— புகழ் மயூரா —
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தக் குன்றுப்பகுதி. இம்மலைப்பகுதி தற்போது எல்லோராலும் பேசப்பட ஒரேயொரு காரணம் இங்கு அமைந்துள்ள முருகன் ஆலயம்
(குசலானமலை முருகன் ஆலயம்) மட்டுமே. அவ்வாலயம் மட்டுமின்றி இம்மலைப்பகுதியில் பலராலும் அறியப்படாத பல மர்மங்கள் புதையுண்டு கிடக்கிறது. இவற்றை அறிந்துகொண்ட சில தரப்பினர் அன்று முதல் இன்று வரை இம்மலைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கோடும், அங்குள்ள வளங்களை அபகரிக்கும் நோக்கோடும் தொடர்ந்தும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
முப்பது தலைமுறைகள் புராதனங்கொண்ட குசலானமலை தன்னகத்தே பல மர்மங்களைப் புதைத்து வைத்துள்ளது. உற்சவ காலங்களில் முருகனைத் தரிசிக்கவரும் பக்தர்கள், பெளத்த சாசனங்கள் இங்குள்ளது எனக்கூறி இந்த இடத்தை ஆக்கிரமிக்கவரும் பெளத்த குருமார்கள், இங்கு புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களை அபகரிக்கவரும் சிலரென இவர்கள் மூன்று தரப்பினர்களைத் தவிர இங்கு வருபவர்கள் அரிது. மேலும் பலராலும் அறியப்படாத பல மர்ம முடிச்சுகள் அவிழ்ப்பாரின்றி இங்கே கட்டுண்டு கிடக்கின்றன.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
இம்மலைப்பகுதியில் காணப்படும் சுடு செங்கற்கோட்டையில் இடிபாடுகளும், மலைகளில் செதுக்கப்பட்ட கற்படிகளும், அடர்ந்து கிடக்கும் பற்றைகளுக்குள்ளும் கொடிகளுக்குள்ளும் மறைந்து, செங்குத்தாகவும் கிடையாகவும் கண் பார்க்கும் திசையெங்கும் தெரியும் கற்தூண்களும், மலைகளைப் பிளந்தும் குடைந்தும் அமைத்தாற்போல் காட்சிதரும் பாரிய குகைகளும், எக்கோடையிலும் வற்றாத நீரூற்றுக்கொண்ட கற்சுனைகளும், எட்டுத்திக்கும் ஒளியேற்ற அமைக்கப்பட்ட கல் விளக்குகளும், பழந்தமிழிலே எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களும் (தமிழ்ப்பிராமி கல்வெட்டுகள்), நாகக்கல் வழிபாடும், முப்பது தலைமுறைகள் தொன்மைகொண்ட முருகனின் வேலாயுதமும் இங்கே மாபெரும் தமிழர் சாம்பிராச்சியமொன்று நிறுவப்பட்டிருந்ததைப் பறைசாற்றுகின்றன. இங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் உரிய பராமரிப்பின்றி சிதைவடைந்துவருவது வருந்தத்தகு விடயமே.
இப்பகுதியானது தமிழர் பாரம்பரிய நாகரீகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்த இடமென்பதற்கு மேலும் சில சான்றுகளையும் கூறமுடியும். இதில் பிரதானமானது கற்குகைகளில் வாழ்ந்த தமிழர்கள் படிப்படியாக முன்னேறி சுடுசெங்கற்களினால் ஆன கோட்டைகளை அமைத்திருக்கிறார்கள். இதற்கு இங்கு காணப்படும் கற்குகைகளும் இடிந்த சுடுசெங்கற்கோட்டையின் சிதைவுகளுமே ஆதாரமாகும்.
மற்றையது பிரேதக்கல். இப்பிரேதக்கல்லானது இறந்த உடலங்களைக் கழுவி துப்பரவு செய்வதற்காக பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இக்கல்லில் கழிவு நீர் வடிந்தோடும் அமைப்பில் சரிவான பீலிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் தமிழர் தொழில்நுட்பத்தின் உச்சமே.
கல்வெட்டுக்கள்
‘கல்வெட்டுக்கள்’ வரலாற்றினைச் சுமந்து நிற்கும் ஆதாரங்கள். இங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் யாவும் தமிழ்ப்பிராமி அல்லது தமிழி வரிகளாகவே இருக்கின்றன. தமிழ்ப்பிராமி எழுத்து முறைமை, பண்டைத்தமிழரின் எழுத்தியலின் ஆரம்பக்கட்டமே. இவை அக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமையே.
இம்மலைப்பகுதியில் சுமார் ஏழு தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான கல்வெட்டுகள் இன்னமும் தகுந்த முறையில் பராமரிக்கப்படவோ அல்லது ஆய்வுக்குட்படுத்தப்படவோ இல்லையென்பதே நிதர்சனம். ஒருவேளைகளில் இங்கு ஆய்வு நடத்தப்பட்டு நியாயமான முடிவுகள் வெளிவந்தால் நில ஆக்கிரமிப்புத் தரப்பினருக்கு அது பெரும் பின்னடைவாகவும் தடையாகவும் அமைந்துவிடுமோ என்னவோ..?
முருகவழிபாடு
ஆரம்பகாலத்தில் இங்கு வேடுவர் குலத்தவரால் வழிபடப்பட்ட குமரக்கடவுள் வழிபாடே, பிற்காலத்தில் முருகவழிபாடாக மாற்றம் பெற்றதாக அறியமுடிகிறது. இம்முருகவழிபாடானது முப்பது தலைமுறைகளுக்கு மேலாக இங்கு இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமே. சில மாதங்களுக்கு முன்பு இவ்வாலயத்தில் இருந்த முருகன் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டதும் ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கையே என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
நாகக்கல் வழிபாடு
உலகின் அனைத்து தொன்மையான நாகரீகங்களிலும் நாகவழிபாடு இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. ஆதித்தமிழர்களான நாகர்கள் நாகத்தை காவல் தெய்வமாகவும் கருவளத் தெய்வமாகவும் வழிபட்டு வந்தனர் என்பது ஆய்வுகளின் மூலம் வெளிவந்த நிதர்சனம். இங்கு தற்போதும் வழிபாட்டுக்குரியதாய் இருக்கும் நாகக்கல்லானது இப்பகுதியை ஆட்சி செய்தது தமிழர்களே என்பதை மெம்மேலும் உறுதிசெய்கிறது.
தமிழ் மன்னர் குசலானார்
இந்த மலைப்பகுதியை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்திருந்தாலும் கடைசியாக ஆண்டது, தமிழ் மன்னர் குசலானார் ஆவார். இவர் பற்றிய குறிப்புக்களோ அல்லது கல்வெட்டுக்களோ கண்டறியப்படாத நிலையில் தலைமுறை தலைமுறையாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு, தற்போதும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் தகவல்கள் மூலமாக அவர் பற்றி அறியமுடிகிறது. மேலும் கடைசியாக இப்பகுதியை ஆண்ட மன்னரின் நினைவாகவே இம்மலைக்கு குசலானமலை என்று பெயர் வந்ததாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் கோலோச்சி நின்ற தமிழர் சாம்பிராச்சியம் இன்று களையிழந்து, உருக்குலைந்து, சிதைவடைந்து கிடக்கிறது. எஞ்சியிருக்கும் எச்சங்களையாவது விஷமிகளிடமிருந்து காப்பாற்றவேண்டியது தமிழர்களாகிய எமது தலையாய கடமையாகும்.