— வீரகத்தி தனபாலசிங்கம் —
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கரையோரத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் துறைமுகத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
அண்மைய தசாப்தங்களில் வெள்ளை மாளிகையில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் படுமோசமான போர்வெறியராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இனப்படுகொலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதான்யாகுவும் ஈரானுக்கு எதிராக விரைவாகப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் போருக்கு விரைவான முடிவு கிட்டப்போவதில்லை.
போர் தொடங்கிய முதல்நாளன்றே ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ட்றம்ப், ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தெரிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். புதிய ஆன்மீகத் தலைவராக கொலையுண்ட தலைவரின் மகன் மொஜ்ராபா காமெனி தெரிவானதை அனுமதிக்க முடியாது என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஈரானில் அமையக்கூடிய அடுத்த அரசாங்கம் தனது பொம்மையாக இருப்பதை உறுதி செய்வதே அவரது நோக்கம். ஜனவரியில் வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிகஸைப் போன்று வாஷிங்டனின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவரை ஈரானில் பதவியில் அமர்த்துவதே ட்ரம்பின் திட்டம்.
அயத்தொல்லா காமெனியின் கொள்கைகளை பின்பற்றும் புதிய ஈரானியத் தலைவரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய ஒரு கையாளை இன்றைய ஈரானிய அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
அயத்தொல்லா காமெனியின் மறைவையடுத்து ஈரானிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இதுவரையில் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை நடத்தி ஈரானில் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அதேவேளை, அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு அந்த நாட்டு மக்களைக் கேட்கிறார்.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்ட போதிலும், ஈரான் “இஸ்ரேல்” மீதும் அயல் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள், சொத்துக்கள் மற்றும் தூதரகங்கள் மீதும் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆசியாவுக்கான வர்த்தகம் உட்பட உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறிய அதேவேளை ட்ரம்ப் “ஈரான்” நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறினார். நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர, ஈரானுடன் வேறு எந்த உடன்பாட்டுக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடு.
பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரான் தீட்டிக்கொண்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே தாக்குதல்களை தொடங்கியதாக கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு சான்றையும் உலகின் முன் வைக்கவில்லை.
கடந்த வருடம் ஜூனில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானின் சகல அணுவசதிக் கட்டமைப்புக்களும் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்டத்தையும் கொண்டிருக்க முடியாது என்றும் கூறிய ட்ரம்ப் ஈரான் அணுவாயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அதற்கெதிராக உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்கு படைபலத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. அல்லாவிட்டால் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரமே தாக்குதலை நடத்த முடியும். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி போரைப் பிரகடனம் செய்வதற்கு காங்கிரஸின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளில் எந்தவொன்றையும் ட்ரம்ப் நிறைவேற்றவில்லை.
ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல இன்றயை பிரச்சினை. உலகின் உறுதிப்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சட்ட முறைமைகள் சகலதையும் அவர் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெனிசூலாவின் இறைமையை மீறி மதுரோவை கடத்திச் சென்றது குறித்து கண்டனங்கள் கிளம்பியபோது சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு (ஐக்கிய நாடுகள்) அமெரிக்காவுக்கு அநாவசியமான சுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியது கவனிக்கத்தக்கது.
முன்னெச்சரிக்கையாக படைபலத்தைப் பயன்படுத்துவது என்பது வழமையானதாக்கப்பட்டுவிட்டால், எந்தவொரு அரசும் தனக்கு நீண்டகால நோக்கில் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்று சந்தேகிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் விரும்பிய நேரத்தில் படை பலத்தைப் பிரயோகிக்கக்கூடும். இது பேராபத்தான ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்ற இன்றைய யுகத்தில் பயங்கரமான முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான போர்கள் சர்வசாதாரணமாகிவிடும்.
தற்போதைய உலகை பல்துருவமயப்பட்டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது பல நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவையாக வளர்ந்துவிட்டதால் அமெரிக்கா போன்ற தனியொரு வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழானதாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்காது என்று நம்பினோம்.
எவ்வாறு, எந்த நேரத்தில் நடந்துகொள்வார் என்று முன்கூட்டியே கூறமுடியாத ட்ரம்பின் தலைமையின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா செய்துவருகின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாதவையாக உலக நாடுகள் பரிதாபகரமான ஒரு நிலையில் இருக்கின்றன.
இரு மாதகால இடைவெளியில் அமெரிக்கா சீனாவின் நெருங்கிய இரு நேசநாடுகளில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கிறது. வெனிசூலாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் கடந்தவாரம் குண்டு வீச்சுக்களில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதையும் சர்வதேச சட்டமீறல் என்று கண்டனம் செய்யச் சீனாவினால் முடிந்ததே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ரஷ்யாவின் நிலையும் அதுவே. இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியான தலையீடுகளைச் செய்ய முடியாதவையாக இருக்கின்றன.
ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு எதிரான அமெரிக்க — இஸ்ரேலிய போரை கண்டனம் செய்ய முன்வரவில்லை. அயத்தொல்லா காமெனியின் மறைவுக்கு காலந்தாழ்த்தியே இந்தியா அனுதாபம் தெரிவித்திருக்கிறது. புதுடில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.
ஈரானியத் தூதரகங்களுக்குச் சென்று அனுதாபப் புத்தகங்களில் கைச்சாத்திட வேண்டாம் என்று உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு அமெரிக்காவைப் புண்படுத்தக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் கடுமையான கரிசனையுடன் இருக்கிறது.
இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற — கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது.
இது இவ்வாறிருக்க, கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை.
இன்றைய ‘நாஜி’ களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதை தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும்.
