வாக்குமூலம்-78   (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

வாக்குமூலம்-78  (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

மூல (அசல்) 13 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை, அப்போதிருந்த முதலாவது ( இறுதியும் கூட) இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரம் ஈ பி ஆர் எல் எஃப் வசமிருந்த காரணத்தால் (ஈபிஆர்எல்எஃப் ஐச்  சேர்ந்த அ. வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்தார்.) பிரயோகிப்பதைத் தடுக்கும் வகையில் அப்போது (பிரேமதாசா+பிரபாகரன் கூட்டின் போது) தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா 1990 ஆம் ஆண்டின் முதலாம் இலக்கப் பொலிஸ் ஆணைக் குழுச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிச் செயற்பட்டார் என்பதைச் சென்ற பத்தியிலே பார்த்தோம். 

அதாவது, இந்த 1990 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கப் பொலிஸ் ஆணைக் குழுச் சட்டத்தைப் பாவித்து 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகார ஏற்பாடுகள் அமுலுக்கு வரும் திகதியை வர்த்தமானியில் பிரசுரிக்காமல் (விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்) காலத்தை வேண்டுமென்றே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இழுத்தடித்தார். அதனால் அவரது பதவிக் காலத்தில் 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக் குழுவோ (மத்திய அரசு) மாகாண போலீஸ் ஆணைக் குழுவோ நியமிக்கப்படவேயில்லை. அதனால் பகிர்ந்தளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்களைத்தானும் மாகாண சபைகளால் பிரயோகிக்க முடியவில்லை. இதற்குக் காரணமாயிருந்தவர்கள் தமிழர் தரப்பே (தமிழீழ விடுதலைப் புலிகளே) என்பதையும் சென்ற பத்தியிலே பார்த்தோம். 

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் அகால மரணத்தின் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற டி.பி. விஜயதுங்க காலத்திலும் (1991-1994) அதுவே தொடர் கதையானது. 1994 லிலிருந்து 2000 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதியாக சந்திரிகா இருந்த போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

ஆனால், அதற்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் 2000 இல் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்த போது, 17 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி அரசியலமைப்புப் பேரவையை (CONSTITUTIONAL COUNCIL) நிறுவி அதன் மூலம் பல சுயாதீன ஆணைக் குழுக்களை நியமித்தபோது தேசிய பொலிஸ் ஆணைக் குழுவையும் முதல் முறையாக நியமித்தார். ஆனால் மாகாண பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்படவில்லை. பதிலாக மாகாண மட்டத்தில் ‘குழு’க்களை (COMMITTEES) நியமிப்பதற்குத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மாகாண மட்டத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு அதிகாரமும் அக்குழுக்களுக்கு இருந்தது. ஆனால் யுத்தம் அப்போது தீவிரமாக நடந்து கொண்டிருந்த காரணத்தால் அத்தகைய மாகாண மட்டக் ‘குழு’க்கள் நியமிக்கப்படவேயில்லை. ஜனாதிபதி சந்திரிக்காவின் நல்லெண்ணத்தையோ -தாராள மனப்போக்கையோ அப்போதிருந்த தமிழ்த் தேசிய அரசியல் தலைமை பயன்படுத்தத் தவறியதும் இதற்குக் காரணம். தமிழ்த் தேசிய அரசியல் பயணம் முழுவதும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறியமையே ‘வைக்கோல் இழுத்த வழிப்பாடு’ ஆக வரலாற்றில் பதிந்து கிடக்கிறது. தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் மற்றும் இராணுவ சக்திகளின் மக்கள் நலனைப் புறந்தள்ளிய தன்னலமும் -தன் முனைப்புமே இதற்குக் காரணம். தமிழர் தம் அரசியல் தலைமை அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுத்திருந்தால் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்திலேயே குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தைத்தானும் தமிழர்கள் திருப்திப்படும் வகையில் முழுமையாக அமுல் செய்திருக்க முடியும். 

சந்திரிக்காவுக்குப் பின் மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாக வந்து 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாகப் பாராளுமன்றப் பேரவையை (PARLIAMENTARY COUNCIL) உருவாக்கி தேசிய பொலிஸ் ஆணைக் குழு உட்பட சகல சுயாதீன குழுக்களினதும் கட்டுப்பாட்டைத் தனது நிறைவேற்று அதிகாரத்திற்குள் கொணர்ந்ததன் மூலம் 17 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் அடங்கியிருந்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மாகாண மட்டத்தில் ‘குழு’க்களை நியமிக்கும் அதிகார ஏற்பாட்டையும் நடைமுறையில் இல்லாமலாக்கினார். 

ஆனாலும், மைத்திரிபால சிறிசேன 2015 இல் ஜனாதிபதியாகி நிறைவேற்றிய 19ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாண மட்டத்தில் குழுக்களை நியமிக்கும் அதிகாரம் மீண்டும் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டு அது கோத்தபாய காலத்தில் நிறைவேறிய 20 ஆவது திருத்தத்திலும் ரணில் ஜனாதிபதியாக வந்த பின்னரான 21 ஆவது திருத்தத்திலும் தொடர்ந்து பேணப்பட்டது. அதாவது அந்த ஏற்பாடு செயற்படுத்தப்படவில்லையே தவிர சட்டத்தில் இப்போதும் உள்ளது. 

இந்தப் 17ஆவது 18 ஆவது 19 ஆவது 20 ஆவது மற்றும் 21ஆவது திருத்தங்களைப் பற்றிய தெரிதலோ-புரிதலோ இல்லாத ‘தமிழ்த் தேசிய’த் தரப்பினர்தான் 1990 ஆம் ஆண்டு பிரேமதாசா நிறைவேற்றிய 1ஆம் இலக்கப் பொலிஸ் ஆணைக்குழுச் சட்டத்தை மேற்கோள்காட்டி (17 ஆவது திருத்தத்தின் பின் 1990 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டம் செயல் இழந்து விட்டது) தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திகதியைத் தீர்மானித்து வர்த்தமானி அறிவித்தலைச் செய்வதால் மாகாண பொலிஸ் முறைமை (ஆணைக்குழு) நடைமுறைக்கு வந்து விடுமென அரசியலமைப்பு ரீதியாக நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றைக் கூறிக் குழப்புகின்றனர். 1990 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கப் பொலிஸ் ஆணைக் குழுச் சட்டம் உருவாவதற்குக் காரணமாயிருந்து பின்னர் அச்சட்டம் நடைமுறையில் இருந்த காலத்திலும் (2000 வரை) வாய் மூடி இருந்து அதற்குப் பின்னரும் 17ஆவது 18 ஆவது 19 ஆவது 20 ஆவது 21 ஆவது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட வேளைகளில் (சுமார் 33 ஆண்டுகள்) மௌனமாயிருந்து விட்டுத்தான் ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகள் கூட்டம் இப்போது திடீரெனக் கண் விழித்துப் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிப் புலம்புகின்றது. 

இந்தப் ‘போலி’த் தமிழ்த் தேசிய வாதிகள் அடிக்கும் ‘கூத்து’கள் ஒருபுறம் இருக்கட்டும். 

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு விதிகளின்படி தேசிய பொலிஸ் ஆணைக் குழுவானது மாகாண மட்டத்தில் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்) ‘குழு’க்களை நியமித்து அவற்றின் மூலம் பொலிஸ் சேவைக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சேர்ப்புச் செய்ய முடியும்.

அதனால்தான் ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ 08.05.2023 அன்று ஜனாதிபதியிடம் கையளித்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் ஆலோசனைகள் அடங்கிய வழி வரைபட ஆவணத்தில் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உடனடியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுவதற்காகத் தமிழர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்படியான கோரிக்கையையும் உள்ளடக்கியிருந்தது. இக் கோரிக்கை குறித்த விளக்கத்தை அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவருமான கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது எடுத்துக் கூறியதையடுத்து அதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. இதனைச் செய்வதற்குப் புதிய சட்டமெதுவும் தேவையில்லை. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானமே போதுமானது. 

இந்த நிலையில், மூல (அசல்) 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண பொலிஸ் ஆணைக் குழுவை நிறுவுவதாயின் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய மேலுமொரு ( 22 ஆவது) அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தினாலேதான் சாத்தியம். இது உடனடியாகச் சாத்தியப்படாது. அதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைக்கு பொலிஸ் அதிகாரங்கள் குறித்த விடயத்தைப் பேசு பொருளாக்காமல் அதை ஒத்தி வைத்துவிட்டு அதிகாரப் பகிர்வின் ஏனைய விடயங்களைப் பேசுவோம் எனக் கூறினார். அரசியலமைப்புக்கான திருத்தம் ஒன்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றும் வகையில் தற்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இல்லையென்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள விரும்பாத ‘போலி’ த் தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களுக்குச் சாமரம் வீசுகின்ற சில தமிழ் ஊடகங்களும் ‘யானை பார்த்த குருடர்கள்’ மாதிரி ஆளுக்கொரு கதை கூறித் தமிழ் மக்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். சட்டங்கள் தேவைதான். ஆனால் காரிய சித்திக்குச் சட்டங்கள் மட்டுமல்ல கால தேச வர்த்தமானங்களுக்கேற்பத் தந்திரோபாயமான அணுகுமுறைகளும் அவசியம். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்து தமிழர்கள் பிரச்சனை ஒரு போதும் தீராமல் பார்த்துக் கொள்வது மட்டுமே இப் ‘போலி’ த் தமிழ்த் தேசியவாதிகளினது குறிக்கோள் ஆகும்.  

தமிழ் மக்கள் எச்சரிக்கையுடனும் தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. எல்லாவற்றையும் எதிர்மறையாகவும் சந்தேகத்துடனும் நோக்கும்-அணுகும் உளவியலிலிருந்து தமிழ் மக்கள் வெளியே வந்து அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்னும் பொன்மொழிக் கிணங்கச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் வல்லமையை வளர்த்துக் கொள்வது அவசியம். இதற்குப் ‘போலி’ த் தமிழ்த் தேசியவாதிகள் வழிகாட்டவும் மாட்டார்கள், வழி விடவும் மாட்டார்கள். வழியும் விடாமல் பலனும் கொடாமல் நட்டநடு வீதியில் பட்ட மரமாகவே நிற்பர். தமிழ் மக்கள் தாமாகவே தெளிவடையவும் திருந்தவும் வேண்டும். வீழ்ந்து கிடக்கும் தமிழ் மக்கள் இருப்பதைப் பற்றிக் கொண்டு எழுந்து நிற்க எத்தனிக்க வேண்டும். அந்த எத்தனம் இல்லையாயின் காலம் முழுவதும் வீழ்ந்தபடியே கிடக்க வேண்டிவரும். அத்தகைய எத்தனத்தைத்தான் இவ் அரசியல் பத்தித் தொடர் எப்போதுமே ‘மாற்று அரசியல்’ என்று அடையாளம் காட்டி வருகிறது. இம் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய தலைமைத்துவப் பொறுப்பை வரலாறு அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் மீதே சுமத்தியுள்ளது.