— வீரகத்தி தனபாலசிங்கம் —
சென்னையில் கடந்த புதன்கிழமை தனது 101 வயதில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செய்து ‘தினமணி’ பத்திரிகை மறுநாள் எழுதிய ஆசிரிய தலையங்கத்துக்கு ‘இனி யாருண்டு இது போல…’ என்று தலைப்பிட்டிருந்தது. அவரின் மறைவுக்கு பிறகு பொதுவாழ்வில் நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக உலகில் உயிருடன் இருக்கும் எவரையாவது காட்டமுடியும் என்பது சந்தேகமே.
நல்லகண்ணுவின் மறைவு தமிழ்நாட்டு அரசியலில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு, கொள்கைப்பற்று மற்றும் சமூகநீதி மீதான நீடித்த பற்றுறுதி ஆகியவற்றினால் வரையறை செய்யப்பட்ட பொதுவாழ்வைக் கொண்ட — தனித்துவமான அடையாளச் சின்னங்களாக விளங்கிய ஒரு தலைமுறைத் தலைவர்களினால் வடிவமைக்கப்பட்ட ஒரு யுகத்தின் முடிவைக் குறித்து நிற்கிறது.
நல்லகண்ணு தமிழ்நாட்டில் தனது மார்க்சிய சமகாலத்தவரும் தோழருமான என். சங்கரையாவுக்கு பிறகு நூறு வருட வாழ்க்கையையும் பல தசாப்தகால அரசியல் வாழ்வையும் கொண்ட இரண்டாவது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவராவார். சங்கரையா அவரது 101 வயதில் 2023 ஆம் ஆண்டு காலமானார்.
நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை தார்மீக வெற்றிடத்தைக் கொண்டதாக விளங்கும் நவீன அரசியல் பரப்பில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கியது. பகட்டாரவாரமும் பணமும் அதிகார வேட்கையும் ஆக்கிரமித்து நிற்கும் ஒரு யுகத்தில் அவர் அரசியலில் எளிமை, ஔிவுமறைவற்ற தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையை நியாயப்படுத்திக் குரல்கொடுத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் நல்லகண்ணுவின் வாழ்வும் சமாந்தரமானவை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நல்லகண்ணு பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் தொண்டர்களினால் ‘தோழர் ஆர்.என்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட நல்லகண்ணுவின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவாகவும் அமைந்தமை அவரின் வாழ்வும் கம்யூனிஸ்ட் இயக்கமும் இணை பிரிக்கமுடியாதவை என்பதை காட்டியது.
பெரும்பாலும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் அனைவரையும் போன்று நல்லகண்ணுவின் அரசியல் வாழ்வும் சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் இயக்கத்திலும் தான் ஆரம்பித்தன. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பமும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பண்பும் நல்லகண்ணுவிடம் வளரத் தொடங்கியது.
அநீதிகளுக்கு எதிராகப் போராடும் இயல்புணர்ச்சி கொண்டவரான நல்லகண்ணுவினால் காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய முடியவில்லை. தூத்துக்குடியில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட அவர், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் 1943 ஆம் ஆண்டில் தனது 19 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார்.
தோழர் ஜீவாவின் உரைகளும் தொ.மு. சிதம்பர ரகுநாதனின் நட்பும் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் ஜீவாவின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாழிதளான ‘ஜனசக்தி’ யில் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமும் நல்லகண்ணுவுக்கு இருந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நேர்த்தியான பேச்சாளர். மக்களை உணர்ச்சிவசத்துக்கு உள்ளாக்காமல் முதிர்ச்சியை நோக்கி நகர்த்தும் வகையில் தான் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும்.
தொடக்க காலத்தில் மார்க்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ்ட் பிதாமகர்களின் நூல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஜவஹர்லால் நேருவின் நூல்களின் மூலமாகவே கம்யூனிஸட் இயக்கம் பற்றி அறிந்து கொண்டதாகவும் நல்லகண்ணு கூறியிருக்கிறார். அதே நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியை 1948 ஆம் ஆண்டில் தடை செய்தபோது நல்லகண்ணு தலைமறைவாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்த வேளையிலும் அவர் தலைமறைவாக இயங்கினார்.
தலைமறைவாக இருந்த வேளையில் கைது செய்ப்பட்ட நல்லகண்ணு பொலிசாரின் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானார். மற்றைய கம்யூனிஸ்ட் தோழர்கள் மறைந்திருந்த இடங்களை காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார்.
1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வந்தார்கள். அப்போது இந்தியா பூராவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட சதி வழக்குகளை இரத்துச் செய்யக்கோரிய போராட்டங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமடைந்தன.
வேறு வழியின்றி பெரும்பாலான சதி வழக்குகளை காங்கிரஸ் அரசாங்கம் மீளப்பெற்றது. அதன் விளைவாக நெல்லை சதிவழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நல்லகண்ணு மற்றும் பாலதண்டாயுதம் உட்பட. கம்யூனிஸ்டுகள் பலர் விடுதலையாகினர். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கும் நல்லகண்ணு மீது இருந்ததால் அவர் மேலும் ஐந்து வருடங்கள் சிறையில் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.
ஏழு வருடங்கள் சிறைவாழ்வுக்கு பின்னர் 1956 டிசம்பரில் மதுரை சிறையில் இருந்து விடுதலையான நல்லகண்ணு முன்னரை விடவும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஒருவரின் மகளானா பள்ளி ஆசிரியர் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சாதிக்கலப்பு திருமணமாகும்.
இந்திய — சீனப்போர் மற்றும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையிலான தத்துவார்த்தப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுபட்டபோது பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தவர்களுடன் நல்லகண்ணு செல்லவில்லை. 1992 ஆம் ஆண்டில் இருந்து. மூன்று பதவிக் காலங்களுக்கு மொத்தமாக 13 வருடங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நல்லகண்ணு பணியாற்றினார்.
அறுபது வருடங்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இனிமேலும் பொருத்தமற்றவை என்று நம்பிய நல்லகண்ணு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைப்பதற்கு கடுமமையாகப் பாடுபட்டார்.ஆனால், அவரின் வாழ்நாளில் அது சாத்தியமாகவில்லை.
சிக்கனத்துடன் கூட சீராக வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டிய நல்லகண்ணு சமூகத்தின் நலன்களுக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் தான் முன்னுரிமை அளித்தார். தனது அரசியல் நடவடிக்கைகளினால் மனைவிக்கும் மகள்மாருக்கும் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக குடும்பத்தில் இருந்து அவர் விலகியிருந்த நாட்களும் உண்டு.
தனது கோட்பாட்டின் மீது வலிமையான பற்றுறுதி கொண்டவரான நல்லகண்ணு மிகவும் எளிமையான மனிதர். மென்மையான சுபாவம் கொண்டவர். அதிகாரத்துக்கும் சொத்துக்கும் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை.
தமிழ்நாடு அரசாங்கம் நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டில் ‘தகைசால் தமிழர் ‘ விருதை வழங்கிக் கௌரவித்த போது 15 இலட்சம் ரூபா பணப்பரிசும் கொடுக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கினாரே தவிர, வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் நல்லகண்ணுவுக்கு ஒரு கோடி ரூபாவையும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கிய போது அவற்றை அவர் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டார்.
சென்னையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட அளவான வீடு ஒன்றுக்கு 5,700. ரூபா வாடகை செலுத்தி வாழ்ந்துவந்த நல்லகண்ணுவின் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு
வழங்கிய 2,500 ரூபா சம்பளத்திலும் மனைவியின் 4,500 ரூபா ஓய்வூதியத்திலும் வாழ்க்கையை நடத்தியது. சிக்கனத்தை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடு ஒன்று இல்லாமல் சமூக மாற்றம் இடம்பெற முடியாது என்பதில் அவர் உறதியான நம்பிக்கை கொண்டவர். சமரசமற்ற நேர்மைக்கு பிரகாசமான உதாரணமாக அவர் விளங்கினார்.
சென்னை தியாகராஜ நகரில் நல்லகண்ணு வாடகைக்கு வசித்துவந்த வீட்டின் கட்டிடத் தொகுதியை இடித்து புதிதாக நிர்மாணம் செய்வதற்காக அங்கிருந்து வெளியேறுமாறு 2019 மே மாதம் மாநில அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொண்டது. அப்போது மனைவியை மூன்று வருடங்களுக்கு முன்னர் இழந்த அவர் அமைதியாக அங்கிருந்து வெளியேறி சென்னையில் வேறு பகுதியில் வாழ்ந்த ஒரு மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் கடுமையான கண்டங்கள் கிளம்பின.
அது குறித்து செய்தியாளர்கள் நல்லகண்ணுவிடம் கேட்டபோது வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது வேதனைக்குரியது என்ற போதிலும், இன்னொரு வீட்டை தனக்கு அரசாங்கம் ஒதுக்கித் தராததால் பிரச்சினை எதுவுமில்லை என்று பதிலளித்தார்.
ஆனால், தன்னைப் போன்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட காலஞ்சென்ற காங்கிரஸ் அமைச்சர் பி. கக்கனின் குடும்பத்தவர்களுக்கு மாற்று வீடு ஒன்றை வழங்குமாறு நல்லகண்ணு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். பொதுவாழ்வில் சுயநலமின்றி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அந்த விவகாரத்தை அவர் கையாண்ட முறை ஒரு சிறந்த உதாரணம்.
ஆனால், இத்தகைய அர்ப்பணிப்புச் சிந்தையுடைய — வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக பாடுபட்ட நல்லகண்ணுவை தமிழ்நாட்டு மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில சட்டசபைக்கோ ஒருபோதும் தெரிவு செய்யவில்லை.
அவரது உடலை குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சிக்காக கையளித்தனர். உயிரோடிருந்தபோது மக்களுக்கு ஒரு பாடமாக விளங்கிய நல்லகண்ணு இறந்த பின்னரும் மருத்துவ மாணவர்களுக்கு பாடமாக அமையப் போகிறார்.
மகாத்மா காந்தி இறந்த போது அல்பேர்ட் அயன்ஸ்டீன் “எலும்புடனும் சதையுடனும் இவ்வாறு ஒரு உருவம் உலகில் நடமாடியது என்று சொன்னால் எதிர்காலச் சந்ததிகள் நம்ப மறுக்கும்” என்று சொன்னார். நல்லகண்ணு விடயத்திலும் அதுவே உண்மை.
