காலக்கண்ணாடி -06

காலக்கண்ணாடி -06

— அழகு குணசீலன் —

மொட்டைக் கடித அரசியலும் இரட்டை நாக்கு அரசியலும்

கடந்த காலக்கண்ணாடியில் புகலிட ஊடகமொன்றில் வெளிவந்த அறிக்கை ஒன்று பற்றி எனது பார்வையை பதிவிட்டிருந்தேன். அதனுடன் தொடர்புபட்டதாக இந்தப் பதிவும் இருந்தாலும் இங்கு கண்ணாடி திரும்பும் கோணம் வேறு. குறிப்பிட்ட அறிக்கை மட்டு நேசன் மற்றும் தயாளன் என்ற பெயர்களில் மூத்தபோராளி பஷிர்காக்காவினால் வெளியிடப்பட்டது என்றே அந்த ஊடகம் குறிப்பிட்டிருந்தது. இங்கு நான்கு விடயங்கள் கவனிக்கத்தக்கவை. 

  1. இந்த அறிக்கையில் மட்டு நேசன், தயாளன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் மட்டக்களப்பாரால் எழுதப்பட்டதாக சோடிக்கப்பட்டுள்ளது. 

2. போலியாக இருபெயர்களும் குறிப்பிடப்பட்டு அவர்களை மட்டக்களப்பு என்று காட்டியிருப்பதன் மூலம் மட்டக்களப்பும், மக்களும் வடக்கின் சுய அரசியல் இலாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். 

3. இந்த அறிக்கையானது புலத்தில்  ஒரு தோற்றப்பாட்டையும், நிலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் முரண்பட்ட தோற்றப்பாடுகளையும் காட்சிப்படுத்துகின்றது.  

4. அந்த அறிக்கையிலும், காசிதாசன் என்ற அமாவாசையின் பதிவிலும் மட்டக்களப்பின் பிரபல நற்போக்கு படைப்பாளி எஸ்.பொ. மற்றும் அவரது மகன் டாக்டர் அனுரா, அதேபோல் காசிஆனந்தனும் எந்த சம்பந்தமும் இல்லாமல் வம்புக்கு இழுக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பார்தான் இதை எழுதுகிறார்கள் என்று மக்களின் காதில் பூவைப்பதற்கான சுத்துமாத்து. 

இதனால் இது வடக்கிலும், கிழக்கிலும் தவறான எண்ணங்களை வளர்ப்பதாக அது அமைந்துள்ளது. காக்காவின் கருத்துக்கள் மட்டு நேசன் மற்றும் தயாளன் கருத்துக்களாக காட்டப்படுவது அப்பட்டமான அரசியல் அறம் தவறலாகின்றது. முழுக்க முழுக்க நேர்மையற்ற கபடத்தனமான அரசியல் நாடகம். 

மட்டக்களப்பார் மாவை, பொன்.செல்வராசா, சட்டத்தரணி தவராஜா ஆகியோருக்கு எதிராக எழுதியிருப்பதாக காட்டப்பட்டுள்ளது. 

இங்கு எழுகின்ற கேள்வி, பகிரங்கமாகவே ஊடகசந்திப்பு நடாத்தி சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மூத்தபோராளி, சுமந்திரன் மட்டக்களப்பில் நீதிமன்றத்தில் ஆஜரானதை பாராட்டியும், தவராஜாவை குறைகூறியும் உள்ளார். ஆக, இந்த பாராட்டுக்கும் குறைகூறலுக்கும் மட்டக்களப்பார்தான் காரணம் என்று காட்டி, ஒழிந்து கொள்கிறார் காக்கா.  

சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த இவர், மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வந்த சுமந்திரனை பாரட்டவேண்டிய தேவை என்ன? 

அதுவும் ஒரு அரசியல் நகர்வுதான். ‘மட்டக்களப்பாரே! உங்களுக்கு கோடோ, வழக்கோ, வேறு ஏதோ வில்லங்கமோ, நாங்கள்தான் வரவேண்டும். நாங்கள் உங்கள் மீட்பர்கள்’ என்ற செய்தியை விட்டுச்செல்கிறார். மட்டக்களப்பில் சமூகங்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதை அவர்கள் எப்போதும் விரும்புவார்கள். 

ஏன் தெரியுமா? அப்போதுதான் ‘நீங்கள் தனித்து நின்றால் மூஸ்லீம்களும், சிங்களவர்களும் உங்களை அழித்துவிடுவார்கள்’ என்று அச்சம் காட்டி வடக்கில், கிழக்கு தங்கியிருக்கும் அரசியலை எம் மீது திணித்து, மேலாதிக்கக் குதிரைச் சவாரியை செய்யமுடியும். 

அதேபோல் பொன். செல்வராசா மீதான தனது அதிருப்தியை உங்களின் ஆட்கள்தான் உங்களுக்கு எதிராக எழுதியிருக்கிறார்கள் என்ற பொய்யை மெய்யாக்கப்பார்க்கிறார். மாவைக்கு எதிராக வடக்கு மட்டும் அல்ல கிழக்கும் எழுகிறது என்றும், அதேவேளை மட்டக்களப்பானின் கைகளைக் கொண்டே பொன்.செல்வராசாவின் கண்களில் குத்துவதையும் இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது. 

இதற்கு மாறாக புலம்பெயர்ந்த சமூகத்தில் இந்த அறிக்கை, காக்காவின் அறிக்கை என்று காட்டப்படுகிறது. இது மூத்த போராளி களத்தில் நிற்கிறார் என்ற தோற்றப்பாட்டோடு கூடிய வசூல் தந்திரமாகக் கூட இருக்கலாம். இது இரட்டைநாக்கு அரசியல் மட்டுமன்றி மொட்டைக்கடித அரசியலாகவும் உள்ளது. 

இந்த அறிக்கை குறித்த எனது முதலாவது பதிவுக்கு காசிதாசன் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் பதிலளித்துள்ளார். 

முகமும் முகவரியும் அற்ற முக்காட்டு முகமூடிக்காரன் கேட்டுள்ள என்சார்ந்த கேள்விகளுக்கு இருட்டில் ஒழிந்திருந்து கல் எறியும் தனிநபர் மீதான தாக்குதல்களுக்கு என்னைப்போல் வெளிச்சத்திற்கு வந்து முகமூடியையும் முக்காட்டையும் கழற்றி முகத்தையும் முகவரியையும் வெளிக்காட்டும் வரை நான் பதிலளிக்கப் போவதில்லை. 

காசிதாசன் முதலில்  தனது பிறப்பு, களம் என்பனவற்றை மறைத்துக்கொண்டு இன்னொருவரின் பிறப்பையும் களத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதற்கு அருகதையும் தகுதியும் அற்றவர். 

எனது பதிவில் புலிகள் தோற்றார்கள் மக்கள் வென்றார்கள் என்று எழுதியிருந்தேன். இதை ஜீரணிப்பது உங்களுக்கு கஷ்டம்தான். ஆனால் உண்மை அதுதானே. 

சுமந்திரனை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டீர்கள், ஆனால் மக்கள் அவரை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தார்கள். இங்கு வென்றதுயார்? தோற்றதுயார்? 

மட்டக்களப்பில் பிள்ளையான், வியாழேந்திரன், ஜனாவின் தோல்விக்காக தேர்தல் களமாடினீர்கள் மக்கள் அவர்கள் மூவரையும் தெரிவு செய்தார்கள். இங்கு புலிகள் வென்றார்கள், மக்கள் தோற்றார்கள் என்று எழுதுவதற்கு நான் ஒன்றும் அரசியலில் உங்களைப் போன்று மேதாவி அல்ல. 

தப்புக்கணக்கை மறுக்கும் கணக்கு 

இங்கு மூன்று சமன்பாடுகளைத் தருகிறேன்: புரிந்தால் சரி. புரியாவிட்டால்? 

சமன்பாடு 01: பாராளுமன்ற ஆசனங்கள் ஐந்து =100% 

சாணக்கியன் = 20% 

பிள்ளையான் + வியாழேந்திரன் + ஜனா + நஸீர் = 80% 

பிள்ளையான் + வியாழேந்திரன் + நஸீர்= 60% 

சாணக்கியன் + ஜனா= 40% 

ஆக,வெற்றி உங்களுக்கா? மக்களுக்கா? 

************************************************ 

சமன்பாடு 02:  மக்கள் வாக்களிப்பு. 

அ. தமிழரசுக்கட்சி : 79,460 = 26.6% 

ஆ. த.ம.வி.பு              : 67,692 = 22.7% 

இ. முஸ்லீம்காங்கிரஸ் : 34,428 =11.5% 

ஈ. பொதுஜன பெரமுன : 33,424 =11.0% 

ஆ+இ+ஈ=22.7+11.5 +11.0 = 45.2% 

ஆ+ஈ=22.7+11.0 = 33.7% 

கணக்குப் புரிகிறதா?  மொத்த வாக்கிலும் சரி, வீதாசாரத்திலும் சரி காசிதாசனே யாருக்கு வெற்றி? மக்களுக்குத்தானே! 

************************************************  

சமன்பாடு 03: விருப்புவாக்கு 

சாணக்கியன் : 33,332 

பிள்ளையான் : 54,198 

ஜனா.                  : 26,382 

வியாழேந்திரன் : 22,218 

நஸீர்.                      : 17,600 

பி+ஜ+வி+ந =1,30,398 

பி+வி = 76,416 

சா+ஜ = 59,714 

இவற்றை விடவும் மக்கள்தான் வென்றார்கள் என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்.? 

************************************************  

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் 

இன்னொரு விடயம் தமிழரசு வீட்டிற்கு குசினி இல்லை என்பதை ஏற்றுக்குக் கொண்டதற்கு சலூட்! 

தமிழரசின் வீட்டுக்கு குசினி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இது 70 ஆண்டுகளுக்கும் மேலான மேலாதிக்க வழமை-பழமை அரசியல். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடரும் துயரம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் கக்கூசி. இது வீட்டு அரசியலில் குசினியைவிடவும் முதன்மையானது. குசினி இல்லாவீட்டில் கக்கூசி அரசியல் அதன் பணியைச் செய்கிறது. 

துர்நாற்ற அரசியல். 

உலகின் தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் சமூகத்தின் ஒரு பாதியை குசினியாக மதிப்பிடும் வரலாறு நமது தமிழ் தேசியத்தின் பெயரால்தான் பதிவிடப்பட்டது என்பது வரலாற்றில் இடம்பெறட்டும். 

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். 

எஸ்.பொ .வும்காசி ஆனந்தனும்:  

மட்டக்களப்பின் இருபெரும் படைப்பாளிகள். 

முன்னவர் முற்போக்கும் வேண்டாம் பிற்போக்கும் வேண்டாம் என்று நற்போக்கு புதுமை சமைத்த படைப்பாளி. 

பின்னர் உணர்ச்சிக் கவிதைகளால், உணர்வூட்டும் பேச்சுக்களால் தமிழர் சிறுமையை எடுத்துரைத்தார். 

ஏன்? கொழும்பில் சிங்கள அமைச்சுக்களிலும், திணைக்களங்களிலும் யாழ்.மேலாதிக்கம் கொழுத்த சம்பளத்திற்கு சாமரைவீசி சேவகம் செய்து கொண்டிருந்தபோது, வறுமையின் சிவப்பை சுமந்து கொண்டு கட்டாய சிங்களச் சட்டத்தை மறுத்து, பதவியை இராஜினாமாச் செய்த மட்டக்களப்பின் மண்ணின் மைந்தன் காசி ஆனந்தன்.  

எங்களுக்கு காசிதாசனின் வரலாற்றுப் பாடம் தேவையில்லை. நாங்கள் வரலாறு படைப்பவர்கள். 

காசி ஆனந்தன் அரச மொழிபெயர்ப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்தபின் அந்த இடத்தில் பதவி ஏற்றவர் யார்? 

பாவம்! காசி ஆனந்தன் மேலாதிக்கம் சிங்களத்திற்கு பலிகொடுத்த வெள்ளாடு. 

1977 இல் இராசதுரையின் மேடைகளில் யாழ். மேலாதிக்கத்திற்கு எதிராக கர்ச்சித்த சிங்கம் எஸ்.பொ. மேலாதிக்கம் இராசதுரையை ஓரம்கட்டி, காசி ஆனந்தனை களம் இறக்கியபோது அதை துணிச்சலுடன் எதிர்த்து நின்ற மாமனிதன். தன்னந்தனியாக இறக்குமதி செய்யப்பட்ட பேச்சாளப்பீரங்கிகளுக்கு நகைச்சுவை கலந்த மட்டக்களப்பு மொழி வழக்கில் பதிலடி கொடுத்த படைப்பாளி. 

மூத்த உறுப்பினர் யோகன் பாதர், காசி உடன் யாழ். புகையிரதத்தில் வந்து இறங்கியதுதான் அவரைப்பற்றி காசிதாசன் என்பவருக்கு தெரிந்தது.  

இது பாதர் பற்றி நான் அறிந்ததில் ஒருதுளி. காக்காவினதும், பாதரினதும் ஆயுதப்போராட்டகால அர்ப்பணிப்பும், தியாகமும் மதிப்பிற்குரியவை. நான் பேசுவது அந்த அறிக்கையில் உள்ள அரசியலைத் தவிர  தனிநபர்கள் மீதான சேறுபூசல் அல்ல. அது என் பாணியும் அல்ல. இருட்டில் இருப்பதை விட்டு, வெளிச்சத்திற்கு வாருங்கள். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். 

எந்த அமைப்பும் தமது கட்சிக்கு என்ன பெயரை வைப்பது என்பது அந்த அமைப்பின் உரிமை. உங்களுக்கு இருக்கின்ற அந்த உரிமை சற்றும் குறையாது பிள்ளையானுக்கும் அவரின் கட்சிக்கும் உண்டு. இது தவறானது என்றால் அது தேர்தல் திணைக்களத்தினதும், சட்டமா அதிபரினதும் வேலை. அதை நீங்கள் ஏன் சட்டாம்பிள்ளையாக சட்டத்தை கையில் எடுக்கிறீர்கள். சோரம் போவதும் போகாமல் விடுவதும் அவரவர் உரிமை. போகாமல் இருப்பது உங்கள் உரிமை. போவது மற்றவரின் உரிமை. 

இறுதியாக என் தண்ணிச் சோற்றுப்பானையில் இருந்து ஒரு பிடி இது! 

நெஞ்சில் உரமுமின்றி 

நேர்மைத் திறனுமின்றி 

வஞ்சனை செய்வாரடி -கிளியே 

வாய்ச்சொல் வில் வீரரடி!