— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
பாராளுமன்றத்தில் ‘பழைய’ மற்றும் ‘புதிய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர்களில் அங்கம் வகிக்கும் – தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்சி அடிப்படையில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படும் எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களை 09.08.2023 அன்று சந்தித்து மாகாண சபைக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் குறித்துப் பேசியதுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணை குழு ஒன்றை நியமிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நலன் மீது கொண்ட அக்கறை காரணமாகச் செயற்படுவதாக இச்சந்திப்பு தோற்றம் காட்டினாலும், உண்மையில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ் மக்களை ஏமாற்றும்-தமிழ் மக்களை முட்டாளாகக் கருதும் அவர்களது வழமையானதொரு அரசியல் நாடகம்-பம்மாத்து ஆகும்.
இதனை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு மாகாண சபைகளுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் குறித்த விடயத்தை அதன் ஆரம்பத்திலிருந்தே நுணுகி ஆராய வேண்டும். அதனையே இப்பத்தி செய்ய முனைகிறது.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக 1987 நவம்பர் 14 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற 13 ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவையும் (மத்திய அரசு) மாகாண பொலிஸ் ஆணைக் குழுவையும் நியமிக்கும் ஏற்பாடுகள் இருந்தன. மாகாணமொன்றுக்கு முதலமைச்சரின் சிபார்சின் பேரில் அவரது சம்மதத்துடன் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரொருவரை மத்திய அரசின் பொலிஸ் மா அதிபர் நியமிக்கும் ஏற்பாடும் இருந்தது. இதன் அடிப்படையில்தான் அன்று தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஒற்றை மாகாணமாக இருந்த வடகிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகத் திரு.த. ஆனந்தராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்.
உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மட்டம் வரைக்குமான பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, ஒழுக்காற்று நடவடிக்கை, பதவி நீக்கல் அதிகாரங்கள் மாகாண சபைக்குப் (மாகாண பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்குப்) பகிரப்பட்டிருந்தது.
ஆனால், அப்போதைய வட கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த மாகாண அரசின் ஆட்சி அதிகாரத்தில் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) இருந்ததால், மாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்களைப் பிரயோகிப்பதைத் தடை செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் உறவு கொண்டாடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிரேமதாசாவைக் கேட்டுக் கொண்டது. புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கப் பொலிஸ் ஆணைக் குழுச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தேசிய மற்றும் மாகாண பொலிஸ் ஆணை குழுக்களை நியமிக்கும் திகதி ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் போதே 13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரங்கள் அமுலுக்கு வருமாறு ஆக்கப்பட்டது. அதாவது, இப் பொலிஸ் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் விடயத்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா தன் நிறைவேற்று அதிகாரத்திற்குள் கையகப்படுத்திக் கொண்டார். விடுதலைப்புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க அத்திகதியைத் தீர்மானிக்காமல் அதனை இழுத்தடித்தார். அதனால் மூல 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவோ மாகாண பொலிஸ் ஆணை குழுவோ நியமிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழர் தரப்பே (தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே).
இந்தத் தகவலைத் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் புலிசார் தமிழ் ஊடகங்களும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும் ‘இருட்டடிப்பு’ ச் செய்து வந்தன. இதனால் தமிழ்ப் பொது மக்களுக்கு உண்மைகள் தெரியவில்லை. ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல் இப்போது குட்டு வெளிப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுடனான மேற்படி சந்திப்பின்போது, கடந்த 33 வருடங்களாகத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் மறைக்கப்பட்ட இந்த ரகசியத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் (தமிழரசுக் கட்சிப்) பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சரின் காதில் மெல்ல சத்தம் சந்தடியின்றிப் போட்டு வைத்துள்ளதாகக் ‘காலை முரசு’ மின்னிதழ் 11.08.2023 அன்றைய ‘இரகசியம் பரகசியம்’ பத்தியில் குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் எதிர்த்த-தாங்கள் அதிகாரத்தில் இல்லாத (வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக வேனும் இணைந்த) மாகாண சபை, பொலிஸ் அதிகாரங்களைப் பிரயோகிப்பதைத் தடை செய்ய வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்மறையான-தமிழ் மக்களின் நலன்களின் மீது ஆத்மார்த்தமான அக்கறையில்லாத சுயலாப சிந்தனையே, மாகாண சபைகளுக்குரிய பொலிஸ் அதிகாரங்களை வழங்காமல் தடை செய்வதற்கான-கிடப்பிலே போட்டு இழுத்தடிப்பதற்கான வாய்ப்பை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படாமல் போனமைக்கான காரணத்தை- ‘ரிஷிமூலத்தை’ த் தமிழ் மக்கள் இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகத் தமிழர்களே (தமிழீழ விடுதலைப் புலிகளே) இருந்துள்ளனர் என்பதை யாரிடம் சொல்லி அழுவது. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருந்தது/இருக்கிறது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியவரும் போதுதான் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் மக்கள் நலன் சார்ந்த ‘மாற்று அரசியல்’ கைகூடும். இல்லையேல் ‘பழைய குருடி; கதவைத் திறடி’ கதைதான் தொடர்ந்தும் இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்திற்குப் பின்னர் மாகாண பொலிஸ் அதிகாரங்களுக்கு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரப் பத்தியிலே பார்க்கலாம்.