ஹண்டுவா:  சுண்டுக்கொத்து அரசியல்!       (மூன்றாவது கண்:XI)

ஹண்டுவா: சுண்டுக்கொத்து அரசியல்! (மூன்றாவது கண்:XI)

— அழகு குணசீலன் —

இலங்கையின் அரசியல் களத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை.  உலகம் மத்திய கிழக்கு – மேற்காசிய போர் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு ஸ்த்திரத்தன்மையற்ற பதட்டமான பூகோள அரசியல் சூழலில் இவை இடம்பெற்றுள்ளன என்பது இவற்றின் முக்கியத்துவத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது.  அப்படி என்னதான் நடந்தது? என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியாததல்ல. எனினும் அதன் பின்னணி அரசியலை பேச இப்பத்தி முனைகிறது.

(*). ஈரானின் கடற்படை கப்பல்களுக்கு  சர்வதேச/ இலங்கை கடற்பரப்பில் நடந்த தாக்குதல் – சம்பவங்கள் இன்னும் இந்து சமூத்திரத்தில் ஆழச்சூழியோடி மூலத்தை தேடவேண்டியவையாக உள்ளன.

(*). இலங்கைக்கு வெளிச்சம் ஏற்ற வேண்டிய நிலக்கரி விவகாரத்தில் அரசாங்கம் கரியை தானே அள்ளி முகத்தில் பூசிக்கொள்கிறது.

(*) இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய ஹேரத் “இந்திய பெருங்கடலின் எதிர்காலம்” குறித்த குழுவாதத்தில் கேள்விக்கு பதிலளிக்க திக்குமுக்காடியது,  அநுர அரசாங்கம்  முக்காடு போட்டு மூட முடியாத அளவுக்கு இராஜதந்திர பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

வளைகுடா போர் ஆரம்பித்த போது, கோத்தபாய காலத்து தாக்கம் (Effect) – அனுபவம் காரணமாக எரிபொருள் நுகர்வோர்  வரிசைகள் நீண்டன. இந்த நிலையில் உண்மையில் பாராளுமன்றத்தில் மக்களின் அச்சம் நியாயமற்றது என்று பதிலளிக்க வேண்டியவர் எரிபொருள், மின்சக்தி அமைச்சர். எரிபொருள் இருப்பையும், எவ்வளவு காலத்திற்கு போதுமானது என்பதையும் அவர் கணக்கு காட்டியிருக்கமுடியும். அதற்கான பொறுப்பு அந்த அமைச்சர் ஜெயக்கொடிக்கு உரியது. ஆனால் நடந்தது என்ன? ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திடீரென பாராளுமன்றத்தில் தோன்றி எரிபொருள் இருப்பு பட்டியலை சமர்ப்பித்தார். இதன் பின்னணி என்ன…?

அமைச்சர் ஜெயக்கொடிக்கு எதிராக 9 பில்லியன் ரூபா ஊழல்குற்றச்சாட்டு புகார் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. தற்போதைய எரிபொருள் கொந்துராத்து விவகாரத்தில் மட்டுமல்ல அவருக்கு ஏற்கனவே உரநிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்தில் 8.8 மில்லியன் ஊழல்மோசடி முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் அவரிடம் இந்த பொறுப்பை கையளித்தால் எதிர்க்கட்சிகள் அவரை பாராளுமன்றத்தில் பதம்பார்த்து விடுவார்கள் என்பதால் ஜனாதிபதியே தானே மீட்பராக தோன்றி அவரைக் காப்பாற்றினார். 

இது ஜே.வி.பி- என்.பி.பி. அரசாங்கமும் கடந்த கால SLPP, SLPP+ UNP அரசாங்கங்கள் போன்று கட்சி அரசியல் சார்ந்து தங்கள் அமைச்சர்களை காப்பாற்ற துணிந்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இங்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் போன்றவர்கள் நினைவூட்டப்பட வேண்டியவர்கள்.  இனியும் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையிலேயே ரம்புக்வெல்ல‌ கைது செய்யப்பட்டார். இது ஒரு தவறான முன் மாதிரி இதை ஊழல் ஒழிப்பு ஜே.வி.பி-என்.பி.பி.‌ அரசியலும் பின் பற்றக்கூடாது  அமைச்சர் குமார ஜெயக்கொடி  அமைச்சர் அவையில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைகள் தொடரவேண்டும் என்று கொழும்பு பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தனது ஆசிரியத்தலையங்கத்தை தீட்டியுள்ளது. நியாயமான கோரிக்கைதான். அநுரகுமார எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இதையே கோரியிருப்பார். இதுவும் ஹண்டுவா -சுண்டுக்கொத்து கட்சி அரசியல் தான். அரசாங்கம்  அமைச்சர் குமார ஜெயக்கொடியை பாதுகாக்கிறது.

அந்த  பாராளுமன்ற உரையில்தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க “கிழக்கின் நெற்களஞ்சியமாக இருந்த இலங்கை இப்போது  ஹண்டுவாவாக” மாறிவிட்டது என்ற கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி அநுரகுமாரவின் பேச்சாற்றல், சிங்க மொழிவளம், வார்த்தைகளை வசதியாக பயன்படுத்தும் சிலம்படிகள் அவருக்கே தனித்துவமானவை.  “ஹண்டுவாவை” அவர் பயன்படுத்தியது இந்த நாட்டை நாசமாக்கியவர்கள் நீங்கள் என்று எதிர்கட்சியினருக்கு சொல்லாமல் சொல்வதற்கு. இந்த “ஹண்டுவா” நம்ம ஊர் “சுண்டுக்கொத்து”.  முதன்மையாக நெல் அரிசி மற்றும் தானியங்களை அளவிடப் பயன் படும் அளவுகோல்.  வேண்டுமானால் விளக்கத்திற்காக

இந்த சுண்டு ஒரு தகரப்பேணி. அனேகமாக கட்டிப்பால்/ ரின்பால் வெற்று தகரப்பேணிகளே கிராமங்களில்  இதற்கு பயன்படுத்தப்பட்டன.

ஒரு தகரப்பேணி = ஒரு சுண்டு 

நான்கு சுண்டுகள் = ஒரு கொத்து

ஆறு கொத்து = ஒரு மரைக்கால் 

பத்து மரைக்கால் = ஒரு சாக்கு 

மூன்று சாக்கு= ஒரு அவணம். 

இன்றைய நீட்டலளவை   அளவீடு மீட்டர் -கிலோ மீட்டர் ஆக மாறியபோது, நிறுத்தலளவை அளவீடு கிலோகிராம்- கிலோவாக மாறியபோது, தானியங்களும் நிறுக்கப்பட்டதால் அன்றைய முகத்தலளவை தொலைந்துபோனது.

இன்னொரு வகையில் இந்த சுண்டுக்குள் சில்லறையைப்போட்டு குலுக்கி பிச்சை எடுப்பவர்களும் இருந்தார்கள். மேலும் மட்டி, இறால் கூனி, கூனிக்கருவாடு, சிறிய பாலை, நாவல், வீரை காட்டு பழங்களும் கூட மட்டக்களப்பில் சுண்டால் அளந்து விற்கப்படும் வழக்கம் இருந்தது. கிராமிய பெட்டி கடைகளில் ஒரு சுண்டு தானியத்தை கொடுத்து அதற்கு பதிலாக வேறு பண்டங்களை வாங்கும் பண்டமாற்றும் இருந்தது. இப்படி கிராமிய  பொருளாதார வாழ்வியல் பண்பை தனக்குள் நிறைத்திருந்தது ஹண்டுவா – சுண்டு.

ஜனாதிபதி கூறிய இந்த ஹண்டுவா பொருளாதாரத்திற்கு அன்றைய ஆட்சியாளர்கள் மட்டும்தான் பொறுப்பா….? இல்லை இன்றைய ஆட்சியாளர்களும்தான். இரண்டு தடவைகள் வன்முறையை கையிலெடுத்து இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை நாசமாக்கியதில் ஜே.வி.பி.யும் பங்காளி. வடக்கு -கிழக்கு யுத்தத்தில் 30 ஆண்டுகள் போருக்கு ஊக்கம் கொடுத்து, நியாயப்படுத்தி  மக்களின் முதுகுக்குப்பின்னால் மறைந்து நின்று இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அழித்ததில் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. இதனால் சுண்டை தூக்கி குலுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது நாட்டு அரசாங்கம். 

இன்றைய வளைகுடா போர் மூட்டத்திற்கு காலக்கெடு விதித்து அகற்றலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருகின்றது. போரை நான்கு, ஐந்து வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற டொனால்ட் டிரம்ப்பின் கணிப்பை பொய்யாக்கி வருகிறது ஈரான். போரின் விளைவுகள் உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டியிருக்கிறது. இன்னும் ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எண்ணெய் என்பது வெறும் இயந்திரங்களுக்கான இயக்கசக்தி மட்டும் அல்ல பொருளாதார பொருட்கள், சேவைகள் உற்பத்தி, விநியோக, நுகர்வு சங்கிலியின் மூலாதாரம். இந்த சங்கிலியில் இருந்து எந்த நாடும் விலகி இருக்க முடியாது. ஏற்கனவே இலங்கையில் QR பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தக்கோரியிருந்தும் ஜே.வி.பி-என்.பி.பி. அரசாங்கம் அதற்கு சாதகமான சமிக்ஞை காட்டவில்லை.‌ காரணம் வெளிப்படையானது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்க காலத்து நடைமுறையை பின்பற்றுவதற்கு அது வெட்கப்படுகிறது. ஆனாலும்  இன்னும் காலம் கடந்து விடவில்லை தற்காலிகமாக பங்கீட்டு முறையை அமுல் செய்வதன் மூலம் இருக்கின்ற இருப்பின் பயன்பாட்டு காலத்தை சற்று நீடிக்க முடியும். 

பங்கீட்டு முறை எப்போதும் கள்ளச்சந்தைக்கு வழிவகுக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அரசாங்கம் சட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்த முடியும். இல்லையேல் எண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கம் நுகர்வோரை பாதுகாப்பதை விடவும் முதலாளிகளை பாதுகாக்கிறது என்றே கொள்ள வேண்டும். உற்பத்தி, விநியோகச் சங்கிலியில் ஏற்படும் செலவு அதிகரிப்பு பணவீக்கத்தை ஏற்படுத்தும், இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படும். இது உலகச்சந்தையில் எமது ஏற்றுமதிகள் மலிவாக இருக்க வாய்ப்பளிக்கும். ஆனால் இன்றைய போர்ச் சூழலில் ஹர்முஸ் பயணப்பாதை தடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஏற்றுமதி நன்மையை அடைய வாய்ப்பில்லை.

ஈரான் கடற்படை கப்பல் விவகாரங்கள் குறித்து இந்து சமுத்திரத்தில் இந்தியாவின்  கடல் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இலங்கை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கொடுப்புக்குள் அடக்குகிறது.  கடற்படை பயிற்சியில் நீர்மூழ்கிகளும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மறுபக்கத்தில் பயிற்சி முடிந்த பின்னரும் ஈரானை அடைய இரண்டு -மூன்று நாட்களே தேவையான நிலையில் ஈரானிய கப்பல்கள் பல நாட்களாக கடலில் என்ன செய்தன என்று கேள்வியும் எழுகிறது. அமெரிக்க நீர்மூழ்கிகளுக்கு பயந்து இவை பதுங்கினவா..? இதில் சிக்கலான முடிச்சை அவிழ்க்க வேண்டியது இலங்கை அல்ல இந்தியா. ஆனால் தற்போது இலங்கையின் தலையில் கட்டி விட்டு இந்தியா பார்வையாளராகிவிட்டது. இந்த விவகாரத்தில் எவை பேசப்படவேண்டுமோ அவை எவையும் வெளிப்படையாக பேசப்படவில்லை. இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க அனுமதியளித்திருக்கிறது அமெரிக்கா. அதில் ஒரு பகுதியை தானும் வாங்கலாம் என்று நினைக்கிறது இலங்கை. ஆக, இந்துமா சமுத்திர நாடுகள் பொருளாதாரத்தை காப்பாற்ற ஏகாதிபத்தியத்திற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளன. 

இந்தியாவில் இந்திய பெருங்கடலின் எதிர்காலம் குறித்த குழுவாதத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “கேள்விக்கு” பதிலளிக்க திண்டாடியதும் கொடுப்புக்குள் அடக்குவதுதான். ஆனால் அவர் அதில் தோற்றுப்போனார். இலங்கையின் இராஜதந்திர பலவீனத்தை அம்பலப்படுத்தினார். இது வெளியுறவுத்துறையின் திறனை -ஆளுமையை கேலிக்குரியதாக்கியிருக்கிறது. 600 க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள், இராஜதந்திரிகள், ஆய்வாளர்கள் முக்கியமானவர்கள்.‌ கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர்  நேரடியான கேள்வி ஒன்றுக்கு சுற்றிவளைப்பதும், கேள்விக்கு பொருத்தமற்ற தவறான பதிலை அளிப்பதும் அவரின் பதட்டத்தை வெளிப்படுத்துகிறது.  இரண்டாவது தடவையாக கேள்வியை சுருக்கி கேட்கப்பட்டபோதும் அதற்கு பதிலளிக்க UNCLOS,

 INTERNATIONAL LAW  என்ற வார்தைகளை பலதடவைகள் மீண்டும் மீண்டும் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மொழிவளக்குறை  மட்டும் காரணம் அல்ல சர்வதேச, பிராந்திய விவகாரங்களில் பரந்த அறிவுப் பற்றாக்குறையும் காரணம். இதுவும் ஒருவகையில் சுண்டுக் கொத்து வெளிவிவகார அரசியல் தான். 

ஈரான் கப்பல்கள் விவகாரம் இந்திய -இலங்கை கடற்பரப்பில் எரிந்து கொண்டிருக்கிறது. இந்திய பெருங்கடலின் எதிர்காலம் குறித்த மாநாடு இடம்பெறுகிறது. அமெரிக்கா – இஸ்ரேலின் ஈரான் மீதான போர் எங்கள் கடற்பரப்பு வரை விரிந்து விட்டது. இந்த நிலையில் அந்த மாநாட்டிற்கு எந்த முன் ஆயத்தமும் இன்றி, எதிர்பார்ப்புகள் இன்றி வெளியுறவு அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வதில் உள்ள அர்த்தம் தான் என்ன?  இந்த மாநாட்டில் கலந்து கொண்ட, சம்பவம் நடந்த போது அந்த மண்டபத்தில் இருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் ராஜீவ் அமரசூரியவின் இலங்கை அரசாங்கத்திற்கான கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. “இலங்கை பிரதிநிதிகளுக்கு சிறந்த தயாரிப்பு, மற்றும் ஆதரவை வழங்குமாறு” அவர் அரசாங்கத்தை கோருகிறார். 

இவ்வாறான கலந்துரையாடல்கள் மனிதாபிமானம், சர்வதேச சட்டம், நடுநிலைமை, அணிசேராமை என்ற வார்தையாடல்களுக்கு அப்பால்  இலங்கையின் சுயாதிக்கம், இறைமையை  எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமின்றி பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய பொறுப்பான பணிகள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் பிரதமர் பதவி என்பது வெறும் அடையாளம். கல்வி அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர்கள் பலர்  ஜே.வி.பி -என்.பி.பி.யில் இருக்கலாம்.

ஹருணி அமரசேகர ஒருவரே இன்றைய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சருக்கான அனைத்து தகுதிகளையும், ஆளுமையையும் கொண்டவர்.  இலங்கை மானத்தை சர்வதேசத்தில் காப்பாற்ற அமைச்சர் அவையில் மாற்றம் செய்ய ஜே.வி.பி. பெலவத்தை தயாரா? இல்லை அந்த பதவி என்.பி.பி.க்கு அல்ல அது ஜே.வி.பி.க்குரியது என்று அவர்கள் கருதுகிறார்களா…..?  மார்ச் 8 இல் சர்வதேச பெண்கள் தினம்  கொண்டாடப்பட்டு விட்டது. இன்னுமொரு சர்வதேச மகளிர் தினம் வராமலா போகும்…?  அப்போது ஹருணியும் அருகில் இருக்க பெண்கள் அநுரவின் கரங்களை தொட்டளைவார்கள். 

எங்கும் எதிலும் சுண்டுக்கொத்து….! 

ஜனாதிபதியின் அளவுகோல் அச்சொட்டு….!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *