கள் மீதான புலிகளின் அனைத்து அராஜாகங்களையும் எதிர்த்து எழுதியும், பேசியும், விவாதித்தும் வந்துள்ளனர்.
பிரான்ஸில் உயிர்நிழல் குழுவினர், எக்ஸில் குழுவினர், மௌனம், ஓசை, வெளியிட்டாளர்கள்ளும், றயாகரன் குழுவினரும், ஜேர்மனியில் தேனீ இணையத்தளம் சார்ந்தவர்களும், வேறு அமைப்பினரும் தொடர்ந்து புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகளை கண்டித்து குரல்கொடுத்தார்கள். எக்ஸ்ஸில் முஸ்லீம்கள் தொடர்பாக சிறப்பு இதழ் ஒன்றையும் வெளியிட்டது. இப்படியெல்லாம் புலிகளின் கொலைப்பசியை எதிர்கொண்டு தமிழர் முற்போக்கு சக்திகள் செயற்பட்டுள்ள நிலையில் ஷூரா அமைப்பு போர்வெற்றிக்கு/ முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கும், அழிவுக்கும் உரிமை கோரியும், பங்குகேட்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதம் தமிழ்மக்களின் மரணங்களில் செய்யப்படும் மனிதாபிமானமற்ற ஈன அரசியல் என்றே சொல்லவேண்டும்.
புலிகளினதும், மற்றும் தமிழ், முஸ்லிம் ஆயுதக்குழுக்களினதும் அச்சுறுதல்களுக்கு மத்தியிலும் கிழக்குமாகாண முஸ்லிம் சகோதரர்கள் தனித்தும், குழுவாகவும் இந்த குறுந்தேசியவாத தீயை அணைக்க தொடர்ந்து செயற்பட்டனர். மறைந்த அகமட்லெப்பை, எம்.ஏ.நுஹ்மான், றியாஸ் குரானா, எஸ்.எல்.எம்.கனிபா, புலிகளால் கொலை செய்யப்பட்ட வை.அகமது…….என்றுபலரின் பெயர்களை பட்டியல் இடமுடியும். என். ஆத்மா “ஆதாரம்” என்ற பெயரில் காத்தான்குடி, ஏறாவூர், புதுக்குடியிருப்பு, வீரமுனை, நொச்சிமுனை போன்ற இடங்களில் இடம்பெற்ற இருதரப்பு வன்முறைகளையும் தொகுத்து வெளியிட்டார். லண்டனில் பௌஷர், சட்டத்தரணி பஷீர், காதர், முனீர் முகைதீன் போன்றவர்களும், அவுஸ்ரேலியாவில் கலாநிதிகள் அமீர் அலி, மற்றும் ஷெரிப்தீன் , சுவிஸில் ஹரிஷ் அலிஉதுமான் என இன நல்லிணக்கத்திற்காக உழைக்கும் பலரைப்பட்டியலிடமுடியும்.
இப்படி இருக்க…..!
வடக்கு, கிழக்கில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மெல்ல மெல்ல மீண்டும் புரிந்துணர்வு பெறுகின்ற நிலையில், தமிழரசுக்கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இணக்க அரசியல் உருவாகி வருகின்ற நிலையில், என்.பி.பி . இன உறவு மற்றும் சமத்துவம் பற்றி பேசுகின்ற நிலையில் கொழும்பு மைய ஷூரா அமைப்பின் இந்த அறிக்கை உண்மையிலேயே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், பிராந்திய, சர்வதேச இராஜதந்திர அரசியல் நடுநிலைமைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
ஷூராவின் இந்த கடிதம் குறித்து முஸ்லிம் முற்போக்கு சக்திகளினதும், வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் கருத்தை அறிவது இலங்கையின் இன்றைய இனவுறச்சூழலில் ஆர்வத்திற்குரியதாக அமையும்.
