— ஜெகன் —
(மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் 26.04.2026 அன்று நடைபெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் அறிமுக விழாவில் விமர்சகர் ஜெகன் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட நயவுரை.)
– பகுதி 01
இறைவன் பூக்களைப் படைக்கும்போது மரத்துடன் பேசினார். இறைவன் மரங்களைப் படைக்கும்போது நிலத்துடன் பேசினார். இறைவன் மீன்களைப் படைக்கும்போது தண்ணீருடன் பேசினார். இறைவன் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனைப் படைக்கும்போது தமிழோடும் தமிழ் இலக்கியத்தோடும் பேசினார்.
மரத்தில் இருந்து மலரைப் பறித்தால் மலர் ஒரு மாலைக்குள் வாடிவிடும். நிலத்தில் இருந்து மரத்தைப் பிரித்தால் மரம் ஒரு நாளைக்குள் வதங்கிவிடும். நீரில் இருந்து மீனை எடுத்தால் சில நிமிடங்களில் முடிந்துவிடும். அது போலவே தமிழ் இலக்கியத்தில் இருந்து கோபாலகிருஸ்ணனைப் பிரிக்க முடியாது. மலருக்கும் மரத்திற்குமான மரத்திற்கும் நிலத்திற்குமான நீருக்கும் மீனுக்குமான உறவு போலவே இலக்கியத்திற்கும் செங்கதிரோனுக்குமான உறவு.
தமிழை இவர் நீங்கமாட்டார் – நீங்கினால் தாங்க மாட்டார். தமிழ் இலக்கியப்பரப்பில் வேண்டியவரை வேர்களை இறக்கி விழுதுகளைப் பரப்பி வாழும் ஒரு செழுமைபெற்ற கலை இலக்கியவாதி, நாவன்மை மிக்க கருத்தியல் போராளி செங்கதிரோன்.
இன்பத் தழிழே! இனிக்கும் தமிழே! பெற்ற தாய்க்கு நிகராக நாங்கள் நெஞ்சுக்குள் வைத்து நெருக்கமாக நேசிக்கும் தமிழே! எனத் தமிழை வாழ்த்தி, செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனையும் கனகர் கிராமத்தையும் கொண்டாடக் கூடியிருக்கும் மாண்புறு மக்களே! உங்கள் அனைவரையும் வாழ்த்திச் சிரம் தாழ்த்தி வணங்கி நயவுரைக்குள் செல்கிறேன்.
ஒரு கவிஞனாக கட்டுரையாளனாக ஒரு நாவன்மையுடைய பேச்சாளனாக கலை இலக்கிய அரசியல் விமர்சகனாக பன்முக ஆளுமை கொண்ட திரு.கோபாலகிருஸ்ணன் தமிழரின் அரசியல் சமூக சமய பொருளாதார வரலாறைச் சொல்லவும் தமிழர் பாரம்பரிய விழுமியங்களை அடிக்கோடிட்டுக் காட்டவும் நாவல் இலக்கியத்தைக் கையில் எடுத்திருப்பது அவரின் மற்றுமொரு பரிமாணத்தையும் ஆளுமைக் கூறையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
நாவல் இலக்கியம் இன்று உலக அரங்கில் மேல் நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாகக் கவிதை இலக்கியங்களும் கவிஞர்களும் கொண்டாடப்பட்டனர். ஆனால் சமகாலத்தில் உலக அரங்கில் நாவல்களும் நாவல் ஆசிரியர்களும் கொண்டாடப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 10 நாள் மாலை 4.00 மணிக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும். இன்னும் ஒரு தமிழ் நாவலுக்கு அது கிடைக்கவில்லை என்பது கவலையளிக்க கூடியதாக இருந்தாலும் இதுவரை 120 வருடங்களாக வழங்கப்படும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளில் 68 நோபல் பரிசுகள் நாவல் இலக்கியங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது நாவல்களுக்குக் கிடைத்த அங்கீகாரமே எனலாம்.
நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய வடிவமாகக் காணப்படுவது நாவல் இலக்கியம். ஆரம்ப காலங்களில் செய்யுள் பாட்டு நடை இலக்கியங்கள் மரபுக் கவிதை இலக்கியங்கள் இலக்கியப் பரப்பை ஆட்சி செய்தாலும் ஐரோப்பியர் வருகையின் பின் இலக்கிய வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டது. எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியங்கள் எளிமைப்படுத்தப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டன.
தமிழ் நாவல் இலக்கிய முன்னோடிகளாக மாயூரம் வேதநாயகம்பிள்ளை, ராஜம் ஐயர், மாதவையா போன்றோரைக் குறிப்பிடலாம். நவீன இலக்கிய வடிவம் எதுவாக இருந்தாலும், இலக்கியப் படைப்பாளி – இலக்கியச் சுவைஞன் – இலக்கிய விமர்சகன் என யாராக இருந்தாலும் கதையின் கரு, கதைக்களம், பாத்திர வார்ப்புகள், உத்திகள், மொழிநடை மற்றும் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு என சில அடித்தளங்கள் ஊடாகவே எழுதப்பட வேண்டும் – வாசிக்கப்பட வேண்டும் – விமர்சனம் செய்யப்பட வேண்டும்.
கோபாலகிருஸ்ணனின் எண்ணத்தில் உருவான ‘கனகர் கிராமம்’ வழமையான நாவல்களின் முறைமைகளில் இருந்து தத்ரூபமாக புனைகதை என்பதற்கு அப்பால் பாத்திரங்களை ஜனரஞ்சகமான உண்மைப் பாத்திரங்களாக இணைத்து கதையோட்டத்தின் பெருவாரியான பரப்புக்களை உண்மைச் சம்பவங்களைக் கொண்டு நடத்திச் செல்லும் பாங்கு நாவல் இலக்கிய வாசகர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய விதத்திலும் ஏற்கக்கூடிய விதத்திலும் அமைந்துள்ளமை நாவலின் தனிச்சிறப்பு என்றே குறிப்பிட வேண்டும்.
ஒரு வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி இருந்தது. மின்சாரம் தடைப்படும் நேரங்களில் அதனை ஏற்றிவைப்பார்கள். மின்சாரம் வந்து விட்டால் மெழுகுவர்த்தியை அணைத்து ஒரு ஓரத்தில் வைத்து விடுவார்கள். மெழுகுவர்த்தி தனக்குள்ளே நினைத்துக் கொள்ளும் நம் பயன்பாடு என்பது குறைவுதான். தேவை முடிந்ததும் நம்மைக் கவனிக்க யாரும் இல்லையே எனத் தன்னோடு பேசிக் கொள்ளும்.
ஒரு நாள் மின் தடை ஏற்பட்டபோது அதனை ஏற்றி வைத்தார்கள். ஒரு சிறுவன் வந்தான். அந்த மெழுகுவர்த்திக்கும் சுவருக்கும் இடையில் தன் கைகளை நீட்டி இணைத்து சுவரில் கறுப்பாக விழுந்த நிழலில் ஒரு பறக்கும் பருந்தைச் செய்தான். ஒரு துள்ளும் முயலைச் செய்தான். ஒரு ஒட்டகச் சிவிங்கியை உருவாக்கினான். அந்த மெழுகுவர்த்தி வியந்து பார்த்தது. மெய்சிலிர்த்தது. அட எனக்குள் இத்தனை உயிர்களா? சில நிமிடங்களில் அந்தச் சிறுவன் ஒரு பெருங் காட்டையே உருவாக்கி மகிழ்ந்தான். அந்த மெழுகுவர்த்தி தன் பெறுமதியை உணர்ந்தது.
அது போலவே கனகர் கிராமம் நாவலிலும் அதை எழுதிய கோபாலகிருஸ்ணன் என்னும் படைப்பாளியிலும் வாசிக்க வாசிக்க பலவிதமான சுவையான விடயங்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. இலக்கிய சுவை ஊற்றெடுக்கிறது. சரித்திரத் தடயங்கள் துலக்கப்படுகிறது. இந்த நாவலுக்குள் இத்தனை காட்சிப்படிமங்களா? என அதிசயிக்க வைக்கிறது.
ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பெரும் காடே உருவானதுபோல் மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரிச் சந்தியில் தொடங்கி 2019 ஆகஸ்ட்16 திகதி வெள்ளிக்கிழமை காலைப்பொழுது ஏக்கத்துடன் விடியும்வரை நீண்ட 647 பக்கங்களில் கனகர் கிராமம் நாவல் ஒரு பெரிய புதுமைப் புரட்சியையே செய்கிறது. அம்பாறை அரசியல் வரலாறை வடிவாக வார்த்து விட்டிருக்கிறது எனலாம்.
‘கனகர் கிராமம்’ நாவலின் தராதரம் – தரச்சிறப்பு – Quality காலம் செல்லச்செல்ல கூடிக்கொண்டே போகும் என்பதை இப்போதே அனுமானிக்கக் கூடியதாக உள்ளது. காரணம் இது வரலாற்று தடயவியல் (Historical Evidence) பதிவாக இருக்கிறது.
லண்டனில் இருந்து ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் அவர்கள் எழுதிய முன்னீட்டில் இருந்து ஒரு பகுதியை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘இந்த நாவலை அவர் (கோபாலகிருஸ்ணன்) வாராவாரம் எழுதிக்கொண்டிருக்கும்போது அரங்கம் பத்திரிகைக்கு வந்த கடிதங்கள் மின்னஞ்சல்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த வாசகருடையவை. தாமறியா தம் மாவட்ட விடயங்களைக் கோபாலகிருஸ்ணன் ஆராய்ந்து அறிந்து எழுதியதை அவர்கள் சிலாகித்து எழுதியிருந்தனர். அவரோடு அரசியலில் முரண்படும் பலரும் கனகர் கிராமத்தில் மூழ்கிப்போய் இருந்தனர். உண்மையில் அவர் கனகர் கிராமத்தில் குறிப்பிட்டுள்ள சர்ச்சைக்குரிய விடயங்களுக்குக்கூட எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை’.
அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம். கனகரெட்ணம் அவர்களால் அங்கு வாழ்ந்த விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் அடங்கிய கிராமம். அதுவே கனகர் கிராமம். பின்னாட்களில் போர்க்சூழலால் பறிபோன கதைதான் இந்த நாவலின் அடிப்படையாயினும் அதனைக் கடந்தும் பல விடயங்களைக் கனகர் கிராமம் பேசுகிறது.
பேரூந்து கண்ணாடி யன்னல் வழியே கிராமங்களைப் பார்த்துக் கோகுலன் ஒன்று விடாமல் கிராமங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளமை ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்த கத்தோலிக்க, மெதடிஸ்த பாடசாலைகளுக்கு தற்போது இந்து சமய தெய்வங்களின் பெயர் சூட்டப்பட்டதுபோல் ஊர்களுக்குப் பெயர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நேரத்தில் கனகர் கிராமத்தில் இருந்து உண்மையைப் பெற்று ஊர்களைச் சொல்ல முடியும்.
அறுபதாம் கட்டையில் இருந்த சேனையைப் பற்றியும் சேனைப்பயிர்ச் செய்கையைப்பற்றியும் எழுதியிருக்கும் விடயங்களுடன் என்னால் மிக இலகுவாக ஒன்றித்துப்போகக் கூடியதாக இருந்தது. காரணம் நாங்களும் வாழ்வாதாரத்திற்காக திராய்மடுவில் 1979, 1980 ல் சேனை வெட்டிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்கள் என்பதனால்.
எஸ்ரா எழுதிய யாமம் என்னும் கதையில் ரோஜாத் தோட்டத்தில் இருந்து அத்தர் வாசனைத் திரவம் செய்யும் ஒரு குடும்பத்தின் வாழ்வியலை வாசிக்கும்போது வாசிப்பில் கருத்தூன்றிய வாசகனுக்கு அத்தர் மணம் மூக்கில் நுழையும். அதுதான் எழுத்தாளனுக்கும் எழுத்துக்களுக்கும் வாசகனுக்குமான ஆழமான மானசீக உறவு. அதுபோலவே அறுபதாம் கட்டைச் சேனையை வாசிக்கும்போது காட்டை வெட்டி மரம் செடி கொடிகளைக் குவித்து மாலை நேரத்தில் தீயிட்டு எரிக்கும்போது ஒரு வித வாசனை வரும். அந்த வாசனையை நான் உணர்ந்தேன். வியந்தேன் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கதிர்காம யாத்திரை தெய்வீக அனுபவத்தை மேலோங்கச் செய்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கோகுலனின் தாயாரின் யாத்திரைக்குழுவில் நானும் ஒருவனாக நடந்து சென்று கதிர்காம திருவிழா பார்த்த பிரமையை எனக்குள் ஏற்படுத்தியது.
உகந்தை மலை உச்சியில் படுக்கை – கடலோரக்காட்சி – விடிகாலைப் பொழுது எல்லாமே காட்சிப் படிமங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாத்திரிகர்களின் சாப்பாட்டு முறைமை மனதைத் தொட்டது.
கூமுனைக்கிராமத்திற்குப் போகும் வழியில் உள்ள நீர்நிலையின் அழகு பறவைகள் சரணாலயத்தின் எழில் மிகவும் சுவைமிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் வெண்பா பாடல் ஒன்றை எழுத்தாளர் சேர்த்திருப்பது நன்றாகப் பொருந்துகிறது. ‘வான் குருவியின் கூடு வல்லரக்கு தொல்கறையான் …. என தொடரும் வெண்பாதான் அது. தூக்கணாங் குருவிக்கூடு – கறையான புற்று – சிலந்திவலை, இங்கு Multiple Intelligence பற்றி எழுத்தாளர் கூற முற்படுகிறார். அதாவது எல்லாராலும் எல்லாம் முடியாது. ஹவார்ட் காட்னர் (Howard Gardner) என்பவர் கண்டுபிடித்த பன்முக நுண்ணறிவு பற்றி இங்கு பேசப்படுகிறது.
கோபாலகிருஸ்ணன் அவர்கள் கணிதத்துறையில் (எண்சார்ந்த நுண்ணறிவு Number Smart)
பிரகாசித்தவர். ஆனாலும் மொழியாற்றலும் (மொழிசார்ந்த நுண்ணறிவு) ஒருங்கே பெற்றவர் என்றுதான் கூறவேண்டும். அவ்வளவு துல்லியமாக அழகுணர்ச்சி பரவ தமிழ் மொழியை லாவகமாகக் கையாண்டுள்ளார்
ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பயிற்சி பெற்றாலும் இயற்கையாகவே மொழியாற்றலும் அவரிடம் காணப்படுகிறது.
கூமுனைக் கிராம மக்களின் உடலமைப்புத் தோற்றம் – உடைகள் – பேசும் மொழி எல்லாமே மிகவும் நுணுக்கமான முறையில் அழகுணர்ச்சி மேலோங்க சித்தரித்துள்ள விதம் பாராட்டுக்குரியதே. கண்முன்னே கூமுனைக் கிராமத்தைக் கண்டேன்.
பல மொழி பண்பாடு கலாசார பண்பாடுகள் பற்றிய தெளிவுகள் கதையோட்டத்தில் அழகாகக் கூறப்படுகிறது.
செங்கதிரோனின் மண்பற்று – நிர்வாக எல்லைகள் பற்றிய விளக்கம் – அம்பாறை அரசியல் களம் – உட்கட்சிப் பூசல்கள் – சிறு குழு வன்முறைகள் என்பன மிகவும் சுவாரசியமாக நாவலில் பின்னப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதே.
பாரதி ஒரு சந்தர்ப்பத்தில் நாடு விடுதலை பெறமுதல் சிலருடைய நாக்கு விடுதலை பெறவேண்டும் எனக்கூறியுள்ளமையை இங்கு குறிப்பிடவேண்டும். தமிழ் மீட்பர்கள் எனக்கூறிக்கொள்ளும் சில அரசியல் வாதிகள் வெளிநாட்டு ராஜ தந்திரிகளோடு பேச ஒரு நாக்கு – சிங்கள ஆட்சியாளர்களுடன் பேச வேறொரு நாக்கு – தமிழ்க் கிராம பாமர மக்களோடு பேச மற்றொரு நாக்கு எனப் பல நாக்குகளைக் கொண்டிருக்கும்போது, கோபாலகிருஸ்ணன் எப்போதும் எந்த இடத்திலும் ஒரே பேச்சைக் கொண்டவர். எவருக்கும் அஞ்சாத நெஞ்சின் சொந்தக்காரர். அதுவே என்னை அவர் பால் ஈர்த்தது. ஒரு நாள் என்னோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சிலர் அடிக்கடி கூறித் தம்மையும் பிறரையும் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் ஒரு கூற்று ‘தமிழர்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ தந்தை செல்வா இதைக் கூறியுள்ளாராம். அதற்குக் குற்ற உணர்வு உள்ள சிலர் விளக்கவுரைகளும் மேடைகளில் கொடுக்க முயல்கின்றனர்.
‘தமிழர்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனச் சொல்வதற்கு ஒரு தலைவர் தேவைதானா ? எனக் கோபாலகிருஸ்ணன் என்னிடம் கேட்டது என்னைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரு இலட்சியத் தலைவர் Visionary Leader இப்படி இயலாமையை வெளிப்படுத்தும் எதிர்மறை வாக்கியத்தைக் கூறுவது பொருத்தமா? அப்படியானால் தமிழர்களைக் காப்பாற்ற அவரது தந்திரோபாயம் என்ன? அவ்வாறு அவர் கூறினாலும் அதைத் தொடர்ந்து தூக்கிப்பிடிக்கலாமா? என்ற சிந்தனை என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.
இவ்வாறு விமர்சனரீதியாகச் சிந்தித்துக் கருத்துக்களை உரைப்பதுதான் கோபாலகிருஸ்ணனின் தனித்துவம். கனகர் கிராமத்தில் சில அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்து உண்மைக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறார் கோபாலகிருஸ்ணன்.
தொடரும்…..
