“ஜல்லிக்கட்டு—கிளர்ச்சி எனும் சூழ்ச்சி”. -தேன்வதையின்  சுவையும் கிறக்கமும் தரும் ஓர் நூல்

“ஜல்லிக்கட்டு—கிளர்ச்சி எனும் சூழ்ச்சி”. -தேன்வதையின்  சுவையும் கிறக்கமும் தரும் ஓர் நூல்

— பேராசிரியர் சி. மௌனகுரு —

அறிமுகம்:

நண்பரும் சக ஆய்வாளருமான பேராசிரியர் தர்மராஜன் எழுதிய  “ஜல்லிக்கட்டு- கிளர்ச்சி எனும் சூழ்ச்சி” எனும் நூல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் என் கையில் கிடைத்தது.

நண்பர் பால சுகுமார் மூலமாக அவர் எனக்கு ஒரு மாதத்திற்கு முதல் அனுப்பிய இந்த நூல் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் கையில் கிடைத்தது. முதலில் இந்த இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

நூலை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். 

  1. ஆடிப்பெருக்கு கிளர்ச்சியின் சூத்திரம்
  1. தற்செயலும் வரலாறும் –காளையின் வம்சாவளி
  1. காளை அரசியல்
  1. பண்பாட்டுப் பதட்டம்
  1. முதலீட்டியமும் நாட்டுப்புற இயலும்

எனும் ஐந்து தலைப்புகளின் கீழ் அவ்வப்போது  ஜல்லிக்கட்டு  சம்பந்தமாக அவர் எழுதிய பெரும் பெரும் கட்டுரைகள்  ஒருசேரத் தொக்குக்கப்பட்டு  ஒரு பெரு நூலாக  வந்திருக்கிறது. 417 பக்கம் கொண்ட இந்த நூல் வெகு அழகாக  வடிவமைக்கப்பட்டு,  கண்ணைக் கவர்கிறது.

நான் நூல் வாசிக்கும் முறையை  அல்லது ஒரு கலையை  அணுகும் முறையை  முதலில்  கூற வேண்டும்.  ஆசிரியர் வழி சென்று அந்த நூலை அல்லது கலைப்படைப்பை அணுகுதல் முதல் வழி,  பின்னர் அதனை நம் அறிவுக்கு ஏற்ப விமர்சன ரீதியாக அணுகுதல் இன்னொரு வழி.

 இங்கே முதல் வாசிப்பில் நான்பெற்ற  அனுபவத்தையையே பதிந்து  கொள்கிறேன்.

 ஆடிப்பெருக்கு கிளர்ச்சியின் சூத்திரம் எனும் கட்டுரை:

————————————

இப்போதுதான்  நூலின்  முதல்   கட்டுரையான ஆடிப்பெருக்கு- கிளர்ச்சியின் சூத்திரம் எனும் அந்த பெரிய கட்டுரையை வாசித்து முடித்தேன்.

ஜல்லிக்கட்டினை  வெறும் விளையாட்டாக இல்லாமல் பழங்கால தமிழ் சமூகத்தின் கருத்து மதிப்பீடுகள் மற்றும் சமூக உறவுகளின் அமைப்பு ஆகியவற்றை விளக்க உதவும் ஆய்வுச்சூத்திரமாக எடுத்துக்காட்டுகிற  சிக்கலான  ஒரு சிந்தனைக் கட்டமைப்பு  இந்தக் கட்டுரை  எனலாம்.

ஜல்லிக்கட்டை ஒரு சமூகப் பனுவலாக  வைத்து முழுத் தமிழ்ச் சமூகத்தையும்   அந்நிகழ்வு மூலம்  வாசித்து அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின்  அசைவியக்கத்தையும் அவர் புரிந்து கொள்ள முயன்றுள்ளார் எனலாம். 

ஜல்லிக்கட்டை புரிதல்:

 முதலில் இந்த  ஜல்லிக்கட்டு  என்பதனைப்  புரிந்து கொள்வோம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு கிராமிய காளை விளையாட்டு. இது பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும். முக்கியமாக “மாட்டுப் பொங்கல்” நாளில்   நடக்கிறது.

 பெயரின் பொருள்“ஜல்லி”   என்பது = நாணயம்.  “சல்லி”  என  பேச்சு வழக்கில் அதனைக்  கூறுவோம்,  “கட்டு”   என்பது  = கட்டுதல்

அதாவது நாணயத்தைக் கட்டுதல் என்பதாகும். 

முன்னாளில்  காளையின் கொம்பில் நாணயம் கட்டப்பட்டது, திமிறிகொண்டோடும் காளை மாட்டின் கொம்பில் இருந்து இந்த  நாணய  முடிச்சை அவிழ்த்தல் இலகுவான  காரியமா?

முதலில்  தைரியம்  வேண்டும்.  அடுத்து ஒரு துணிவு வேண்டும்.  அதற்கு  மிகுந்த  உடல்  பலம் வேண்டும்.  காளையின் இயல்பு  அறிய வேணும். விளையாட்டு  நுணுக்கமும்  தெரிய  வேண்டும். அப்போதுதான் காளையை  அடக்கிப்  பரிசு பெறலாம்.  

கொல் ஏறு தழுவுதல் என்று நம் முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.

 ஜல்லிக்கட்டு  தமிழ் நாட்டில்  மதுரை, புதுக்கோட்டை,  திருச்சி,   திண்டுக்கல்  ஆகிய இடங்களிலும், முக்கியமாக  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்  ஆகிய  கிராமங்களிலும் நடைபெறுகின்றன  என அறிகிறோம்.

இவை “ஜல்லிக்கட்டு மையங்கள்” எனக் கருதப்படுகின்றன.

 இது முக்கியமாக தேவர் சமூகங்கள்(மறவர், கள்ளர், அகமுடையார்)சில பகுதிகளில் முத்தரையர், சில இடங்களில் யாதவர்  ஆகிய  சமூகங்களால்  நடத்தப்படுகின்றன. 

இவர்கள் நில உரிமை மற்றும் கிராமிய ஆதிக்க அமைப்புடன் தொடர்புடையவர்கள். இதனால் சில ஆய்வாளர்கள் “ஜல்லிக்கட்டு” என்பது “பொது தமிழர் விளையாட்டு” மட்டுமல்ல.“கிராமிய ஆதிக்க சாதி மரபு” ஆகவும் உள்ளது” என்கிறாரக்ள்

இந்தக்  காளை  மடக்கும் விளையாட்டுக்கு  ஒரு  பரிணாம  வளச்சியும் உண்டு. 

சங்க இலக்கியத்தில் “எருது பிடித்தல்” குறிப்பு உள்ளது.  அதுதான் கொல் ஏறு தழுவுதல். 

ஆனால் இன்றைய வடிவம் காலப்போக்கில் மாறியுள்ளது.

காளை என்பது ஆண் வலிமையின் குறியீடு, நில உரிமையின் சின்னம். 

குடும்ப கௌரவத்தின் அடையாளம். அதனால் இது சமூக அந்தஸ்துடன் இணைந்தது.

பெண் இதில் வெறும் பார்வையாளாரே. விழிம்பு நிலைச்சாதியினர் மத்தியில் இது இல்லை என்றே  நினைக்கிறேன். அவர்களும் பாரவையார்களே  என்பது எனது புரிதல். பின்னால் அது முழுத் தமிழர் பண்பாடாக  மாறியது.    

1990களுக்குப் பின் ஜல்லிக்கட்டு “கிராமிய விழா” என்ற நிலையைத் தாண்டியது. அது “தமிழர் அடையாளச் சின்னம்” ஆனது.

2000களில் விலங்கு நல அமைப்புகள்  இதற்கு  எதிர்ப்புத் தெரிவித்தன.

முக்கியமாக:People for the Ethical Treatment of Animals (PETA) இதனை எதிர்த்தது. 

அவர்கள் வாதம், இந்த  விளையாட்டில்  காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. வன்முறை அதிகம்  என்பதாகும். 

இதற்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றம் சென்றன. 

2014ல் ஜல்லிக்கட்டுக்கு  தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைவிதிப்பை அரசியலாக்கினர் சிலர்.  

“தமிழர் உரிமை மீறப்படுகிறது, தமிழர் பண்பாட்டுக்கான  தடை  போடப்படுகிறது” என இதற்கு  அரசியல் அர்த்தம் கொடுக்கப்பட்டது. மக்களுக்கு உணர்ச்சியூட்டப்பட்டது. ஜல்லிக்கட்டு  தமிழர் தேசிய உணர்வுடன் இணைக்கப்பட்டது.

தமிழ் தேசிய அரசியலில் முன்பே இருந்த கோஷங்களான மொழிப்பாதுகாப்பு,  காவிரி நீர்ப்பிரச்சனை, ஈழப் பிரச்சினை, மத்திய அரசின் புறக்கணிப்பு   என்பனவற்றோடு ஜல்லிக்கட்டும் இணைக்கப்பட்டது.

“நாம்  அனைவரும்  தமிழர் என்ற உணர்வும் தமிழ்ப் பண்பாடு ஆபத்தில்  சிக்கியுள்ளது, அதனை மீட்க வேண்டும் என்ற வாசகமும்”      சாதிகள்  கடந்து இளைஞர்களை ஈர்த்தன.

கிராமிய விளையாட்டுகளில்  இது மெல்ல  மெல்ல இடம்பெற ஆரம்பித்தது.  எனினும் தடை நீடித்தது. 

2016 இறுதியில் தமிழக அரசியல் நிலை சீர்குலைந்திருந்தது. ஜெயலலிதா மறைவு நடந்திருந்தது. அரசியல் குழப்ப  நிலையில் இருந்தது. நிலையற்ற ஆட்சி  நிலவியது.  

இதனால் ஜல்லிக்கட்டு  தடை   மேலும் நீடித்தது.

இவை எல்லாவற்றையும் மீறி 2017 இல் இது ஒரு வெகுஜன இயக்கமாகியது. 

சமூக ஊடகங்களும் ஜல்லிக்கட்டும்: 

சமூக ஊடகங்கள் இதனைக் கையில் எடுத்தன. முகநூல், வாட்ஸ் அப், ருவிற்றர் ஆகியவை   எழுச்சியின் முதுகெலும்பு ஆயின.

மக்கள் தாமாகச் சேர்ந்தனர். சென்னை மெரினா கடற்கரை முக்கிய மையம் ஆகியது. இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடினர்.

இளைஞர்கள் ஈர்க்கப்பட்டமைக்குப் பல காரணங்கள் உண்டு. அந்தத்காலத்தில் வேலைவாய்ப்பு நெருக்கடி, நீட்  பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, மத்திய அரசுக்கு எதிர்ப்பு உணர்வு என எல்லாம் குவிந்திருந்தன. ஜல்லிக்கட்டு

ஒரு “வெடிப்பு புள்ளி” ஆனது. இது  ஒரு பெரும் மக்கள் போராட்டமாகியது.  

அப்பெரும் மக்கள் எழுச்சி  அடக்கப்பட்ட விதமும் அது  திசைமாறிய  விதமும ஓர் ஆய்வாளனுக்குரிய முக்கியமான கருப்பொருள்கள்  ஆயின. 

ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய  இந்தப் போராட்டம் பின்னர்; அரசியல் கட்சிகள் இணைந்ததனாலும் அதில்  எழுப்பப்பட்ட  பிரிவினைக்   கோஷங்களாலும்  சில இடங்களில் வன்முறை  நடந்தமையினாலும் அரசு தலையிட வேண்டி வந்தது. 

இறுதியில் போலீஸ் தலையீடு.  நடந்தது. போராட்டக்கார்களைத் துரத்தித் துரத்தி  பொலீஸார் தாக்கினர். மெரினா கடற்கரை  அல்லோல கல்லோலப்பட்டது மெரினாவில்  எழுந்த இந்த மக்கள் எழுச்சி  வன்முறையினால் கொடூரமாக  அடக்கப்பட்டது. போராட்டம் கலைந்தது.

போராட்டம் திசை மாறியது அல்லது திசைமாற வைக்கப்பட்டது என்பர். 

 2017 ஜல்லிக்கட்டு போராட்டம்:

 மெரினா கடற்கரையில்  உருவான  இந்த  ஜல்லிக்கட்டு  போராட்டம் மெல்ல மெல்ல ஒரு மக்கள் எழுச்சியாக மாறியபோது  அதனைப் பலர் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாகவும் பண்பாட்டு உரிமைப் போராட்டமாகவும் இளைஞர்களின் அரசியல் அற்ற தன்னார்வ  எழுச்சியாகவும் பாராட்டினார்கள் என்பதை நான் பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்டேன். 

 தர்மராஜ்   இந்த நூலில் இதனை நோக்கும் முறை: 

ஆனால் தர்மராஜ் இந்த எழுச்சியை வேறுபட்ட கோணத்திலே பார்க்கிறார்.    அவர் கிளர்ச்சி என தோன்றிய ஒன்று பல அடுக்குகளின் சூழ்ச்சியாக இயங்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். 

அவர் எழுப்புகின்ற முக்கியமான கேள்விகள்-

 1. இது உண்மையிலேயே ஒரு தன்னிச்சையான எழுச்சிதானா அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமா என்பது. 

 2. இந்த எழுச்சிக்குப் பின்னால் இருந்த அரசியல் அமைப்புகள் சக்திகள் யார், இதனால் யார் நன்மை  அடைந்தனர் என்று அவர் வாதிக்கிறார். 

 3. இதுக்குள்ளே ஒரு சாதி அரசியலை அவர் காண முயற்சிக்கிறார். 

 4. ஜல்லிக்கட்டு என்பது பொதுவாக தமிழர் பண்பாடு என சொல்லப்படுகின்ற போதிலும் அது குறிப்பிட்டு சமூகங்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையதா  என்றும்  கிராமிய சாதி ஆதிக்க அமைப்புகளுடன் உள்ள  தொடர்பு என்ன எனவும் தமிழர் உரிமை என்ற பெயரில் சாதி அடுக்குகள் மறைக்கப்பட்டன என்பதெல்லாம் அவர் எழுப்புகின்ற கேள்விகளாகும். 

  1. பண்பாடு என்று சொல்லை விமர்சன ரீதியாக அணுகுகிறார். 

தமிழ் தேசியவாத அரசியல் இதில் எப்படி வந்தது என்று அவர் மதிப்பிடுகிறார்.  ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு பரந்த தமிழர் அடையாள இயக்கமாக மாற்றப்பட்டது. 

ஒருவகையில் இது வட இந்திய மத்திய அரசுக்கு எதிரான உணர்வோடு அமைக்கப்பட்டது,  தமிழர் தனித்தன்மை என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இதற்கு பிராந்திய அரசியல் கட்சிகளின் மறைமுகமான பங்களிப்பு இருந்தது, இவை அனைத்தும் ஒரே கோட்டில் இணைக்கப்பட்ட விதத்தை அவர் இந்த கட்டுரையிலே பகுப்பாய்வு செய்திருக்கிறார். 

6. இந்தப் போராட்டத்தில்  PETA

போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அது தமிழர் மீது தாக்குதல் என மாற்றிக் காட்டப்பட்டது. உலகளாவிய விளங்க உரிமை உரையாடலை அந்நிய சதி என பலர் பாவம் செய்த விதம் குறித்து அவர் விவாதிக்கிறார்

 7. கிளர்ச்சி, சூழ்ச்சி என்ற இரட்டை உருவம் அவர் பிரித்துக் காட்டுகையில் அதாவது நூலின் தலைப்பே அவரது சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

கிளர்ச்சி என்பது அடக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி. சூழ்ச்சி என்பது  திட்டமிட்ட அரசியல்  திசை மாற்றம். 

தர்மராஜ் இந்த இடத்தில் ஒரு மக்கள் உணர்ச்சி உண்மையானதாக இருந்தாலும் அதை அரசியல் சக்திகள் தங்கள் நலனுக்காக வடிவமைக்கலாம் என்று கருத்தை வைக்கிறார். 

 இந்தக் கட்டுரை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விமர்சிக்கிறது. அதேசமயம் உணர்ச்சி, எழுச்சியை முழுவதுமாக மறுக்கவில்லை. 

கூட்டுத் தீர்மானம் மற்றும் கூட்டு தவறான முயற்சி இரண்டிற்கும் இடையிலான எல்லையை ஆராய்கிறது. 

தமிழ் சமூகத்தில் பரவலாக கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்வை விமர்சனமாக இது படிக்கிறது. 

இந்நூல் சர்ச்சையையும் விவாதத்தையும் நிச்சயம் உருவாக்கும். ஒரு ஆய்வின் சிறப்பே அது சர்ச்சையையும்  விவாதத்தையும் உருவாக்கும் பண்புதான். 

சுருங்கச் சொன்னால் ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் இந்த கட்டுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தை சாதி, தேசியவாதம், கலாச்சாரம், அரசியல், ஊடகம், உளவியல், ஆற்றுகை, மானுடவியல், சமூகவியல்  என பல அடுக்குகளில் பகுப்பாய்வு செய்யும் ஓர் விமர்சன சமூக அரசியல் ஆய்வு நூல் எனலாம். 

அதனுடைய எழுத்துநடை சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு நாவலை படிப்பது போல சுவையை அது தருகிறது. அதனால் எந்த இடத்திலும் அலுப்பு தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் என்று ஆவலை தூண்டிய படி அந்த எழுத்துக்கள் சென்று கொண்டிருக்கின்றன. 

பின்னிணைப்பிலே அவர் இந்த நூலுக்கு இந்த நூலை எழுதுவதற்கு தனக்கு உதவியாக இருந்த ஒரு நூற்பட்டியல் தருகிறார். தமிழிலே 47 நூல்களும் ஆங்கிலத்திலே  இரு  நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களும் அதிலே வருகின்றன. 

 ஒரு ஆய்வின் கனதியை அறிய வேண்டுமானால் அந்த ஆய்வாளர் தருகின்ற நூல் பட்டியலை கொண்டு அறிந்து கொள்ளலாம். 

ஒரு ஆய்வாளர் முந்திய ஆய்வாளர் விட்டு இடத்திலிருந்து தொடங்குகின்றார் என்று கூறுவார்கள். 

நம்மில் பல ஆய்வாளர்கள் அப்படி அல்ல என்பது ஒருபுறம் இருக்க, தர்மராஜன் வாசிப்பு திறன் எங்களை வியக்க வைக்கிறது. 

தமிழ் ஆய்வில் பல தலை முறையினரைக் கண்டு விட்டோம், தமிழ் நூல் பதிப்பாசிரியர்களான உ, வே சாமிநாயர்  தாமோதரம் பிள்ளை தொடக்கம் தமிழர் பண்பாட்டை   புனிதமானதாக விளக்க முயன்ற  ஆய்வளர்களூடாக அதனை நவீன கோட்பாடுகளுடன் இணைத்து  ஆய்ந்தோர், அதன் பின் மாக்ஸீய ரீதியில் அணுகியோர், இன்று  பின்நவீன சிந்தனை வாயிலாக அணுகுவோர்  என பல வகையினர். 

இன்றைய சில ஆய்வாளர் தமிழ்ப்  பண்பா ட்டை  இவை யாவற்றையும் உள்வாங்கி புதிய கோட்பாடுகளின் பின்னணியில் அணுக முயல்கிறாரகள். அவர்களுள்   தர்மராஜ்  தனித்துத்  தெரிகிறார். 

சடங்குகளை ஆராய்ந்து மானிடவியலாளர்களான

அர்னால்டு வான் ஜெனப், லேவிஸ் ராஸ் தொடக்கம் தொடர்பியல் சம்பந்தமாக  ஆய்வு செய்த ஆய்வாளர்களின்  சிந்தனைகள்  பின்னவீன சிந்தனையாளர்களான பூக்கோ,  தெரிதா டெலியூஸ் ஆகியோரின் சிந்தனைகள் ஜூடி பட்லர் சிக்மேன் பிரைட் போன்ற உளவியலாளர்களின்  சிந்தனைகள்  மற்றும் கிறிஸ்தவ டேவிட்  சுல்மான்  போன்ற இலக்கிய  ஆய்வாளரின் சிந்தனைகள் அவர்கள்  கண்டைந்த கோட்பாடுகள் ஆய்வுகள்  என்பன இந்தக் கட்டுரையை வளமாக்க அவருக்கு உதவியுள்ளன. 

 மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு ஆய்வு நூலை வாசித்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மானிடவியலாளர் பக்தவத்சலபாரதி இதற்கு எழுதிய பின்னுரையிலே, 

“தொல்காப்பிய சூத்திரம் மொழிக் கட்டமைப்பை விளக்கிக் காட்டுவது போல 5000 ஆண்டு தமிழ்ச் சமூகத்தில் இன்றைய அசவியக்கத்தை ஜல்லிக்கட்டு என்ற சூத்திரம் மூலம் தர்மராஜ் நமக்கு விளக்கிக் காட்டுகிறார் என்று கூறியிருக்கின்றார்.  தமிழ்சமூகத்தின்  ஆழ்மன உள  எழுச்சியையும் ஜல்லிக்கட்டின் மூலம் சமகால  சமூக  அரசில் பண்பாட்டின் தளத்தில் நிகழ்ந்த   இரசாயன  மாற்றங்களையும் முனைப்பாகப்  பேசுகிறார்.     நீண்ட காலம் தொடர்ந்து  கூர்மையான  வாசிப்புகளை  வழங்கி வந்த   தர்மராஜின் ஜல்லிக்கட்டை  ஒரு புலமை வெடிப்பு எனலாம்.  இந் நூலிலே அசலான தமிழ்ச் சிந்தனை மரபு ஒரு மீள்  கட்டமைப்பு செய்யப்படுகின்றது  எனலாம்.   

சுதேசிய முறையியல் அகவய கோட்பாட்டுத் தளம், துள்ளலும் எள்ளலும் மிகுந்த எடுத்துரைப்பு, யாரும் காணாத கருத்தாடல், உலகளாவிய ஒப்பியல் கண்ணோட்டம், என்று நாம் கற்பனை செய்ய முடியாத பலவற்றை இந்நூலில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் தர்மராஜ் என்று ஒரு புகழுரை அளித்துள்ளார். 

இந்த நூலைப் பற்றி அவர் கூறும் இடத்தில் இது ஒரு தனிப்பெரும் நூல் மட்டுமல்ல முதல் நூலாகும் என்றும் கூறியிருக்கிறார். 

ஏனைய கட்டுரைகளையும் வாசித்த பின்னர் நான் என்னுடைய முழு விமர்சனத்தை இது பற்றி எழுத இருக்கிறேன். 

 ஒரு தேன் வதையைச் சொட்டுச் சொட்டாகத் சுவைப்பது போன்ற சுவையை எனக்கு இந்த நூல் இப்போதைக்குத்  தருகிறது. 

தேன் வதை சுவையை மட்டும் தராது, அதற்கு இன்னொரு பண்பும் உண்டு. எல்லாவற்றையும் நான் எனது இந்த நூல் பற்றிய கணிப்பிலே குறிப்பிடுவேன். 

மேலும் சிந்திக்க வைத்த தருமராஜுக்கு  எனது அன்புகளும் வாழ்த்துக்களும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *