(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 01)
—- செங்கதிரோன் —-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான மட்டக்களப்பு நகரின் ‘சின்ன ஆஸ்பத்திரி’ச் சந்தியிலிருந்து ஆரம்பித்துச் செல்லும் ‘பார்’ வீதிவழியே ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அதன் அந்தத்தில் அமைந்த மட்டக்களப்பு வெளிச்சவீட்டிற்கு அருகில் ‘பாலமீன்மடு’க் கிராமத்தில் ‘முகத்துவாரம் – சவுக்கடி’ வீதியில் பாலமீன்மடு ‘லைற்ஹவுஸ்’ விளையாட்டுக்கழக விளையாட்டு மைதானத்திற்கு எதிரே வீதியின் இடதுபுறத்தில் அமைந்நிருந்தது கோகுலனின் அந்த விசாலமான கல்வீடு.
வீட்டைச் சுற்றி வளவு நிறையப் பூச்செடிகளும் மரக்கறிச்செடிகளும் வாழைமரங்களும் முருங்கை – எலுமிச்சை – தோடை – விழிமாங்காய் – நெல்லி – கொய்யா மரங்களும் மலிந்து பசுமையை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. வீட்டு முற்றத்து நடுவில் ‘கறுத்தக்கொழும்பான்’ மாமரமொன்று வீட்டுக் கூரைக்கு மேலாலும் உயர்ந்து வளர்ந்து கிளைபரப்பி நிழல் தந்து கொண்டிருந்தது.
வீட்டின் இருபக்கங்களிலும் மதில் ஒரமாகச் சில தென்னைமரங்களும் தலை நிமிர்ந்து நின்றன.
கம்பிவலையால் வளவை அறுக்கை செய்திருந்த முன்வேலியில் குறிஞ்சா- மாம்பாஞ்சான் – தூதுவளை போன்ற கொடிகள் பின்னிப் படர்ந்து பச்சைச் சீலைகளை விரித்துக் கட்டியது போலக் கோலம் காட்டின.
2019 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை.
“இந்தாங்க! தண்ணி எடுத்துவைச்சிருக்கன். எழும்பிக் குடிங்க” என்று கோகுலனின் மனைவி சுந்தரி அதிகாலை ஐந்தரை மணியளவில் அவனைத் தட்டி எழுப்பிவிட்டுத் தனது வழமையான நடைப் பயிற்சிக்காக வீதியில் இறங்கினாள்.
கைகளை மேலே உயர்த்திக் குவித்து மடக்கிச் சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டெழுந்த கோகுலன் குளியலறை சென்று பல்விளக்கி முகம் கழுவியபின் தன் மனைவி குசினிக்குள்ளே மேசையில் கோப்பையில் ஊற்றிவைத்துவிட்டுப் போயிருந்த இளஞ்சூடான நீரை எடுத்து மடமடவென்று பருகினான்.
பின் இயற்கைக் கடன்களை முடித்துவிட்டு வீட்டின் முன்கதவைத் திறந்து கொண்டு முற்றத்திற்கு வந்தான். சில்லென்று அடித்த அதிகாலைக் குளிர்காற்று அவனைத் தழுவியதில் மேனி சிலிர்த்தான். அன்றைய நாள் உதயத்தின் காற்று வழமைபோல் உடம்புக்கு இதமாகவிருந்தது. சூரியன் உருண்டைத் தீம்பிழம்பாய் அடிவானத்திலிருந்து உதயமாகிக் கொண்டிருந்தது.
கண்ணுக்கு எட்டியதூரத்தில் மட்டக்களப்பின் உப்பேரியைக் கடந்து தெரிந்த வங்காளவிரிகுடாக் கடல் இரையும் ஓசையும் காதில் விழ அன்றைய காலைப்பொழுதில் அதுவும் இதமாகவேவிருந்தது. வாவிக்கரையோரம் குடைவிரித்தாற்போல் வளர்ந்திருந்த கண்ணாப்பற்றைகளும் தாழைமரங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்தன.
மீன்மகள் பாடும் வாவி என வர்ணிக்கப் பெறுகின்ற மட்டக்களப்பின் உப்பேரி கடலோடு கலக்கும் கழிமுகம்தான் முகத்துவாரம். வாவிமங்கை தன் கடல்காதலனைத் தழுவி ஆரவாரித்துக் கொண்டிருந்தாள். இருவரும் கூடி முயங்கும் ஓசையும் கோகுலனின் காதில் விழுந்தது.
வீட்டுக்கு முன்னால் பாதையின் அக்கரையில் விளையாட்டு மைதானத்தின் ஓரமாக வரிசையாக நடப்பட்டிருந்த மல்லிகைச் செடிகள் நிறையப் பூத்து இலவம் பஞ்சைத் தூவியது போலக் காட்சியளித்தன. காலை எழுந்ததும் அம் மல்லிகைச் செடிகளைப் பார்ப்பது வழமைபோல அன்றும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவனது வீட்டில் அவனும் மனைவியும்தான். ஒரேயொரு மகன் வெளிநாட்டில் தன் மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான்.
மனைவி நடைப்பயிற்சியை முடித்துத் திரும்பிவரும்வரைக்கும் முற்றத்தைக் கூட்டிச் சுத்தம் செய்தான். மாமரத்தின் பழுத்த இலைகளும் சருகுகளும் நிலத்தில் கொட்டிக்கிடந்தன. அவற்றைக் கூட்டி அள்ளிக் குப்பைகள் போடுவதற்கென்றே வெட்டப்பட்டிருந்த குழியில் கொண்டுபோய்க் கொட்டினான். தென்னை மரங்களிலிருந்து விழுந்திருந்த பழுத்த ஓலைகளையும் பாளைகளையும் பூக்கநெட்டிகளையும் அப்புறப்படுத்தினான். பூச்செடிகளுக்கும் மரக்கறிச்செடிகளுக்கும் இடையே நுழைந்து அவற்றிற்குச் செய்யவேண்டிய பராமரிப்பு வேலைகளையும் கவனித்தான். காலையில் எழுந்து வீட்டுவளவைச் சுத்தம் செய்வதும் சிறு சிறு தோட்ட வேலைகளைச் செய்வதும் கோகுலனுக்கு எப்போதுமே திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றவை. காலையில் நடைப் பயிற்சிக்குப் போகாத அவனுக்கு தேகப்பயிற்சியாக அவை அமைந்தன.
காலை ஆறரைமணி போல் நடைப்பயிற்சி முடிந்துவந்த மனைவி குசினிக்குள் நுழைந்த போது அவளைப் பின் தொடர்ந்தான்.
அவன் மனைவி வழமையாகத் தரும் பாதாம்பருப்புகளை ஒரு கையிலும் காலைக் கோப்பியை மறுகையிலும் தந்தாள்.
பாதாம்பருப்புகளை மென்று விழுங்கிக் கோப்பியைப் பருகிக் கொண்டிருக்கையில் அருகில் வீட்டின் பின்புறம் வதியும் ரமேஷ் வீதியில் நின்று “கோகுலண்ணன்! கோகுலண்ணன்” என்று கூப்பிடுவது கேட்டது.
கோப்பியைச் சுவைத்தவாறே வெளியேவந்த கோகுலனிடம், நிலத்தில் கால்களைக் குத்தியவாறு ‘ஸ்ரார்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறே அன்றைய ‘வீரகேசரி’ப் பத்திரிகையை நீட்டினான்.
மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிறுவனமொன்றில் ‘செக்யூரிட்டி’ வேலை பார்க்கும் ரமேஷ்சிடம் அவனது இரவுக் கடமை முடிந்து மறுநாள் காலையில் வீடுவரும்போது மட்டக்களப்பு ‘அரசடி’ச் சந்தியிலுள்ள பத்திரிகைக் கடையில் தனது பெயரைச் சொல்லி அன்றைய ‘வீரகேசரி’ப் பத்திரிகையை வாங்கி வரும்படி முதல்நாள் மாலை அவன் வேலைக்குப்போது கோகுலன் சொல்லிவிட்டதை மறந்துவிடாமல் வாங்கி வந்திருந்தான் அவன்.
கோப்பியைப் பருகி முடித்த பின் வீட்டு முன் மண்டபத்தில் ‘செற்றியி’ல் அமர்ந்து ‘வீரகேசரி’ப் பத்திரிகையைக் கையிலேடுத்தான் கோகுலன்.
தலைப்புச் செய்தியையும் ஏனைய முன்பக்கச் செய்திகளையும் மேலோட்டமாக மேய்ந்தவன் ‘வீரகேசரி’ப் பத்திரிகையைச் ‘செற்றியி’ல் வைத்துவிட்டுப் போய்க் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து மீண்டும் பத்திரிகையைக் கையிலெடுத்து பக்கங்களைப் புரட்டி ஊன்றிப்படிக்கத் தொடங்கினான்.
அன்றைய வீரகேசரிப் பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியொன்று கோகுலனின் கண்ணில் குத்திக் கவனத்தை ஈர்த்தது.
‘கனகர் கிராம மக்களின் நில மீட்புப் போராட்டம்;;; ஒரு வருடம் நிறைவு. செல்லாக்காசாக அரசியல் வாதிகளின் உறுதிமொழிகள் என்கின்றனர் மக்கள்’ எனும் தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது.
“அம்பாறை பொத்துவில் ஊறணி 60 ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் நில மீட்பு போராட்டம் ஆரம்பமாகி நேற்று 14ஆம் திகதி புதன்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. அதேவேளை ஒரு வருடம் கடந்தும் வீதியோர போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு வருட பூர்த்தி தினத்தை தாம் துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும் காணி மீட்பு போராட்டத் தலைவி புஞ்சுமாத்தையா ரங்கத்தனா தெரிவத்துள்ளார்.
நில மீட்பு போராட்டமானது கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புஞ்சுமாத்தையா ரங்கத்தனாவின் தலைமையில் பொத்துவில் ஊறணி 60ஆம் கட்டை கனகர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் வீதியோரமாக தற்காலிகக் கொட்டகை அமைத்து நில மீட்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
நேற்று புதன்கிழமை 14ஆம் திகதியுடன் நில மீட்புப் போராட்டத்தின் ஒரு வருடம் நிறைவடைந்த போதும் பல்வேறுபட்ட காரணங்களைக் கூறிக்கொண்டு தம்மை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் ஏமாற்றி வேடிக்கை பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசியல் வாதிகளின் உறுதிமொழிகளும் இதுவரை செல்லாக்காசாகவே இருப்பதாக அம்மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ள அதேவேளை பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோர் தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்ற போதிலும் வன பரிபாலன திணைக்களம் மனமிரங்கவில்லை என்றும் நில மீட்புப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டடுள்ளனர்.
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுலஞ்சேனை என்ற பெயரோடு 1950 – 60 காலப் பகுதியில் இக்கிராமம் விவசாயத்தின் ஊடாக பொருளாதாரத்தில் உயர்ந்த செல்வச் செழிப்பாக காட்சியளித்தது. இவ்வாறு இருந்து வந்த சமுலஞ்சேனை 1981ஆம் ஆண்டு காலப் பகுதியில் மறைந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சி.கனகரெத்தினத்தால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக 30 வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்திய போது இங்கு வாழ்ந்த 30 குடும்பங்களுக்கு கடனடிப்படையிலான வீடுகள் வழங்கப்பட்டு சமுலஞ்சேனை என்ற விவசாயக் கிராமம் கனகர் கிராமம் என பெயரும் மாற்றப்பட்டது. பொத்துவில் கனகர் கிராமத்தில் 1960 – 1990ஆம் ஆண்டு காலப் பகுதி வரை சுமார் 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததுடன் இவர்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்காக 2 ஏக்கர் அளவிலான காணிகளும் வழங்கப்பட்டு சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு கச்சான், சோளன், மரவள்ளி, தென்னை மரங்கள் மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வேளாண்மைகளும் மேற்கொள்ளப்பட்டு மிகவும் செழிப்பான வாழ்வாதாரத்துடன் தாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக இங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வெளிப்பிரதேசங்களில் அகதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் மக்கள் தங்களின் காணிகளுக்குச் செல்வதற்கான அனுமதிகளைக் கோரியபோது பரிபாலன திணைக்களத்துக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக அனுமதிகள் வழங்கப்படாது இழுபறி நிலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கனகர் கிராம மக்களால் வீதியோர நில மீட்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை இப்போராட்டம் இடம்பெற்று வருகிறது.
அரசாங்க அதிபர் மட்டத்தில் காணிகளுக்கான ஆவணங்களை பரிசீலிக்கப்பட்டதோடு பொத்துவில் பிரதேச செயலகத்தால் 172 Nபின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டது. சகல ஆவணங்களும் இருக்கின்ற போதிலும் இன்று வரை தமக்கான காணிகளை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்கின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.”
செய்தியை வரிக்குவரி ஊன்றிப் படித்து முடித்தபின் பத்திரிகையை விரித்தவாறே மடியில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஒருவருடத்திற்கு முன்பு இந் நிலமீட்புப் போராட்டம் ஆரம்பித்த செய்தி அவனுக்குத் தெரிந்திருந்த சங்கதியேயாயினும் ஒரு வருடமாகியும் இப்பிரச்சினை தீர்த்துவைக்கப்படவில்லையே என்பது அவனுடைய மனதைக் குடைந்தது.
காலக்கடிகாரம் பின்னோக்கி ஓடியது. (தொடரும் ……. அங்கம் – 02)