சுரேஷ்  சாலே: சட்டத்தின் ஆட்சிதனை சூது கவ்வும்..?(மூன்றாவது கண்: IX)

சுரேஷ்  சாலே: சட்டத்தின் ஆட்சிதனை சூது கவ்வும்..?(மூன்றாவது கண்: IX)

— அழகு குணசீலன் —

இலங்கையின் சட்டம், நீதி நிர்வாகம் குறித்து அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகள் சுதந்திரமான நீதித்துறை நிர்வாகச் செயற்பாட்டை விரும்பும் ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை அளிப்பதாகவும், அரசியல் தலையீடுகள் குறித்த கவலைகளை அதிகம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

சட்டம் தன் கடமையை செய்யும்……………….,

சட்டத்தின் முன் அனைவரும் சமம்…………..,

சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை…….,  என்ற கோஷங்களுக்கும் மேலாக “சட்டம் ஒரு இருட்டறை” என்பதற்கு வலுச் சேர்ப்பனவாக இவை அமைந்திருப்பதை கவனத்தில் கொள்ள முடியும்.

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுகின்ற ஓய்வு பெற்ற முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் கைதானது   குண்டுவெடிப்புச்சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கடந்தும், என்.பி.பி. அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் பின்னர் இடம்பெற்றுள்ளது.  சுரேஷ் சாலேயின்  பெயர் இத்தாக்குதலில் முதல் நாளில் இருந்தே பேசப்பட்ட போதும், புலானாய்வுத்துறையின் காலடியில் இருந்த அவரை கைது செய்யவில்லை.

அவரது கைதுக்கு பின்னர் இதுவரை எதுவும் புதிதாக வெளிவரவில்லை. 72 மணித்தியாலங்களுக்கு பின்னர் எதிர்பார்க்கப்பட்டபடி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்  கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளார். அரசாங்க ஆதரவு சமூக ஊடகப்போராளிகள் ஒரு வருடமாகத்தகவல்கள் திரட்டப்பட்டு இக்கைது இடம்பெற்றதாக கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கைது செய்யப்பட்டபோது அந்த கைது நடவடிக்கையை இவர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதலோடு முடிச்சுப்போட்டார்கள். ஆனால் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டது காணாமல் ஆக்கப்பட்ட ரவீந்திரநாத் தொடர்பான சந்தேகத்தில் என்பது தெரியவந்ததும் அடங்கிப்போனார்கள்.

இலங்கையின் இந்த களநிலை ஜதார்த்தம் சட்டம், நீதி, நிர்வாகம் குறித்த சுதந்திரமான செயற்பாட்டை மேற்குறிப்பிட்ட கோஷங்களின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. இடம் பெறும் கைதுகள் நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு, காலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. பிள்ளையான் பாராளுமன்ற பொதுத் தேர்தல் காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்தக் கைது ஜனாதிபதி, 2025 ஈஸ்டர் காலத்தில் தாக்குதல் சூத்திரதாரியை அடையாளம் காட்டுவோம் என்ற பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு உறுதியளித்த காலக்கெடுவுக்காக மேற்கொள்ளப்பட்டது என்றே கருதப்பட்டது. இறுதியில் எதுவும் நடக்கவில்லை, அவர் வேறு ஒரு வழக்கின் சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவானது.

இப்போது ஒருவடத்திற்கு பின்னர் அடுத்த ஈஸ்டர் பெருநாள் வருகிறது. அதற்கு முன்னர் ஏதாவது செய்து,  ஜனாதிபதியின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு  இருக்கிறது. அரசாங்கத்தின்  வெளிப்படைத்தன்மையற்ற   ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை மறைப்பதற்காக மற்றோரு கைது இடம்பெற்றுள்ளது  என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. இவர்களில் சிங்கள, பௌத்த பேரினவாத தேசியவாதிகள் முக்கியமானவர்கள்.

இங்கு சுரேஷ் சாலே கைது செய்யப்பட்ட காலம் முக்கியமானது.

ஏப்ரல் 19, 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பல மர்மங்கள் இன்னும் துலக்கப்படவில்லை. புலனாய்வுத்துறை விசாரணை, ஜனாதிபதி ஆணைக்குழு, வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள், தற்போது இடம் பெறும் மீள் விசாரணைகள் என்று ஒன்றுக்கொன்று முரணான விசாரணைகளும், செயற்பாடுகளுமே ஏழு வருடங்களாக தொடர்கின்றன. இதற்கு காரணம் ஆட்சியில் இருந்த தலைமைகள்  தங்களுக்கு வேண்டியவர்களை விடுவித்தும், வேண்டாதவர்களை மாட்டியும் விடுகின்ற  கட்சி அரசியலே. 

பயங்கரவாத தாக்குதலில்  தொடர்பு பட்ட சந்தேகநபர் சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் இறந்தபின் தப்பினாரா? தப்பியபின் இறந்தாரா என்று புலனாய்வுத்துறை முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறதே அன்றி உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. 

ஏப்ரல் 26, 2019 சாய்ந்த மருதுவில் வீடொன்றில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் சாரா இறந்ததாக கூறப்பட்டது. முதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக ஆரம்ப அறிக்கை கூறிய போதும் ஏப்ரல் 30, 2019 நீதிமன்றத்தில் 17 பேர் என்று மாற்றப்பட்டது.  அப்போது கிழக்குமாகாண இராணுவத்தளபதியாக. இருந்தவர் இன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர். சாராவின் மரணம்/ வாழ்வு பற்றி இந்த அமைசர் விசரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசாங்கத்தின் காதுகளில் விழவில்லை.

சாரா இந்தியாவில் இருக்கிறார் என்று எதிர்கட்சியினர் கூறும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவும்  சாரா இறக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனாலும் இன்னும் இவை இலங்கை புலனாய்வுத்துறைக்கு எட்டாதவையாகவே உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்த அந்த ‘பெரும் சக்தியுடன்’ மோத இலங்கை அரசாங்கம் தயங்குவதால் வீட்டுக்காரரை வெளியில் தப்பவிட்டு பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்யும் வழமையான பாணியில் காரியங்கள் இடம்பெறுகின்றனவா? என்று கேட்கவேண்டியுள்ளது.  

இது விடயத்தில் ஒரு சக்திவாய்ந்த மறைகரம் பற்றி ஆரம்பம் முதல் இன்றுவரை பேசப்படுகிறது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பேராயர் மல்கம் ரஞ்சித், ரவி செனவிரத்ன, ஷானி அமரசேகர உள்ளிட்டோர் “அபுஹிந்த்” மர்மமனிதர்/ மர்ம குரல் தொடர்பாக சாட்சியமளித்துள்ளனர்.  இந்த ரவி மற்றும் ஷானி இருவரும் இன்றைய புலனாய்வுத்துறையின் ஜாம்பவான்கள். அவர்களின் உத்தரவுப் படியே சுரேஷ் சாலே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால்  இந்த இருவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கிறது அநுர அரசாங்கம். கள்வனைப் பிடித்து விதானை வேலை கொடுத்த கதை. தற்போது இந்த மர்மமனிதர் கதை பழங்கதையாகிவிட்டது.

2019 இல் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ தனக்கு தெரிந்த விசாரணை ஆதாரங்களின் படி தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருந்ததாக பி.பி.சி. பேட்டியொன்றில் தெரிவித்தாக த ஐலன்ட்  ஆங்கில நாளிதழ்  குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் மறைகரம் வெளிப்படுத்தப்படாத நிலையில் இதற்கான நீதி கிடைக்கப்போவதில்லை.  இந்த கருத்துக்காக நளிந்த் ஜெயதிஸ்ஸ சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு, அவருக்கு தெரிந்த ஆதாரங்கள் பற்றி இன்னும் விசாரிக்கப்படவில்லை. சாரா சாய்ந்த மருதுவில் கொல்லப்படவில்லை உயிருடன் இருக்கிறார் என்று கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அது அவருக்கு எப்படி தெரியும், என்ன ஆதாரம் என்று விசாரிக்கப்படவில்லை. இன்றைய பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சரும், பிரதி அமைச்சரும் சாரா கொல்லப்பட்டார் என்றும், உயிருடன் இருக்கிறார் என்றும் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரங்களில் சுரேஸ் சாலே தொடர்புபட்டிருக்க முடியும் என்ற சந்தேகத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இனியாவது விவகாரம் வெளிச்சத்திற்கு வருமா என்பது விரைவில் தெரிந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை.   இன்னும் ஏதாவது ஒரு அதிரடி அடுத்த 2027, ஈஸ்டர் நெருங்கும் போதுதான் நமது புலனாய்வுத்துறையால் காட்சிப்படுத்தப்படலாம். இந்த நிலையில் முக்கிய சாட்சியமாக சுரேஷ் சாலே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுயாதீன நீதிச்செயற்பாட்டில் தலையிட்டு எதிர்த்தரப்பினர் பாதிக்கபட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்கு குறுக்கே நிற்காமல் இருப்பது சகலதரப்பிற்கும் நல்லது என்று கொழும்பு பாதிரியார் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஒருவகையில் இந்த ஆதங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், இந்த கைதுகளின் பின்னணியில் உள்ள கட்சி அரசியல், மற்றும் அரசாங்க செயற்பாடுகளும் இதற்கு தடையாகவே உள்ளன. விசாரணைகள்  ஒரு பகுதியை தவிர்த்து, ஒரு பகுதியை மட்டும் முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படும் போது  எதிர்பார்கப்படும் நீதி முழுமையானதாக  இருக்க வாய்ப்பில்லை.

என்.பி.பி. அரசாங்கத்தின்  அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இது குறித்து மிகவும் கண்டிப்பான கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. குற்றச் செயல்களோடு தொடர்பு பட்டவர்கள் என்ற பெயரில் அதுவும் முக்கிய புள்ளிகளை காலம் தாழ்த்தியாவது காத்திருந்து கைது செய்வதன் மூலம் பயங்கரவாத சட்டம் ஒன்று தேவை என்பதை அரசாங்கம் நியாயப்படுத்த ஏன்? சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருக்க முடியாது?

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழு  சந்திப்புகள் நடக்கின்ற இந்த சுழலில்  புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை மட்டும் அன்றி, உள்ளகப் பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்துகிறது.  குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பதை வெளிக்காட்டவும் இந்த கைது இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் இந்த சட்ட நடைமுறையை படைகளுக்கு எதிராக பயன்படுத்த அரசாங்கம் தயாராய் இல்லை. அது மட்டும் அல்லாமல் இது விடயத்தில் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோருவது போன்று, போர்க்குற்றங்களுக்கும் நீதிகோர பேராயர் மல்கம் ரஞ்சித்தும், அவரது கூட்டமும் தயாரில்லை. இவ்வாறான தெரிவு செய்யப்பட்ட செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் நீதித்துறை செயற்பாடுகளில்  அரசியல் இலாபம் இல்லை என்பதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. 

மாகாணசபை சபைகளை எந்த முறையில் நடாத்துவது என்பதை கண்டறிவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவும் ஜெனிவாவை முன்னிட்டே அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியா மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படவேண்டிய அவசியத்தை ஜெனிவா கூட்டத்தொடரில் வலியுறுத்தி இருந்தது.  மாகாணசபை சபை தேர்தலை எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வந்த அரசாங்கம்   தெரிவுக்குழுவை அமைத்ததற்கும் ஜெனிவா கூட்டத்தொடர் தான் காரணம். இந்த தெரிவுக்குழு கூட்டங்களை காட்டியே ஜெனிவா கூட்டத்தொடரில் இருந்து தப்பிக்க அமைச்சர் விஜய ஹேரத்திற்கும், அதிகாரிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதுவரை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. உண்மையில் சுரேஷ் சாலேக்கு இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்து இருந்தால் அது ரவி செனவிரத்ன, ஷானி அபயசேகரவுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு . அதனால்தான் ஜனாதிபதி ஆணைக்குழு அவர்கள் மீது வழக்குதாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் கட்சி அரசியல் சார்புத்தன்மை காரணமாக இவை எவையும் நடக்கவில்லை.

இருட்டறைக்குள் நீதியை தேடுவதானால் அதற்கு முதலில் வெளிச்சம் தேவை. இந்த நிபந்தனைகளை நிறைவு செய்யப்படாத வரை அநுர அரசாங்கம் அல்ல எந்த அரசாங்கம் என்றாலும் ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதாகவே அமையும். இதுதான் அன்றும் நடந்தது….. இன்றும் நடக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *