மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 

மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 

 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- 

   பயங்கரவாத தடைச்சட்டத்தைப்  பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் கொண்டுவந்திருக்கும்   பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை தோன்றியிருக்கிறது. அதனுடன் கூடவே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பிலும் பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

   பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும்  ( Anti — Terrorism Bill ) இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் (Online Safety Bill ) அரசாங்கம் முறையே செப்டெம்பர் 15  ஆம் திதியும் 18 ஆம் திகதியும் வர்த்தமானியில் பிரசுரித்திருந்தது.

   கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் பிரசுரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு உள்நாட்டு அரசியல் கட்சிகள், சட்டத்துறை மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள்,  சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் உட்பட பரந்தளவிலான தரப்புகளிடம்  இருந்து கிளம்பிய கடுமையான எதிர்ப்புக்களை அடுத்து அதை வாபஸ் பெற்றுக்கொண்ட அரசாங்கம் இப்போது வெளியிட்டிருப்பது அதன் மீளாய்வு செய்யப்பட்ட வடிவமேயாகும்.

  புதிய சட்டமூலத்தை ஆய்வுசெய்த சட்டத்துறை நிபுணர்களும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும்  முன்னைய வரைவில்  சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் புதிய வரைவு  முன்னென்றும் இல்லாத வகையில் மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கக்கூடியதாக நிறைவேற்று அதிகாரத்தை விரிவாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது என்று  சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

   மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறைக்கு இருக்கும் அதிகாரங்களை அபகரிக்கக்கூடியதாக  சட்டமூலம் அமைந்திருக்கிறது என்று கூறும் அவர்கள், இது பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டால் தங்களை ஆட்சி செய்பவர்களுடன் இலங்கை மக்கள் கொண்டிருக்கும் சமூக உடன்பாட்டில் (Social Contract ) உள்ள அதிகாரச் சமநிலை கணிசமானளவுக்கு மாற்றமடையும் என்பதுடன் பயமுறுத்தி ஆட்சிசெய்வதற்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கும் மக்களுக்கு இருக்கும் உரிமையை நசுக்கி எதிரணி அரசியல் சக்திகளை ஒடுக்குவதற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வசதியை  ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

   குறிப்பாக, நவீன  இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் தோன்றியிருக்கும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நேரத்தில் இத்தகைய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது பெரும் ஆபத்தாக அமையும் என்பதே அவர்களின் உறுதியான கருத்தாக இருக்கிறது.

  மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சடடமூலத்துக்கு கிளம்பிய விமர்சனங்களை  அடுத்து அதை மீளாய்வு செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களின் அக்கறைகளை பகிர்ந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சட்டமூலமும் முன்னையதைப் போன்றே வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் கடப்பாடு மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான உறுதிப்பாடுகள் இல்லாததாகவே இருக்கிறது. 

    இத்தகைய ஒரு சட்டமூலத்துக்கான தேவையின் பின்புலம் மற்றும் நியாயப்பாடு குறித்து விளக்கத்தைத் தரக்கூடிய அறிக்கை எதையும் அரசாங்கம் வெளியிடவில்லை. வர்த்தமானியில் சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கு முன்னதாக பரந்தளவிலான கலந்துரையாடலுக்கு  வாய்ப்பு வழங்கப்படாத முன்னய தவறு மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது என்பதே பரவலான விமர்சனமாக காணப்படுகிறது.

  முன்னைய சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த விசாலமான வரைவிலக்கணம்  குறித்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. 

  பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது ஒரு  சர்வதேசப் பிரச்சினை. பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட உலகளாவிய கருத்தொருமிப்பை எடடமுடியவில்லை. 

   மார்ச்  சட்டமூலத்தில் இருந்ததைப் போன்றே தற்போதைய சட்டமூலத்திலும் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணமும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களும் மிகவும் பரந்தளவிலானலானவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அரசாங்கம் அதற்கு  எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் கூட பயங்கரவாதச் செயல்கள் என்று அர்த்தம் கற்பிப்பதற்கு வசதியாகவே இந்த வரைவிலக்கணம் அமைகிறது. முன்னர் இது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அராங்கம் அதில் மாற்றத்தைச் செய்யவில்லை.

    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் புதிய வடிவம் மக்களின் குடியியல் மற்றும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் நேரடியான ஒரு அச்சுறுத்தலாகவே அமைகிறது. அது  பயங்கரவாத தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act) விடவும் ஆபத்தானதாகவும் குறைபாடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதே பொதுவில் உள்நாட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் விமர்சனமாக  இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு  செய்வதை தாமதிக்க முடியாது என்கிற அதேவேளை அதற்கு பதிலாக தற்போதைய வடிவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது அதற்கு தீர்வாக இருக்கமுடியாது என்பதுவும் அவற்றின் நிலைப்பாடாக இருக்கிறது.

  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைப் போன்றே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் பொதுவெளியில் விவாதத்தை  மூளவைத்திருக்கிறது.

    சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த சட்ட மூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகிறது.

  ஆனால், இது அரசியல் தொடர்பாடல் நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்களும்  சிவில் சமூக அமைப்புகளும்  சுட்டிக்காட்டுகின்றன.

  இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் இணையத்தள பொருளடக்கங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிக்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை நியமிக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. இந்த உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார். எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் இணையப் பிரசுரங்களையும் தடைசெய்வதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஆணைக்குழு, குற்றச்செயல்களுக்கு சிறைத்தண்டனையை சிபாரிசு செய்யவும் முடியும். 

  இந்த சட்டமூலத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் இணையவெளி ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கமுடையது என்று பெற்றோர்கள் தவறாக நம்புவதற்கு வழிவகுக்கிறது என்று கூறியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சட்டமூலம் உண்மையில் சமூக ஊடகங்களினால் கேலி செய்யப்படுபவர்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

   “பல்வேறு விமர்சனங்களில் இருந்து அரசிய்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தின் நோக்கமாகும். சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதற்காகவே சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதற்கு புதிய ஒரு சட்டம் தேவையில்லை. இணையவெளிக் குற்ற்றச்செயல்களை கையாளுவதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதுமானவை.

  “இத்தகைய ஒரு சட்டத்தைக் கொண்டுவருமாறு எவரும் கேட்கவில்லை. இணையவெளியில் கேலி செய்யப்படுபவர்களே இதை நடைமுறைப்படுத்துமாறு கேட்கிறார்கள். கம்பியூட்டர் குற்றச் சட்டம் போன்று தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானவை. இந்த சட்டங்களில் தவறுகள் அல்லது குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சீர்செய்வதற்கு திருத்தங்களைக் கொண்டுவரமுடியும். புதிய சட்டத்துக்கு எந்த தேவையும் கிடையா” என்று பீரிஸ் கூறுகிறார்.

   தற்போதைய வடிவில் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் குறிப்பாக அதில் கூறப்பட்டுள்ள ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களின் சுயாதீனம் குறித்து வலுவான சந்தேகத்தைக் கிளப்புகிறது என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

   இந்த சட்டமூலத்தைக் கொண்டுவரும் விடயத்திலும் அரசாங்கம் ஒரு பொது விவாதத்துக்கு அல்லது பரந்தளவிலான கலந்தாலோசனைக்கு வாய்ப்பைத் தரவில்லை. பொதுவில் இலங்கை அரசாங்கங்களினால்  சட்டங்கள் கொண்டு வரப்படும்போது பரந்தளவிலான கருத்தாடலுக்கு வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பது வழமையாகிவிட்டது.

  சட்டவாக்கச் செயன்முறைகள் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அன்றி நாட்டினது மக்களினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். அந்த செயன்முறைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்யவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  சட்டங்கள் நேர்மையானவையாகவும் பயனுறுதியுடையவையாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்கு அவை வரையப்படுவதற்கு முன்னதாக சமூக நலனில் அக்கறைகொண்ட சட்டநிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்தாலோசனையை நடத்துவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதுமே முறையான  ஜனநாயக நடவடிக்கைகளாக இருக்கும். ஆனால் இலங்கையில் அரசாங்கங்கள் அத்தகைய செயன்முறைகளில் அக்கறை காட்டுவதில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

   சர்வதேச அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான அமீன் இஸ்ஸதீன் கடந்த  வெள்ளிக்கிழமை ‘டெயிலி மிறர்’ பத்திரிகையில் ‘சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதற்கு முன்னதாக பரந்தளவிலான பொதுவிவாதம் தேவை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இணையவெளி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக அகல்விரிவான  விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட இரு சர்வதேச உதாரணங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

  நான்கு வருட கால பொது விவாதத்துக்கு பிறகு பிரிட்டிஷ் பாராளுமன்றம் கடந்த வாரம் இணையவெளி பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இணையத் தளங்களும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சேவைகளும் சட்டவிரோதமானதும் மக்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதுமான விடயதானங்கள் இல்லாதவையாக இருப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற அதேவேளை  இந்த பிரிட்டிஷ் சட்டம் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. சட்டத்தை பின்பற்றி நடக்காத சமூக ஊடகக் கம்பனிகளுக்கு பெருந்தொகைப் பணம் அபராதமாக  விதிக்கப்படுகிறது.

   இலங்கையின் புதிய  இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் சிங்கப்பூரின் சமூக ஊடகச் சட்டத்தை பின்பற்றி வரையப்பட்டதாகத் தெரியவருகிறது. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கவும் கூடியதாக சர்ச்சைக்குரிய  சில ஏற்பாடுகள் இலங்கையின் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

   ஒளிவுமறைவின்றி பரந்தளவிலான பொது கலந்தாலோசனைச் செயன்முறைக்கு பின்னரே சிங்கப்பூர் பாராளுமன்றத்துக்கு அந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியான பின்னரே பொதுவிவாதம் நடைபெறுகிறது என்று அமீன் இஸ்ஸதீன் எழுதியிருக்கிறார்.

   பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் உடனடியாக அரசாங்கம் வாபஸ்பெறவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டிருக்கிறது.

   மக்களின் சுதந்திரத்தை  பாரதூரமான முறையில்  பாதிக்கக்கூடியதாகவும்  நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருப்பதால் இரு சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதை நோக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுக்கக்கூடாது என்று சட்டத்தரணிகள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.

   சட்டத்தரணிகள் சங்கம் உட்பட அக்கறையும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளுடன் 

நியாயமான கலந்தாலோசனை இல்லாமல் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அறிக்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் முன்னைய வடிவம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த அவதானிப்புகளை அரசாங்கம் கவனத்தில் எடு்க்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

  ( ஈழநாடு )