— அழகு குணசீலன் —
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் -அமெரிக்க கூட்டுத்தாக்குதல் குறித்தும், வெற்றி -தோல்விகள் குறித்தும் போரில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மட்டும் அன்றி, இரு தரப்பு ஆதரவுத்தளங்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பான்மை ஆதாரமற்றவையாகவும், உண்மைக்கு புறம்பானவையாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஒரு யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்பதை உறுதிசெய்வதாக இது உள்ளது. AI தொழில் நுட்பம் இந்த பொய்மைகளுக்கு பெரும் பங்களிப்பு செய்கிறது. கருத்துச் சுதந்திர அடிப்படை ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்ததாக இது அமைகிறது.
போரில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்கள் போருக்கான இலக்கை நேரடியாக அடைவதை கொண்டும் மற்றும் மறைமுகமாக போர் ஏற்படுத்தும் தாக்கங்களைக்கொண்டுமே அதனை மதிப்பீடு செய்ய முடியும். அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இலக்கு வேறுபாடுகள் இருப்பது அவதானிக்கப்படுகிறது. அமெரிக்கா அணுவாயத கட்டுப்பாட்டை பெயரளவில் உச்சரித்தாலும் அதன் உச்ச இலக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்க சார்பு ஆட்சியொன்றை ரெஹ்ரானில் ஏற்படுத்துதல். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு – பொம்மை அரச இயந்திர வரலாற்றில் அமெரிக்கா பல தடவைகள் தோல்விகளை சந்தித்துள்ளபோதும், அந்த பாதையையே அது தெரிவு செய்கிறது. ஏனெனில் யுத்தம் அமெரிக்காவில் இடம்பெறத வரை அதற்கான சேதாரம் குறைவானது. ஈரானின் மக்களுக்கான நல்லாட்சி அல்ல அமெரிக்க இலக்கு மாறாக அதனை பலவீனப்படுத்தி, இருப்பதையும் இல்லாதொழித்து, தனது எண்ணெய்ப்பசியை தீர்த்துக்கொள்வதே முதன்மையானது.
இஸ்ரேலின் முதன்மை இலக்கு முடியுமானால் ஈரானை முற்றாக அழித்து பலவீனப்படுத்தி, மத்திய கிழக்கில் தனது முதன்மை எதிரியை அழிப்பது. ஹாமாஷ், ஹிஸ்புல்லா, ஹுத்தி இராணுவ கட்டமைப்புக்கு ஈரான் வழங்குகின்ற ஆதரவு விநியோக சங்கிலியை அறுப்பது. உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்குவோம் என்ற ஈரானின் சிந்தனைக்கு பதிலடியாக ஈரானேயே இல்லாமல் செய்வது. இந்த ஈரான், இஸ்ரேல் மிகைப்படுத்தப்பட்ட இலக்குகள், பூகோள அரசியல் ஜதார்த்தங்கள் இந்த போரின் வெற்றி தோல்வியை மதிப்பிட உதவக்கூடும்.
“போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற வார்த்தைகள் மூலம் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் பிரகடனப்படுத்தப்பட்ட “சமாதானத்திற்கான(?) போர்ச் சுமையை நாற்பது ஆண்டுகள் சுமந்தவர்கள் இலங்கை மக்கள். காலப்போக்கில் அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான 2011 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் இதன் மகுடம் “பயங்கரவாதத்திற்கு” எதிரான போராக மாற்றப்பட்டது. இதனூடான சர்வதேச சட்ட மாற்றங்கள் மானிட நேயத்திற்கு எதிரான சகல போர் முழக்கங்களையும் அங்கீகரிப்பதாக-நியாயப்படுத்துவதாக அமைந்தது. ஜே.ஆரின் கொழும்பு வாரிசுகளாக பின்வந்த அரசதலைமைகள் அத்தனையும் அதே பாதையில் பயணித்தன.
மறுபக்கத்தில் தனிநபர் வழிபாட்டு, போர்ப்பிரச்சார ஆயுத, இராஜதந்திர அரசியலில் தமிழ்த்தேசிய ஆயுதப்போராட்டம் தோற்றுப்போனது. ஆனால் கொழும்பு வென்றதா? என்றால் அதுவும் இல்லை. ஆயுத ரீதியில் வெற்றியாகத் தெரிந்தாலும் போர் எச்சங்கள் இன்னும் கொழும்பை ஆட்டுகின்றன. கொழும்பு நடாத்திய போர் தமிழீழ இலக்கை தடுத்தது- பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தியது என்றாலும் அது கூறிய சமாதானத்திற்கான சமூக, பொருளாதார, அரசியல் இலக்கை அதனால் எட்ட முடியவில்லை. இன்னொரு வகையில் தென்னிலங்கையில் சட்டவாட்சி நாளாந்த துப்பாக்கி வேட்டுக்களால் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. போதைவஸ்து, ஊழல், பாதாளக்கோஷ்டிகளின் பயங்கரவாதம் தொடர்கிறது. நடந்திருப்பது வெறும் களமாற்றம் மட்டுமே. பல சந்தர்ப்பங்களில் கடந்த கால போர் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் முன்னாள் படைச் சிப்பாய்கள் முதல் படை அதிகாரிகள் வரையும், மேலும் போர்க்குணாம்ச அணுகுமுறையும் தென்னிலங்கையின் இன்றைய நிலைக்கு பின்னால் நிற்கின்றன.
மேற்குலகின் ஆதிக்க சக்திகளான அமெரிக்க -ஐரோப்பிய கூட்டணி, நேட்டோ என்பன ஒன்றிணைந்து இந்த போர்களை நடாத்தினர். இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்த போர்கள் மற்றோரு கட்டத்தை அடைந்து தேடியெடுக்கப்பட்டதும், சோடிக்கப்பட்டதுமான அணுவாயத வேட்டை, ஜனநாயக மீட்பு, சட்டத்தின் ஆட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கு ஆதரவு கைப்பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துதல், சர்வாதிகாரத்திற்கு எதிரான போராக உருமாற்றம் செய்யப்பட்டது. இன்று இரு வாரங்களுக்கும் மேலாக தொடரும் வளைகுடாப்போரில் இந்த இடத்தில் – ஹர்மூஸ் ஜலசந்தியில் சர்வதேசம் வந்து சிக்கியிருக்கிறது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேல் போர்ப்பிரகடனம் உலகப் பொருளாதாரத்தின் அடி வயிற்றில் அடிக்க ஆரம்பித்து விட்டது.
என்ன காரணங்களை கூறி போரின் பங்காளிகள் நியாயப்படுத்தினாலும், சமகால டிஜிட்டல் தொழில்நுட்ப, சமூக ஊடக பிரச்சாரப்போருக்கு மத்தியில், இராணுவ, சமூக, பொருளாதார, அரசியல் பலம், பலவீனங்களுக்கு மத்தியில் போரின் “வெற்றியை” தீர்மானிப்பவை எவை என்பதும், “வெற்றி” என்பதன் வரையறை என்ன என்பதுமே ஆராயப்படவேண்டிய முக்கிய அடிப்படைகளாகின்றன. சுருக்கமாகச் சொன்னால் போருக்குகான இலக்கை அடைவது வெற்றிக்கான மதிப்பீட்டின் முக்கிய குறிகாட்டி. இராணுவ பலம் கொண்ட ஒரு வல்லரசு, ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் புறம் தள்ளி இறைமையுள்ள தேசம் ஒன்றின் மீது குண்டு மழைபொழிந்து அடித்து நொருக்கி, அந்த தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை நாசமாக்கியும், குடிமக்கள் -பெண்கள்-குழந்தைகளை கொன்று குவித்து ஒரு நாட்டை அடி பணியவைத்து, தனது இலக்கை அடைந்துவிட்டதாக பிரகடனம் செய்யமுடியும். இதற்கு பெயர் வெற்றியா?
ஏகாதிபத்தியக் கூட்டணிகளுக்கு எதிராக ஒரு நாடு ஒப்பீட்டளவில் சகல பலவீனங்களுடனும், பற்றாக்குறையான போர் வளங்களுடனும், பொருளாதார, அரசியல் தடைகளுக்கு மத்தியிலும் போராடினாலும் இறுதியில் வல்லரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம். ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயக மீட்பு, சர்வதிகார ஒழிப்பு….. என்றெல்லாம் போருக்கான உண்மையான காரணம் கூறப்படாமல் பலவீனமான மறு தரப்பு தோற்றுவிட்டதாக பிரகடனம் செய்யப்படலாம். இது உண்மையிலேயே ஒரு தேசத்தின் “தோல்வியா?”.
உள்நாட்டு போர்- கிளர்ச்சிகளில் இந்த வெற்றி/தோல்வி ஓரளவு மதிப்பிடப்படக்கூடியதாக இருப்பினும், பிராந்திய, சர்வதேச போர்களில் இந்த வரையறையை அடைவது இலகுவானதும் அல்ல, சரியான மதிப்பீடும் அல்ல. போர்த்திறன் என்பது வெறுமனே இராணுவ பலம், அச்சுறுத்தல், இராஜதந்திர அழுத்தங்களினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோற்றார். எதிர்த்தரப்பு வெற்றி பெற்றது என்று கூறினாலும் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றது ஹிட்லரின் இனப்படுகொலையில் அழிந்த யூதர்கள் தான். அந்த அழிவு யூதர்கள் ஒரு பலமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சக்தியை வழங்கியது. மேற்குலகம் எந்த தார்மீக, கேள்வியும் எழுப்பாமல் கண்களை மூடிக்கொண்டு இஸ்ரேலின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது. ஆனால் இஸ்ரேலியர்கள் நிம்மதியாக தூங்கமுடியாத நிலையில், சுற்றவர எதிரிகளை சம்பாதித்து இருக்கின்ற நிலையில், இஸ்ரேல் என்ற நாடு உருவாகி இருப்பது மட்டும் வெற்றியல்ல என்பதை நிரூபிக்கிறது. இந்த இடத்தில் இஸ்ரேல் இந்த வெற்றியை எப்படி அடைந்தது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல.
வியட்நாமில் அமெரிக்கா தோற்றது. அமெரிக்காவினால் அழிக்கப்பட்ட வியட்நாம்- வடக்கு, தெற்கு வியட்நாம்களையும் இணைத்துக்கொண்டு இன்று தெற்காசியாவின் முக்கிய ஒரு தேசமாக எழுந்து நிற்கிறது. அமெரிக்காவின் போருக்கான இலக்கு இங்கு அடையப் படவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஒரு வல்லரசல்ல சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா என்ற இரு வல்லரசுகளும் தோல்வியடைந்தன. அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யா வெளியேற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது என்ற ஆப்கானிஸ்தானின் இலக்கு. பின்னர் அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சிக்கு எதிராக தலீபான் ஆட்சியை மீள நிறுவியது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்தும் தனது இலக்கை அடையமுடியாமல் தலீபான்களுக்கு எதிராக தோற்றுப்போனது அமெரிக்கா. ஏகாதிபத்தியத்தை ஆப்கான் மண்ணில் இருந்து வெளியேற்றுவது என்ற இலக்கில் தலீபான்கள் வெற்றி பெற்றார்கள்.
அரபுலகில் ஈராக், லிபியாவில் அமெரிக்காவின் யுத்தம் அதன் தலைமைகளான சதாம் ஹுசைன், கடாபி ஆகியோரை வீழ்தியிருக்கலாம், இந்த ஆட்சி கவிழ்ப்பில் இருநாட்டு தலைவர்களினதும் சிலை உடைப்பை குறிகாட்டியாக்கி கொண்டு வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியுமா? ஈராக்கினதும், லிபியாவினதும் போரில் அமெரிக்கா சொன்ன அணுவாயுதம், ஜனநாயகம், சர்வாதிகாரம், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் எவ்வளவுக்கு அடையப்பெற்றுள்ளது.ஆட்சியாளர்களை அகற்றுவது மட்டும் சுய இலாப அரசியலுக்கும், மறைமுகமான பொருளாதாரமும் ஒரு போரின் இலக்காக இருந்தால் முரணான தலைமைகளுக்கு பதிலாக இன்னொருவரை கதிரையில் அமர்த்தினால் போரில் வென்றதாகிவிடுமா?
பலஸ்தீனம் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. ஹாமாஷை அழித்து விட்டதாக சொன்ன இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்று ஆயுத ஒப்படைப்பை கோருகின்றன. ஆக, இதுவரை அழிக்கப்பட்ட பங்கர்கள், சுரங்கப்பாதைகள், ஆயதக்கிடங்குகள், ஹாமாஷ் உறுப்பினர்கள் என்று – வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் கதி என்ன? இன்னும் ஹாமாஷின் இணக்கம் இன்றி பலஸ்தீனத்திற்கு தீர்வொன்றை காணமுடியாத நிலையில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணி இருக்கும் நிலையில் வென்றது யார்? தோற்றது யார்? அத்தனை அழிவுகளையும் தாண்டி, இன அழிப்பையும் தாண்டி பலஸ்தீன மக்கள் தங்கள் இலக்கில் தளரவில்லை, விடுதலை வேட்கைக்கான பற்றை சிறிதளவும் இழக்கவில்லை என்றால் வென்றது இஸ்ரேலா? பலஸ்தீனமா?
இப்போது இந்த வரலாற்று பாணியில் ஈரான் மீதான அடக்குமுறை யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளிப்படையான ஆதரவுடன் , நேட்டோவின் மறைமுகமான முதுகுப்பக்க பலத்துடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த போர் இது. இதில் அமெரிக்க கூட்டணியின் இலக்கு ஈரானில் ஆட்சிமாற்றம். அணுவாயுத அழிப்பு வெறும் கண்துடைப்பு. ஆனால் அந்த ஆட்சி மாற்றம் எவ்வாறு அமையும், பிரதியீடு யார் என்பதில் ஈரான் எதிராளிகள் இடையே இன்னும் தெளிவில்லை. இந்த போரின் ஆரம்பத்தில் இஸ்லாமிய புரட்சியின் மூலம் பதவி நீக்கப்பட்ட ஷா மன்னரின், அமெரிக்கா வாழ் மகனின் பெயருக்கு இருந்த ஆதரவு புகலிடநாடுகளிலும், ஈரானிலும் காணாமல் போய்விட்டது. பல ஆய்வாளர்கள் ஷாவின் காலத்து ஆட்சியை எதிர்மறையாக இன்னும் நினைவு கூறுகிறார்கள். இஸ்லாமிய புரட்சிகர ஆட்சியதிகாரத்திற்கான பொருத்தம் மாற்றுத்தலைமையை ஈரானுக்கு உள்ளேயும், வெளியேயும் அமெரிக்காவினால் இன்னும் அடையாளப்படுத்த முடியவில்லை. இது ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க இலக்கின் மிகப்பெரிய பலவீனம். கொமேய்னியின் கொலைக்கு பின்னர் ஈரான் அமைதியாக இருக்கிறது. இது புயலுக்கு முன்னான அமைதியா…?
வளைகுடாவில் அமெரிக்கா எதிர்பாராத வகையில் ஈரான் அமெரிக்க நட்பு நாடுகள் மீது நடாத்திய/ நடத்தும் தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தில் பொரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹர்முஸ் பயணப்பாதை இன்னும் ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பது பிட்டுக்கு மண்சுமந்த கதை போன்று கருவறையில் வளரும் கருவைக்கைகூட தாக்கும் நிலையில் உலகப்பொருளாதாரத்தை அசைத்து இருக்கிறது. வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவை அமெரிக்காவிடம் இருந்து விலகியிருப்பதை காட்ட முயற்சிக்கின்றன, ஆனால் ஈரான் அதை நம்பத் தயாரில்லை.
இந்த போரில் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்களோ, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களோ, ஈரான் அதி உயர் மதத்தலைவர் கொமேய்னியின் இழப்போ, கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் தொகையோ போரின் முடிவை தீர்மானிக்க போதுமானவை அல்ல. மாறாக ஹர்முஸ் பாதை யாரின் கட்டுப்பாட்டில், எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது என்பதும், தரை வழியாக படை நகர்வு மேற்கொள்ளப்பட்டால் அது ஈரானிய கிளர்ச்சியாளருக்கு வழங்குகின்ற நம்பிக்கை மற்றும் உத்வேகமுமே தீர்மானிக்கும் சக்திகளாக அமையும். இதில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானியர்களின் புரட்சிகர சிந்தனைக்கு வழங்குகின்ற புதிய ஜனநாயக, புதிய கலாச்சார ….. மாற்றீடு என்ன என்பதும் முக்கியமானது.
