வாக்குமூலம்-76 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

வாக்குமூலம்-76 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

    —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வது குறித்த பரிந்துரைகளை அரசியல் கட்சிகளிடமிருந்து 15.08.2023 க்கு முன்னர் கேட்டிருந்ததற்கமைய, வழமைபோல் கடைசி நேரம் வரை காத்திருந்துவிட்டு இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சி தனது பதிலை அனுப்பி வைத்திருந்தது. தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு இது குறித்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இக்கடிதத்தின் உள்ளடக்கம் 15.08.2023 அன்றைய தமிழ் ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்திருந்தது.

அதனைப் படித்த போது, ‘வட்டுக்கோட்டைக்குப் போவதற்கு வழி எதுவென்று கேட்க, துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்’ என்றொரு கிராமத்துச் சொற்றொடர்தான் நினைவுக்கு வந்தது.

ஏனெனில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டதற்கு தமிழரசுக் கட்சி செய்திருக்க வேண்டியது என்னவெனில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழி வரைபடத்தை (ROAD MAP) வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் ‘சமஸ்டி’ என்கின்ற தமது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளவில்லை எனப் பிரகடனப்படுத்தியும் அதேவேளை அரசியலமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக அமுல் நடத்தும் படியும், நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை எடுக்கும்படியும் மேலோட்டமாக கேட்டும், இனப் பிரச்சனைத் தீர்வுக்குக் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டும் இரா. சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். 

இக்கடிதத்தின் உள்ளடக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சிக்குத் தமிழ் மக்களின் நலன்களின் மீதுள்ள அதீத அக்கறை காரணமாக இக் கடிதம் எழுதப்பட்டுள்ளது போல் தோன்றும். ஆனால், அரசியலில்-தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளார்ந்த அக்கறையுள்ள ஒருவரால் பார்க்கப்படும் போது உண்மையில் அப்படியான சமாச்சாரங்கள் எதுவுமில்லையென்பது தெளிவாகத் தெரியும். இக் கடிதம் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேட ஏட்டுச் சுரக்காய் அரசியலைத்தான் மீண்டுமொருமுறை எண்பித்திருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக எதனையும் பெற்றுத்தராத-பெற்றுத்தரும் வழிமுறைகளற்ற ‘வாக்குப்பெட்டி’ அரசியல் தான் தமிழரசுக் கட்சியின் தேவையாக உள்ளது.

மேலும், இக்கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக உள்ளன. 

ஜனாதிபதி இனப் பிரச்சனைக்குத் தீர்வாக (‘சமஸ்டி’ க்குப் பதிலாக) 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாகக் கூறவில்லையே. அப்படியிருக்க கடிதத்தில் ‘சமஷ்டி’ பற்றி ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும்?

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழி வரைபடத்தை மட்டும் கொடுப்பதுதானே முறை. அதுதானே மூலோபாயம் மிக்கது. அதனைச் செய்வதற்கான வினைத்திறன்-வல்லமை தமிழரசுக் கட்சியிடம் இல்லாவிட்டால், ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ ஏற்கெனவே 08.05.2023 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழி வரைபடத்தை ஆதரிப்பதுதானே சரியான அணுகுமுறை.

இவை ஒரு புறமிருக்க இரா. சம்பந்தன் இப்போது கையளித்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களுடன் அவர்கள் தாமே முரண்பட வேண்டிய நிலைமைகளும் காணப்படுகின்றன. இக் கடிதம் ஒரு பயனற்ற கடிதம் ஆகும். தமிழ் மக்களுக்குப் ‘பந்தா’ க் காட்டும் நோக்கமுடையதாகும். இக் கடிதத்தில் உள்ள முரண்பாடுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம். 

முரண்பாடு-1 

* “1987 நவம்பரில் இந்திய அரசு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடமிருந்து இவை சரி செய்யப்படும் (13 வது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும்) என்ற உறுதிமொழியை பெற்றது. இந்தப் பின்புலத்தில்தான் அதன் பின் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கடந்து கூட்டாட்சிக் (சமஸ்டி) கட்டமைப்பை நோக்கி நகர்த்தின. அதில் பல முன்மொழிவுகள் குறிப்பிடத்தக்கன”

அப்படியானால், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும்-13 ஆவது திருத்தத்தையும்-வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்திருந்த மாகாண சபையையும் தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்த்துச் சீர்குலைத்த போது தமிழரசுக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்டிருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி (செயலாளர் நாயகம், இரா. சம்பந்தன்) மௌனம் சாதித்தது ஏன்? புலிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயற்பட்டு தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் திசையைக் காட்டியிருக்கலாம். இந்தியாவின் தமிழ் மக்கள் மீதான நம்பகத் தன்மையையும் பேணியிருக்க முடியும். அந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழர் தரப்பு அரசியற் தலைமை அப்போது தவறவிட்டது. 

முரண்பாடு-2

“1993 இல், ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் காலத்தில் மங்களமுனசிங்க தெரிவுக் குழு இந்திய மாதிரியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை பரிந்துரைத்தது. ஒருங்குநிரல் அல்லது பொதுப் பட்டியல் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அதிலுள்ள பெரும்பாலான விடயங்கள் மாகாணப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை இணைக்கும் உயர்மட்ட சபையை அது மேலும் முன்மொழிந்தது”

அப்படியானால், தமிழரசுக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்டிருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் மங்களமுனசிங்க அறிக்கையை நிராகரித்தது ஏன்? இந்த விடயம் இரா. சம்பந்தனுக்குத் தெரியாததா?                            

முரண்பாடு-3

“ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் 1995 மற்றும் 1997இல் அரசமைப்பு சீர்திருத்தங்களுக்கான அரச முன்மொழிவுகள் மற்றும் 2000 இன் அரசமைப்பு சட்டமூலம் அனைத்தும் விரிவான அதிகாரப் பகிர்வை முன்மொழிந்தன. மேலும், ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக் கைவிட்டன”.

அப்படியானால், தமிழரசுக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்டிருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நின்று சந்திரிக்கா சமர்ப்பித்த அரசியல் தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில் எதிர்த்தது ஏன்? 

முரண்பாடு-4

“2002 டிசம்பரில், ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. இந்த பேச்சுக்களில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு தீர்வை ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் ஆராய்வதற்கு கட்சிகள் ஒப்புக்கொண்டன”

அப்படியானால், தமிழரசுக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்ட அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றிருந்த நிலையில், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒஸ்லோ உடன்படிக்கையை நிராகரித்த போது தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை கூட்டணியோ மௌனம் சாதித்தது ஏன்? குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிப் புலிகளின் நிலைப்பாட்டை அரசியல் ரீதியாக எதிர்த்திருக்க வேண்டுமல்லவா? அதனைத்தானும் ஏன் செய்யவில்லை? தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் திசையைக் காட்டக் கிடைத்த அடுத்த சந்தர்ப்பத்தையும் தமிழர் தரப்பு அரசியல் தலைமை தவறவிட்டது. 

முரண்பாடு-5

“2006 இல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவையும் (APRC) புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளை உருவாக்க நியமித்தார். நிபுணர்கள் குழுவையும் நியமித்தார்”.

அப்படியானால், பின்னர் மகிந்த ராஜபக்ஷ அமைத்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பதற்கு இந்தியாவின் அறிவுரைகளையும் புறக்கணித்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நின்று மறுத்தது ஏன்? அரசியல் ரீதியாக அப்போது மஹிந்த ராஜபக்ஷவின் கரத்தைப் பலப்படுத்தியல்லவா இருந்திருக்க வேண்டும். அதனைச் செய்திருந்தால் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தையாவது தடுத்திருக்கலாம் அல்லவா? 

இப்படியான முரண்பாடான விடயங்களுடன்தான் இரா. சம்பந்தனின் மேற்கூறப்பட்ட கடிதம் உள்ளது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கு வேண்டிய வழிவரை படத்தைக் கொடுக்காமல் வெறுமனே இலக்கு அற்றதான (AIMLESS – SUBJECTIVE) அறிக்கை ஒன்றையே தமிழரசுக் கட்சி கொடுத்துள்ளது. இதனை ‘ஏட்டுச்சுரைக்காய்’அரசியலென்று கூறாமல் வேறு என்ன பெயர் கொண்டழைப்பது? 

இப்போதும் காலம் கடந்து விடவில்லை. தமிழரசுக் கட்சியும் அதனுடன் இணைந்து ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எஃப் கட்சியும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளுக்குத் ‘தான் குற்றினால் மட்டுமே அரிசியாக வேண்டுமென்ற’ மனப் போக்கிலிருந்து மாறி அரசியல் ரீதியாக அனுசரணை வழங்க முன்வர வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. அவர்களின் முன்மாதிரியைப் (அவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் விமர்சனத்திற்குட்பட்டவையாயினும் கூட) பின்பற்ற முடியும். ஏனெனில், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடே பலன் தரக்கூடியது.