தமிழர் அரசியல்: பதிலில்லாத கேள்விகள்!

தமிழர் அரசியல்: பதிலில்லாத கேள்விகள்!

 — கருணாகரன் —

தமிழர்களின் அரசியலை முன்னெடுக்கக் கூடிய அளவுக்குத்  தமிழ்க் கட்சிகளுக்குப் பலம் உண்டா? அதாவது அதற்கான அரசியல் உள்ளடக்கமும் திறனும் இரசாதந்திர ஆற்றலும் இருக்கிறதா? அல்லது தேசிய மக்கள் சக்திதான் வடக்குக் கிழக்கிலும் பலமானதாக உள்ளதா? தமிழ் மக்கள் எதனை விரும்புகிறார்கள்? யாரை ஆதரிக்கிறார்கள்? தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் எப்படியிருக்கும்? வடக்கும் கிழக்கும் தனித்தனியான அரசியல் முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டியிருக்குமா? அவ்வாறெனில் அது எப்படியாக இருக்கும்? அதற்கான வடிவம் என்ன? முஸ்லிம் மக்களுடைய பங்கேற்பும் உடன்பாடும் இல்லாமல் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் தீர்வும் – அபிவிருத்தியும் சாத்திமாகுமா? மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வெற்றி கிட்டும்? இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களில் செல்வாக்கும் ஆற்றலும் உள்ளவர் யார்? 

முஸ்லிம் அரசியற் கட்சிகள் சிங்களக் கட்சிகளுடன் எதற்காக அரசியல் உறவைக் கொண்டிருக்கின்றன? முன்பு ஆட்சியில் பங்கேற்கும் நிலை இருந்தது. இப்பொழுது அந்த நிலை இல்லை. இந்தச் சூழலில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒத்த சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். இந்த நிலையிலும் தமிழ்க் கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையிலான தூரம் குறையாதிருப்பது ஏன்? மாகாணசபை முறைமையில் வடக்குக் கிழக்குக்கு அப்பால் மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், வடமேல் மத்திய மாகாணம் போன்றவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதித்துவமும் அதிகாரங்களும் உள்ளபோதும் அங்குள்ள தமிழ் பேசும் தரப்புகள் மாகாணசபைகளைக் குறித்துப் பேசாதிருப்பது ஏன்? 

தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை சிங்கள மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பது ஏன்? அல்லது புரிந்து கொள்ள மறுப்பது எதற்காக? சிங்கள மக்களிடம் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் பேசப்பட்டிருக்கிறதா? தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளையும் உண்மை நிலமைகளையும் சிங்களச் சமூகம் புரிந்து கொள்வதற்கான ஊடகங்கள் ஏதாவது உண்டா? இதுவரையிலான தமிழ் மக்களுடைய அரசியல் எத்தகைய முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் தமிழ் மக்களுக்குத் தந்துள்ளது? இதைக் குறித்த பரிசீலனைகளை தமிழ் அரசியற் கட்சிகளும் தலைமைகளும் மேற்கொண்டுள்ளனவா? சிங்கள அரசியலை எதிர்கொள்ளக் கூடிய வினைத்திறனும் புத்தாக்கச் சிந்தனையும் பொருத்தப்பாடும் உள்ள அரசியலைக்குறித்துத் தமிழ்ச் சமூகம் சிந்திக்காதிருப்பது ஏன்? 

சர்வதேச சமூகம் தமிழர்களுடைய அரசியலுக்கு ஆதரவு நல்குமா? தமிழர்களுடைய அரசியல் குறித்து சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன? இளைய தலைமுறையின் அரசியல் ஈடுபாடுகள் எப்படி உள்ளன? இளைய தலைமுறையினருக்கான இடத்தை தமிழ் அரசியற் கட்சிகள் வழங்கத் தயங்குவது ஏன்? விடுதலை இயக்கங்களின் வழிவந்த தமிழ் அரசியற் கட்சிகள் ஜனநாயக அடிப்படையில் புதியவர்களுக்கான இடத்தை அளிக்கத் தயங்குவதற்கான காரணம் என்ன? இப்படி ஒரு கொத்துக் கேள்விகள் தமிழ் அரசியலைக்குறித்து நிதானமாகச் சிந்திப்போரிடம் எழுகின்றன. இவ்வாறான கேள்விகளுக்கான பதிலை தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் காண வேண்டும். முஸ்லிம், மலையகக் கட்சிகளும்தான். இத்தகைய கேள்விகளை பொதுவெளியில் தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகள் தயக்கமின்றி எதிர்கொண்டு, அவற்றுக்கான பதில்களை அளிப்பது அவசியமாகும். 

ஊடக அறிக்கைகள், ஊடகச் சந்திப்புகளுக்கு அப்பால், மக்கள் அரங்குகளிலும் தனிநபர் உரையாடல்களிலும் அரசியற் தலைவர்கள் பங்கேற்க வேண்டும். இந்தி விடுதலைப்போராட்டத்தை காந்தி மக்களிடம் நேரில் சென்றே நடத்தினார். எத்தகைய அரசியலும் மக்களுடைய பங்கேற்பும் நெருக்கமும் ஏற்படும்போதே அது பலமடையும். இல்லையெனில், கட்சிகளின் அரசியலாகவும் தலைவர்களின் அரசியலாகவுமே சுருங்கி விடும். ஏறக்குறைய தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அப்படித்தான் சுருக்கங்கொண்டுள்ளது. இதை நாம் கடுமையாக விமர்சித்தே ஆக வேண்டும். தயக்கமில்லாமல் உண்மையை ஏற்க வேண்டும். 

தென்னிலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சரியோ தவறோ சிங்கள  மக்கள் புதிய தலைமைகளை வரவேற்றிருக்கிறார்கள். NPP ஒரு மாற்றுத் தலைமையா இல்லையா என்பதை காலம் நிரூபிக்க வேண்டும். இங்கே காலம் என்பது NPP யின் ஆட்சியையே குறிக்கும். ஜனநாயக ரீதியான அரசியல் தேர்வை ஓரளவுக்குச் சிங்கள மக்கள் பயன்படுத்துகிறார்கள்.தலைமைகளையும் தரப்புகளையும் மாற்றிக் கொள்வார்கள். தமிழ்த் தரப்பில் இது அறவே கிடையாது. குடும்பச் சொத்துப்போலக் கட்சிகளும் வாழ்நாள் மன்றாடிகளைப்போல மக்களும் கேள்விகளற்று தமது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது ஈழத் தமிழர்கள்தான். முஸ்லிம்களிடத்திலும் மலையக மக்களிடமும் கூடச் சற்று வித்தியாசமும் வேறுபாடுகளும் உண்டு. அவர்கள் தேவையானபோது புதிய தலைமைகளை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள். இல்லையென்றால், இ.தொ. கா வை மிஞ்சி தமிழ் முற்போக்குக் கூட்டணி எப்படி வலுப்பெற்றது?

தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது என்பது, விடுதலைக்கான அரசியலாகும். இந்த விடுதலைக்கான அரசியலில் தமிழ் மக்கள் இழந்தது அதிகம். பெற்றது இழப்புகள் இழப்புகள் இழப்புகள்தான். சிங்கள மொழியைப் படிக்க மாட்டோம் என்று தொடங்கிய வேலை இழப்பு பின்னர், வீடுகளை இழப்பதாக, ஊர்களை இழப்பதாக, உறவுகளை இழப்பதாக, உடல் உறுப்புகளை இழப்பதாக, உயிரை இழப்பதாக என மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் உருக்குலைத்தது.

விடுதலைப்போராட்டத்தில் – அதுவும் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அப்படியென்றால்,அந்த இழப்புகளுக்கான பெறுமானமாக விடுதலை – உரிமை கிட்டியிருக்க வேண்டும். அதுதான் சாத்தியப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும். சிதைந்தும் அழிந்தும் போயிருக்கும் மக்களின் – சமூகத்தின் வாழ்வையும் அரசியலையும் எப்படி முன்னெடுப்பது என்று நிதானமாகச் சிந்தித்திருக்க வேண்டும். அது நடந்ததா? இல்லையே!

பதிலாக பாதிப்புக்குள்ளான மக்களை மேலும் பாப்படையச் செய்யும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசு தொடக்கம், எழுக தமிழ், பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நிகழ்ச்சி, ஒன்றுக்கும் உதவாக ஆயிரக்கணக்கான விழல் பிரகடனங்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் ஆளையாள் வசைபாடும் வகையிலான பொறுப்பற்ற செயற்பாடுகள்…. தொடர்கின்றன. இதைக் குறித்து எத்தகைய ஆட்சேபனைகளையும் செய்யால், தமது கண்டனங்களை வெளிப்படுத்தாமல் இவற்றுக்கு குஞ்சரம் கட்டி அலங்காரம் செய்யும் வேலைகளையே ‘தமிழ் அரசியல் ஆய்வாளர்கள்’ என்போரும் ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு கோமாளித்தனமான வகையில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ் மக்கள் ஒன்றியம் அப்படி இப்படி என ஆளுக்கொன்று, அணிக்கொன்று, நாளுக்கொன்று, வாரத்துக்கொன்று என புதிது புதிதாக அமைப்புகள் வேறு உருவாக்கப்படுகின்றன. சூடு சொரணை இல்லாமல் இதில் சல மதகுருக்களும் வந்து ஓரத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களோ நிர்க்கதியான நிலையில் துயரத்தோடு கிடந்து மல்லாடுகிறார்கள். இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் மக்களின் வீடுகளுக்கோ, அவர்கள் வாழும் பகுதிகளுக்கோ சென்றது கூட இல்லை. ஆதரவாக ஒரு சிறிய ஏற்பாட்டைச் செய்தது கூட இல்லை. எல்லோரும் பிரமுகர்கள் என்றால், யார் பணி செய்வது?

இவையெல்லாம் ஏற்படுத்திய அதிருப்தியே தமிழ் மக்களை தேசிய மக்கள் சக்தியின் பக்கமாகத் திருப்பியது. இது விடுதலைக்கான அரசியல் முன்னெடுப்புச் சனங்களை மறுபடியும் ஆட்சியாளர்களின் – அடக்குமுறையாளர்களின் காலடியில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. 

விடுதலைக்கான அரசியல் என்றால் என்ன? 

அது பொறுப்புடையது. மக்களுக்கானது. தன்முனைப்பற்றது.தோற்றுப்போனவர்களை மீள்நிலைப்படுத்தி, எழுந்து நிற்க வைப்பது. சர்வதேசப் பரிமாணங்களோடு ஒன்றிணைப்பது. புத்தாக்கத்தை உடையது. கற்பனைகளிலிருந்தும் கோமாளித்தனங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்று, நிலைப்படுவது. யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவது. தமிழர்களின் அரசியல் அப்படியா உள்ளது? தமிழ் அரசியற் தலைவர்கள் அப்படியா செயற்படுகிறார்கள்? 

வீழ்ந்து பட்ட சமூகங்களிலிருந்து உருவாகிய  சிந்தனையாளர்கள், அந்தச் சமூகங்களை மீள் நிலைப்படுத்துவதற்கான தமது பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். நம்மிடையே அவ்வாறான சிந்தனையோடு உருவாகிய ஒருவர்? 

யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவது பாதிக்கப்பட்ட – போராடும் இனங்களின் – சமூகங்களின் அரசியற் தலைவர்களின் பணி. அத்தகைய தலைவர்கள்?

விடுதலைக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைகளையும் அவற்றின் பண்பையும் பொறுப்புகளையும் ஊடகங்கள் விவாதித்து நெறிப்படுத்த  வேண்டும். அத்தகைய பண்பைக் கொண்டு பொறுப்புடன் செயற்படும் ஊடகங்கள்?

வாய்ப்புகள் எப்போதும் எந்தச் சூழலிலும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் தானாகவே உருவாகி வரும் வாய்ப்பு. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில சூழலில் நாம்தான் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இரண்டும் இணைந்ததே அரசியல் வேலைத்திட்டம். வருகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறனற்றவர்களாகவும் (குழப்பம்,தயக்கம், தடுமாற்றம்) புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியாதோராகவுமே தமிழ்த் தலைமைகளும் கட்சிகளும் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியலை ஊன்றிக் கவனித்தும் ஆராய்ந்தும் வருகிறேன். சமவேளையில் வெளியுலக அரசியலையும். இரண்டையும் தொகுத்தும் வகுத்தும் சேர்த்தும் விலக்கியும் பார்க்க வேண்டியது அவசியம். அப்படிப் பார்க்கும்போது ஈழத்தமிழர்களின் அரசியல் கோமாளித்தனங்களையும் மூடத்தனத்தையுமே காணக்கூடியதாக இருக்கிறது. உலக அரசியல், பிராந்திய அரசியல் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்ற – ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மாற்றங்களையும் வளர்ச்சியையும் தமிழ்த்தரப்பு ஏன் புரிந்து கொள்ளத் தவறுகிறது? தனக்குள் ஏன் அது கட்டுண்டு, உளக் கோளாறுக்கு ஆளாகியுள்ளது? என்ற கேள்விகள் எழுகின்றன. குறைந்த பட்சமாக தமது கட்சிகளைச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்பதை, புதிய நிலைப்பாட்டை – பொருத்தமான முறையில் வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, சமூக, உலக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை, அதற்கேற்ப நாமும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *