(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பிறகு கடந்துபோன அரை நூற்றாண்டு’ எனும் தலைப்பில் ‘அரங்கம்’ மின்னிதழில் 19.05.2026 அன்று வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் பதிவிட்டிருந்த கட்டுரையில்,
‘பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாகத் தனிநாட்டை அடையமுடியாது என்பது கூட்டணியின் படித்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாததல்ல’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இக்கூற்றினையொட்டிய சில சிந்தனைக் குறிப்புக்களை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக்கட்சி தோற்றம்பெற்ற 1949 இலிருந்து குடியரசு அரசியலமைப்பு அறிமுகம் செய்யபெற்ற 1972 வரை சுமார் கால்நூற்றாண்டு காலமாகத் தமிழரசுக்கட்சி இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகச் ‘சமஷ்டி’யை முன்வைத்து அதனைப் பெற்றுத்தருவதாகத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது. தமிழ் மக்களும் தமக்கிடையேயுள்ள சகல வேறுபாடுகளுக்கும் அப்பால் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைத் (தந்தை செல்வா) தலைவராகக் கொண்ட தமிழரசுக்கட்சியின் பின்னே அணிதிரண்டார்கள். இது தமிழரசுக்கட்சிக்குத் தேர்தல் வெற்றிகளை அள்ளிக் குவித்தது.
ஆனால், தமிழரசுக்கட்சியால் எதுவுமே நடைமுறையில் சாதிக்கமுடியவில்லை.
1972 ஆம் ஆண்டு புதிய குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா அவர்கள் ‘தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்றார்.
இங்கு எழுகின்ற அறிவார்ந்த கேள்வி என்னவென்றால் தமிழ் மக்களைக் காப்பாற்றத்தான் ஒரு தலைவன் வேண்டுமேயொழிய ‘தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பற்ற வேண்டும்’ என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவைதானா? என்பதாகும்
இந்தக் கூற்றின் மூலம் தனது அரசியல் தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொண்ட தந்தை செல்வா தார்மீகரீதியாக என்ன செய்திருக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களைக் கடவுளிடம் பாரம் கொடுத்துவிட்டுத் தமிழரசுகட்சியை அன்றே கலைத்திருக்க வேண்டும்.
ஆனால், என்ன நடந்தது? சுமார் கால்நூற்றாண்டுகாலமாகக் கீரியும் பாம்பும்போல அரசியல் செய்துவந்த அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸூம் இலங்கைத்தமிழரசுக்கட்சியும் (ஜி.ஜி.பொன்னம்பலமும், தந்தை செல்வாவும்) இணைந்த தமிழர் கூட்டணியைத் தோற்றுவித்து அது பின் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யாகப் பெயர்மாற்றம் பெற்று இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானத்தைப் பிரகடனம் செய்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் தாய்க் கட்சியாகத் தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. இங்கு எழுகின்ற இன்னுமொரு அறிவார்ந்த கேள்வி என்னவெனில்,
1949 இலிருந்து 1972 வரை சுமார் கால்நூற்றாண்டு காலமாக அகிம்சை வழிப்போராட்டங்களாலும் – பாராளுமன்ற அரசியல் அணுகுமுறைகளாலும் ‘சமஷ்டி’யை ஏற்படுத்தமுயன்று முடியாமல்போன சூழலில் – அனுபவத்தில், ‘சமஷ்டி’ யை விடத் தீவிரமான ‘தனிநாட்டை’ அதே அகிம்சை வழிப்போராட்டங்களாலும் பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளாலும் ஏற்படுத்த முடியுமா? முடியவே முடியாது என்பது சாதாரண அரசியல் மாணவனும் புரிந்து கொள்ளக்கூடியதொன்றே. அப்படியானால் அத்தகையதொரு தனிநாட்டுத் தீர்மானம் பொய்ம்மையும் – போலியும் – பொருத்தமின்மையும் உடையதாகிறது அல்லவா?
தந்தை செல்வாவின் அரசியல் ஒழுக்கம் – நேர்மை – நாணயம் என்பவைமீது இப்பத்தி எந்தக் கேள்வியையும் முன்வைக்கவில்லை.
ஆனால், இப்படியான பொய்ம்மையான – போலியான – பொருத்தமற்ற தனிநாட்டுத் தீர்மானம் எவ்வாறு தந்தை செல்வா தலைமையில் ஏற்படுத்தப்பெற்றது? இத்தீர்மானத்திற்கு எவ்வாறு அவர் உடன்பட்டார்? இது குறித்துச் சில சிந்தனைகள் எழுகின்றன. அவையாவன,
விசுவாசமான கிறிஸ்தவராக வாழ்ந்த தந்தை செல்வா அவர்கள் தனது தலைமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்த இந்துத்துவத் தமிழரசுத் தனயன்மார்களுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவைப்பாடு அல்லது நிர்ப்பந்தம் அவருக்கு இருந்ததா?
1970 இற்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மிதவாத அரசியல் தலைவர்கள்மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருந்தனர். மிதவாத அரசியல் தலைமைகளை விமர்சனம் செய்யவும் கேள்விகள் கேட்கவும் ஆரம்பித்திருந்தனர். எனவே அத்தகைய தீவிரமான தமிழ் இளைஞர்களை ஆசுவாசப்படுத்தித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் – செல்வாக்குக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை மிதவாத அரசியல் தலைவர்களுக்கு எழுந்ததா?
ஏனெனில், 1970 இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய இருதரப்பிலும் பல முக்கிய தலைவர்கள் தோல்வியுற்றிருந்தார்கள்.
அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸில் அதன் தலைவர் ‘தனிப்பெரும் தலைவர்’ ஜி. ஜி. பொன்னம்பலம் (யாழ்ப்பாணம் தொகுதி) – ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ மு. சிவசிதம்பரம் (உடுப்பிட்டித் தொகுதி) – ‘எல்லைக்காவலன்’ தா. சிவசிதம்பரம் (வவுனியாத்தொகுதி) ஆகிய தலைவர்களும் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் ‘இரும்பு மனிதன்’ டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் (நல்லூர்த்தொகுதி) – ‘தளபதி’ அ.அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டைத் தொகுதி) – ‘பிரச்சாரப்பீரங்கி’ மு ஆலாலசுந்தரம் (கிளிநொச்சித்தொகுதி) ஆகிய தலைவர்களும் தோல்வியுற்றிருந்தனர்.
அடுத்து வரப்போகின்ற 1977 தேர்தலில் 1970 இல் தோல்வியைத் தழுவிய இத்தலைவர்களெல்லாம் தமது வெற்றியைச் சந்தேகத்துக்கிடமின்றி உறுதி செய்து கொள்வதற்கு இரண்டு கட்சிகளும் இணையவேண்டிய அரசியல் தேவையேற்பட்டது. தமிழர்களுடைய அரசியல் ‘ஐக்கியம்’ என்ற பெயரில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸூம் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் இணைந்ததாகப் புதிய ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ (உதயசூரியன் சின்னம்) உருவாகியது.
உண்மையில் ‘ஐக்கியம்’ என்றால் என்ன நடந்திருக்க வேண்டுமென்றால், ‘தமிழர்விடுதலைக் கூட்டணி’ உருவாகிய கையோடு அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸூம் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாக தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகிய இரு கட்சிகள் இருந்த இடத்தில் ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யும் சேர்ந்து மூன்று கட்சிகள் வந்தன. கட்சிகளின் எண்ணிக்கை கூடியது. இதுவா ஐக்கியம்?
‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யின் உதயமும் அதன் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் தந்திரோபாயமே.
தீவிரவாத இளைஞர்களைத் திருப்திப்படுத்துவதும் இருகட்சிகளிலுமுள்ள ‘தலைவர்’களின் எதிர்காலத்தேர்தல் வெற்றிகளை உறுதிசெய்து கொள்வதுமே அந்த இரண்டு மாங்காய்கள்.
இந்தக் கட்டத்தில்தான் வரலாறு பின்வரும் கேள்வியை எழுப்புகிறது.
தந்தை செல்வா தானாகத்தான் இந்தத் தீர்மானங்களை மேற்கொண்டாரா? இத்தீர்மானங்களுக்கு முழுமையாகச் சம்மதம் அளித்திருந்தாரா?
‘தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறுமளவுக்கு அரசியல் கையறு நிலையில் நின்ற தந்தை செல்வா தனிநாட்டுத் தீர்மானமொன்றிற்கு எவ்வாறு தாவியிருக்க முடியும். நம்பவே முடியவில்லை.
தந்தை செல்வா தனது அந்திமக்காலத்தில் மூப்பினால் ஏற்பட்ட உடல்தளர்வு – அவரைப் பீடித்திருந்த ‘பார்கின்சன்’ நோயின் தாக்கம் – பலவீனமுற்றிருந்த செவிப்புலன் ஆகிய காரணங்களால் தனது தமிழரசுத் தனயன்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ‘இயலாமை’யில் இருந்தாரா?
ஏனெனில், ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யின் உருவாக்கமும் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானமும் தேர்தல் அரசியலை மையமாகக்கொண்டே நிகழ்ந்தன என்பதையே வரலாறு எண்பித்திருக்கிறது. மேலும், தனிநாட்டுத் தீர்மானத்தின் இறுதி விளைவு தமிழ் மக்களுக்கு உயிரழிவு – சொத்தழிவு – உளவியல் சிக்கல்கள் – கலாசாரச் சீரழிவு எனப் பலவகைப் பேரழிவுகளை ஏற்படுத்தி முடிவில் இருந்ததையும் இல்லாமற்செய்து தமிழ் மக்களை இன்று அரசியல் கையறு நிலையிலேயே – கடவுளும் காப்பாற்ற முடியாத நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளது.
இவற்றின் அடிப்படையில் சிந்திக்கும்போது வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் ‘பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாகத் தனிநாட்டை அடைய முடியாது என்பது கூட்டணியின் படித்த தமிழர்களுக்கு தெரியாததல்ல’ எனும் கூற்றுச் சரியானதே.
