— செங்கதிரோன் —
மொத்தி தள்ளுவதற்கு முன்பாக வாழை தன் கட்டைக் குருத்தை விரித்தது.
பக்கத்திலே நின்றிருந்த பட்ட மரம் வாழையைப் பார்த்து ‘வாழையே! உன்னில் கட்டைக் குருத்தைக் கண்டேன். கருவுற்றிருக்கிறாய் போலத் தெரிகிறது. அதனால் சொல்லுகிறேன். கருவைக் கலைத்து விடு’ என்று கத்திற்று.
அதிர்ச்சியுற்ற வாழை ‘என்ன காரணம்? ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று வினவியது.
‘ வாழையே! உனது கருவே உன் உயிருக்குக் காலன். நீ மொத்தி தள்ளிக் குலையீன்று அது பழுத்ததும் குலையை வெட்டும் போது உன்னையும் வெட்டி எறிந்து விடுவார்கள். அதோடு உன் வாழ்வும் முடிந்து விடும்’ என்று பட்டமரம் பதிலளித்தது.
‘ஏய் பட்டமரமே! உனக்குத் தாய்மை உணர்வின் அருமை தெரியவில்லை. என் அடியைப் பார்த்தாயா? மொத்தி தள்ள முதல் குட்டிகளை ஈன்றிருக்கின்றேன். நான் அழிந்தாலும் எனது வம்சத்தை அவை விருத்தி செய்யும். அதனால்தான் ‘வாழையடி வாழை’ என்கிறார்கள். பூத்துக் காய்த்து வரும் சுகத்தை அனுபவிக்கு முன்னமே நீ பட்டுப்போய் விட்டாய். அதனால் பட்டமரமாகிய உனக்குத் தாய்மைச் சுகம் தெரியவில்லை. எனது கருவே எனக்கு எமனாக வந்தாலும் கூட, அந்த இயற்கைச் செயற்பாட்டில்-தாய்மையில் நான் இன்பம் காண்கின்றேன். அதற்கு இணையானது உலகில் வேறொன்றும் இல்லை. அதனை உணர்ந்து சுகிக்க உனக்கு வாய்ப்பில்லாது போய்விட்டது. அதற்கு நீ கொடுத்து வைக்கவில்லை நான் என்ன செய்வது’ என்று வாழை விளக்கம் அளித்தது.
பட்ட மரம் தனது நிலையை எண்ணி ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டது.