தொழிலாளர்தினம்: சிவப்பு சட்டைக்கும்,தொப்பிக்கும் அப்பால்…!           (மூன்றாவது கண்: XX)

தொழிலாளர்தினம்: சிவப்பு சட்டைக்கும்,தொப்பிக்கும் அப்பால்…! (மூன்றாவது கண்: XX)

— அழகு குணசீலன் —

 இலங்கையில் வைகாசி மாதம் மானிடவியல் பண்பாட்டு வாழ்வியல் வரலாற்றில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு முக்கியமான ஒரு காலப்பகுதி. கௌதம புத்தர் பேராசை, வெறுப்பு, மயக்கம் என்பனவற்றை துறந்து  ஞானம் பெற்றதும் கோவலன் அநீதியாக கொல்லப்பட்டதை கண்டித்து  கண்ணகி நீதி கோரி மதுரையை எரித்ததும்  வைகாசி மாதத்தில்தான்.  இந்த பண்பாட்டு பாரம்பரியத்தில் இலங்கை மக்களுக்கு அற்புதமான  அரசியல் செய்தி மறைந்து கிடக்கின்றது.  பொருள் முதல் வாத பேராசை, இன -மத வெறுப்பு, அரசியல் சமூக விஞ்ஞான தெளிவற்ற மயக்கம், மறுபக்கம்  சட்டவாட்சியின் பெயரிலான நீதி, நிர்வாக சமூக -சமத்துவமற்ற அநீதி, நீதிக்கான கண்ணகியின் போராட்டத்தையும் நினைவூட்டுகிறது.

இந்த நிலையில் இலங்கையின் இன்றைய  கட்சி  அரசியல் அநாகரிக  சூழலை விளக்குவதற்கு இவ்வாண்டு தொழிலாளர் தினம் போன்று அர்த்த பூர்வமற்ற நாள் ஒன்று கிடைப்பது அரிதிலும் அரிது.  புத்தரின் போதனைகளின் பெயரால் ஆட்சி செய்பவர்களும், அதே புத்தரின் போதனைகளை காட்டி ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களும், மறுபக்கத்தில்  கண்ணகியின் – பத்தினித்தெய்யோ வின்  வழிபாட்டு மானிடவியல்    போராட்ட நீதிக்கான  நம்பிக்கையை  காலில் போட்டு மிதித்து மக்களுக்கான நீதியை மறுத்து –  தங்கள் தங்கள் கட்சி அரசியல் பேராசை, வெறுப்பு, அறியாமை (மயக்கம்)  என்பனவற்றில் கிஞ்சித்தும் குறைவு இல்லாமல் தொழிலாளர் தினத்தை மேடை போட்டு கொண்டாடி இருக்கிறார்கள்.

1970 களின் ஆரம்பத்தில் அன்றைய ஐக்கிய முன்னணி இடதுசாரி அரசாங்கத்தின் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் காலிமுகத்திடலில்,கொழும்பு பூங்காக்களில், மைதானங்களில், வீதிகளில்…. எல்லாம் ஒலித்த முதலாளித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு குரல்களை நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயத்தை இவ்வாண்டு மேதினம் ஏற்படுத்தியிருக்கிறது.

  1977 க்கு பின்னர்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  ஒரு  மார்க்சிய – இடதுசாரி தொழிலாளர் தினத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆட்சியாளர்கள் தங்களை மக்களுக்கு அப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள்.  ஆனால், அநுரகுமார குமார திசாநாயக்கவின் தலைமைத்துவமும், ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கமும்   முதலாளித்துவ தலைமைத்துவங்களின் பாணியிலேயே தொழிலாளர் தினத்தை நடாத்தி முடித்து இருக்கின்றன என்பது கவலைக்குரிய கசப்பான உண்மை.

சிறிமாவோ பண்டாரநாயக்கா, பீற்றர் கெனமன், என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி -விவியன்  குணவர்தன போன்றோரின் அர்த்தமுள்ள, அறிவுபூர்வமான உரைகள், சீனக்கம்யூனிஷ்ட் கட்சி  மேதினக் கூட்டங்களில் சண்முகதாசனின் உரை….என இவை எல்லாவற்றையும் பார்த்தவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் இன்றைய. இடதுசாரிகள்(?) அரச தலைவரதும், அவரது பிரதம மந்திரியினதும், அமைச்சரவை சகாக்களினதும்  தொழிலாளர் தின நிகழ்வு உரைகள்  தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், அதன்மூலம் அடையக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவ இலக்குகள் பற்றி பேசாது, வர்க்க அரசியலை தவிர்த்த  முதலாளித்துவத்திற்கான சேவகமாக அமைந்திருக்கிறது. வெறும் தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சுக்கள் போன்று தொழிலாளர் தினத்தை கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். இதை இந்த சிவப்பு அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்த்து இருக்கவில்லை. 

கடந்த ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் நடந்த அனைத்து குறைபாடுகளையும், தவறுகளையும் நியாயமான காரணங்களை கூறி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு பதிலாக, மூடி மறைத்து மக்களை ஏமாற்றுகின்ற வித்தைக்காரர் அரசியலாக  இது உள்ளது.  “நீ களவு எடுத்தாய் என்று ஒரு தரப்பு சொன்னால் நீயும் களவுதானே எடுத்தாய் – நீ செய்யாததையா நான் செய்துவிட்டேன் என்ற” விதண்டாவாதம். தவறை ஏற்றுக்கொள்ள, அதற்கு பொறுப்புக்கூற, சம்பந்தப்பட்ட தங்கள் தரப்பை சட்டத்தின் முன் நிறுத்த தயங்கும் பலவீனம் மட்டும் அல்ல நேர்மைத்தன்மையும் அற்ற தலைமைத்துவம். இதற்கு முன்னாள் ஆட்சியாளர்களும் விலக்கல்ல. ஆனால்  அவர்கள் செய்ததைத்தான் இவர்களும் செய்கிறார்கள் என்றால் இந்த சிவப்புசட்டையும், தொப்பியும்  சொல்லும் செய்தி என்ன? இந்த நிறந்தீட்டல் எதற்கு? இவர்களும் நீலமும், பச்சையுமாக இன்னும்  ஏதாவது நிறமாக இருந்திருக்கலாம் அல்லவா?

அமைச்சர் பிமல் ரத்நாயக்க   அடுத்து கைது செய்யப்படுபவர்களின்  பெயர் பட்டியலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். பிரதமர் ஹருணி அமரசூரிய ஜே.வி.பி. தேசியப்பட்டியல் ஊழல் பேர்வழிகளுக்கு வக்காலத்து வாங்கி அவர்மீது மக்கள் கொண்டிருந்த குறைந்த பட்ச நம்பிக்கைக்கும் குந்தகம் செய்து தனது நேர்மையை கேள்விக்கு உட்படுத்தினார். ஜனாதிபதி தோட்டத்தொழிலாளர் மத்தியில் மேதினம் கொண்டாடச் சென்று தொழிலாளர்களைப்பற்றி, அவர்கள் தோட்ட கம்பனி முதலாளிகளால் சுரண்டப்படுவதுபற்றியோ, அவர்களின் சம்பளம், வாழ்க்கை வசதிகள் பற்றியோ எந்த கருத்தையும் கூறாது வைகாசியில் பத்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும் என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் திறைசேரியில்  இருந்து பத்து தடவைகள் தவறான அவுஸ்ரேலிய கணக்குக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது அவருக்கு நினைவுக்கு வரவில்லை.

நூற்றுக்கணக்கான சிவப்பு லேபல் கொள்கலன்கள் பச்சையான மர்மம், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி ஊழல், அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பணம் மாயமாய் மறைந்த கதை, திறைசேரி அதிகாரியின் மரணம் கொலையா..? தற்கொலையா…?  என்ற எரியும் பிரச்சினைகள், அரசாங்க தவறுகள், நிர்வாக இயலாமை எல்லாம் புதைக்கப்பட்டு,  பத்து வழக்குகள் என்ற பூதம் மட்டும் வெளியே வந்திருக்கிறது.  அவை வெளிவரக்கூடாது என்பதல்ல. அவற்றோடு உங்கள்  நண்பர்களின், தேசிய பட்டியல் முதலாளிகளின் பட்டியலும் வரவேண்டியுள்ளது அர்ச்சுனா மகேந்திரன் கதையும், உகண்டா பணமும், வரி நீக்கமும், விலைக்குறைப்பும் பழங்கதையாக மட்டும் அல்ல பெருங்கதையாகவும் ஆகிவிட்டன. 

ஜே.வி.பி யின் முதலாவது கிளர்ச்சியை தொடர்ந்து சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த நிலச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, தேசியமயமாக்கம், பின்தங்கிய மாவட்டங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தல், இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பு பொருளாதார அணுகுமுறை, ஏற்றுமதி பன்முகப்படுத்தல்….. போன்ற பல கொள்கைத் திட்டங்களை நினைத்து பார்க்க வேண்டியுள்ளது. அந்த ஆட்சியில் தவறுகள் இடம்பெறவில்லை என்பதல்ல.  சிறுபான்மை மக்களின்  அரசியல் உரிமைகள் 1972  அரசியல் அமைப்பில்  அந்த சிவப்பு சட்டைகளாலும், தொப்பிகளாலும் பிரிக்கப்பட்டன. இந்த அனுபவம் இனிவரும்…. வரும்.. என்ற புதிய அரசியல் அமைப்பை  நம்புவதற்கு மக்களை தடுக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகால அரசாங்க, எதிர்கட்சி செயற்பாடுகள் இந்த நம்பிக்கையை சிதைத்து இருக்கிறது.

இன்று நடப்பது என்ன? அரசாங்க நிறுவனங்கள் “இலாப நோக்கில்” தனியார் மயப்படுத்தப்படுகின்றன.  சர்வதேச நாணய நிதியின் அழுத்தம் வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு நிலையிலும் “சுங்கவரி இலாபத்திற்காக” ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு அரசாங்கம் விலையை கூட்டியது. சந்தையில் கேள்வி அதிகரிப்பை பயன்படுத்தி, தட்டுப்பாடான காலத்தில் தனியார்  முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தில் விலையை உயர்த்துவது போன்று அரசாங்கம் செய்த இந்த செயல் “கள்ளச்சந்தை” பொருளாதாரத்தோடு ஒப்பிடக்கூடியது. இது அரசாங்கம் சட்டரீதியாக வெள்ளையடித்த செயல். 

தொழிற்சங்க போராட்டங்களை அமைச்சர்கள் சண்டித்தனமாக கையாளுகிறார்கள். பிரதமர் கூறுகிறார் “எங்களது அரசாங்கம் மக்கள் அரசாங்கம், நாங்கள் மக்களுக்கே பதில் சொல்வோம்”  இலங்கையின் இதுவரையான அரசாங்கங்கள் எதுவும் மக்களால் தெரிவு செய்யப்படாதவையா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க இரண்டு தடவைகள் , அவர்களின் வார்த்தைகளில் சதி, சூழ்ச்சி செய்த ஜே.வி.பி. இப்போது மக்களைப்பற்றி பேசுகிறது. எந்த மேதின மேடையில் மக்களுக்கு இன்றைய  அரசியல் நிலை குறித்து தெளிவூட்டப்பட்டது? எந்த மேடையில் தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது?

டொலருக்காக கட்டற்ற உல்லாசப் பிரயாணம் ஊக்குவிக்கப்படுகிறது. தென் கிழக்கு, வடமேற்கு கரைகளில் இஸ்ரேல் உல்லாசப் பயணிகளுக்கும்,  சுதேசிய முஸ்லிம்களுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறது. உல்லாசப் பயணிகளின் டொலருக்காக இயற்கை வளங்களை விலைகொடுக்கவேண்டி இருக்கிறது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இயற்கையை விற்கும் உல்லாசப் பயண வருவாயை விடவும் அதிகம் என்பதை அண்மைய தித்வா புயல் நிரூபித்திருக்கிறது. சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, இது பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன் என்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மழுப்பி விட்டு கடந்து சென்றார். அரசாங்கம் சுயமாக சில கணக்கு இலக்கங்களை அறிவித்து ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இப்போது அந்த நிதியம் சட்டரீதியற்றது என்று  கூறப்படுகிறது. சுமார் 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிதியத்தில் பணம் வைப்பில் இட்டதாக கூறப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தில் அரசாங்கம் மல்லுக்கட்டியதற்கு இந்த ஊழல்களை அது அறிந்திருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. 

நாளுக்கு நாள் கிழக்காசிய இணையமூலமான பணமோசடிக்கும்பல் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்படுகிறார்கள். இந்த திருடர்களை உல்லாசப்பயணிகள் என்ற போர்வையில் விசா கட்டுப்பாடுகள் இன்றி, அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைவதற்கு கதவை திறந்து விட்டவர்கள் யார்? டொலருக்காக எதையும் செய்யலாம் என்றால் இந்த அரசாங்கம் மட்டும் அல்ல எல்லா அரசாங்கங்களாலும் தேசத்தை சேதப்படுத்தி திறைசேரியை நிரப்ப முடியும். நிதி மோசடிக்காரர்களை உள்ளே விடுவதும் அரசாங்கம்தான், பின்னர் அவர்களை கைது செய்து படம் காட்டுவதும் அரசாங்கம் தான்.

இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் அடிப்படை வசதிகள், சட்டப்பாதுகாப்புகள், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் அந்நியச் செலாவணியை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இதில் வீட்டு பணிப்பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது. மத்திய கிழக்கு முதலாளித்துவ பொருளாதார மாதிரியின் நவீன அடிமைகளாக ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள் அங்கு உழைக்கிறார்கள். அவர்களின் கணக்கை மாதாமாதம் தவறாமல் வெளியிடும் மத்திய வங்கியும், அதற்கு பொறுப்பான நிதியமைச்சும் அதன் பின்னால் உள்ள துயரத்தை பற்றி பேசுவதில்லை. இந்த தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்தின் தொழிலாளர் தின மேடையில் எங்காவது பேசப்பட்டார்களா?  ஒரு இடதுசாரி அரசாங்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஒத்துழைத்து தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதையும், அதற்கு ஊக்கம் அளிப்பதையும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

 1960 களில் ஜேர்மனியில் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஜேர்மனி அரசாங்கம் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை நாடியது. அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் இன்று ஜேர்மனியில் துருக்கியர் இருக்கின்ற இடத்தில் இலங்கையர்கள் இருந்திருப்பார்கள். ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கை விடவும் தொழிலாளர் நலன்கள் பேணப்படுகின்ற ஜேர்மனிக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்ய கொள்கை அடிப்படையில் சிறிமாவோ இணங்கவில்லை. இருநூறு ஆண்டுகள் கடந்தும் எமது மலையக மக்கள் இலங்கைத்தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்வியல் மட்டத்தை தொடவில்லை என்பது கசப்பான உண்மை. இது பற்றி நுவரெலியாவில் பேச ஜனாதிபதி மறந்துவிட்டார். 

சமகாலத்தில்  ஏகாதிபத்தியங்கள் இரண்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்துகின்றன. இலங்கையின் கொல்லைப்புறம் வரை யுத்தம் எதிரொலித்திருக்கிறது. ஜே.வி.பி./ என்.பி.பி. இடதுசாரி அரசாங்கம் நாங்கள் நடுநிலைமை என்று கூறுகிறது. ஒரு ஏகாதிபத்தியம், ஒரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்யும் – சர்வதேச சட்டங்களை மீறிய அத்துமீறல் நவகாலனித்துவத்தை “நடுநிலை” என்று நியாயப்படுத்தி சறுக்குகின்ற இடதுசாரி அரசியல் சுயநலன் கொண்டது. 

உலக மயமாக்க முதலாளித்துவ பொருளாதாரத்தில் மற்றைய தேசங்கள் மீதான ஆள்புல ஆக்கிரமிப்பு, பொருளாதார வள ஆக்கிரமிப்பு சுரண்டல்களில் நடுநிலை என்று கூறி தப்பித்துக்கொள்வது. இந்த தப்பித்தல் அரசியல் மார்க்ஸியம் சார்ந்த அரசியலும் அல்ல மக்கள் அரசியலும் அல்ல. ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளுக்கு சேவகம் செய்து சுதேசிய தொழிலாளர்களுக்கும் பட்டாளிவர்க்கத்தினருக்கும், மார்க்ஸியம் பேசுகின்ற சர்வதேச தொழிலாளர்-பட்டாளி வர்க்க ஒன்றிணைவுக்கும் செய்யும் துரோகம். ஏகாதிபத்திய நலன்களுக்கு செய்யும் சேவகம். இடதுசாரிகளின் பெயரில் இரண்டு கிளர்ச்சிகளை செய்தவர்களின் காலக்கொடுமை. 2026 மேதினம் இந்த காலக்கொடுமையை தோலுரித்து காட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *