(‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)
— செங்கதிரோன் —
பால. சுகுமாரின் ‘மகரம் சூடிய மண்’ நாவல் – ‘மருதடியூர் மணியகாரர்’ சிறுகதைத் தொகுப்பு – ‘கனவில் வந்த புத்தன்’ கவிதைத்தொகுப்பு – ‘சப்பை’ கவிதைத்தொகுப்பு – ‘எதிர்ச்சொல்’ கவிதைநூல் ‘கூத்தில் நிமிர்ந்து’ அரங்கியல் நூல் ஆகிய ஆறு நூல்களினதும் பால. சுகுமாரின் தொகுப்பில் இலக்கிய கலாநிதி வ.அ. இராசரத்தினம் நூற்றாண்டு மலரினதும் அறிமுகங்கள் 01.05.2026 அன்று மட்டக்களப்பு ‘கூடம்’ மண்டபத்தில் (10, புதிய வீதி, மட்டக்களப்பு) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக முதுநிலை விரிவுரையாளர், திருமதி. பிரியா ஜெதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக திரு. செல்வரத்தினம் ஜெயபாலன், பணிப்பாளர், உயர்தொழில் நுட்பக்கல்லூரி, மட்டக்களப்பு – முதன்மை அழைப்பாளராக அருட் திரு. கலாநிதி அன்ரனி நவரெத்தினம் (நவாஜி), முதுநிலை விரிவுரையாளர், கிழக்குபல்கலைக்கழகம் ஆகியோர் சமூகம் தந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து : கலாநிதி சியாமளாங்கி கருணாகரன் – வரவேற்புரை : செல்வி அம்ரிதா – நிறைவுரை : பால. சுகுமார் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. நூல்களின் முதற்பிரதிகளை பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.
நூல்களின் அறிமுகங்களைப் பின்வருவோர் நிகழ்த்தினர்
• ‘மகுடம் சூடிய மண்’-முருகு. தயாநந்தன்
(நாவல்)
• ‘மருதயடியூர் மணியகாரர் -செங்கதிரோன்
(சிறுகதைத் தொகுப்பு)
• ‘வ.அ.நூற்றாண்டு மலர்’ -திருமதி. ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்
மேனாள் முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
• ‘கனவில் வந்த புத்தன்’ - வி. மைக்கல் கொலின்
(கவிதைத் தொகுப்பு)
• ‘சப்பை’ - கலாநிதி. சு. சந்திரகுமார்
(கவிதைத் தொகுப்பு) முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப்
பல்கலைக்கழகம்
• ‘எதிர்ச்சொல்’ -கவிஞர். சோ. அருளானந்தம்
(கவிதை நூல்)(மன்னனூர் மதுரா)
• ‘கூத்தில் நிமிர்ந்து-திரு.க.மோகனதாசன்
(அரங்கியல் நூல்)-முதுநிலை விரிவுரையாளர், சுவாமி விபுலாநந்த
அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்லைக்கழகம்
‘மருதடியூர் மணியகாரர்’ சிறுகதைத்தொகுப்பு குறித்த செங்கதிரோனின் அறிமுகவுரை இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
எண் : 06, இரண்டாவது தளம், காவேரிதெரு, சாலிகிராமம், சென்னை – 600093 எனும் முகவரியிலிருந்து ‘வேரல் புக்ஸ்’ இன் 266 ஆவது வெளியீடாக ஜனவரி 2026 இல் வெளிவந்துள்ள பால. சுகுமார் அவர்களுடைய ‘மருதடியூர் மணியகாரர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலின் அறிமுகம் இது.
இந்நூல் பால. சுகுமார் அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு நூல் ‘கறுப்பி’ – 2019 இல் இந்தியாவில் வெளியிடப்பெற்றதாகும்.
இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகளில் ஐந்தாவது கதையான ‘அவள்’ எனும் கதையின் களம் வெளிநாடொன்றாகத் தோற்றம் காட்டுவதால் அக்கதையைத் தவிர்த்து ஏனைய கதைகள் யாவற்றிலும் அவர் பிறந்து – வளர்ந்து – வாழ்ந்த கொட்டியாரப்பற்று மண்ணின் வாசனையே கமழ்கிறது. பண்டைய வன்னிமைகளான பனங்காம வன்னிமை – முள்ளியவளை வன்னிமை – பளுகாம வன்னிமை – பாணமை வன்னிமை வரிசையில் கொட்டியாரப்பற்று வன்னிமையும் ஒன்று.
அவருடைய முன்னுரையின் நிறைவிலும் – பின் அட்டையிலும் அவரே கூறியிருப்பதுபோல ‘என்னுடைய கதைகள் வரலாற்று நினைவுகளையும் என் பக்கத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை பற்றியும் பேசுகிறது’ எனும் கூற்றை இத்தொகுப்பிலுள்ள கதைகள் எண்பிக்கின்றன. ஆம்! அவரை உருவாக்கிய மண்ணும் மக்களுமே கதை முழுவதிலும் கலந்திருக்கிறார்கள்.
கதைசொல்லும் மரபு ஆதிகாலம் முதலே மனிதனின் குருதியோட்டத்தில் கலந்ததொன்றாகும். சைகை – ஓவியம் – போலச்செய்தல் என்று தொடங்கி காலத்திற்குக் காலம் கால-தேச வர்த்தமான நவீன விஞ்ஞான தகவல் தொழிநுட்ப மாற்றங்களை உள்வாங்கி வெவ்வேறு வடிவங்களில் கதைகள் உலாவந்துள்ளன. இவ்வாறு உலாவந்த கதைகள் வளர்ச்சிபெற்று இன்று அவை வாழ்வியலின் பிரிக்கமுடியாதொரு கூறாகி ஓர் ஆங்கில மொழிப்பதிவு கூறுவதுபோல ‘மரங்களை அடையாளம் மறந்தால் காட்டுக்குள் நீ தொலைந்து போவாய்!. கதைகளை நீ மறந்தால் உன் வாழ்க்கையில் நீ தொலைந்து போவாய்!’ எனும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.
இத்தகையதொரு சூழலில்தான் பால. சுகுமார் அவர்களின் கதைகளை நோக்க வேண்டியுள்ளது.
முதலாவது கதையான ‘மருதடியூர் மணியகாரர்’ (இதுவே நூலின் தலைப்புமாகும்) ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றுப் பெருமைமிக்க மருதேஸ்வரர் ஆலயம் குமாரப்பரின் முப்பாட்டன் வாலப்பர் அக்கோயிலைச் செம்மையாகக் கட்டுவித்த காலத்திலிருந்தே வாலப்பர் – விஜயப்பர் – காளப்பர் – விஸ்வப்பர் – பாலப்பர் – வீரப்பர் என்ற மரபின் நீட்சியில் இன்றைய மணியகாரராக இருப்பவரே குமாரப்பர். ஆனால் ‘மணியகாரர் முறை’ நீங்கிவிட்ட இக்காலத்தில் குமாரப்பர் தன்பாட்டன், மருதேஸ்வரர்மீது பாடிய திருப்பாடலைப் பாடி மருகேஸ்வரனின் வரலாற்றை நினைவுகூருவதாகக் கதை வடிக்கப்பட்டுள்ளது. மருதேஸ்வரரை நினைந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிறார் மருதடியூர் மணியகாரர் குமாரப்பர்.
இரண்டாவது கதை சேனையூரில் வாழ்ந்த காளிமுத்து சாமியார் எனும் ‘சித்தர்’ பற்றியது. கதையின் தலைப்பு ‘சித்தர் – காளிமுத்து சாமியார்’ என்பது இது ஒரு நடைச்சித்திரம்.
மூன்றாவது கதையான ‘சீர்கொண்டு வா’ என்பது வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலின் வருடாந்த உற்சவத்தின்போது அங்குள்ள வேடுவர் சமூகத்தினர் தமது சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைத் திருமணம் செய்த மருமகன் முருகனுக்கு, முருகனுக்குப் பிடித்த தேன், தினைமா, வள்ளிக்கிழங்கு, ஈச்சங்குருத்து, நாவல்பழம், அல்லிப்பூ ஆகிய ஆறு பொருட்கள் அடங்கிய சீர்ப்பெட்டியைக் கொணர்ந்து கையளிக்கும் பாரம்பரியச் சடங்கைப் பதிவு செய்கிறது.
இக்கதையின் ஆரம்பத்தில் ‘வெருகல் திருவிழாவில் தொடர்ந்த பாரம்பரிய மரபை இங்கு சிறுகதை ஆக்கியிருக்கிறேன். இன்றும் தொடர்கிறதா என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்’ என நூலாசிரியர் பால சுகுமார் கேட்டுள்ளார்.
இது விடயமாக வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்து எனது பள்ளித்தோழன் பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் – வெருகல் கோயில் வண்ணக்கராகவுமிருந்த த.சிதம்பரப்பிள்ளை – ஓய்வுநிலை அதிபர் – அவர்களிடம் விசாரித்து அறிந்து கொண்ட தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
முருகனுக்குச் சீர்கொண்டு வரும் சடங்கு தற்காலத்தில் பின்வருமாறு மாறியுள்ளது.
பதின்மூன்றாவது திருவிழா நாளன்று முன்பு சொல்லிவைத்தபடி காட்டுக்குள் சென்று கோயில் நிருவாகத்தின் வேடுவர் சமூகத்தை மேளதாளங்களுடன் அழைத்து வருவர். வேடுவர் சமூகத்தினர் வில் அம்புடன் முட்டியில் தேனும் காட்டில் விளைகின்ற அல்லைக்கிழங்கும் காவி வருவர்.
தலைவர் கோயில் வளாகத்தில் தங்கியிருப்பார். வேடுவ சமூகத்தினரைக் கோயில் நிர்வாகத்தினர் நன்கு உபசரித்து அனுப்பி வைப்பர். வில்லும் அம்பும் கோயிலில் வைத்துப் பூசை செய்யப்படும். தேனும் அல்லைக் கிழங்கும் முருகனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும். தீர்த்தோற்சவத்தன்று வேடுவர் சமூகத்தினர் மீண்டும் வந்து கோயில் வளாகத்தில் விட்டுச்சென்ற தமது தலைவனை அழைத்துச் செல்வர். கோயில் நிர்வாகத்தினர் அவர்களைச் சகல மரியாதையுடனும் அன்பாக உபசரித்து வழியனுப்பி வைப்பர். தற்காலத்து நடைமுறை இதுதான் என அறியக்கிடைத்தது.
நான்காவது கதை ‘உமை’ புராண சம்பவமொன்று சிறுகதையாகப் பதிவாகியுள்ளது. சிவன் சிவகாலம் ஓய்வெடுக்கப்போகிறார். இடைக்கால நிர்வாகம் உமையிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலம் கரைந்து தனக்கேற்ற ஒருவனைச் சிவனுக்குப் பதிலாய் புதிய சிவனாய் உருவாக்கினார் உமை. புதிய சிவனுக்கு நன்றாய் மேளமடிக்க புதிய நந்தி உருவானான். தழைகீழானது கைலாயம் இக்கதையை ஒரு குறியீட்டுக் கதையாகவே நான் எடுத்துக்கொண்டேன். இக்கதையின் மூலம் கதாசிரியர் எதைச் சொல்கிறார் எனச் சிந்தித்தேன். இலங்கையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்ஸை வைத்துக்கொண்டு சந்திரிகா ஆட்சி செய்தமையும் தமிழ்நாட்டில் பன்னீர்ச்செல்வத்தை வைத்துக்கொண்டு ஜெயலலிதா ஆட்சி செய்தமையும்தான் என் நினைவில் தட்டுப்பட்டது.
ஐந்தாவது கதை வெளிநாட்டுச் சூழலொன்றில் நிகழும் பெண்ணொருத்தியின் குடிபோதைப் பழக்கத்தையும் அவளது மரணத்தையும் விபரணப்படுத்துகிறது. கதை எழுதப்பட்ட விதம் அப்பெண்ணின் மீது பச்சாத்தாபம் ஏற்படவைக்கிறது. கதையின் தலைப்பு ‘அவள்’
ஆறாவது கதையான ‘நம்பிக்கையின் நிழலில்’ இல் கிராமத்தில் வாழ்ந்தவரும் புலவர் – பூசாரியார் – பரியாரியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கபெற்ற ‘காளியப்பு ஐயா’ வைக் காட்சிப்படுத்துகிறது. இதுவும் ஒரு நடைச்சித்திரம்.
ஏழாவது கதையான ‘புளியமரத்தின் நிழலில்’ இல் கதாசாரியர் தனது கிராமத்தில் தனது 13 வயதுக்காலத்து நனவிடை தோய்கிறார்.
எட்டாவது கதை ‘துரையன்’ கட்டை பறிச்சான் கிராமத்தில் நடைபெற்ற 1990 வன்செயல் காலத்து அவலமொன்றை இது பதிவுசெய்கிறது. கூடவே ‘உலவியாகுளம்’ எனுமிடத்தின் வரலாற்றுத் தொன்மையையும் எடுத்துக் கூறுகிறது.
ஒன்பதாவது கதையான ‘நிரைகழல் அரவம்’ திருக்கோணேஸ்வரம் வேற்று நாட்டவரால் சூறையாடப்பெற்ற 1624 ஆம் ஆண்டின் சித்திரைத் திருநாளை நினைவு கூருகிறது.
பத்தாவது கதையான ‘சித்திரை ஊஞ்சலும் போர்த்தேங்காயும்’ எனும் கதையில் இன்று அருகிப்போய்விட்ட பாரம்பரிய ‘ஊஞ்சல்’ மற்றும் ‘போர்த்தேங்காய்’ விளையாட்டுக்களை விபரமாகப் பதிவு செய்கிறது.
‘வெள்ளையன் மரம்’ எனும் பதினொராவது கதை 1658இல் பண்டைய பாரசீகத்தை நோக்கிப் பயணித்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனிக்குச் சொந்தமான கப்பல் புயலில் சிக்கி அதன் மாலுமி ‘நொக்ஸ்’ என்பவன் அந்த ஆபத்திலிருந்து கப்பலையும் பயணிகளையும் காப்பாற்றி கொட்டியாபுரம் முகத்துவாரத்தில் நங்கூரமிட்டதையும் – புளியமரத்தடியில் ஒளித்திருந்த அவனையும் அவனது பரிவாரங்களையும் படை வீரர்கள் பிடித்துக் கண்டி மன்னனிடம் அழைத்துச் சென்றதையும் வரலாற்றுரீதியாக எடுத்துச் சொல்கிறது.
பன்னிரண்டாவது கதை ‘திருக்கரசையில்’ என்பது
மும்முடிச்சோழன் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைப்போல ஈழத்தின் மகாவலிகங்கைக் கரையில் வெருகல் துறைமுகத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் வண்ணம் கொட்டியார மண்ணில் அமைந்திருந்த திருமங்களாய் திருத்தலத்தின் திருக்கரசைக் கோபுரத்தை நோக்கி ஆடிப்பெருக்கு நாளொன்றில் மக்கள் கூடியதை கலாபூர்வமாகவும் பக்தியுடணர்வுடனும் கதையாகப் பதிவு செய்கிறது. இத்தலத்தின்மீது திருக்கரசைப்புலவர் திருக்கரசைப்புராண காவியம் பாடிய நிகழ்வு காட்சிப்படுத்தப்படுகிறது. சரித்திர நிகழ்வொன்று படம்பிடித்தாற்போல இங்கு பதிவாகிறது. களவர்ணனையும், காட்சி வர்ணனையும் கலாநேர்த்தியுடன் கதையாக்கப்பட்டிருக்கிறது. இக்கதையைப் படிக்கும்போது சாண்டில்யன் மற்றும் கோவி. மணிசேகரன் போன்ற தமிழ்நாட்டுச் சரித்திர நாவலாசிரியர்கள் எழுதிய சரித்திர நாவலொன்றின் அத்தியாயத்தினைப் படிக்கும் உணர்வு ஏற்பட்டது. அத்தகைய செழிப்பான மொழியோட்டம். பால. சுகுமார் அவர்களுக்கு வரலாற்று நாவலுக்குரிய மொழிநடை ‘வாலாயம்’ ஆகியுள்ளமை இக்கதை மூலம் வெளிப்படுகிறது.
பதின்மூன்றாவது கதை ‘அம்மன் கண்’ இதுவும் ஒரு சரித்திரக் கதைதான். சேனையூர் கட்டைபறிச்சான் பகுதியில் காலம்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
உணர்வு பூர்வமான கதை குளக்கோட்ட மன்னன், சதுர்வேதி மங்கலத்தையொட்டி நிர்மாணித்த குளமொன்று உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு மன்னன் தனது தங்கையின் மகனைப் பலிகொடுக்கும் சம்பவம் இங்கு சரித்திரமாக்கப்பட்டுள்ளது.
‘திருக்கரசையில்’ எனும் கதையைப் போலவே ‘அம்மன் கண்’ எனும் இக்கதையும் சரித்திர நவீனமொன்றிற்குப் பொருத்தமான மொழிநடையில் பின்னப்பட்டிருக்கிறது.
இறுதிக்கதை ‘குஞ்சன்கடை’ பதினான்காவது கதை
தனது இளவயதில் தரிசித்த ‘குஞ்சன்கடை’யை நினைவுகூர்ந்து நனவிடை தோய்கிறார். சாப்பாட்டுக் கடையான குஞ்சன் கடையின் உரிமையாளரான மலையாளத்துக் குஞ்சன் மாமாவையும் அவர் இனாமாகக் கொடுத்த சூடான பயத்துருண்டையையும் பால சுகுமார் இன்னும் மறக்கவில்லை என்பது இக்கதையூடாகத் தெரியவருகிறது.
எனது பணி அறிமுகம் என்பதால் கதைகளுக்குள் நான் ஆழமாகச் செல்லவில்லை. மேலோட்டமான அறிமுகமொன்றையே இங்கு முன்வைத்தேன்.
ஆனாலும் என் மனதைத்தொட்ட சில பொதுவான விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
இக்கதையில் அவர் கையாண்டுள்ள மொழிநடை மிகவும் செழிப்பாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது. உதாரணமாக ‘திருக்கரசையில்’ எனும் கதையில் வரும் ‘திருக்கரசையைத் திமிலோகப்பட்டபோல் ஆக்கினார்’ எனும் வாக்கியத்தில் வரும் ‘திமிலோகப்பட்டது’ எனும் சொல்லாடல் என்னைக் கவர்ந்தது.
கதைகளில் சில இடங்களில் பொருத்தமாகப் பழம்பாடல் அடிகளைச் சொருகுவது சிலாகிக்கத்தக்கதொன்று. உதாரணமாக ‘அவள்’ எனும் கதையில் வரும் சில அதிகாலைப் பொழுதுகள் ‘முத்தென்ன வெண்நகையாய் முன் வந்தெதிர் எழுந்து தித்திக்கப் பேசுவாய்’ என்ற திருவெம்பாவைப் பாடலை நினைவுறுத்தி நீளும் எனும் வரிகள். பால. சுகுமாரின் குருவான வ.அ அவர்களிடமும் கதைகளில் இவ்வாறான பழம்பாடல் வரிகளின் கையாளுகையை நான் அவதானித்துள்ளேன்.
• இக்கதைகள் யாவும் அளவில் சிறியனவாக இருப்பதால் வாசிப்பை இலகுவாக்குவது மட்டுமல்ல வாசிப்பைத் தூண்டுகின்றன.
• இலக்கியம் காலம்காட்டும் கண்ணாடி என்பதற்கேற்ப அதீத கற்பனைகளில்லாமல் தான் நேசிக்கும் மண்ணின் நிகழ்வுகளையும் மக்களையும் நடைச்சித்திரப் பாணியிலும் நனவிடை தோய்தல் உத்தியிலும் வரலாற்று நவீனங்களின் போக்கிலும் இக்கதைகள் கச்சிதமான கலாநேர்த்தியுடன் அழகியலோடு சொல்லப்பட்டிருக்கின்றன.
• மேலும் மரபுவழியான கதைசொல்லும் முறைமையில் மாற்றங்கள் நிகழ்தல் தவிர்க்க முடியாததாகும். அந்த மாற்றங்களை இத்தொகுப்பிலுள்ள கதைகள் உள்வாங்கியுள்ளமையும் உணரக்கூடியதாக உள்ளது.
• சிறுகதை என்பது ஒளிவட்டம் போன்று மினுங்கி உருளும் சிறிய வடிவம். அந்த வடிவமும் அதனூடாகக் கடத்தப்படும் உணர்வுகளும் செய்தி அருட்சியும் உறுத்தும் பெறுமானங்களும் அழகியற் பதிவும் தனித்துவமானவை என்பது பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் கூற்றாகும். அவரது இக்கூற்றை இத்தொகுப்பிலுள்ள கதைகள் திருப்தி செய்கின்றன.
நிறைவாக, ‘மருதடியூர் மணியகாரர்’ எனுமிச் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்துள்ள சேனையூர் பால சுகுமாருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி. வணக்கம்.
