பூநகரியில் வள அபகரிப்பும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களும்

பூநகரியில் வள அபகரிப்பும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களும்

— கருணாகரன் —


அபிவிருத்தித் திட்டங்கள் என்றால் மக்கள் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அச்சமும் பதட்டமும் அடைய வேண்டிய காலம் இது. அதிலும் தமிழ்ப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் என்றால் இந்த அச்சமும் பதட்டமும் மேலும் கூடிவிடுகிறது. இதற்குப் பிரதான காரணம், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தைப் பற்றியும் அரசாங்கம் மக்களுக்கு முறையாகத்  தெளிவுபடுத்துவதில்லை;  மக்களுடன் பேசுவதில்லை. மட்டுமல்ல, சில திட்டங்கள் இனவாத அடிப்படையிலான அரசியல் உள்நோக்கங்களோடும் மேற்கொள்ளப்படுவதால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்படுகிறது. இதனைப் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. அதைச் செய்யாத வரையில் சந்தேகமும்  குழப்பங்களும் பிரச்சினைகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நடந்து கொண்டேயிருக்கும். 


இவ்வாறான ஒரு அபிவிருத்தித்திட்ட முயற்சிக்கு எதிரான மக்களுடைய எதிர்ப்புப் போராட்டம் கிளிநொச்சி மாவட்டம் –  பூநகரிப்பிரதேசத்தில் வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் கிராமங்களில் 28.05.2026 அன்று நடந்திருக்கிறது. சுமார் முன்னூறுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். மக்களுடைய இந்தப் போராட்டத்துக்கு குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அமைப்புகளும் மதகுருமார், வடக்குக் கிழக்கில் இயங்கும் காணி மீட்புச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் போன்றோரும் நேரில் பங்கேற்று ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.
  
இங்கே மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படும் திட்டங்கள்:
  
1. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிமெந்து தயாரிப்பைச் செய்வதற்கான சுண்ணக்கல் அகழ்வு
2. காற்றாலை (WindMill) அமைக்கும் நடவடிக்கை.
  
சுண்ணக் கல் அகழ்வுக்கான போராட்டத்தை இந்த மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். அதனால் குறித்த திட்டம் தற்காலிகமாக மட்டும்  நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுடைய கோரிக்கை என்னவென்றால், ‘பூநகரிப் பிரதேசத்துக்கு நிச்சயம் அபிவிருத்தி தேவை. ஆனால், அந்த அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதாரத்தையும், பூர்வீக நிலத்தையும், உயிர் வாழத் தேவையான குடிநீரையும் அழிப்பதாக இருக்கக்கூடாது’ என்பதேயாகும்.


பூநகரி (பொன்னாவெளி, வேரவில், கிராஞ்சி) பிரதேசம் வறண்ட வலயமாகும். ஆனால், மிகத் தொன்மையானது. வரலாற்றுச் சிறப்பும் வளச் சிறப்பும் உடையது. சோழர் கால வரலாற்றோடும் மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் போன்ற சிறப்பு நெல்லின உற்பத்தியோடும் மரமுந்திரிச் செய்கையோடும் தொடர்புபட்டது. அதே அளவுக்குச் சிறப்பான மீன்பிடித் தொழிலும் சுற்றுலாப் பயணிகளுக்கான அழகிய கடற்கரைகளையும் (Beachs) அழகிய மணல் மேடுகளையும் இயற்கைக் காடுகளையும் கொண்டது. இங்குள்ள நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மென்மையானது. உவர் கலந்தது. சில இடங்களில் மட்டுமே நன்னீர் உண்டு. 


இந்தப் பகுதியில் சிமெந்து உற்பத்தி நிறுவனங்கள்  (‘டோக்கியோ சிமெந்து’ போன்றவை) நிலத்தை ஆழமாகத் தோண்டிச் சுண்ணக்கல்லை அகழும்போது, நிலத்தடி நீர் முற்றாக உவர்ப்பு நீராக (உப்பு நீர்) மாறும் அபாயம் உள்ளது. நில அமைப்புக் கெட்டு காடுகள், வயல் நிலங்கள் அழியும் அபாயம் உண்டு. அதோடு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், விவசாயப் பூமிகள் மற்றும் கால்நடை மேய்ச்சல் தரைகள் கையகப்படுத்தப்படும் என பிரதேசத்தின் சூழலியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதனால் பூர்வீகமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கும். குடிநீருக்கே வழியில்லாமல் போகும். எனவேதான் நிர்க்கத்தியான ஒரு சூழலை உருவாக்கும் இந்தத் திட்டத்தை, மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக எதிர்த்து வருகிறார்கள். 


மக்களுடைய நியாயமான கோரிக்கையை முறைப்படி பரிசீலனை செய்து எந்தவொரு ஆட்சித்தரப்பினரும் பதில் அளிக்கவில்லை. அதனால் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலும் பதட்டத்திலுமே உள்ளனர். இதற்கிடையில் பூநகரியை அபிவிருத்தி வலயமாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. 2024 வரவு செலவுத்திட்டத்தில் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பூநகரி நகரை அபிவிருத்தி செய்வதும் இதில் அடங்கும். எனினும் இன்னும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 


இதேவேளை பூநகரியின் தென்மேற்குக் கடற்கரையோரக் கிராமங்களான வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் போன்ற பகுதிகளில் பாரிய காற்றாலைகளை அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இவை சிறப்பான முறையில் மீன்பிடி நடைபெறும் இடங்களாகும். வலைப்பாடு கடற்கரையும் கிராமமும் கறிவேப்பிலை மரங்களால் நிறைந்தது. அங்குள்ள காடு என்பதே கறிவிப்பிலைதான். இது மிக ஆச்சரியமூட்டுவது. 


கிராஞ்சி, தென்னை உற்பத்தியில் சிறந்த இடம். இலங்கையின் தெங்குச் செய்கை வலயங்களில் கிராஞ்சியும் ஒன்று. வடக்கின் தென்னை உற்பத்தி முக்கோண வலயங்களில் கிராஞ்சி ஒன்றென ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2023 இல் தெரிவு செய்யப்பட்டது. இங்கே தொல்கிணறு ஒன்றுண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகிறது. கிராஞ்சியில் உள்ள எருமைத்தீவில் மாலைவேளைகளில் யானைகள் நீருக்குள்ளால் பயணம் செய்யும் அரிய காட்சி சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பது. வேரவில், ஆறுமுகநாவலர் காலத்திலிருந்தே கல்வி, விவசாயத் தொடர்புகளைக் கொண்ட பிரதேசமாகும். 100 ஆண்டுகளைக் கடந்த பாடசாலை உள்ளது. 


அமைக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டமானது, இந்தப் பிரதேசத்தை ஊடறுத்தும் சுற்றி வளைத்துமே செல்வதாக மதிப்பிடப்படுகிறது. அப்படி அமையும்போது இந்தப் பிரதேசத்தில் உள்ள 3000 க்கு மேற்பட்ட விளைச்சலைத் தந்து கொண்டிருக்கும் தென்னைகள் உடனடியாக அழிக்கப்படும் அபாயமுண்டு எனப் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இதில் ஆறுபேருடைய உறுதிக் காணிகள் நேரடியாகவே உள்ளெடுக்கப்படவுள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இதை விட பத்துக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் காணிகளும் உள்ளீர்க்கப்படவிருப்பதாக மக்களால் கூறப்படுகிறது. ஏனைய காணிகள் (நிலப்பகுதி) அரசுக்குரியவை. இது தொடர்பாக பூநகரிப் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது  திட்டத்துக்கான கள ஆய்வுகளே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தக் கள ஆய்வில் மேற்படி தனியார் காணிகளும் அரச நிலமும் உள்ளமைவது உண்மையே. ஆனால், திட்டத்தின் செயற்பாடு மக்களுடன் கலந்தாலோசனையுடனேயே முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களே உண்டு எனத் தெரிவிக்கப்பட்டது. 


‘காற்றாலைகள் அமைப்பதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்குப் பொருத்தமான இடங்களை அங்கே தேர்வு செய்கிறார்கள். ஆகவே அவை அங்கே பிரச்சினையாக இருப்பதில்லை. இங்கே அவற்றின் அமைவிடமே எமக்குப் பிரச்சினையாக உள்ளது’ என வேரவில் பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும் ஓய்வு நிலை அதிபருமான ஐயப்பிள்ளை கேசவன் (62) சொன்னார். இதைக்குறித்து இன்னொருவரான மக்கள் அமைப்புகளின் பிரதிநிதியும் ஓய்வுநிலை ஆசிரியருமான சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன் கருத்துக் கூறும்போது, ‘இந்தத் திட்டத்தின் மூலம் கடலோரச் சூழல் மற்றும் சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படுவதால், அப்பகுதி மக்களின் முதன்மைத் தொழிலான கடற்றொழில் (மீன்பிடி) மற்றும் நண்டு, இறால் வளர்ப்பு போன்றவை கடுமையாகப் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் கெட்டுப்போகும் சூழல் உண்டு. தென்னைகள் அழிக்கப்படுவது மட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கான பனைகளும் கடலோரக் காடுகளும் இல்லாதொழிக்கப்படும். இதனால் இயற்கைச் சமனலையை இந்தப்பிரதேசம் இழந்து விடும்’ என்றார். 


காற்றாலைத் திட்டம் (Wind Power Project) குறித்து மக்கள் அச்சமடைவது நியாயமானதே. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மின்சாரத் தேவைக்கும் அவசியமானது என்றாலும், அது செயல்படுத்தப்படும் விதம் உள்ளூர் மக்களையும் சூழலையும் நேரடியாகப் பாதிப்பதால் இந்த அச்சம் எழுகிறது. கடற்கரையோரங்கள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்படுவதால், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடிப் பகுதிகள் மற்றும் படகுகளை நிறுத்தும் இடங்கள் பாதிக்கப்படுகின்றன. அவர்களுடைய தொழில் நெருக்கடிக்குள்ளாகிறது. 


பெரிய காற்றாலைத் தூண்களை நிறுவுவதற்காகச் செய்யப்படும் அகழ்வாராய்ச்சிகளாலும் அகழ்வுகளாலும்  கடலோரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மற்றும் தூய நீர் நிலைகள் (Freshwater Aquifers) உப்புநீராக மாறும் அபாயம் ஏற்படுகிறது. எனவேதான் இந்த இரண்டு திட்டங்களும் இந்தப் பிரதேச பிரதேச மக்களுடைய நலனுக்கு அப்பாலானவை. அவர்களுடைய அபிவிருத்திக்கானவை என்று சொல்ல முடியாதுள்ளது. பதிலாக நாட்டின் வளர்ச்சிக்கானவை என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியென்றால், அவற்றுக்கான அடிப்படையில் அவை அமைய வேண்டும். அது மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தாத விதத்தில் மக்களுடைய உடமைகளையும் வளங்களையும் பாதிக்காத வகையில் திட்டங்களை மேற்கொள்வது அவசியம். என்றாலும் எந்த வகையிலும் சுண்ணக்கல் அகழ்வை ஏற்கவே முடியாது. அது கடல் நீரை உட்புகுத்திவிடும். 


ஏற்கனவே தென்மராட்சி மறவன்புலவு, பச்சிலைப்பள்ளி பளை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் காற்றாடிகள் சுழலும்போது ஏற்படும் தொடர்ச்சியான குறைந்த அதிர்வெண் சத்தம் (Low frequency noise) மற்றும் அதிர்வுகள் காரணமாக, அருகில் வசிக்கும் மக்களுக்குத் தூக்கமின்மை, மன உளைச்சல் மற்றும் உயர் குருதியமுக்கம் (High Blood Pressure) போன்ற ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பான விஞ்ஞானபூர்வமான அறிக்கைகளை துறைசார்ந்தோர் மக்களின் முன்பாக பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். மேலும் இயற்கையான மணல் திட்டுகள் மற்றும் வடிகால்கள் மாற்றியமைக்கப்படுவதால் பருவமழைக் காலங்களில் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்


தனியார் காணிகள், மக்களுக்கு வழங்கப்படக் கூடிய நிலையில் உள்ள அரச காணிகள் பாரிய திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும்போது, தங்களின் நிரந்தர வதிவிடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் மக்களிடையே எழுகிறது. விவசாயம், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் திட்டங்கள் (கடலரிப்பு, நச்சுக்கழிவு கலப்பு) நிச்சயமாக ஏற்கப்படக்கூடியவை அல்ல. மக்கள் திட்டங்களை எதிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று, திட்டங்களின் நோக்கம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம், அவற்றின் சாதக பாதக விளைவுகளைக் குறித்து பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படாமை மற்றும் சமூக பங்கேற்பு இன்மை ஆகும். கூடவே இயற்கை வளங்களை அழித்தல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் மற்றும் இயற்கை வளங்களைச் சட்டவிரோதமாக அகழ்தல் போன்றனவும் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.


இலங்கையில் இதற்கு முன்னரும் பல வகையான அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடையே பெரும் எதிர்ப்புகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. மக்களைக் கலவரமடைய வைக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவை, மக்களின் வாழ்வாதாரம், சுற்றாடல், அல்லது பாரம்பரிய குடியிருப்புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாகவே உள்ளன. 


திட்டங்களை ஆரம்பிக்கும் முன் மக்களிடம் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  உள்ளூரிலுள்ள மக்களுடனும் சமூகப் பிரதிநிதிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளோடும் முறையான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது  அவசியம். இது மக்களின் அச்சத்தைக் குறைக்கும்; இல்லாமற் போக்கும். 


அபிவிருத்தி என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், அது மக்களின் வாழ்வுரிமையையும் இயற்கைச் சூழலையும் அழித்து வரக்கூடாது. எனவே, மாற்று இடங்களைத் தெரிவு செய்தல் (Off shore / மக்கள் வாழாத பகுதிகள்) அவசியம். கூடவே முறையான சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதே இதற்கான சரியான தீர்வாகும்.


அத்தோடு அபிவிருத்தி என்பது உள்ளூர் மக்களை அழித்துவிட்டு, பெரிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாக அமையக் கூடாது. பூநகரிப் பிரதேசத்தை அபிவிருத்தி வலயமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அது எந்த வகையில், எவ்வாறான அடிப்படையில் அமையவுள்ளது என்பதைப் பற்றி இன்னும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. பூநகரி மக்களின் அபிவிருத்திக்கு அரசு தன்னுடைய திட்டங்களோடு மாற்று வழிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். சூழலுக்கு உகந்த மின் உற்பத்தி, பாரம்பரிய விவசாயச் செய்கை கெட்டுப்போகாத வகையிலான புதிய நிர்மாணங்களும் புதிய திட்டங்களும், புதிய நகர அமைப்பில், தொன்மையான இடங்களுக்கும்  அடையாளங்களுக்கும் உரிய இடமளித்தல், பூநகரியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தக் கோட்டையின் மறுசீரமைப்பு, சுற்றுலாவுக்குப் பொருத்தமான வீதி அமைப்பு  போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த  அடிப்படையில்தான் காற்றாலைகளை மக்கள் வாழும் நிலப்பகுதிகளிலோ அல்லது மீன்பிடிப் பிரதேசங்களிலோ அமைக்காமல், கடலுக்குள் ஆழ்கடல் பகுதியில் (Offshore wind energy) அல்லது மக்கள் வசிக்காத தரிசு நிலங்களில் அமைக்க வேண்டும். திட்டங்களை ஆரம்பிக்கும் முன் உள்ளூர் மக்களின் உடன்பாடு பெறப்பட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு விருத்தி  பற்றி உறுதியளிக்க வேண்டும். குறிப்பாக அப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, விவசாய மேம்பாடு, போக்குவரத்து, பாதைகள் (வீதிப் புனரமைப்பு) போன்றவை உறுதி செய்யப்படுவது அவசியம். முக்கியமாக கல்விக்கான ஆசிரிய வளப்பங்கீடு மிகமிக முக்கியமானது. குளங்களைப் புனரமைத்தல் மற்றும் மீன்பிடித் தொழிலை நவீனமயப்படுத்துதல் போன்ற திட்டங்களே அங்குள்ள மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உண்மையான அபிவிருத்தி ஆகும். அதுவரையில் மக்கள் தங்களுடைய எதிர்ப்பையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாதது. சுண்ணக்கல் அகழ்வும், திட்டமிடப்படாத காற்றாலைகளும் பூநகரியை ஒரு வாழத் தகுதியற்ற பாலைவனமாக மாற்றிவிடும் என்ற அச்சத்தினாலேயே மக்கள் போராடுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் “நிலையான அபிவிருத்தி” (Sustainable Development) மட்டுமே அந்த மக்களுக்குப் பொருத்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *