தர்மசக்கரம் தர்மசங்கடம்..!(மூன்றாவது கண்: XIX)

தர்மசக்கரம் தர்மசங்கடம்..!(மூன்றாவது கண்: XIX)

 — அழகு குணசீலன் —

அரசியலில் “தலை வாலை ஆட்டுவது” பொதுவானது. ஆனால் தற்போது வளமும், அழகும் கொண்ட நாட்டை உருவாக்குவதில் என்.பி.பி.அரசாங்கத்தை “வால்  தலையை ஆட்டுகிறது”. இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்தமதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்த அவலநிலைக்கு காரணம். இந்த ஆட்டிப்படைக்கும் பௌத்த மேலாதிக்க அரசியலில் இருந்து விடுபட முடியாமல் ஜே.வி.பி- என்.பி.பி. இடதுசாரி (?)மன்னிக்கவும் சிலர் கூறுவது போன்று இடதுசாரிகளைக்கொண்ட (?) அரசாங்கமும் தவிர்க்க முடியாமல்  வால் தலையை ஆட்டுவதால் சிக்கித் திணறுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கடந்த செப்டம்பர் 2024 முதலான செயற்பாடுகள் தொடர்ந்தும் பௌத்த பீடங்களுக்கு எதிரான இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் அத்துமீறிய காணி அபகரிப்பு, விகாரைகளை அமைத்தல், சட்டம், நீதி, நிர்வாகத்தில் தலையிடுதல், அதிகாரிகளை அச்சுறுத்தல்……. என்று தொடங்கி தற்போது சட்டம், நீதி, நிர்வாகம் தொடர்பாக சந்தேகநபர்கள் அல்லது குற்றவாளிகளான பிக்குகளின் பிரதிநிதிகளாக பௌத்த பீடதலைவர்களை அழைத்து “என்ன செய்யலாம்” என்று கொள்கைவகுப்பு ஆலோசனை வகுப்புக்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எடுக்கும் அளவுக்கு பிக்குகளின் கை ஓங்கியிருக்கிறது..

அநுராதபுரம் பகுதியில் ஒரு முக்கிய பௌத்த துறவியினால் (?) பாலியல் வன்முறைக்கும் துஷ்பிரயோகத்திற்கும் பலாத்காரமாக உட்படுத்தப்பட்ட ஒரு சிறுமியின் விவகாரம் தொடர்பாக அரசாங்கம் காட்டிய பொறுப்பற்ற நழுவல்போக்கிற்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து எழுந்த எதிர்ப்பு காரணமாக ஏதோ ஒன்றை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதுமாதிரியான துஷ்பிரயோகங்களை பௌத்தபிக்குகள் மட்டும் தான் செய்கிறார்கள் என்பதல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள போலி விம்பத்தை பயன்படுத்தி அனைத்து மத தலைவர்களும் செய்கிறார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்கிறார்கள். சாதாரண  நபர்கள் செய்கிறார்கள். ஆனால் மதத்தலைவர்களின் இந்த  ஒழுக்கம், கட்டுப்பாட்டை மீறிய செயல்  முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் துறவறத்தை கேள்விக்குட்படுத்துவது.

“பேராசை, வெறுப்பு,மாயை என்னும் வேர்களை அகற்றுவோம்…”  என்று தனது வெசாக் செய்தியில் பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரிய்  அறைகூவல் விடுத்துள்ளார். 

“அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமநோக்கு என நான்கு தூண்களால் கட்டப்பட்டது பௌத்தம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெசாக் செய்தி  கூறுகிறது.

ஆனால் மக்களுக்கு சொல்லப்படுகின்ற இந்த வழக்கமான வார்த்தையாடல்களில் உள்ள  உள்மன உளவியல் இந்த உண்மைகளைப்பேசுகிறதா? இதை மதிப்பிடுவதற்கு மக்களிடம் உள்ள அளவுகோல் சமூக, பொருளாதார, அரசியல் அணுகுமுறைகளில் அரசாங்கத்தலைமைகள் அதன்படி நடந்து கொள்கின்றன வா?  என்பதுதான். பேராசை, வெறுப்பு, மாயை என்பனவற்றை  குறைந்த பட்சம் பௌத்த துறவிகளாவது துறந்து இருந்தால் இந்த நாடு இந்த நிலைக்கு போய் இருக்குமா?  இவை எவற்றையும் பௌத்த துறவிகள்(?) துறக்காமல் காவி உடையால் போர்த்துக்கொள்கிறார்கள். இதில் மற்றைய மதத்தலைவர்களும் விலக்கல்ல.

“சிங்கவர்களுக்கு இருக்கின்ற ஒரே நாடு இலங்கை தான் இதை(அதிகாரத்தை ) பங்குபோட முடியாது….” என்ற  “ பேராசை” நிலைப்பாடு, சிறுபான்மை தேசிய இனங்களை எல்லாளன் வாரிசுகளாகவும், கள்ளத்தோணிகளாகவும், வர்த்தகம் செய்ய வந்தவர்களாகவும் …. காட்சிப்படுத்தும் “வெறுப்பு” , இவர்கள் “மாயையில்” சிக்கி சுழல்வதன் வெளிப்பாடு. இவர்கள் எதையும் துறக்காத துறவிகள்.  ஜனாதிபதி கூறுகின்ற அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமநோக்கு  மக்கள் மீது அவர்  உட்பட  இதுவரையான எந்த அரசியல் தலைவர்களாலும் காட்டப்படவில்லை. இதனால்தானே இனப்பிரச்சினை இன்னும் பற்றி எரிகிறது.

“பிக்குகளை கையில் விலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முடியுமா…”?  என்ற ஜனாதிபதியின் கேள்வி அவரின் சிந்தனை அவர் கூறிய வெசாக் செய்தியுடன் முரண்படுகிறது. சட்டத்தின் முன் சகலரும் சமம், எல்லா மதமும் சம்மதம் என்ற சமநோக்கை அவரின் செயற்பாடுகளில் தேடவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கூறியுள்ள பதில் கவனயீர்ப்பை பெறுகிறது. “தவறு செய்யும் துறவிகளை அவர்களின் துறவற உடையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது நேற்று மட்டும் நடந்த ஒன்றல்ல….”  என்று அநுரவுக்கு நினைவூட்டியுள்ளார் ரணில்.

பண்டாரநாயக்கா கொலை வழக்கில் தல்டுவ சோமராம, மாப்பிட்டிகம புத்தராக்கிட்டா துறவற உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் உடைகள் அகற்றப்பட்டன. மேலும் அருட்தந்தை மத்தேயு பீரிஸ் முதன்முதலாக தனது துறவு உடையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். எனவே இந்த பிக்குகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதில் எந்த தடையும் இல்லை என்பது விக்கிரமசிங்கவின் கருத்தாக உள்ளது. 

வடக்கு கிழக்கில் அரசாங்க எதிர்ப்பு பேரணிகளின் போதும், வேறு கைதுகளின் போதும் கடந்த ஏழு தசாப்தங்களில் எத்தனை இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் அவர்களின் சீருடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் ஜோசப்மேரி, மற்றும் வேலன்சாமி போன்றவர்கள் எத்தனை தடவை தங்கள் அங்கிகளுடன் நீதிமன்றில் தோன்றினார்கள். கடந்த கால ஜனாதிபதிகளை இன, மதவாதிகள் என்று கூறும் இன்றைய ஜனாதிபதிக்கு பிக்குகள் போதைவஸ்து கடத்திய பின்னரும், பாலியல் வல்லுறவு கொண்டதன் பின்னரும், நில ஆக்கிரமிப்பு செய்த பின்னரும்தான்  இந்த கேள்வி எழுந்ததென்றால்  அவரது சட்டத்தின் முன் “சமநோக்கு” என்ற பௌத்த போதனை “உனக்கல்லடி ஊருக்கு…”

என்பதைத்தான் நினைவூட்டுகிறது.

இத்தனைக்கும் அவரை பிக்குவாக்க  பௌத்த மடலாயம் ஒன்றில் ஒப்படைக்க ஜனாதிபதியின் தாயார் விரும்பியதாகவும் சிறுவன் அநுரகுமாரவின் சாதகத்தை படித்த  பௌத்த துறவி , “இவன் நாடாள்வான்” என்று கூறியதாகவும் மன்னர்களின் வரலாற்றை ஒத்த கதைகளும் பேசப்படுகின்றன. 

இங்கு ரணில் விக்கிரமசிங்கவின்  அறிக்கை குறிப்பிட்டுள்ள விடயம் மேலும் பௌத்த பீடத்தின் உயர்நிலையை வெளிப்படுத்துகிறது.

தர்ம நீதிமன்றத்தை நிறுவும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. அரசியல் அமைப்பின் படி நிர்வாகத்துறை, சட்டமன்றம், அல்லது நீதித்துறை ஆகியவற்றிற்கு தர்மத்தை விளக்கும் அதிகாரம் இல்லை. 

“மதகுருமார்களை ஒழுங்கு படுத்தும் சட்டமூலம் அரசியல் அமைப்பின் 105 வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இறுதி அதிகாரம் அந்த பிரிவுகளின் குழுக்களிடமே உள்ளது”.

இந்த அரசியலமைப்பு வரிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட. ஜனாதிபதியின் இலட்சினைக்கும், பாராளுமன்ற இலட்சினைக்கும் மேலாக  பௌத்த பீடங்களின் தர்மசக்கரமும், பௌத்த கொடியும் மிக அதியுயர் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் தான் இதுவரை தேசியக்கொடியை ஏற்றும்போது பௌத்த துறவிகள் இருக்கையைவிட்டு எழவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட பிக்குகள் மீது பாலியல் குற்றச்சாட்டு/சந்தேகம் உண்டு என்று நடுநிலையான தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

கௌதம புத்தர் இல்லற வாழ்வையும், அனைத்தையும் அனுபவித்தபின்னர் ஞானம் பெற்று நிர்வாணம் அடைந்தார். அதுதான் சரியென்றால்  தற்போதைய பிக்குகளின் நிலைக்கு பௌத்த பீடமே பொறுப்பு ஏற்கவேண்டும். புத்தர் அனுபவித்த பின்னர் பின்நோக்கி நடந்தார் இவர்கள் அனுபவியாமல் முன்னோக்கி நடக்கின்றனர். இதுதான் அடிப்படையில் மனித உணர்வுகளை கேள்விக்கு உட்படுத்துகிறதா? 

அப்படியானால் அந்த இடத்தில் சீர்திருத்தம் தேவை.

அது சரி,

 இப்போது எது தலை….,?  எது வால்….?  

எதை எது ஆட்டுகிறது…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *