— வீரகத்தி தனபாலசிங்கம் —
அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது அது பற்றி கருத்துக் கூறுவது முறையானது அல்ல என்ற போதிலும், அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மத அதிகாரம், சட்டப் பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எழுப்பியிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கேள்விகள் ‘ பொதுவெளியில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்டுத்தியிருக்கின்றன.
இந்த விவகாரத்தைக் கையாள்வதில் அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் ‘சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமானவர்கள்’ என்ற அடிப்படை நீதிக் கோட்பாட்டை சவாலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
விசாரணையையும் கைதையும் தொடர்ந்து சந்தேகநபர் உடனடியாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் மூலம் அவர் தனது கட்டாய விளக்கமறியல் காலத்தை சிறைச் சாலையில் கழிப்பதற்கு பதிலாக மருத்துவமனைப் படுக்கையிலேயே கழித்தார். செல்வாக்கு மிக்க நபர்கள் சட்டத்தின் கடுமையான பிடியில் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்தும் வழக்கமான ஒரு வழிமுறையாக இது இருந்து வருகிறது. சமூகத்துக்கு நெறி முறையைப் போதிக்கும் ஒரு தலைமைக் குருவானவர் கூட முன்னுதாரணமாக வாழத் தயாராயில்லை.
சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பான கடுமையான சட்ட விதிகளின் கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் இவ்வளவு விரைவாக வழங்கப்பட்ட பிணை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சாதாரண குடிமக்கள் நடத்தப்படுகின்ற முறையுடன் ஒப்பிடும்போது கடுமையான முரண்பாடாக அமைந்திருக்கிறது. சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள் என்ற கோட்பாடு அலட்சியம் செய்யப்பட்டு ஒருவரது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சட்டம் எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை இது அம்பலப்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறையும் தென்னிலங்கையின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் சந்தேக நபருக்கு நேர்ந்த கதியை இலங்கையின் பௌத்த பாரம்பரியத்துக்கு தோன்றியிருக்கும் ஒரு அச்சுறுத்தல் போன்று காட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் இங்கையின் அரசுக் கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற வரவேற்கத்தகாத சில யதார்த்தங்களைப் பின்னணியாகக் கொண்டவை.
முக்கியமான அரசியல் கட்சிகள் மூன்று முக்கிய பௌத்த பீடங்களின் (மகாசங்கத்தின்) ஆசியிலும் ஆதரவிலும் தங்கியிருக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்திய பிறகு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்து தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் மார்க்சியப் பின்புலத்தைக் கொண்டிருடிருந்த கட்சியும் இதற்கு விதிவிலக்காக இல்லை.
அட்மஸ்தானாதிபதி என்பவர் அநுராதபுரத்தில் அமைந்திருக்கும் ஜய ஸ்ரீமகா போதி மற்றும் எட்டு புனித தலங்களின் பாதுகாவலர். மிகவும் உயர்ந்த ஆன்மீக, கலாசார அதிகாரத்தைக் கொண்ட அவருக்கு எதிராக கடுமையான தண்டனையைப் பகிரங்கமாகக் கோருவது தங்களது பாரம்பரிய பௌத்த வாக்காளர் தளத்தை அதிருப்திக்கு உள்ளாக்கும் என்று அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன.
வரலாற்று ரீதியாக உயர்மட்ட பௌத்த மதகுருமார் கட்டமைப்பை சாதாரண குடியியல் சட்டக் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு தனி நிறுவனமாகவே அரசியல் வர்க்கம் நடத்தி வந்திருக்கிறது. இந்த நிறுவன ரீதியான ‘விட்டுக்கொடுப்பை ‘ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களின் விசாரணைகளை திட்டமிட்டு தாமதிப்பதன் மூலமாக குற்றவியல் சட்டம் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கும் நடவடிக்கைகளில் காணக்கூடியதாக இருக்கிறது.
அட்டமஸ்தானாதிபதியின் கைது சகல சமூகங்களினதும் கவனத்தை ஈர்த்திருக்கும் அதேவேளை, சிறுவர் பாதுகாப்பு விவகாரத்தில் அரச நீதித்துறை எதிர் நோக்கும் ஒட்டுமொத்த நெருக்கடியையும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
சிறுவர் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின் பிரகாரம் ஆயிரக்கணக்கான சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் நீதிமன்றங்களிலும் வருடக்கணக்காக தேங்கிக் கிடக்கின்றன. குற்றம் சுமத்தப்படுபவர்கள் பெரும் சமூக – அரசியல் செல்வாக்கை கொண்டவராக இருக்கும்போது, தொடக்கத்தில் எழும் பொதுமக்களின் எதிர்ப்பு அடங்கும்வரை சட்ட நடைமுறைகளை காலவரையறையின்றி இழுத்தடிப்பதற்கே இந்த நிறுவன ரீதியான தாமதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
‘சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமானவர்கள்’ என்ற கோட்பாட்டுக்கு பரீட்சையாக அமைந்த பல வழக்குகளை இலங்கை ஏற்கெனவே கண்டிருக்கிறது. தற்போது அட்டமஸ்தானாதிபதியின் வழக்கு அந்த தொடர்ச்சியில் பிந்தியதாக வந்திருக்கிறது. உயர்மட்ட மதக் கட்டமைப்பை பாதுகாப்பதை விடவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு சட்டக் கட்டமைப்பு முன்னுரிமை அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அட்டமஸ்தானாதிபதி போன்ற உயர் நிலை மதகுருமார் சம்பந்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாதிக்கும் மௌனம் உணர்ச்சிபூர்வமான விவாதத்துக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக மகாநாயக்கர்கள் உறுதியாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். சமூகத்தில் ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிப் போதனைகளைச் செய்கின்ற தலைவர்கள என்ற வகையில் அது அவர்களின் தலையாய கடமையாகும். இந்த மௌனம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதூகாப்பதில் நிறுவன மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வியாகவே நோக்கப்படுகிறது.
பகிரங்கமாக கண்டனங்கள் தெரிவிக்கப்படாமல் இருப்பதும் உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் விட பௌத்த உயர் பீடங்கள் அவற்றின் சொந்த பிம்பம், அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கின்றன என்ற தோற்றப்பாடு தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது பௌத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்களான அகிம்சை, கருணை ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணானது. பௌத்த உயர் தலைமையின் மௌனம் புத்தசாசனத்தின் அறநெறி அதிகாரத்தை சீர்குலைப்பதாகவே அமைகிறது என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் நீதித்துறையின் அதிகார வரம்பெல்லைக்குள் மாத்திரமே வருகின்றன என்பதால் உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்கவே பௌத்த உயர்பீடங்கள் விரும்புகின்றன என்ற கருத்தும் மறுபுறத்தில் முன்வைக்கப்படுகிறது.
பௌத்த மதத்தின் நிறுவனரீதியான படிநிலைகளை விடவும் சிறுவர் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கை சிவில் சமூகத்தின் மத்தியில் அதிகரித்து வருகிறது. குற்றம் சுமத்தப்பட்டவரின் ஆன்மீக அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு அல்லது சமூகநிலை எதுவாக இருந்தாலும், எந்தவொரு தனிநபரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் நீதித்துறை ஊடாக நிரூபிப்பதே அரசின் முதன்மையான கடமை.
மதபீடங்களின் அல்லது அந்த பீடங்களின் நலன்களுடன் தங்களது அரசியல் நலன்களை அடையாளப்படுத்துகின்ற அரசியல் சக்திகளின் நெருக்குதல்களுக்கும் தலையீடுகளுக்கும் அடி பணியாமல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொலிசார் பக்கச்சார்பற்ற — ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணையை நடத்த வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் கோரிநிற்கின்றன.
மதபீடங்களின் நலன்களுக்கும் அரசின் பணிகளுக்கும் இடையில் தெளிவான பிரிகோடு இருக்க வேண்டும். இலங்கையில் பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு ரீதியான அதிமுன்னுரிமை கொடுக்கப்பட்டதன் விளைவாக அது சாத்தியமில்லை என்ற போதிலும், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் முறைகேடுகள் முற்றிலும் மதசார்பற்ற குற்றவியல் சட்டத்தின் கீழ் மாத்திரமே வரும் என்பதை அரசு உறுதியான முறையில் தெளிவுபடுத்தி அரசியல் துணிவாற்றலை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதற்குப் பதிலாக, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பௌத்த மதகுருமாரின் ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைவாக மகாசங்க கட்டமைப்பைப் பேணுவதற்கும் தனியான தர்ம நீதிமன்றங்கள் மூலமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரத்தை மீண்டும் வழங்குவதற்கு தேவையான சட்டமூலத்தை அரசாங்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று கடந்த வாரம் அறிவித்தார்.
சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமானவர்கள் என்பதே ஜனநாயக நாடொன்றின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. சாதாரண குடிமக்கள் தொடக்கம் உயர்பதவி நிலைகளில் இருப்பவர்கள் வரை சகலரும் ஒரே சட்டக் கட்டமைப்பிற்குள் விசாரணை செய்யப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும். நவீன ஜனநாயக ஆட்சிமுறையின் மையக் கோட்பாடாக இதுவே விளங்குகிறது.
இத்தகைய பின்புலத்தில், பௌத்த மதகுருமார் சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று விடயங்களை விசாரணை செய்வதற்கு தனியான தர்ம நீதிமன்றத்தை நிறுவுவதற்கான யோசனை “இரு நீதி வடிவங்களைக்” கொண்ட ஒரு முறைமையை நோக்கி இலங்கை படிப்படியாக நகரக்கூடும் என்ற அச்சத்தை தோற்றுவிக்கிறது.
