எது கவிதை?              பகிர்வுகள் (பகிர்வு – 13)

எது கவிதை? பகிர்வுகள் (பகிர்வு – 13)

(அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)

   — செங்கதிரோன் —

எனது அச்சேறிய முதல் கவிதையான ‘நற்கவிதை வேண்டும்’ எனும் தலைப்பிலான கவிதையை அண்மையில் எனது புலனம் குழுமத்தில் பதிவிட்டிருந்தேன். இக்கவிதை நான் குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ எனும் இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன பயிற்சிக் கல்லூரியில் நீர்ப்பாசன பயிலுனராக (Irrigation Learner) ‘நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா’ (Diploma in Irrigation Engineering) வதிவிடப் பயிற்சி நெறியைப் பெற்றுக்கொண்ட 1968/70 காலப்பகுதியில் இக்கல்லூரியில் அப்போது செயற்பட்ட ‘நீர்ப்பாசன பயிலுனர் தமிழ்க்கலாமன்ற’ வெளியீடான ‘அருவி’ (1969) சஞ்சிகையில் அச்சேறிய கவிதையாகும். ‘நீர்ப்பாசன பயிலுனர் தமிழ்க்கலாமன்ற’த்தின் செயலாளராகவும், ‘அருவி’ சஞ்சிகையின் இதழாசிரியராகவும் நான் இருந்தேன். கவிதை இதோ.

“நற்கவிதை வேண்டும்!

பூங்காவைப் பொன்நிலவைப் பூவையரின்

புறஅழகைப் புகழ்ந்துபல கவிதை வேண்டாம்!

ஏங்கியின்று எமதுநாட்டிற் தவித்தலைந்து

இரைதேடு மேழைகளின் இடரைக்கண்டும்

தூங்குகின்ற மனிதரெல்லாம் அறிவுபெற்றுத்

துடித்தெழுந்து துயர்துடைத்து ஏழைகட்குப்

பாங்கான வாழ்வழிக்கப் பாதையிட்டு

பார்மகிழச் செய்வதற்குக் கவிதைவேண்டும்!

சாதிமதம் பலவகுத்துச் சண்டையிட்டு

சமாதானம் சாவணைக்கும் காலமதில்

பாதகங்கள் பலப்பலவோ… படுகொலைகள்!

பணஆசை….. ஐயையோ!….. கொடிது இவை!

பேதப்பேய் மடிந்துலகில் பிணக்குஎல்லாம்

பிறந்தஇடம் தெரியாமல் ஓடுதற்கு

போதனைகள் புகட்டுகின்ற பொருள்பொதிந்த

புகழ்படைத்த கவிதைபல தோன்றவேண்டும்!

மங்கைபலர் மானத்தை மதிகெட்டின்று

மடுவெட்டிப் புதைப்பதனால் மானிலத்தில்

பொங்குபுகழ்த் தாய்மையினம் பொலிவிழந்து

பொருமுகின்ற பொறுக்கஒணாப் புன்மைகண்டோம்!

அங்கவரின் அழகையெலாம் அடுக்கிவைத்து

அளிக்கின்ற ஆபாசக் கவிதை வேண்டாம்!

மங்கையினம் சீர்திருந்தி மகிழ்வுகாண

மதிகூறும் கவிதைபல மலிந்து வேண்டும்!

இன்தமிழைக் காப்பதற்கு இளைஞர்கூட்டம்

இரவென்றும் பகலென்றும் எண்ணிடாமல்

முன்தாங்கித் தமிழர்படை திரட்டிவந்து

மூச்செங்கள் தமிழென்று முழக்கமிட்டு

தந்தாலும் உடல்கூறாய்த் தலையொடிந்து

சாகவே வந்தாலும் அச்சமில்லை!

எந்தமிழுக் கிழுக்குவந்தால் இருக்கமாட்டோம்!

என்றார்க்க எழுச்சிமிகு கவிதைவேண்டும்!”

இக்கவிதையைப் படித்த அன்பரொருவர் இக்கவிதை மரபுக்கவிதையாக இருப்பதால் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றும் ‘புதுக்கவிதை’யாக இருந்திருந்தால் தனக்குப் புரிந்திருக்குமென்று தொலைபேசியில் என்னுடன் உரையாடினார். இந்த உரையாடலே கவிதை பற்றிய எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. அதனைச் சிறுகுறிப்புகளாக இங்குதர விழைகிறேன்.

• ‘புதுக்கவிதை’ வடிவம் இலக்கிய உலகில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும் என்பதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் அது கவிதையாகுமா? அதாவது அதனைப் ‘பா’ இலக்கியத்துக்குள் வகைப்படுத்தலாமா?

• கவிதைக்கு ஓசை – சந்தம் முக்கியம். ஓசை இல்லாதது கவிதையாகாது. ஆனால் புதுக்கவிதைக்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பதுதான் பொதுவான விதியொன்றாகி விட்டது.

• பெரும்பாலான புதுக்கவிதைகள் வாக்கியத்தை முறித்துப் பின் வரிசையிலே வைத்தெழுதிய சொல்லடுக்குகளாகவே உள்ளன.

• கவிச்சக்கரவர்த்தி கம்பனும் மகாகவி பாரதியும் ஓசைக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

வால்மிகி முனிவரால் வடமொழியில் இயற்றப்பெற்ற இராமாயண இதிகாசத்தைத் தமிழில் ‘கம்பராமாயணம்’ ஆக்கிய கம்பன் தனது பாயிரத்தில்,

‘ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நாக்குப் புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ’

என்கிறான்.

‘ஓசைபெற்று’ என்பதனை ‘உயர் பாற்கடல்’ என்பதிலிருந்து தனியே எடுத்து நோக்கி ‘ஓசைபெற்று ……………………… அறையலுற்றேன்’ எனப்பொருள் கொண்டால் கவித்துவத்தை உயர்த்துவதற்காய் ஒசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓசை இன்பத்தை உணர்ந்து (ஒசைபெற்று) இதனைப் (இராமனின் கதையை) பாடவந்தேன் (அறையலுற்றேன்) எனப்பொருள் கொள்ளலாம். ஓசையின் முக்கியத்துவத்தைக் கம்பன் பாயிரத்துள்ளேயே உணர்த்தி விடுகிறான்.

மகாகவி பாரதியோ,

‘ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே

கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!

பூதங்களொத்துப் புதுமைதரல் விந்தையெனில்

நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!

ஆசைதருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே

ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?

என்று ஓசைதரும் இன்பத்தை கவிதையிலே பதிவு செய்துள்ளான்.

• ஓசை இன்பம்தான் கவிதைக்கு உயிர்நாடி. அதுவும் தொடரோசை. ஓசையுள்ளதெல்லாம் கவிதையாகிவிடாது. அப்படியாயின் தமிழில் பழமொழிகள், விடுகதைகள் எல்லாம் கவிதையாகிவிடும் விபத்து நிகழ்ந்துவிடும். அதனால்தான் கவிதைக்குத் ‘தொடரோசை’ முக்கியமானது.

• ஈழத்து நவீன கவிதைகளின் முன்னோடிகளென முன்வரிசையில் வைக்கப்படுகின்ற மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று கவிஞர்களுமே ‘புதுக்கவிதை’யை ‘பா’ (கவிதை) இலக்கியமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

• புதுக்கவிதைப் போக்கு உரைநடையின் வளர்ச்சியேதவிர அது கவிதையின் வளர்ச்சி அல்ல. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உரை வீச்சான புதுக்கவிதையைப் ‘பா’ இலக்கியத்திற்குள் சேர்க்காது அதனை உயர்ந்த உரை இலக்கியமாகவே நிறுவியுள்ளார். புதுக்கவிதை வடிவத்திற்கு அவர் இட்டுள்ள பொருத்தமான இலக்கிய வகைப் பெயர் ‘பொழிச்சல்’ என்பதாகும்.

இந்தப் பின்புலத்தில், எனது அச்சேறிய முதல் கவிதையான ‘நற்கவிதை வேண்டும்’ எனும் தலைப்பிலான கவிதையைப் படித்துவிட்டு ‘மரபு’ , ‘புது’ என்று பதிவிட்ட அந்த அன்பருக்கு நான் கொடுத்த பதிலை (அதனைப் புலனம் குழுவிலும் பதிவிட்டிருந்தேன்) இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

‘கவிதையை ‘மரபு’ என்றும் ‘புது’ என்றும் வகைப்படுத்த வேண்டியதில்லை. கவிதைக்கு ஒசை (சந்தம்) முக்கியம். யாப்பைக் கட்டியழத் தேவையில்லை. யாப்பை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டால் போதும். யாப்பு இயல்பாக மீறப்படலாம். புதுக்கவிதை வடிவம் ஓசையற்றது. புதுக்கவிதை உரைநடையின் உன்னதமான வளர்ச்சியேதவிர அது ‘பா’ (கவிதை) இலக்கியமல்ல. கவிதை ஓர் இறுக்கமான ஊடகம் என்பதால் இறுக்கமான உரைநடையெல்லாம் (புதுக்கவிதை) கவிதையாகிவிடாது.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *