அசாத் மௌலானா(2) ஜெனிவாவில் நடந்தது என்ன.?

அசாத் மௌலானா(2) ஜெனிவாவில் நடந்தது என்ன.?

(மௌன உடைவுகள் – 46)

       — அழகு குணசீலன் —

இலங்கை நாடாளுமன்றத்தில் சனல் 4 ஆவணப்படம் எதிரொலித்தவேளையில் ஜெனிவாவிலும் எதிரொலித்திருக்கிறது.

மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிகழ்வு வரிசையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான இந்த ஆவணப்படம்

2024  செப்டம்பர் 21 மாலை திரையிடப்பட்டது. சர்வதேச இராஜதந்திரிகள், மனித உரிமைகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மற்றும் தெரிவுசெய்யப்பட்ட அழைப்பாளர்களுக்கான நிகழ்வு இது.

45 நிமிடங்களைக்கொண்ட இந்தப் படம், சனல் 4 ஒளிபரப்பிய ஆவணத்தையும் விடவும் வேறு காட்சிகளையும் உள்ளடக்கி இருந்தாக நிகழ்வில் பங்கேற்ற மனிதாபிமான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். உயர்ந்த தொழில்நுட்ப தரத்தினை கொண்டதாகவும் இருந்துள்ளது.

இப்போது அந்த அரசியல் செயற்பாட்டாளர் பேசுகிறார்…. கேட்போம்…!

[ படம் முடிந்த கையோடு திரையில் சனல் 4 தரப்பினரிடம் கேள்வி கேட்பதற்காக நேரம் தரப்பட்டது.  ஒருசில கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று சோமாலியா தொடர்பானது.

கேள்வி : சோமாலியாவில் மனித உரிமைகள் நிறையவே மீறப்படுகின்றன. கொலைகள், சண்டைகள் இடம்பெறுகின்றன. இவற்றிற்றிற்கு பின்னணியில் சர்வதேசநாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத சனல் 4 இந்த ஆவணத்தை தயாரிக்கவேண்டிய அவசியம் என்ன?

பதில்: ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் 48 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் சர்வதேச ரீதியில் இது முக்கியமானது. இது ஒரு  சர்வதேச விவகாரம் .அதனால்தான்…..

சனல் 4 கேள்வி நேரம் முடிவடையும் நிலையில் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத நிலையில் அசாத் மௌலானா திரையில் தோன்றுகிறார்.

தனக்கு அறிமுகமானவர்கள் அங்கு  வந்து இருப்பதை அவதானித்த அவர். எனது நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று   சிரித்தபடி அவர்களைப் பார்த்து கையசைத்தார். கூட்டத்தில் இருந்த அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களும் கையசைத்தனர் .

இப்போது அசாத்துடனான கேள்வி நேரம்……!

சுனந்த தேசப்பிரிய:  இந்த ஆவணத்தை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் சர்வதேச விசாரணைக்குழு முன் சாட்சியம் அளிப்பீர்களா…?

அசாத் : ஆம். என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கோத்தபாய, சுரேஷ் அலி, பிள்ளையான் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் குரல் பதிவுகள் உள்ளன. நான் சர்வதேச விசாரணைக்குழு முன் மாத்திரமே சாட்சியமளிப்பேன்.

அடுத்த பாகிஸ்தான் – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கேள்வி ஒன்றைக் கேட்ட பின்னர், தான் இத்தாலியில் இருந்து வந்துள்ள  ஊடகவியலாளர் என தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திய அந்த நபர் கேள்வி கேட்கிறார்….

 இலங்கையரான  அவர்  சிங்களத்தில் ஒரு கேள்வியை அசாத்திடம் ஆரம்பிக்கிறார்……..

அடுத்த நிமிடம்……

அசாத்: எனக்கு தொடர்பில் இடைஞ்சல் ஏற்படுகிறது. உங்கள் கேள்வி தெளிவில்லாமல் உள்ளது…..?

தொடர்பு  முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. அசாத் திரையில் திடீரென காணாமல் போகிறார்….].

இனி மௌன உடைவுகள்…..!

அசாத் சிங்களம் சரளமாகப் பேசக் கூடிய ஒருவர் அவருக்கு மொழிரீதியான புரிதல் ஒரு பிரச்சினை அல்ல. அதேவேளை ஐ.நா. வளாகத்தில் இப்படி ஒரு தொழில்நுட்ப கோளாறு…..? ஏற்பட்டதும் சந்தேகத்தை   ஏற்படுத்துகிறது. முன் பின் அறிமுகமற்ற இலங்கையர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதா…? அல்லது அசாத் அவரை யார் ? என இனம்கண்டு தானே தொடர்பை துண்டித்தாரா…?  போன்ற கேள்விகளை இங்கே கேட்கவேண்டியதேவை ஏற்படுகிறது.

சனல் 4 , சோமாலியா தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலும் கவனிக்கத்தக்கது. மௌன உடைவுகள் 44. குறிப்பிட்ட விடயம் இந்த பதிலால் உறுதிசெய்யப்படுகிறது. இந்த ஆவணத்தின் நோக்கம் அசாத்தின் அரசியல் தஞ்சகோரிக்கையை சர்வதேசம்  பயன்படுத்தி ஐ.நா. மட்டத்திலான அரசியல் அகதி அந்தஸ்த்துக்கு அவருக்கு வலுச்சேர்ப்பது.

இப்போது சர்வதேச விசாரணைக்கு வலுசேர்க்கும் வகையில் இது வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டது, அதனால் சர்வதேச விசாரணை தேவை என்ற கருத்துருவாக்கத்தை  ஏற்படுத்துவது. சனல் 4 இன் பதிலும், சர்வதேச விசாரணைக்கு மட்டுமே சாட்சியமளிக்க தயார் என்ற அசாத்தின் பதிலும் ஒரு புள்ளியில் நேர்கோட்டில் சந்திக்கின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தில் இந்தியா குறித்து பேசப்படுகிறது. இந்திய புலனாய்வுத்துறைக்கு இத்தகவல்கள் எப்படி கிடைத்தன? எங்கிருந்து கிடைத்தன? .விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “அபு ஜிந்” என்ற பெயருக்கு உரியவர் யார்? இலங்கையரா? இந்தியரா?  அபுஜிந் அந்த நபரின் உண்மையான பெயரா? குறியீட்டு பெயரா?  அவரோடு தகவல்களை பரிமாறியவர்கள் இவரை அறிவார்களா…?  இந்த கேள்விகளுக்கான பதில்களை நாடாளுமன்றம் தேடுகிறது. இந்திய பிரதமர் மோடியிடம் இது விடயத்தில் ஒத்துழைப்பு கோருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

 மறுவளத்தில் இந்தியா தொடர்பாக இவ்வளவு பேசப்படுகின்றபோதும் இந்த ஆவணத்தில் அசாத் இது பற்றி எதுவும் பேசவில்லை. இதன் பின்னணியில் ஏதாவது புதையல் இருக்கிறதா? இவை எல்லாம் தோண்டப்பட வேண்டியவை. அசாத் உட்பட சர்வதேச விசாரணைக்கு தயார் என்று கூறுகின்ற அனைத்து தரப்புக்கும் உள்ள பொறுப்பு இந்த புதையலையும் தோண்ட உதவுவதே.

அசாத்தின் அரசியல் தஞ்ச கோரிக்கை முதல் நிலையில் சுவிஸ் அதிகாரிகளாலும், இரண்டாம் நிலையில்  ஐரோப்பிய ஒன்றியத்தினாலும்  செங்கன், டப்ளின் உடன்பாடுகளின்படி கையாளப்படவேண்டியது. ஆனால் இந்த உடன்பாட்டு சட்ட முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக அதி உயர் மூன்றாம் நிலை ஐ.நா. அகதிகள் அமைப்பு கையாளுவதாக தெரியவருகிறது. அதற்கான வாய்ப்பை இந்த ஆவணம் வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அசாத்துக்கு இருந்த சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் செயற்படும் சர்வதேச நிறுவனங்கள் சுவிஸில் அசாத்துக்கு ஏற்படுத்திக்கொடுத்த தொடர்பு மார்ட்டின் சுற்ச்சிங்கர். ஓய்வு பெற்ற இராஜதந்திரியான இவர் இலங்கை, நேபாள சமாதான முயற்சிகளில் பின்னணி வகித்தவர். சுவிஸ் தமிழ் டயஸ்போரா அரசியல் செயற்பாட்டாளர்களோடு நீண்ட கால உறவைக்கொண்டவர்.  இவரின் அனுசரணையில் தான் இதுவரையான அனைத்தும் நடந்தேறியுள்ளன.ஜெனிவா நிகழ்விலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

நேபாள சமாதான முயற்சி  சாதகமாக முடிந்த போது, இலங்கையில் இது சாத்தியப்படவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. இது குறித்து இப்பத்தியாளரிடம்  பல முறை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவரது கவலைக்கும், சமாதான முயற்சிகளில் அவர் காட்டிய ஈடுபாட்டிற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

1983 இல் இனக்கலவரகாலத்தில் முதுகுப்பை (BACKPACK) உல்லாசப் பயணியாக மலையகத்தில் சிக்கியவர். ஊரடங்கு சட்டம் முதல் தடவையாக தளர்த்தப்பட்டபோது கண்டியில் இருந்து கிழக்கில் பாதுகாப்பு தேடியவர். இலங்கை அரசாங்கம் – புலிகள் – மாற்று இயக்க அரசியல் அவருக்கு “தளதண்ணி”. 1983 கலவரத்தை நேரடியாகப் பார்த்தவர், அனுபவித்தவர் என்ற வகையில் ஈழத்தமிழர்கள் மீதான அதீத அக்கறை அவருக்கு இருந்தது. எனினும் காலப்போக்கில் புலிகளின் அரசியலுக்கு பின்னால் போகின்ற ஒருவராகவே அவரும் மாறியிருந்தார்.

இவ்வாண்டு கறுப்பு யூலை நினைவாக மார்ட்டின் எழுதிய கட்டுரை ஒன்று சுவிஸ் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. அதில் தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். 1983 இல் 9 வயதாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 19 வயதாக இருந்த எம்.ஏ. சுமந்திரன் ஆகிய  கீரியும்,பாம்புமான இரு தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளின் அனுபவங்களும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது குடும்பங்களுக்கு கொழும்பில் சிங்களக்குடும்பங்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாத்திற்கான அகதி அந்தஸ்து அவரை ” நாடற்றவர்” ஆக்கும். இதன் அர்த்தம் அவர் எந்த ஒரு நாட்டினதும் குடிமகன் அல்ல. அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கான பயணப்பத்திரம் (TRAVEL DOCUMENT) அவருக்கு வழங்கப்படும்.  ஈழத்தமிழர்கள் இதை நீலப்புத்தகம் / நீல பாஸ் போர்ட் என்று அழைப்பது வழக்கம். இதில் இலங்கையை தவிர்த்து மற்றைய நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் பயண ஒழுங்கு விதி முறைகளைப்பின்பற்றி அவர் பயணிக்கமுடியும். இது சுவிஸ் பிரசைகளுக்கான  சிவப்பு கடவுச்சீட்டு அல்ல. சுவிஸ் குடியுரிமைக்கான பயணம் ஒரு நீள்பாதை.பூர்த்தி செய்யப்படவேண்டிய நிபந்தனைகள் அந்தப் பாதையில் வரும் மேடும் , பள்ளமும் .

இப்படி இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் பலர் தங்கள் குடும்பங்களை குடியமர்த்திவிட்டு “எனக்கு இப்போது எந்ததரப்பாலும் ஆபத்து இல்லை” என்று கூறி தஞ்சக்கோரிக்கையை வாபஸ் பெற்று நாடுதிரும்பிய நிகழ்வுகளும் உண்டு. இந்த  தெரிவு செய்யப்பட்ட இரு உதாரணங்களுக்கும் அசாத் விவகாரத்திற்கும் ஏதோ ஒரு வகையில்  ஒரு தொடர்புண்டு.

“சிவராமை கொலை செய்த புளொட் அமைப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைத்தது தவறு” என்று உரத்துக் கூறும் ஒரு ஊடகவியலாளரும், கருணாவின் பிரிவுக்கு முன்னர் அசாத்மௌலானாவை உதவியாளராக கொண்டிருந்த அரசியல்வாதி ஒருவரும்  அரசியல் அகதி அந்தஸ்த்தை மீளக்கையளித்து இலங்கையில் போதிய பாதுகாப்பு இருக்கிறது என்று திரும்பியவர்கள்.

ஈஸ்டர் தாக்குதல் , சாட்சியாக(?), சந்தேகநபராக(?), இடைத்தரகராக(?)  எதுவாக இருந்தாலும் ஒரு ஐரோப்பிய அகதிவாழ்வை அசாத்துக்கு கொடுத்திருக்கிறது.  ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வு இருளாகவே இருக்கிறது. இதனால்தான் சட்டம் ஒரு இருட்டறையோ…..?  அதற்குள் குப்பி விளக்கில் நீதியைத்தேடுகிறார்கள் அவர்கள்.