குறூப் போட்டோ சொல்லும் செய்தி…..!(மூன்றாவது கண்:XIX)

குறூப் போட்டோ சொல்லும் செய்தி…..!(மூன்றாவது கண்:XIX)

 — அழகு குணசீலன் —

இந்து சமுத்திர பிராந்திய பூகோள அரசியலில் தமிழ்த்தேசிய அரசியல் கடந்த முக்கால் நூற்றாண்டுகளாக தோல்வியையே சந்தித்து வருகிறது. இந்த நிலை இன்றைய  பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்திய சர்வதேச பூகோள அரசியலில் இலங்கை தமிழ்த்தரப்பினருக்கு இன்னும் வில்லங்கமான காரியம்தான். இது ஆயுதப்போராட்டம்  சுமந்த “தனித்தமிழ் ஈழம் ” பெயர்ப்பலகையினால் மட்டும் ஏற்பட்டதல்ல, அகிம்சை ஜனநாயக பாராளுமன்ற அரசியல் பேசுகின்ற  “பெயர்ப்பலகை முக்கியமல்ல” என்ற தமிழரசு சமஷ்டி அரசியல் சொல்லாடலிலும் தோற்றுப்போனதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அடையாள அரசியலை தவிர வேறெந்த உள்ளடக்கமும் அற்ற தமிழ்த் தேசியத்தின்  மீதான இந்த தோல்வி குறித்து ஆச்சரிப்படுவதற்கு எதுவும் இல்லை, என்பதை இந்திய துணை குடியரசுத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனின் அண்மைய இலங்கை விஷயம் ஈழத்தமிழர்களுக்கு  இன்னும் ஒரு முறை நினைவூட்டியிருக்கிறது. தமிழ்த்தேசிய கட்சிகள் சி.பி.இராதாகிருஷ்ணனை  “கூட்டற்ற கூட்டாக” கொழும்பில் சந்தித்த போது அவர் முன்னால் இடம்பெற்ற அரசியல் அநாகரிகங்களும், அவற்றை அவதானித்த துணைக்குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளும், கூறிய கருத்துக்களும் அவருக்கு முன்னால் தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளின் “வேட்டி அவிழ்ந்து விழாத குறையாக” முடிந்திருக்கிறது.

அப்படி சி.பி.இராதாகிருஷ்ணன் என்னதான் கேட்டார்…? 

என்னதான் சொன்னார்…? 

இந்திய தூதுவர் குறை நிரப்பியாக எவற்றை வெளிக்கொணர விரும்பினார்…? 

 தமிழ் தரப்பு வேட்டியை   இறுகப் பற்றிக் கொண்டு என்னதான் பேசினார்கள்…?

 என்பது எல்லாம் சாதாரண யாழ். ஊடகப்பார்வைகளில் சிறிதரன் எதிர்ப்பு வெறும் “நையாண்டியாக” தெரிந்திருக்கிறது. ஆனால் இதற்கும் மேலாலாக பல சீரியஸான விடயங்கள்  பின்னால் மறைந்துள்ளன. மேலும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவு அரசியல் அணுகுமுறையும், கொழும்பு அரசாங்கத்தினுடனான பரஸ்பர நம்பிக்கையை கொண்ட, உறுதியான உறவும், பலமும் கேள்விக்கு உட்படுத்தப்படாமல், இவை தமிழரசு தனிநபர் அதிகாரப்பகிர்வு போட்டியில் அடிபட்டு போயுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களை சுய அறிமுகம் செய்தபோது “நீங்கள் கிழக்கில் இருந்து வந்த பிரதிநிதி” என்று உங்களை அறிமுகம் செய்யுங்கள் என்று இந்தியத்தூதுவர்  இ. சாணக்கியனின்   அறிமுகப் பரணிக்கு அடியெடுத்து கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?

கிழக்கில் நீங்கள் ஒருவர்தானா பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று துணைக்குடியரசுத்தலைவர் மாற்று நொடிபோட்டதன் மர்மத்தின் பின்னணி என்ன..?

போட்டோவுக்கு போஸ்  கொடுக்க மறு பக்கம் (-எம்.ஏ. சுமந்திரன் பக்கம்) வாருங்கள் என்று கூறியதன் மூலம் சி.பி. இராதாகிருஷ்ணன் செய்த அரசியல் ஆய்வு என்ன…?

அந்த வேண்டுகோளை சி.சிறிதரன் எவ்வாறு செவிமடுத்தார், இ.சாணக்கியன் வழமைபோல் தன்முகத்தை காட்ட சிறிதரனை சற்று நகரச்சொன்ன போது நடந்த உடல்மொழி உளவியல் யாது?

போன்ற பல  தோற்றுப்போன தமிழ்த்தேசிய அரசியல் அம்சங்கள் இந்த கேள்விகளுக்கும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு அடிபடும் அரசியலுக்கு பின்னால் மறைந்து கிடக்கின்றன.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக்கொண்ட எட்டு பேர் சி.பி.இராதாகிருஷ்ணனை சந்தித்தார்கள். ஏழு பேர்  அண்மைய ஆண்டுகளாக – குறிப்பாக தேர்தல் காலத்தில் சேர்ந்தும் -பிரிந்தும் செயற்பட்டவர்கள். இதன்மூலம் தமிழ்த்தேசிய அரசியலில் அம்மணமாகி நிற்பவர்கள். இவர்கள் தமிழரசுக்கட்சி –  ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வீடு -சங்கு கூட்டணியினர். மற்றையவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரர்களுள் ஒருவர்.  இவர்களில் அரைவாசிப்பேர் தமிழர் பாராளுமன்ற அரசியலுக்கு ‘லாயக்’ அற்றவர்கள் என்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

வீடு -சங்கு “கூட்டில்” கலந்து கொண்ட ஏழு பேர்களில்  சி.வி.கே  சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன்,   சி. சிறிதரன், இ.சாணக்கியன் ஆகியோர் தமிழரசுக்காரர்கள். த. சித்தார்த்தன், அ. செல்வம்,  பி. சுரேஷ் சங்குக்காரர்கள். ஆக, ஏழு பேர் கொண்ட குழுவில் ஒரேயொருவர்தான் ஒட்டுமொத்த கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர். ஆனால்  தமிழரசுக்கட்சியின் எட்டு எம்.பி.க்களில்  ஐந்து பேர் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள். இன்னொரு வகையில் சொன்னால் வடக்கின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தலா மூன்று, மூன்று பேர் பிரதிநிதித்துவம் பெற, கிழக்கின் மூன்று தேர்தல் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் சந்திப்பில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக இந்திய பெருங்கடல் பரப்பில் பெரும் சர்ச்சைக்குரிய, தனித்தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை மாவட்ட தமிழரசு மக்கள் பிரதிநிதிக்கு இங்கு இடம் இருக்கவில்லை. 

இந்த தமிழ்த்தேசிய அரசியல் “சமத்துவத்தை”  அவதானித்த 

இந்திய  தூதுவர் சாணக்கியன் தன்னை அறிமுகப்படுத்தும்  தவணை வந்தபோது “கிழக்கை” அவருக்கு நினைவூட்டினார். இதன் மூலம் பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற  ஊர்க்குருவி உயரப்பறக்க முடியவில்லை என்றாலும், இந்திய தூதுவரின் புண்ணியத்தில் கிழக்கு பேசப்பட்டிருக்கிறது. இந்த  கட்டத்தில் இந்திய துணை ஜனாதிபதி  “கிழக்கில் நீங்கள் மட்டும் தானா ஒரு எம்.பி”? . என்று கேட்க  இல்லை இல்லை என்று சாணக்கியன் மறுத்து தொகையைச்(5) சொன்னதால் சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு செய்திகள் கிடைத்தன. 

 தமிழ்த்தேசிய அரசியல் வடக்கு கிழக்கை அதற்குரிய  பிரதிநிதித்துவ பங்கை, சமத்துவத்தை அங்கீகரிக்காமல் புறக்கணித்து தேர்தல் அரசியலுக்கும், தங்கள் தேவைக்கும் பயன்படுத்தி கொள்கிறது என்பது ஒன்று.

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையால் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக  பிரிக்கப்பட்டதற்கு காரணம் உண்டு என்பதும்,

வடக்கில் ஜே.வி.பி./ என்.பி.பி.  தமிழரசையும் தாண்டி தன்னை வளர்த்துக்கொண்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சி கிழக்கு வாக்குகளால் தான்  இன்னும் வாழ்கிறது என்பதும் மற்றொன்று.

ஆனால் அந்தளவு முக்கியத்துவம் கிழக்கிற்கு வழங்கப்படுவதில்லை.

இதற்கான கிழக்கின் தனித்துவமான பிரச்சினைகளை விளங்கிக்கொள்வதில் / விளங்க வைப்பதில் இந்திய தூதரக அதிகாரிகளும், ஒரு தமிழராக துணை ஜனாதிபதியும் ஆர்வம் காட்டியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இதில் இருந்து வெளிப்படுகின்ற இன்னொரு உண்மை சந்திப்புக்கு முன்னர் வடக்கு – கிழக்கு இடைவெளி குறித்து தூதரக உள்ளக மட்டத்தில், சந்திப்புக்கான ஆயத்தப்படுத்தலில்  இந்திய தரப்பின் கவன ஈர்ப்பை பெற்ற ஒரு விடயமாக  இது இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது  என்பதுடன், பிராந்திய பூகோள அரசியலில் வடக்கையும் விடவும், கிழக்கு இந்தியாவுக்கு முக்கியமானது என்பதும் தெளிவாகிறது.

குறூப் போட்டோவுக்கான தள்ளுப்பாடுகளுக்கு  அப்பால்  சி.பி.இராதா கிருஷ்ணன்  தமிழரசு  பதில் தலைவரிடம் “இவ்வளவு கட்சிகள் தேவைதானா…?” என்று கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மூன்று கட்சிகள் அல்லது முன்னாள் இயக்கங்களை தனித்தனியாக கொண்டால் ஐந்து கட்சிகளே சந்திப்பில் கலந்து கொண்டன. இதற்கே இப்படிக்கேட்ட துணை ஜனாதிபதி வடக்கு- கிழக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் கொண்ட ஒரு சந்திப்பென்றால் என்ன கேட்டிருப்பார்?  ஒரு காலத்தில் முப்பது ஆயுதக் குழுக்கள் இருந்து அழிந்தது போல்  இந்த கட்சிகளுக்கும் அழிவு நெருங்கி விட்டது என்பதை விட வேறு என்னத்தை எண்ணிப்பார்த்திருக்க முடியும். அன்று தமிழ் இயக்கங்களோடு தொடர்பில் இருந்த ஒரு  அனுபவம் மிக்க தலைவராக  ‘அழிவைத்’ தவிர எண்ணிப் பார்க்க எதுவும் இல்லை.

இந்திய துணை ஜனாதிபதி சித்தார்த்தனை சித்தார்த்தன் ஜீ , என்றும் செல்வத்தை அடைக்கலநாதன் ஜீ என்றும் அழைத்து அன்றைய ஆயுத போராட்ட நினைவுகளை மீட்டதாக  ஊடகத்தகவல்களில் இருந்து அறிய கிடைத்தது. சி.பி.இராதாகிருஷ்ணன் தனது பதினாறாவது வயதில்  ஆர்.எஸ்.எஸ். சிறுவர் படையணியில் இணைந்து செயற்பட்டவர். ஈழத்தமிழ் ஆயுத அமைப்புக்களோடு தொடர்பில் இருந்ததை அவரே வெளிப்படையாக சந்திப்பில் நினைவுபடுத்தியும் உள்ளார். 

புளோட் தலைவர் உமா மகேஸ்வரனால் (?) எழுதப்பட்டதாக கூறப்படும், ஈழத்தில் இந்திய தலையீட்டுக்கு  எதிரான “வங்கம் தந்த பாடம்”  நூலை புலிகள் பெருமளவு கொள்வனவு செய்து இந்தியாவில் பரவ விட்டு புளட்டின் இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தி  இந்தியாவோடு நெருங்கி சந்தர்ப்பவாத அரசியல் செய்தனர். ரெலோ முற்று முழுதாக இந்தியசார்பு கைக்கூலிகள் என்று பிரச்சாரம் செய்தனர். இந்திய எதிர்ப்பு, இந்திய ஆதரவு என்ற இரு நிலைப்பாடுகளையும் துரோகம் என்று இயக்கங்களை தடை செய்தனர். ஆனால் இந்தியாவில் பயிற்சி மட்டும் அல்ல ஆயுதமும், பணமும் பெற்றனர். ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் வேண்டுகோளின் பெயரில் தான்  விக்டர் தலைமையிலான அநுராதபுர தாக்குதலையும், தலதா மாளிகை குண்டு வெடிப்புக்களையும் தெரிவு செய்து செய்தனர் என்று கூறப்படுகிறது. 

இன்று  எதிரெதிர் முகாம்களைச் சேர்ந்த இராதாகிருஷ்ணனும், அநுரகுமார திசாநாயக்காவும்  ஆரத்தழுவி அரசியலில் கைகொடுத்துள்ளனர். அரசியலும் வியாபாரமாகிப்போனதால் வந்தவினை. மைசூர் பருப்பு, பம்பாய் வெங்காயம், பாசுமதி அரிசி, பொலிவூட் சினிமா எல்லாம் இல்லாமல் அநுர அரசாங்கம் தப்பிப்பிழைக்க முடியாத நிலை. 

மாகாணசபை முறைமையை நீக்குவதற்கான  முயற்சிகளை அநுர அரசாங்கம் திரைமறைவில் செய்கிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துங்கள் என்று அநுரவைக் கேட்டிருக்கிறேன் என்று கூறினார் சி.பி.இராதாகிருஷ்ணன். அநுரவுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு. அநுர மௌன விரதம் . 

இந்த வரலாறு ஜெய்சங்கர், மோடி, இராதாகிருஷ்ணன்….. என்று தொடர்கிறது. இதற்கும் மேலாக   அரசியல், பொருளாதார அழுத்தங்களை டெல்லி, கொழும்புக்கு  கொடுக்க முடியாது என்பதல்ல பிரச்சனை. அதை அது செய்யாது என்பதே பிரச்சனை. இதை விடவும் கொழும்புக்கு வேறென்ன தேவை. இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை  ஈழத்தமிழர் நலன்களை விடவும், சீனா கொழும்பை நெருங்காமல் தள்ளி வைப்பதே இந்தியாவின் மூலோபாயம். இந்த நிலையில் நம்மவர்கள் சி.பி.இராதாகிருஷ்ணனோடு போட்டோவுக்கு அடிபிடி.

சொல்லுங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *