தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….?      (மூன்றாவது கண்: XXIII)

தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….? (மூன்றாவது கண்: XXIII)

— அழகு குணசீலன் —

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவுநாளில் நினைவுப்பேருரையை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிகழ்த்தியிருந்தார். “சமஸ்டி முறையும் அரசியல் அமைப்பு சீர்திருத்த பாதையும்” என்பது பேராசிரியரின் உரைக்கான தலைப்பு. பீரிஸ் தனது உரையில் விடுதலைப்புலிகளின் கடும்போக்கே பேச்சுச்கள் தோல்வியடைந்ததற்கு காரணம் என்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்தும், விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூலிக்கு மாரடித்ததை “பாலசிங்கம் சூழ்நிலையின் கைதியாக”  இருந்தார் என்ற பாணியிலும்  அவரின் கையாலாகாத்தனத்தை நினைவு கூர்ந்தார். 

செல்வநாயகத்தை நினைவு கூர்ந்ததை விடவும் அன்ரன் பாலசிங்கத்தை அவர் நினைவு கூர்ந்தது அந்த உரையில் அதிகம்.

பீரிஸின் இந்த உரை பல தரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தரப்பினர் பீரிஸின் உரையை முழுமையாக ஆதரிக்கின்றனர். இன்னொரு தரப்பினர் தாங்களும் புலிகளோடு சேர்ந்து இருந்து கூலிக்கு மாரடித்த கையாலாகாத்தனத்தை பாலசிங்கம் மூலம் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். மூன்றாவது தரப்பு  அரசாங்கமும் புலிகளும்  போருக்கான  கால அவகாசத்திற்காகவே பேசினார்கள் என்றும் சமாதானத்திற்காக  அல்ல என்றும் வாதிடுகின்றனர். இந்த வகையில் இரு  தரகு முகவர்களான  ஜி.எல். பிரிஸும் அன்ரன் பாலசிங்கமும் இதையே செய்திருக்கிறார்கள்..

கொழும்பிற்கு,  பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் திரண்ட ஆதரவால் பொதுவாக புலிகளின் தமிழீழக்கனவு அடையமுடியாத இலக்காகப் போகிறது  என்பதை கண்ட  போர்முனைத்தளபதி கருணா அம்மான், சிறப்பாக கிழக்கின் சமூக பன்மைத்துவத்தையும் கருத்தில் கொண்டு பீரிஸ் முன்வைத்த சமஷ்டி குறித்து பேசுவதற்கு அன்ரன் பாலசிங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அதனாலேயே சமஷ்டி பற்றி விவாதிப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இந்த புள்ளிக்கு அரசாங்கத்தை நெருக்கியது விடுதலைப்புலிகளின்  போர்முனைப்பலம்  என்பதையும், அதில் கருணா அம்மானதும், கிழக்கு போராளிகளினதும் பங்கு  அளப்பரியது என்பதையும் மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. எனினும் வெளியுலகில், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் புலிகள் அழிக்கப்படவேண்டிய பயங்கரவாத அமைப்பாகவே பார்க்கப்பட்டனர்.

நோர்வேயில் இடம்பெற்ற ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் “சமஷ்டி” தீர்வு குறித்து ஆராய இருதரப்பும் இணங்கிய நிலையில்  இரு தரப்பும் கையொப்பமிட்ட ஒரு ஆவணத்தை அன்றைய கிழக்கு (மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட) புலிகளின் தளபதி கருணா அம்மான் வன்னிக்கு பிரபாகரனின் கவனத்திற்காகவும்,  உள்ளக உயர்மட்ட கலந்துரையாடலுக்காகவும்  நோர்வேயில் இருந்து எடுத்து சென்றிருந்தார்.  இதை கருணா பல ஊடகச் சந்திப்புக்களிலும், நேர்காணல்களிலும் பகிரங்கமாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

பீரிஸின் நினைவுரையில் உள்ள வேடிக்கை என்னவென்றால் சமஸ்டி தீர்வுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் குழுவில்  இருந்த கருணாவின் நிலைப்பாட்டை பீரிஸ் பேசவில்லை. அவரது குறும்பார்வையும், தமிழ்த்தேசியத்தோடு  முரண்படாது  யாழ்ப்பாணத்தில் தப்பிக்கும் கூலிக்கு மாரடிக்கும் குணாம்சமும் அவரைத் தடுத்துவிட்டது.  மறுபக்கத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக புலிகளின் தலைமையின் அனைத்து “கறுப்பு” செயற்பாடுகளுக்கும் வெள்ளையடித்த பாலசிங்கம் பற்றி வரிக்கு வரி பேசியிருக்கிறார். அன்ரன் பாலசிங்கத்தின் மனச்சாட்சி நான்கு சுவர்களுக்கு இடையே பீரிஸிடம் அழுதது என்பதற்கு யார் சாட்சி?  முறைப்பாட்டாளரும், சாட்சியும் பீரிஸ் தான். அன்ரன் பாலசிங்கத்திடம் அவரது மதியுரைஞர் பதவிக்காலத்தில் அப்படி ஒரு சைகையை ஈழத்தமிழர்கள் கண்டதற்கு கிஞ்சிற்றும் ஆதாரம் இல்லை. நிலத்திலும், புலத்திலும் அரசியல் போக்குகளின் உண்மைத் தன்மையை பேசாது ஈழத்தமிழர்களை ஏமாற்றி, இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர் பாலசிங்கம். அவருக்கு பெயர் அரசியல் ஆலோசகர் (?). அழிவுக்கு ஆலோசனை!

 கருணா அம்மான் தான் நோர்வேயில் சமஸ்டி தீர்வு பரிசீலனைக்கு புலிகள் குழுவுக்குள் அன்ரன் பாலசிங்கத்தோடு வாதிட்டதற்கு இருந்த அனைத்து சாட்சியங்களும் வன்னியில் பிரபாகரனுக்கு முன்னால் மனச்சாட்சியை இழந்து மௌனம் சாதித்தனர்.  சமஷ்டி பற்றி ஆலோசிக்கத்தயார் என்ற உடன்பாடு புலிகள் தரப்பு பேச்சுவார்த்தை குழுவின் கூட்டு முடிவு. அதற்கான  கூட்டுப்பொறுப்பை கருணாவைத்தவிர இவர்கள் யாரும் ஏற்கவில்லை. மாறாக பிரபாகரன் கருணா சந்திப்பு  இது விடயமாக இடம்பெறுவதற்கு முன்னரே கருணாவை தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்தனர் அந்த குழுவினர்.. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் குழுவில் இருந்த அமெரிக்க சட்ட வல்லுனர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் மட்டுமே உயிருடன் இருக்கின்ற தமிழ் தரப்பு சாட்சி என்று கருணா கூறியிருந்தார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.

ருத்திரகுமாரன் இது பற்றி  இதுவரை வாய்திறக்கவேயில்லை. அன்று வன்னியில் புலிகளுக்கு போர்முரசம் கொட்டி, எழுதியும், பேசியும், ஆட்சேர்ப்பிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே பீரிஸ் போட்ட பிச்சையில் “அன்ரன் பாலசிங்கமாக” நியாயப்படுத்த ஒரு போர்வையை தேடுகின்றனர். மேலும் பிரபாகரனுக்கு வசதியாக காற்று வளத்தை பார்த்து அரசியல் செய்து விட்டு, காற்று ஓய்ந்ததும் தீமைக்கு பின்னால் ஓடியதை மறைக்க விமர்சனம் என்ற பெயரில் கதைகள் எழுதப்படுகின்றன. 

பி.பி.சி. ஊடகவியலாளர் மார்க் சால்டர் (MARK SALTER)  எழுதியுள்ள இலங்கையின் உள்நாட்டு போர்குறித்த  TO END A CIVL WAR (Norway’s peace Engagement in Srilanka) : “உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர” என்ற நூல் சமாதானத்திற்கான முயற்சிகளின் கதை சொல்லியாக அமைகிறது.

இந்த நூலில் மார்க் சால்டர். புலிகள் இரண்டு காரணிகளை கணக்கில் எடுக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

1. இலங்கையின் நில ஒருமைப்பாட்டை ஏற்காத எந்த ஒரு தீர்வு மீதும் இந்தியாவுக்கு இருந்த வீட்டோ அதிகாரம்.

2. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான மேற்கத்திய நாடுகளின் விசுவாசம்.

 நோர்வேயில் சமஷ்டி குறித்து புலிகளுக்கு இடையே இடம்பெற்ற உள்ளக பேச்சில் கருணா முன்வைத்த கருத்து இந்த இரண்டையும் உள்ளடக்கி இருப்பதை அவதானிக்கலாம்.  இறுதியில் இந்தியாவுடன் முரண்பட்டது போல் மேற்கத்திய நாடுகளுடனும் புலிகள் முரண்பட்டனர். விளைவு: முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியில் முடிந்தது. இந்த பிராந்திய, சர்வதேச ஜதார்த்தத்தை -ஈழத்தமிழர்களின் தற்பாதுகாப்பை பிரபாகரனுடன் பேசத்திராணியற்ற பாலசிங்கம் ஈழதேசத்தின் குரலா? அந்த ஜதார்த்தத்தை பேசி அதற்காக “துரோகி பட்டம்” சுமக்கும்  கருணா தேசத்தின் குரலா? என்று எப்படி கேட்காமல் இருக்க முடியும்.

 கருணாவின் வார்த்தைகளிலான இந்த சாட்சியம்  கடந்த காலங்களில் ஊடகங்களில் வெளிவந்தவை. என்றாலும் இன்னும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதலிலும், விடுதலைப்புலிகளில் ஏற்பட்ட பிளவிலும், இன்றைய சமஷ்டி விவாதங்களிலும் தவிர்க்க முடியாததும், மீண்டும் மீண்டும் பேசப்படவேண்டிய வரலாற்று பதிவாகவும் மாறிவிட்டன.

வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது உத்தியோக பூர்வமாக வன்னிக்கு சென்று மக்களை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. INTERNATIONAL ALERT அமைப்பின் அனுசரணையில் 2010 இல் இடம் பெற்ற அந்த கள விஜயத்தில் JEREMY LIYANAGE என்ற பத்திரிகையாளரும் உடன் இருந்தார். அப்போது கிளிநொச்சியில் தங்கியிருந்த ஒரு இரவில் இடம்பெற்ற இந்த நேர்காணலை இங்கும் ஆதாரம் காட்ட முடியும்.

லியனகே:  நீங்கள் ஏன் பிரபாகரனிடம் இருந்து பிரிந்தீர்கள்…?

கருணா: ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நான் நோர்வேயில் இருந்தேன். தூதுக்குழுவின் தலைவராக அன்ரன் பாலசிங்கம் இருந்தார். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், அரச தரப்பு ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் ருத்திரகுமாரனும் இருந்தார்கள். நோர்வே அமைச்சர் ஒருவர் பேச்சுக்களை வழிநடத்தினார்.

கலந்துரையாடலின் போது அமைச்சர் பீரிஸ், இது பேச்சு வார்த்தைகளின் ஐந்தாவது சுற்று. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. நீங்கள் முதலில் தமிழீழக்கனவை கைவிடவேண்டும். இந்தியா உட்பட உலகம் அதனை ஏற்றுக்கொள்ளாது. வடக்கு கிழக்கு பகுதிக்கு தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சி முறையை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

(கருணாவின் கூற்றுப்படி பீரிஸின் இந்த யோசனைக்கு பதிலளிக்க பேச்சுவார்த்தையை இடைநிறுத்துமாறு விடுதலைப்புலிகளின் குழுவினர் கோருகின்றனர்)

பாலசிங்கத்திடம் கருணா: இது உண்மையிலேயே ஒரு நல்ல முன்மொழிவு. அவர்கள் சொல்வது சரிதான். ஏனென்றால் செப்டம்பர் 11 க்குப் பிறகு உலகம் மிகவும் மாறிவிட்டது. அனைத்து மேற்கத்திய நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக உள்ளன. நாமும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கிறோம். இந்தியாவும் கூட அதைச்செய்துள்ளது.

கூட்டாட்சி அமைப்பு நமது மக்களுக்கு நல்லது. நாம் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்தும் எதுவும் முன்னேறவில்லை என்றால், இந்த உலகம் நம்மீது சலிப்படைந்து விடும்.

பாலசிங்கம்: நாம் இந்த விடயம் குறித்து பிரபாகரனுடன் பேசவேண்டும்.

 கருணா: நாங்கள் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கூட்டாட்சி தீர்வை மட்டுமே பரிசீலிப்போம். நான் திரும்பியதும், இது குறித்து பிரபாகரனிடம் விவாதிப்பேன்.

பாலசிங்கம்: நான் கிளிநொச்சிக்கு வரமாட்டேன். நான் இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறேன். எனவே (கருணாவை நோக்கி) நீங்கள் பிரபாகரனிடம் தனியாகப்பேச வேண்டும்.

(ஒப்பந்தம் கைச்சாத்தானது கருணா கிளிநொச்சி திரும்பினார், ஏற்பாட்டின் படி பிரபாகரனை சந்திக்க கையோடு  கையெழுத்திட்ட ஆவணத்தையும் எடுத்துச் சென்றார். அரசியல் மதியுரைஞர் ஒரு முக்கிய தீர்வு குறித்து விவாதிக்க வேண்டிய வேளையில் இங்கிலாந்தில் ஒழிந்து கொண்டு கருணாவை பிரபாகரனுடன் மோதவிடுகிறார்) 

நான் என்ன செய்தேன் என்பது பிரபாகரனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. நான் அலுவலகத்திற்குள் நுழைந்த நேரத்தில் இருந்தே அவர் கோபமாக கத்த ஆரம்பித்தார்.  (விடயத்தையும், கருணாவின் நிலைப்பாட்டையும் பிரபாகரனுக்கு முன்கூட்டியே ஓதியவர்கள் யார்?)

ஏமாற்றுக்காரனே, துரோகியே… என்று அவர் கத்தினார்.

கருணா: நாங்கள் கையெழுத்திட்டோம்.ஆனால் இது எதற்கும்  இறுதிமுடிவல்ல. (கருணா அந்த பத்திரத்தை பிரபாகரனிடம் காட்டினார்). நாம் ஒரு கூட்டாட்சி முடிவை மட்டுமே பரிசீலிக்கப்போகிறோம்.

பிரபாகரன்: நீ மாத்தையா மாதிரி இருக்கிறாய்.

(அன்று மதியம் தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், நடேசன், நானும்,(கருணா ),புலித்தேவன், உட்பட விடுதலைப்புலிகளின் கூட்டம் நடைபெற்றது. பிராபாகரன் மீண்டும் என் மீது தனது கோபத்தை காட்டினார். அவர்கள் முன்னிலையில் என்னை காட்டிக்கொடுப்பவன் என்று பேசினார். அந்த வார்த்தை மிகவும் சக்திவாய்ந்தது நான் காயப்பட்டேன்)

நான் மாலையில் வீட்டுக்கு திரும்பினேன். மிகவும் கவலையாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக நான் விடுதலைப்புலிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தேன். அவர் என்னை மாத்தையாவுடன் ஒப்பிட்டார்.

 பிரபாகரனைப்பற்றி எனக்கு தெரியும். அவர் அவ்வளவு கோபமாக இருந்ததும் மாத்தையாவுடன் என்னை ஒப்பிட்டதும் கிளிநொச்சியில் இருந்து வேகமாக தப்பிச்செல்ல வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது. இல்லையேல் எனக்கு ஏதாவது கெடுதல் நடக்கும் என்று நினைத்தேன்.

லியனகே: எப்படி தப்பினீர்கள்?

கருணா:  பேச்சுவார்த்தைகளுக்காக விடுதலைப்புலிகளுக்கு போக்குவரத்து வசதிசெய்து தர SLMM ஐ ஏற்பாடு செய்பவன் நான் தான். மட்டக்களப்புக்கு செல்ல ஒரு ஹெலிகாப்டர் கேட்டேன். அவர்கள் என்னை அழைத்து செல்ல வரவேண்டிய இடத்தையும், நேரத்தையும் கேட்டார்கள். 

என் வீட்டிற்கு அருகில் உள்ள, கிளிநொச்சியில் ஒரு பள்ளி மைதானத்திற்கு, அதிகாலையில் என்று சொன்னேன். 

நான் மட்டக்களப்புக்கு தப்பிய பின்னர், என்னை தொடர்பு கொண்டு கிளிநொச்சிக்கு கிழக்கில் இருந்து 4,000 போராளிகளை கேட்டார். அதை நான் நிராகரித்தேன்.

இறுதியில் கருணா ,அண்ணன் நீங்கள் வடக்கை பார்த்துக்கொள்ளுங்கள்,

நான் கிழக்கை பார்த்துக்கொள்கிறேன்… என்று கருணா பிரபாகரனிடம் சொன்னதும் நடந்து முடிந்தவையும் வரலாறு.

பண்டாரநாயக்காவின் சமஷ்டியை  ஒரு காலத்தில் நிராகரித்து பண்டாரநாயக்காவையே இனவாதி என்றார்கள், இந்திய -இலங்கை உடன்படிக்கையை நிராகரித்து இந்தியாவின் துரோகம் என்றார்கள். சந்திரிகாவின்  தீர்வுப்பொதியை நிராகரித்து  நீலன் திருச்செல்வம் துரோகி என்றார்கள். இலங்கை அரசு -நோர்வே சமஷ்டி யோசனையையும் நிராகரித்து  கருணாவை துரோகி என்றார்கள் . 2009 வரை தீர்வுகளை நிராகரித்து புலிகளுக்கு பின்னால் அரசியல் செய்த தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இப்போது சமஷ்டி கேட்டு ஜே.வி.பி.யிடம் மண்டியிடுகிறது. 

சமஷ்டி பற்றி நினைவுப்பேருரை ஆற்றிய பீரிஸ் சமஷ்டிக்காக குரல்கொடுத்து பிராபாகரனுடன் முரண்பட்ட கருணாவை கண்டு கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சியை திருப்தி படுத்த பாலசிங்கத்திற்கு மாலை போடுவது போல் அவரை அரசியல் நிர்வாணமாக்கியுள்ளார்

கருணாவை கண்டு கொள்ளாத  பீரிஸின் குறும்பார்வையும், தன்னை துரோகி ஆக்கி விடாமல் தப்பிக்கும் பாலசிங்கத்தின் பாணிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *