— கருணாகரன் —
தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. (“நாங்கள் அப்படியல்ல. தொடர்ச்சியாகவே ஈழத் தமிழர்களுடைய விடுதலையைப் பற்றிப் பேசி வருகிறோம்” என்று பழ நெடுமாறன், வை.கோ, கொளத்தூர் மணி போன்ற சிலர் சொல்லக்கூடும். இதைக்குறித்துப் பின்னர் பார்க்கலாம்). தேர்தல் காலமென்றால், இன்னும் சற்று உரத்த தொனியில் இந்தப் பேச்சுக்குரல் கேட்கும். இப்போதும் அப்படித்தான், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளிலும் அரங்குகளிலும் ஈழத்தமிழர் அரசியலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனின் பெயரும் பேசப்படுகின்றன. இதில் சீமான் சற்றுச் சத்தமாக முழங்குகிறார். இப்படிப் பேசப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது; கிடைக்கிறது; எதிர்காலத்தில் எத்தகைய நன்மைகள் கிட்டும் என்பதைப் பற்றியெல்லாம் எவருக்கும் கவலை இல்லை. அதைப்பற்றிப் பரிசீலனை செய்வது கூட இல்லை.
மூன்று வகை
இதில் நாம் மூன்று வகையினரைப் பார்க்கலாம். ஒரு தரப்பு மெய்யாகவே ஈழ விடுதலை கிடைக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற வேண்டும் என்று நியாயமாகவே விரும்புகிறது. ஆனால், இந்தத் தரப்புக்கு இலங்கை இனப்பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை இன்னும் சிக்கலடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரப்பு சரியாக அறிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டால்தான் ஈழவிடுதலைக்கான அல்லது ஈழத்தமிழரின் உரிமைக்கான சாத்தியப்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க முடியும். குறிப்பாக இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் தனித்துவம், அவர்களுக்குரிய இடம், இந்தப் பிரச்சினையில் அவர்களுடைய வகிபாகம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழவிடுதலையை அல்லது இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றிப் புதிய வாசிப்புச் செய்ய வேண்டும். அதற்கான உழைப்பும் உணர்திறனும் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஆனாலும் இந்தத் தரப்பினரிடத்தில் நியாயமான உணர்வு உண்டு.
அடுத்த தரப்பு, ஈழப்போராட்டத்தைத் தன்னுடைய அரசியற் தேவைக்காக எடுத்தாள்கிறது. இது வெற்றுப் பிரகடனங்களிலும் தீவிர உணர்ச்சி நிலையிலும் இந்த விசயத்தை எடுத்தாள்கிறது. நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களைச் சிங்களர்கள் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். சிங்கள அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்கிறது என்ற அடிப்படையில் நோக்கிக் கொதிப்படைகிறது. இந்தத் தரப்பில் ஊடகங்களும் இலக்கிய அமைப்புகள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றனவும் அடங்கும். இதொரு அயல் நாட்டின் அரசியற் பிரச்சினை. ஆகவே அதற்குரிய வரன்முறைகளும் எல்லைகளும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் கொதிப்பதாலும் பொங்குவதாலும் எந்தப் பயனுமில்லை. இந்தத் தரப்பு பிரச்சினையை மேலும் சிக்கலடைய வைக்கிறது. இவர்களுடைய குரல் உயர உயர, ஈழத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது.
மூன்றாவது தரப்பு, ஈழப்போராட்டத்தை விடுதலைப்புலிகளோடு மட்டுப்படுத்திப் பார்ப்பது. மறுபக்கத்தில் இனவாதச் சிங்கள அரசைக் கடுமையாக எதிர்ப்பது. அதை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்வது. இப்பொழுது சீமான் இதில் முன்னணி வகிக்கிறார். இது சாத்தியமே இல்லாத கனவுலகப் பிரகடனங்களைச் செய்து காலத்தையும் சக்தியையும் வீணடிக்கிறது. மட்டுமல்ல, ஈழ அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அதைத் தலைகீழாக்க முயற்சிக்கிறது. இந்தத் தரப்பினால் ஒரு சல்லிப் பணத்துக்குப் பிரயோசனமில்லை.
இதையெல்லாம் பார்த்தால், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசியற் கட்சிகளும் அரசியல் அறிவே இல்லாதவர்களா? என்று கேட்கத் தோன்றும். அப்படிச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். உண்மையைத் துணிந்து சொல்வதென்றால், ஈழத்தமிழர்களுடைய அரசியலை உரத்த தொனியில் பேசுவதால் ஈழத்தமிழர்களின் அரசியல் மேலும் சிக்கலடைந்து கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுடைய அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து 1800 களில் இலங்கைக்குப் பெயர்க்கப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள மக்களின் (இந்திய வம்சாவழியினரின்) அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. அதாவது இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மொத்தத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பாதிக்கப்படுகிறது.
காரணம், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விவகாரத்தை – விடுதலையை – உரிமைகளைப் பற்றிப் பேசுவதையும் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் சிங்கள மக்கள் வேறுவிதமாகவே – எதிராகவே – பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அல்லது புரிதலில் ‘இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கு (தமிழ் பேசும் தரப்பினருக்கு) இந்தியா பேராதரவை வழங்குகிறது. சிங்களவர்களுக்கு இந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இப்படிச் சிந்திப்பதால், மேலும் தமிழ்பேசும் மக்களை சிங்கள அரசாங்கம் ஒடுக்குகிறது. இது அச்சத்தினால் உருவாகும் உளவியலின் விளைவாகும்.
தமிழ்நாட்டை இந்தியா என்றே பெரும்பான்மையான சிங்களவர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே ‘தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்நாடு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்தியா ஆதரவாக இருக்கிறது என்றே பார்க்கிறார்கள். ஆக,தமக்குத்தான் எவருடைய ஆதரவும் இல்லை. இந்த உலகத்தில் தாம் (சிங்களவர்) ஒரு சிறிய இனம். இலங்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் உலகத்தில் தனித்து விடப்பட்ட, சின்னஞ்சிறிய இனம். இரண்டு பில்லியன் மக்கள் மட்டுமுள்ள இனம். அதுவும் இலங்கைத்தீவில் மட்டுமே உள்ள இனம். இந்த நிலையில் அயலில் உள்ள தமிழ்நாடும் இந்தியாவும் தமிழர்களோடு சேர்ந்து தம்மை நெருக்கடிக்குள்ளாக்கப் பார்க்கிறது’ என்றே சிங்களத் தரப்பினால் கருதப்படுகிறது.
இதற்கு வலுவானதொரு வரலாற்றுக் காரணமும் சிங்களத் தரப்பிடமுண்டு.
வரலாற்றுக் காலம் தொட்டு, இலங்கையின் மீது தென்னிந்தியப் படையெடுப்புகளும் ஆக்கிரமிப்பும் நிகழ்ந்திருக்கிறது. சோழர்காலம் இதில் மேலும் உச்சமடைந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உங்கள் நினைவுக்கு வரலாம். இலங்கையின் மிகப் புகழ் மிக்க ஆட்சி மையங்களாக இருந்த அநுராதபுர ராஜ்ஜியத்தையும் பொலநறுவை ராஜ்ஜியத்தையும் சோழப்படையெடுப்புகளே வீழ்ச்சியடையச் செய்தன. இப்படித் தென்னிந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் சிங்களச் சமூகத்தின் ஆழுள்ளத்தில் நீங்காத வெறுப்பாகவும் வரலாற்றுக் காயமாகவும் வளர்ந்துள்ளது. தமது ஆட்சியையும் தாம் உருவாக்கிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட சிறப்பான கட்டமைப்புகளையும் தென்னிந்தியர்கள் (தமிழர்கள்) படையெடுத்து வந்து ஆக்கிரமித்தனர் என்ற வரலாற்றுக் கோபம் சிங்கள மக்களிடத்தில் உண்டு.
இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு கிமு 5ஆம் நூற்றாண்டு முதல் (பாண்டுகாபய மன்னன் காலம்) தொடங்கும் மிக நீண்ட மற்றும் மேம்பட்ட பொறியியல் பாரம்பரியத்தைக் கொண்டது. உலர் வலய விவசாயத்திற்காக குளங்கள் (ஏரிகள் – Wewa) மற்றும் கால்வாய் அமைப்புகளை உருவாக்கி, ” குளங்களின் சங்கிலித் தொடர்” (Tank Cascade System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மன்னர்கள் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தனர். பொலன்னறுவை காலத்தில் பராக்கிரம சமுத்திரம் போன்ற பிரம்மாண்டமான ஏரிகள் கட்டப்பட்டன. பிசோகொட்டுவ (Biso Kotuwa – Valve Pit) எனப்படும் கசிவுத் தடுப்பு மற்றும் நீர் கட்டுப்பாட்டு கோபுரம் கி.பி. 03 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதை உருவாக்கிய பிரதான மன்னர்கள், வசபன் (பெரிய குளங்கள்), தாதுசேனன் (கலாவேவ), முதலாம் பராக்கிரமபாகு (பராக்கிரம சமுத்திரம்) ஆகியோர் நீர்ப்பாசனத் துறையில் முக்கிய பங்காற்றினர். இலங்கையின் இந்த நீர்ப்பாசன கலாச்சாரம், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான விவசாயத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக இருந்து வருகிறது.
இப்படி உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயப்பொருளாதாரத்தையும் கடலில் முத்துக் குளிப்பதையும் இரத்தினக்கல் மற்றும் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் கொண்ட பெரு வணிகத்தையும் சோழர் தமதாக்கிக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்புத் தன்மை இன்றைய இந்த யுகத்திலும் ஏதோ ஒரு விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஈழத் தமிழரின் அரசியலை – உரிமைப் பிரச்சினையைச் சாட்டாகவும் சாதகமாகவும் வைத்துக் கொண்டு இந்தியாவும் தமிழ்நாடும் விளையாடுகின்றன என்றே சிங்களர் கருதுகிறார்கள். இதை நாம் மேலும் புரிந்து கொள்ள சிங்களவர்களின் வரலாற்று(?) நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தைப் படித்தறியலாம். மஹாவம்சத்தில் இந்திய எதிர்ப்புவாதமும் தமிழ்கள் மீதான வெறுப்பும் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இந்தப் பதிவுக்கு வயது 2000 க்கு மேல். மட்டுமல்ல, இன்றைய நாளும் கூட அதனோடு பதிவு செய்யப்படுகிறது. அதாவது, மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதனுடைய வரலாறு பதியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய சம்பவமும் வரலாறாகப் பதிவு பெறுகிறது. ஆகவே இந்தப் பின்னணியில், இந்தியா தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்கள் பற்றியும் எதிர்மறை எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களத் தரப்பு, எப்படி எச்சரிக்கையாகவும் தீவிர நிலையிலும் பழிதீர்க்கும் முனைப்போடும் இயங்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், சிங்களத் தரப்பு கருதுவதைப்போல உண்மையான நிலவரம் இல்லை. முக்கியமாக, இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமாக இல்லை. அப்படி இருந்திருக்குமாக இருந்தால், இலங்கையில் இந்தளவு பெரிய இனப் படுகொலைகளும் ஒடுக்குமுறையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான அரசியல் தீர்வையும் வழங்காமல் இலங்கை இழுத்தடிக்கவும் முடியாது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள மாகாணசபை ஆட்சியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கும். குறைந்த பட்சம் அதற்கு ஒழுங்காகத் தேர்தலையாவது நடத்தும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அது எதனைக் குறிக்கிறது அதனுடைய அரசியல் சேதி என்ன?
மறுபக்கத்தில் தமிழ்நாட்டு அரசும் மக்களும் முழுமையான ஆதரவை ஈழப்போராட்டத்துக்குத் தருவதாகச் சொன்னாலும் அதனால் எந்த பயனும் கிடைத்ததில்லை. கிடைக்கப்போவதுமில்லை. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு உவப்பானதொரு தீர்மானத்தை எடுக்காத வரையில் தமிழ்நாட்டினால் எதையும் செய்யவே முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பற்றி இந்திய மத்திய அரசு பேசத் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்ற பேரில் ஆயுதப்போராட்டத்துக்கு மறைமுகமான முறையில் மத்திய– மாநில அரசுகள் தாராளமான – ஏராளமான உதவிகளைச் செய்தன என்பது உண்மையே. மட்டுமல்ல, இந்திய அரசின் மத்தியஸ்தத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடந்ததும் உண்மை. உச்சக்கட்டமாக 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையே செய்யப்பட்டது. ஆனாலும் விளைவுகள் எதுவும் நல்லனவாக அமையவில்லை. முக்கியமாக ஈழப்போரின்போதும் சரி, ஈழப்போரின் இறுதிக்காலத்திலும் சரி தமிழ்நாட்டின் கொந்தளிப்பு அரசியல் நல்விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காரணம், அதனுடைய அதிகார எல்லை மட்டுப்படுத்தப்பட்டது.
இது எதைக் காட்டுகிறது? இந்திய மத்திய அரசை மீறித் தமிழ்நாடு எதையும் செய்ய முடியாது என்பதைத்தானே! அந்த நாட்களில் நெருக்கடிக்குள்ளாகிய ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினராலும் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கூட இலங்கையில் தமிழ் மக்களுடைய பகுதிக்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான ஏற்பாட்டையும் அனுமதியையும் இந்திய மத்திய அரசே செய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, தார்மீக உணர்வு அடிப்படையில் மட்டும்தான் ஆதரவுக் குரலைக் கொடுக்க முடியும். கியூபாவுக்கு ஆதரவாக, குர்திஸ்க்கு ஆதரவாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப்போல. அல்லது இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் நிவாரணப் பொருட்களை மட்டு அனுப்பி வைக்க முடியும். அவ்வளவுதான்.
அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் அது இந்திய மத்திய அரசுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசின் முடிவுகள் – தீர்மானங்கள்- இந்திய வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நிலவரம், இந்தியப் பாதுகாப்பு, இந்திய நலன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த அடிப்படையை மனதிற்கொண்டே மத்திய அரசின் தீர்மானங்கள் அமையும். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. பா.ஜ.க மட்டுமல்ல எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இதுதான் நிலவரம்.
இதெல்லாம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கும் அறிவுபூர்வமாக அரசியல் பகுப்பாய்வைச் செய்வோருக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியாது என்றில்லை. பலரும் இதைத் தெரிந்து கொண்டே விளையாடுகிறார்கள். சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற உண்மைக்கு மதிப்பில்லை. பொய்யை, கற்பனையை நம்புகின்ற மக்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் இதுதான் நிலவரம். ஈழத்திலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களே விலையைக் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். ஆகவே இது ஒரு அபாய விளையாட்டு. அரசியல் தவறு. அநீதியான செயல். கண்டனத்துக்குரிய விடயம்.
ஆனால், ஒரு காலம் ஈழப்போராட்டத்துக்கும் ஈழப்போராளிகளுக்கும் தமிழ்நாடு முழு மனதோடு உதவியது; ஆதரவு நல்கியது. 1970 களின் பிற்பகுதியிலிருந்து1980 கள் வரையில். அந்தக் காலத்தில் மாநில அரசு, அதனுடைய காவல்துறை தொடக்கம், தமிழகத்தின் அரசியற் கட்சிகள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள், வணிகர்கள், வண்டி ஓட்டுநர்கள், தெருவோர உணவுக் கடைக்காரர்கள், கிராமங்களில் விவசாயிகள், பண்ணைகள் வைத்திருப்போர், மீனவர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் எனச் சகலரும் ஈழப்போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் ஆதரித்தனர். இந்த ஆதரவைச் சரியான முறையில் பேணி, போராட்டத்துக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அதைப் பழாக்கிச் சிதைத்ததில் பெருந்தவறை ஈழப்போராளிகளும் போராட்ட இயக்கங்களும் நிறைவேற்றியது துயரம். பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு, சூளைமேடு கொலை என்று தொடங்கிய ஆயுத நடவடிக்கை, முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை வரையில் நீண்டது. இந்தத் தவறுக்கு தமிழ்நாடு பெரிய விலையைத் தானும் கொடுக்க வேண்டியிருந்தது.
இன்று இந்தக் கசப்பான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொண்டு புதிய தடத்தில் காலடி வைக்க வேண்டும். அது யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். சில ஈழ அரசியல் பார்வையாளர்கள் கருதுவதைப்போல, தமிழகத்தின் மூலமாக இந்திய மத்திய அரசைப் பயன்படுத்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது மிகக் கடினமானது. ஆனால், அவர்கள் ‘சென்னை ஒரு திறவு கோலாக இந்தப் பிரச்சினையில் இருக்கும்’ என்று ஆழமாக நம்புகிறார்கள். அவர்களுடைய பார்வை எப்படியென்றால், ஈழத்தமிழர்களுக்குச் சாதமாக – ஆதரவாக சென்னையில் (தமிழ அரசு) எடுக்கின்ற தீர்மானங்களும் கொடுக்கின்ற அழுத்தங்களும் இந்திய மத்திய அரசை இலங்கையை நோக்கித் திரும்ப வைக்கும். இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வைக்கும் என்பதாக. இதைப் படிக்கும்போது சிரிப்பு வருகிறது அல்லவா! சென்னையில் இருக்கும் ஆளுநர் ரவியோடு தினமும் தமிழ்நாடு மோதவேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் அதிகாரத்தையே பிடுங்க அல்லது அதில் தலையீடு செய்வதற்கு மத்தி முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படி அது மத்தியை ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் சாய்க்க முடியும்?
குறைந்த பட்சம் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்ற வகையில் ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் தினமும் மோதிக்கொள்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளைக் கடலில் வைத்துப் பறிமுதல் செய்கிறது இலங்கைக் கடற்படை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இதைக் கூட இந்திய – இலங்கை அரசுகள் பேசி ஒரு தீர்வுக்கு வரவில்லை. தமிழக அரசு இதில் ஒரு சரியான தீர்வை எட்டமுடியாமலிருக்கிறது. இந்தப் பிரச்சினையை ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தமிழகத்தோடும் இந்தியாவோடும் பேசி ஒழுங்குக் கொண்டு வர முடியாமலிருக்கின்றன. இந்த நிலையில் 75 ஆண்டுக்கு மேலான இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு சென்னையைத் திறவு கோலாக்குவதென்றால்!
இங்கே நாம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியற் கட்சிகளும் தமிழகத்தையும் இந்தியாவையும் அளவுக்கு அதிகமாக நம்புகின்றன; எதிர்பார்க்கின்றன. அல்லது அப்படி நடிக்கின்றன. இலங்கையின் மீது இந்தியா அரசியல் அழுத்த்ததை(இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையிலேனும்) கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால், அதற்கப்பால் சில அரசியல்வாதிகளும் சில அரசியற் கட்சிகளும் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலரோடு நெருக்கம் கொள்வதாக காட்டிக் கொள்வதும் தமிழகத்தின் ஆதரவு தமக்கு உண்டென்று கூறுவதும் தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களினதும் தமிழ்நாட்டு அரசினதும் ஆதரவைப் பெறுவது நல்லது. ஆனால் அது தார்மீக அடிப்படையிலானது மட்டுமே. தமிழகம் தொழில்துறைகளில் முதலீட்டை ஈழத்தில் – தமிழ்ப்பகுதிகளில் – செய்வதாக இருந்தாலும் இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு ஆகியவற்றின் ஆதரவும் உடன்பாடும் வேண்டும். இந்த நிலையில் எப்படி ஈழ விடுதலை அரசியலில் தமிழ்நாடு முழுமுனைப்போடு செயற்பட முடியும்? தமிழ்நாடு சட்டமன்றில் ஒரு தீர்மானம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டால், அதனைக் கண்டு சீற்றமடைகின்றது சிங்களத் தரப்பு. சிங்களத் தரப்பின் அந்தச் சீற்றம் ஒடுக்குமுறையாக ஈழத்தமிழர்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்த ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்தும் வலுவோ, சட்ட ஆற்றலோ தமிழ் நாட்டுக்கு இல்லை. உதாரணமாக ஈழ யுத்தத்திற்குப் பிறகு (2009) தமிழ்ப்பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது?தமிழ்நாட்டினால் அல்லது இந்திய மத்திய அரசினால் என்ன செய்ய முடிந்திருக்கிறது? அல்லது என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 16 ஆண்டுகாலத்தில் ஏன் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியவில்லை? அதற்கான அழுத்தத்தை ஏன் கொடுக்க முடியாதிருக்கிறது?
எந்த அரசியல் நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வது அரசியல் அல்ல. அதற்கு விடுதலை அரசியல் என்று பெயரைச் சூட்டுவது கேவலத்திலும் கேவலம்.
