— அழகு குணசீலன் —
மத்திய கிழக்கு எரிகிறது. இந்த தீயை மூட்டிய சக்திகள் யார், யார் என்பது இரகசியம் அல்ல. சர்வதேச சட்டங்களை மீறியும், தேசங்களின் இறையாண்மையை மீறியும் இடம்பெறும் “சண்டித்தன” அரசியல் அத்துமீறல், அடாவடித்தனம் தொடர்கிறது.. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமாதானத்தை – சமநிலையை ஏற்படுத்த வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை என்ற உலக ஒழுங்கிற்கான- மேற்பார்வைக்கான கட்டமைப்பு வெறும் பார்வையாளராக இருக்கிறது. ஆக மிஞ்சினால் ஒரு அறிக்கையோடு தனது கடமை முடிந்ததாக கருதுகிறது.
கையாலாகாத, காலாவதியான ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம், சர்வதேச சட்ட நடைமுறைகள் செயலிழந்து விட்டன. இந்த நிலையில் இன்னும் இந்த பெயரளவிலான வெள்ளையானை இன்னும் தேவையா? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் இனியும் அப்படியொரு மூன்றாவது போர் அழிவை தடுப்பதும்தான். ஆனால் கடந்த காலங்களை திரும்பி பார்த்தால் அவை உலகப் போராக உருமாற்றம் பெறாது விட்டாலும், உலகத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற போர்களாக பல இடம்பெற்றுள்ளன/ இடம்பெற்றுவருகின்றன. பொதுவாக இவை அனைத்திற்கும் பின்னால் வெறுமனே இரண்டு, மூன்று சக்திகளே உள்ளன. சமகால உக்ரைன், பாலஸ்தீன, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு போர்கள் தரும் செய்திகள் இவை.
1979 ஈரானில் அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி இஸ்லாமிய புரட்சி மூலம் அகற்றப்பட்ட பின்னர், ஈரான் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அது ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த சட்டம், நீதி, நிர்வாக, சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை கொண்டதாக அமைந்தது. அது அந்த மக்களின் சுயதேர்வு -சுயநிர்ணயம். காலப்போக்கில் உலக புதிய (?) ஒழுங்கில் ஏற்பட்ட மாறங்களோடு விட்டுக்கொடுக்கின்ற நெகிழ்ச்சிப்போக்கு சமூகம் எதிர்பார்த்த அளவுக்கு ஈரானில் ஏற்படவில்லை என்பது வெளிப்படை. கடந்த நான்கரை தசாப்தங்களுக்கு பின்னர் ஈரானிய மக்கள் ஒரு முறைமை மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். முறைமையில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்கள் தயாரில்லை என்றால் ஆட்சிமாற்றத்தை செய்வதற்கான அடிப்படை உரிமை மக்களுக்கானது.
ஆனால், அதை எப்படி அடைவது என்பதை தீர்மானிப்பது அந்த நாட்டு மக்கள். இதனால் எவ்வாறு 1979 இஸ்லாமிய புரட்சிக்கு மாணவர்கள், இடதுசாரிகள், கலை இலக்கிய படைப்பாளிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் ….. இன்னும் மக்கள் பங்களிப்பு செய்தார்களோ, அதே போன்று, கடந்த 45 ஆண்டுகால அவதானிப்புகள், அனுபவங்களின் அடிப்படையில் அந்த இறுக்கமான கட்டமைப்பில் இருந்து சமகால உலக ஒழுங்கிற்கான ஒரு மாற்றத்தை வேண்டி போராட்டங்களை மேற்கொண்டனர். அன்றைய புரட்சிக்காலத்தில் இருந்த, மக்களால் வெறுக்கப்பட்ட மேற்குலக வாழ்வியல் கலாச்சாரத்தை, மேற்குலக மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள், பெண்கள் உரிமைகள், தனிமனித கருத்து சுதந்திரம்….. போன்றவற்றை அவர்களின் போராட்டம் வேண்டி நிற்கின்றது. இது வெறுமனே மேற்குலக எதிர்ப்பு, இஸ்லாமிய மத விழுமியங்களால் மட்டும் மக்கள் ஆட்சி ஒன்றை நிலைக்க வைக்க முடியாது என்பதை காட்டுகிறது.
அதற்காக 1979 இஸ்லாமிய புரட்சி ஈரானின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை குறைத்து மதிப்பிடுவதாக கொள்ளத் தேவையில்லை. புரட்சிக்கு பின்னர் கல்வி, சுகாதாரத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டதன் விளைவை அந்த நாடு அனுபவிக்கிறது. 93 வீதமானோர் எழுத்தறிவுள்ளவர்கள். பல்கலைக்கழகங்களில் பெண்கள் 60 வீதம். இந்த வளர்ச்சியூடான வேலையின்மை மற்றும் பணவீக்கம், நாணய பெறுமதியின் வீழ்ச்சி, ஊழல், சுதந்திரமின்மைக்கு எதிராக இளையதலைமுறை போராட்டம் செய்தனர். இதற்காக ஜனநாயக விழுமியங்களை காலால் மிதித்து ஜனநாயகத்தை மீளுருவாக்கம் செய்கிறோம் என்ற அமெரிக்க – மேற்குலக சதியை கண்டும் காணாமல் இருக்க முடியாது.
மக்கள் போராட்டங்களை ஈரானிய இஸ்லாமிய அரசு ஒடுக்கிய விதம் ஏற்புடையதல்ல. ஈரான் சமூகம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது என்பதையும் மறைப்பதற்கில்லை. கடுமையான இறுக்கம் – விறைப்பு முறிவை ஏற்படுத்தும். அதுவே அண்மையில் ஈரானில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியாக அமைந்தது. அந்த எழுச்சி ஒரு ஆட்சி மாற்றத்தை கோருகிறது. அதை செய்ய வேண்டியது ஈரான் மக்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள் தங்கள் பொருளாதார, இராணுவ தேவைகளுக்காக பயன்படுதிக்கொள்வதை இலக்காக கொண்டு இறைமையுள்ள நாடொன்றின் மீது படையெடுப்பது ஆதிக்க சக்திகளின் வரலாற்று தவறாக தொடர்கிறது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா,….. இந்த தொடரில் வெனிசுவேலா இன்னும் அடுத்தது கியூபா என்று சர்வதேச ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஐரோப்பாவில் உக்ரைன், தென்கிழக்காசியாவில் தைவான் நிலைமைகளும் இந்த போக்கிற்கும், இலக்கிற்கும் மாறுபட்டவை அல்ல.
ஐக்கிய நாடுகளின் சக உறுப்பு நாடொன்றின் மீதான போர் நடவடிக்கைக்கு ஐ.நா. பிரகடனத்தின் படி அதன் அங்கீகாரம் தேவை. இந்த நடைமுறை இங்கு இஸ்ரேல்- அமெரிக்க கூட்டணியால் பின்பற்றப்படவில்லை. அமெரிக்க அரசியல் அமைப்பின் படி அமெரிக்க காங்கிரசின் அங்கீகாரம் தேவை. இதுவும் இடம்பெறவில்லை. ஒரு அமெரிக்க அரசியல் அமைப்பையும், ஐ.நா. பிரகடனத்தையும் வன்முறைக்குள்ளாக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையாக ஈரான் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் தானே முதலில் தாக்கிவிட்டு தற்பாதுகாப்பிற்காக தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரான் மீதான இந்த தாக்குதலை ஆரம்பித்ததே இஸ்ரேல்தான், அதைத்தொடர்ந்துதான் சில நிமிட இடைவெளியில் அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல்கள் ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான்கு, ஐந்து வாரங்களை குத்துமதிப்பாக கூறியுள்ளார். இந்த காலக்கெடுவை அமெரிக்க மட்டும் நிர்ணயிக்க முடியாது. மறுபக்கத்தில் ஈரானின் இராணுவ, அரசியல் பலம்/பலவீனமே அதைத் தீர்மானிக்கும்.
ஈரானுக்கு அதன் நட்பு வட்டத்தில் இருந்து வெளிப்படையான, நேரடியான உதவிகள் இதுவரை கிடைத்ததாக தெரியவில்லை. அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண்டிக்கும் அறிக்கைகளே வெளிவந்துள்ளன. ரஷ்யாவுக்கு உக்ரைன் யுத்தம் தொடர்பில் அமெரிக்க அழுத்தத்தை குறைக்க வேண்டிய சொந்த தேவை இருக்கிறது. டொனால்ட் டிரம்ப்புடன் மோதுவது ரஷ்யாவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்று அது நம்புகிறது. சீனாவும் வழமைபோல் தனது பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. சீனாவுக்கு எரிபொருள் வழங்கும் முக்கிய நாடுகளுள் ஈரானும் ஒன்று. அமெரிக்க வரிவிதிப்புக்குள் சிக்கியுள்ள சீனாவும் பொருளாதாரத்திற்கு சேதாரம் இல்லாமல் தப்பவே காய்களை நகர்த்துகிறது. வடகொரியாவின் ஆயத உதவி வார்த்தைகளை எந்தளவுக்கு நம்பலாம், அதன் தொழில்நுட்பம் அமெரிக்காவுக்கு ஈடுகொடுக்க கூடியதா? என்பது மறுகேள்வி. சிரியா, அசாத்துக்கு பின்னர் அமெரிக்க அதிபரின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது.
இது நாடுகளின் நிலை என்றால் ஈரானின் சுப்ரீம் தலைவரின் அரவணைப்பில் செயற்பட்ட ஹாமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈராக் ஆயுதக் குழுக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. இவை அனைத்தும் பாலஸ்தீன யுத்தத்தில் பெரும் இழப்புக்களை, மனிதவளம், ஆயுத செறிவு, இன்னும் சொன்னால் மக்கள் ஆதரவையும் இழந்து பலவீனமான நிலையில் உள்ளன. ஹிஸ்புல்லாவின் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை லெபனான் சட்டரீதியற்றவை என்று கூறியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணைகளில் இருந்து தான் தப்ப லெபனான் வழிதேடுவதை காட்டுகிறது.. மறு பக்கத்தில் அமெரிக்க நேசசக்திகளான வளைகுடா நாடுகளில் ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் மீதான அனுதாபம் குறைவடைந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. அமெரிக்க இராணுவ இலக்குகள் மட்டும் அன்றி, பொதுமக்களும் ஈரானின் ஏவுகணைகளில் பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணம். குவைற், சவூதி அரேபியா என்பனவற்றின் எதிர்ப்பை ஈரான் சம்பாதித்து விட்டது. உண்மையில் மத்திய கிழக்கில் ஈரான் இன்றைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றே கொள்ள வேண்டும்.
ஆனாலும், அமெரிக்காவும், எக்ஸைல் ஈரானியர்களும் எதிர்பார்க்கின்ற ஆட்சி வீழ்ச்சிக்கு இவை இன்னும் போதுமான நிபந்தனைகளை நிறைவு செய்வதாக இல்லை. பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து அரச தலைவர்களின் கருத்துக்கள் வழமைபோல் ஏகாதிபத்திய அத்துமீறலை தற்பாதுகாப்பாக நியாயப்படுத்துகின்றன. எனினும் பக்கச்சார்பற்ற மேற்குலக ஆய்வாளர்கள் ஈரானின் பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்பது அவர்களின் கருத்துக்களில் தெரிகிறது. ஜேர்மன் அலை (Deutsche welle) ஊடகத்தின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராணுவ ஆய்வாளர் ஒருவர் “ஈரான் வெனிசுவேலாவும் அல்ல, 2003 இன் ஈராக்கும் அல்ல” என்று கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா கணக்குப்போட்டுள்ள இராணுவ, அரசியல் இலக்குகளை எட்டுவது அவ்வளவுக்கு இலகுவானதாக அமையாது போகலாம்.
2025 யூன் மாதத்தில் “ஈரானின் அணுவாயுதங்களை முற்றாக அழித்துவிட்டோம்” என்று கூறிய டொனால்ட் டிரம்ப் இப்போது அங்கு எதைத் தேடுகிறார் என்று தெரிவித்துள்ளார். ஜோர்ஜ் புஷ் சதாம் ஹுசைனின் ஈராக்கில் அணுவாயுதம் தேடிய கதையையும், ஈராக், லிபியா தேசங்களை ஜனநாயக மீட்பு என்று கூறி இருந்ததையும் இல்லாமல் செய்து இருப்பதைப் உலகம் நினைவுகூரவேண்டிய சந்தர்ப்பம் இது. ஈரானில் நிபுணத்துவம் உள்ளது.யுரேனியத்தை பெறுவதற்கான வாய்ப்பும் அதற்கு இருக்கிறது. இதனால் இன்றைய தாக்குதல்கள் ஈரான் தன்னால் ஏவுகணைகளை சுயமாகத்தயாரிக்கமுடியும் என்பதை நிரூபிக்கின்றன. உண்மையில் ஓமான் மத்தியஸ்த பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா ஈரானிடம் முழுமையான ‘சரணடைவை’ கோரியது. அதை ஈரான் நிராகரித்தது. பேச்சு வார்த்தைக்கு சமாந்தரமாக, பேச்சுவார்த்தையை சாக்குபோக்கு காட்டி இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதலுக்கு பின் கதவால் தயாரிப்புக்களை செய்தன.
ஐரோப்பிய – மத்திய கிழக்கு இராணுவ ஆய்வாளர்களின் கூற்றுப்படி தரைப்படை நகர்வு இல்லாமல் ஈரானில் இராணுவ, அரசியல் கட்டமைப்புக்களை அழிக்கும் திறனை அமெரிக்கா அடையமுடியாது. இறுதிக்கட்டத்தில் அமெரிக்க – இஸ்ரரேல் படையினர் தற்கொலை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்க தவறவில்லை. ஆழமான அமைப்பு ரீதியான ஆட்சிச்சரிவின்றி அமெரிக்க கனவு சாத்தியமற்றது. ஈரானுக்குள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு வெகுஜனப்போராட்டம் நடந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இப் பதிவை நிறைவு செய்ய லிபியத் தலைவர் கடாபியின் மகள் ஆயிஷா கடாபி ஈரான் மக்களுக்கு விடுத்துள்ள போராட்ட அழைப்பில் உள்ள வாசகம் இது.
“ஒரு ஓநாயுடன் பேச்சு வார்த்தை நடாத்துவது ஆட்டைக் காப்பாற்றாது . அல்லது நிரந்தர அமைதியைக் கொண்டு வராது.அடுத்த வேளை உணவிற்கான நேரத்தை மட்டுமே குறிக்கும்”.
