— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கை அரசியலை பல தசாப்தங்களாக ஆக்கிரமித்து வந்திருக்கும் பிரதான கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்பதாகும்.
இறுதியாக 2019 நவம்பர் தேர்தலை தவிர, 1994 நவம்பர் தேர்தல் தொடக்கம் 2015 ஜனவரி தேர்தல் வரை சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பு பிரதான அரசியல் கட்சிகளின் விஞ்ஞாபனத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்துவந்தது. ஆனால், அந்த தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியும் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.
கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியின்போது மீண்டும் அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது. சகல எதிரணி கட்சிகளும் அதற்கு ஆதரவுகொடுத்து உரத்துப் பேசின. ஆனால், கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டதும் மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை பின்னரங்கத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
எதிரணி கட்சிகள் இப்போது அதைப் பற்றி பேசாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து தங்களை தயார்செய்யும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு முக்கியமான வாக்குறுதியாக மீண்டும் வெளிக்கிளம்பும் என்பது சந்தேகமே.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து இந்த பத்தியில் ஏற்கெனவே பல தடவைகள் எழுதப்பட்டிருக்கிறது. மீண்டும் எழுதவேண்டிய தேவை எழுந்ததற்கு காரணம் அந்த ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்தவாரம் கொழும்பில் ஜெயவர்தன நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளேயாகும்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவும் ஜெயவர்தனவின் பேரன் பிரதீப் ஜெயவர்தனவும் அந்த வைபவத்தில் முக்கிய பேச்சாளர்கள். வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய செய்தியும் அங்கு வாசிக்கப்பட்டது.
பிரதீப் முன்னாள் ஜனாதிபதியின் பேரன் என்பதைத் தவிர, ஒரு முன்னணி அரசியல்வாதி அல்ல என்றபோதிலும், தனதுரையில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கை அரசியலில் முக்கியமான விவாதத்துக்குரிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் அவை குறித்து சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்த அவர் இப்போது தனது பாட்டனாரின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் வந்திருக்கிறார்.
இலங்கை அதன் வரலாற்றில் மிகவும் கடுமையான சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இருக்கிறது. அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு பலரும் சாத்தியமான தீர்வுகளைத் தேடிக்கொண்டிரு்கிறார்கள். அவற்றில் ஒன்று ஜே.ஆர். ஜெயவர்தன 1978 ஆண்டில் அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பாகும் என்று கூறிய பிரதீப் அந்த ஆட்சிமுறையை நியாயப்படுத்த 1991ஆம் ஆண்டில் ஜெயவர்தன நிகழ்த்திய உரையொன்றை நினைவுபடுத்தினார்.
சுதந்திரத்துக்கு பிறகு இலங்கை வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் இருந்த 30 வருடங்களிலும் 1965 — 70, 1970 — 77 காலப்பகுதிகளில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் மாத்திரமே முழுப்பதவிக் காலத்தையும் நிறைவுசெய்தன. ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் ஒரு அரசாங்கத்தை தவிர ஏனைய அரசாங்கங்கள் சகலதும் முழுப்பதவிக் காலத்தையும் நிறைவுசெய்தன என்று ஜெயவர்தன அந்த உரையில் கூறினார் என்று பிரதீப் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் இருந்து தனது பதவியை துறந்தபோது நாடு முற்றிலும் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் இருந்திருந்தால் நெருக்கடியை கையாளமுடியாமல் நாடடில் அராஜகநிலை ஏற்பட்டு இறுதியில் இராணுவ சர்வாதிகாரம் தோன்றியிருக்கும் என்று கூறிய பிரதீப், ஜனாதிபதி ஆட்சிமுறை காரணமாகவே அதிகார மாற்றத்தைச் சுமுகமான முறையில் செய்யக்கூடியதாக இருந்ததுடன் புதிய ஜனாதிபதியினால் அரச அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தக்கூடியதாகவும் இருந்தது. நிலைவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் துணிச்சலுக்கும திறமைக்கும் நாம் தலைவணங்குகிறோம். ஜனாதிபதி ஆட்சிமுறை இல்லையென்றால் அவரால் இதைச் செய்திருக்கமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.
அதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது செய்தியில் 1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தன தொடக்கிவைத்த சமூக — பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடு்க்கப் பட்டிருந்தால் நாடு இன்று அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும் என்றும் அவரின் அரசியல் — பொருளாதார சீர்திருத்தங்கள் இலங்கையின் சமூக முறைமையை ஒரு நவீன அரசாக மாற்றுவதில் முக்கியமான பங்கை வகித்தன என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் பொதுப்படையாக ஜெயவர்தனவின் சீர்திருத்தங்கள் என்று கூறினாரே தவிர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றி பிரத்தியேகமாக எதையும் குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி ஆட்சிமுறையே இன்றைய அரசியல் — பொருளாதார நெருக்கடிகளுக்கு பிரதான காரணமாக இருந்துவந்திருக்கிறது என்பதே பொதுவில் இதுவரையான அனுபவவாயிலான புரிதலாக இருக்கின்ற அதேவேளை ஜெயவர்தனவின் பேரன் அந்த ஆட்சிமுறை இல்லாவிட்டால் நாட்டில் அராஜகம் தலைவிரித் தாடியிருக்கும் என்று கூறுகிறார். ஜெயவர்தனவின் சமூக — பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாடு சுபிட்சமடைந்திருக்கும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
முன்னாள் ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கைகள் என்று விக்கிரமசிங்க கூறுவது திறந்த சந்தைப் பொருளாதாரத்தையேயாகும். அந்த பொருளாதார முறைமை தொடர்ந்து பின்பற்றப்படவில்லை என்பதே அவரின் முறைப்பாடாகும். ஆனால் ஜெயவர்தனவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளின் அரசாங்கங்களும் திறந்த பொருளாதாரக் கொள்கையையே, பின்பற்றிவந்தன. பெரிய மாறுதல்கள் இருந்தன என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்த கொள்கையின் விளைவாகவே நாடு இன்றைய பொருளாதார அவலநிலையை அடைந்திருக்கிறது என்பதே யதார்த்தமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கரு ஜெயசூரிய ஜெயவர்தனவை சமகால அரசியல்வாதிகள் பின்பற்றக்கூடிய ஒரு தலைவர் (Role Model) என்று வர்ணித்தார். உண்மையில் இன்றைய அரசியல்வாதிகள் மாத்திரமல்ல எதிர்கால அரசியல்வாதிகளும் பின்பற்றக்கூடாத ஒரு தலைவர் என்றுதான் ஜெயவர்தனவைக் கூறமுடியும்.
பிரதீப் தனது பேரன்புக்குரிய பாட்டனார் அறிமுகப்படுத்தியது என்பதால் ஜனாதிபதி ஆட்சிமுறை மீதான பற்றுதலை வெளிக் காட்டியிருக்கக்கூடும். அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு ஒரு முடிவைக்கட்டவேண்டும் என்று பிரதீப் முன்னர் ஒரு தடவை பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் நாட்டின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதையே விரும்புகிறார்கள். முன்னைய ஜனாதிபதிகளையும் விட கூடுதலான அதிகாரங்களை தன்வசம் வைத்திருந்த ஒரு ஜனாதிபதியை கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறவைத்த மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை.
அந்த மக்கள் கிளர்ச்சி படைபலம் கொண்டு அடக்கியொடுக்கப்பட்டுவிட்டது என்பதற்காக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற மக்களின் விருப்பம் தணிந்துபோய் விட்டது என்று அர்த்தமாகிவிடாது.
கடந்த வருடத்தைய அரசியல் — பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்த பிறகு கடந்துவிட்ட ஒரு வருடகாலத்தில் அரசியல் உறுதிப்பாடும் பொருளாதார மீட்சிக்கான பாதையில் தெளிவான முன்னேற்றமும் ஏற்பட்டு விட்டது என்று வாதிடுபவர்களில் பலர் அதற்கு பிரதான காரணம் ஜனாதிபதி ஆட்சிமுறையே என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.
உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படாமல் எதேச்சாதிகாரப்போக்கு தீவிரமடைந்து அரசியல் உறுதிப்பாடு சீர்குலைந்ததை அடுத்தே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அடிப்படையில் அந்த ஆட்சிமுறையில் எந்த ஜனநாயக குணாம்சமும் கிடையாது.
கடந்த 45 ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் நாடு இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்னரான 75 வருடங்களில் இந்த ஆட்சிமுறையின் கீழ்தான் கூடுதலான காலப்பகுதிக்கு நாம் ஆளப்பட்டிருக்கிறோம்.
ஜனாதிபதி ஆட்சிமுறை எவ்வாறு இயங்கி வந்திருக்கிறது? அது எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது? கெடுதியான ஆட்சிமுறைப் போக்குகளுக்கு அது எவ்வாறு வழிவகுத்தது? என்பதையெல்லாம் நாம் அனுபவ வாயிலாக கண்டிருக்கிறோம். பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்க சேவை என்று சகல நிறுவனங்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் உருக்குலைக்கப்பட்டதன் விளைவுகளை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை வரையறுக்கும் சகல ஜனநாயக அரசியல் விழுமியங்களும் உதாசீனம் செய்யப் பட்டிருக்கின்றன.
லிபரல் ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசியல் தலைவராக ஒரு காலத்தில் நோக்கப்பட்ட விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு மக்கள் தங்களின் வாக்குரிமையையும் கூட அனுபவிக்கமுடியாத வகையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. இன்று தேர்தல்கள் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளுக்கு போய்விட்டது.
பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலைக்கூட உரிய நேரத்தில் அரசாங்கம் நடத்தாமல்விடக்கூடும் என்று எதிரணி கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது அடிப்படையில் அதன் வரைவிலக்கணத்தின் பிரகாரம் ஜனநாயக விரோதமானது. அந்த பதவியை வகிப்பவரிடம் குவிந்திருக்கும் மட்டுமீறிய அதிகாரங்களை அவருக்கு இருக்கும் சட்ட விடுபாட்டு உரிமையுடன் சேர்த்துப் பார்க்கும்போது அது ஜனநாயகத்துக்கு முற்றிலும் நேர்மாறானது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும்.
குற்றச் செயல்களுக்காக நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கும் அரசியல்வாதிகள் ஜனாதிபதியாக தெரிவானதும் அவற்றில் இருந்து விடுபடும் உரிமையை அனுபவிக்கக்கூடியதாக இருப்பதில் இருந்து அதன் ஜனநாயக விரோதம் பிரகாசமாக தெரிகிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறையுடனான இலங்கையின் வாழ்வு தணிக்கமுடியாத அவல அனுபவமாக இருப்பதுடன் சுதந்திரத்தின் பின்னரான மிகவும் மோசமான காலப்பகுதியாகவும் விளங்குகிறது. மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிப் பதவி அடிமைத்தனமான, அண்டிப்பிழைக்கின்ற, ஊழல்தனமான சந்தர்ப்பவாத அரசியல் வர்க்கம் ஒன்று வளருவதற்கு பிரதான காரணமாக இருந்திருக்கிறது.
ஆட்சிமுறையில் முன்னரும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் நிலவிவந்தபோதிலும், பல தசாப்த கால ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு பிறகுதான் அவை படுமோசமாக தலைவிரித்தாடி இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்தன.
ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைச் சமூகங்களுக்கு அனுகூலமானது ; ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் சிறுபான்மைச் சமூகங்கள் செல்வாக்சை் செலுத்தக்கூடிய நிலை இருப்பதால் ஜனாதிபதி அந்த சமூகங்களை அனுசரித்துச் செல்லவேண்டிய தேவை இருக்கும் என்ற ஒரு மாயையும் முன்னர் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதை ராஜபக்சாக்கள் தங்களது மோசமான இனவாத அரசியலினால் கச்சிதமாக நிர்மூலம் செய்தார்கள். ஜனாதிபதி ஆட்சிகளில்தான் சிறுபான்மைச் சமூகங்கள் மோசமான அடக்குமுறைகளையும் உரிமை மீறல்களையும் அனுபவிக்கவேண்டியிருந்தது. ராஜபக்சாக்கள் அதை ஒரு உச்சநிலைக்கு கொண்டு சென்றார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சகல சமூகங்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பீட்டளவிலான ஜனநாயகச் சூழலை மாற்றி பெரும்பான்மைச் சமூகத்தின் தனியான ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவாக முடியும் என்பதை ராஜபக்சாக்கள் நிரூபித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் முன்னெடுத்த அரசியல் இலங்கை மக்களை முன்னென்றும் இல்லாத வகையில் இன, மத அடிப்படையில் பிளவுபடுத்தி மோசமான அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்தது. இன்னமும் கூட அவர்கள் அத்தகைய அரசியல் முன்னெடுப்புக்கள் மூலமாக மீட்சிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். குடும்ப ஆதிக்க அரசியலை வலுப்படுத்தவும் ஜனாதிபதி ஆட்சிமுறை தாராளமாக உதவியிருக்கிறது.
அந்த ஆட்சிமுறையை முன்னைய மூன்று ஜனாதிபதிபதிகள் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் ஒழிக்கவில்லை என்பதோ அல்லது ஒழிக்கமுடியவில்லை என்பதோ அதை தொடரவேண்டும் என்ற கருத்தை நியாயப்படுத்திவிடாது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஓரளவுக்கேனும் பயனுறுதியுடைய நடவடிக்கை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 வது அரசியலமைப்புக்கான திருத்தத்தை கூறமுடியும். ஆனால் 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டில் 20 வது திருத்தத்தைக் கொண்டுவந்து முன்னர் குறைக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுத்தது மாத்திரமல்ல மேலும் பல அதிகாரங்களை தனதாக்கிக்கொண்டார்.
பிறகு விக்கிரமசிங்க நிருவாகத்தில் கடந்த வருடம் செப்டெம்பரில் கொண்டுவரப்பட்ட 21 வது அரசியலமைப்பு திருத்தம் 19 வது திருத்தத்தின் ஏற்பாடுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்,அதனால் எந்த பயனும் கிட்டவில்லை. அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே அமைந்தது.
அந்த திருத்தத்துக்கு பின்னரும் கூட ஜனாதிபதி தன்வசம் எத்தனை அமைச்சுப்பொறுப்புக்களையும் வைத்திருக்கமுடியும். அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் எண்ணிக்கையை அவரால் தீர்மானிக்கமுடியும். அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய பொறுப்புக்களை அவரால் தீர்மானிக்கமுடியும் என்பதுடன் அமைச்சுக்களின் செயலாள்களை நியமிப்பதில் தற்துணிபு அதிக்ரத்தைப் பயன்படுத்தமுடியும். சுயாதீன ஆணைக்குழுக்களை கண்காணிக்கும் அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
மத்தியில் அதுவும் ஒரு பதவியில் சகல அதிகாரங்களையும் குவிப்பதன் மூலம் ஜனாதிபதி ஆட்சிமுறை மாகாண மட்ட ஆட்சிமுறையின் வீச்செல்லையை மிகவும் கடுமையாக மட்டுப்படுத்துகிறது. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே மாகாண நிருவாகங்கள் கொண்டிருக்கின்ற போதிலும் கூட அங்கும் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநர் கணிசமான அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு என்று கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு சட்டவாக்க செயன்முறையும் பயனளிக்கவில்லை என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டிருக்கிறோம். ஜனாதிபதி ஆட்சிமுறை சீர்திருத்தங்களுக்கு இடமளிக்கக்கூடிய ஒன்று அல்ல. அதீதமான அதிகாரங்களை ஒரு பதவியில் குவிக்க வகைசெய்யும் அந்த முறையை முற்றுமுழுதாக பதிலீடு செய்தால் தவிர மற்றும்படி சீர்திருத்தங்களின் மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்று பல அரசியலமைப்பு நிபுணர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி ஆட்சிமுறையின் பாதகங்களையும் ஜனநாயக விழுமியங்களுக்கு அதனால் விளைந்த ஆபத்துக்களையும் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அனுபவரீதியாக கண்ட பின்னரும் கூட அதை ஒழிப்பதற்கான முயற்சிகள் பயனளிக்கமுடியாத அரசியல் சூழ்நிலை தொடருவது பெரும் துரதிர்ஷ்டமாகும்.
கடந்த வருடம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தின் புதிய கூடடத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து தனது முதலாவது கொள்கை விளக்கவுரையை (ஆகஸ்ட் 3) நிகழ்த்திய விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமா? எமது நாட்டுக்கு எத்தகைய ஆட்சிமுறை பொருத்தமானது? ஆட்சிமுறை எவ்வாறு மறுசீரமைக்கப்படவேண்டும்? என்ற விவகாரங்களை ஆராயும் பொறுப்பை தான் நியமிக்க உத்தேசித்திருக்கும் மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்போவதாகக் கூறினார்.
கடந்த காலத்தில் பல ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அந்த ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. எவராவது அதை ஒழித்தாலும் கூட பின்னர் அதிகாரத்துக்கு வரக்கூடியவர்கள் மீண்டும் கொண்டு வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்றும் அதனால் தேசிய கருத்தொருமிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே பொருத்தமானது. அந்த கருத்தொருமிப்பைக் காணும் பொறுப்பு உத்தேச மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தனது அந்த உரையில் கூறினார்.
ஆனால், அவர் அவ்வாறு கூறி ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும் மக்கள் சபை நியமிக்கப்படவேயில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விடயத்தில் இருந்து தனது நிருவாகத்தை விலக்கிவைக்கும் ஒரு தந்திரோபாயமாகவே அதைக் கூறினார் என்பதே உண்மையாகும்.
சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீநிவாசன் சில மாதங்களுக்கு முன்னர் எமது ஜனாதிபதி ஆட்சிமுறை குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் இறுதியாகக் கூறிய கருத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
“இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டிய தேவை குறித்து பல தசாப்தங்களாக விவாதம் செய்துவந்திருக்கிறது. ஆனால், அந்த பதவிக்குரிய அதிகாரங்களைத் துறப்பதற்கு முன்வரக்கூடிய ஒரு தலைவரை நாடு இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.”
நன்றி: ஈழநாடு