எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் 

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் 

—- வீரகத்தி தனபாலசிங்கம் —

    றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான  சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. 

    வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார்.

   அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொடுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பதிலாக அவர், “ஏன் எனது நாட்டு மக்கள் வேறு எங்காவது போகப்போகிறார்களா?” என்று  கிண்டலாக ஒரு கேள்வியைத்தான் கேட்டார்.

  இன்னொரு தடவை வேறு  ஒரு செய்தியாளர் முகாபேயிடம் ‘”நீங்கள் எப்போது ஓய்வுபெறுவீர்கள்? உங்களுக்கு பிறகு பதவிக்கு வரப்போகிறவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர், “எனக்கு ஓய்வுபெறும் நோக்கம் இல்லை. எனக்கு பிறகு பதவிக்கு வருவதற்கு எவரையும் நான் நியமிக்கப்போவதில்லை. நான் 100 வயது வரை வாழ்வேன்” என்று பதிலளித்தார். அப்போது அவருக்கு 92 வயது.

   அந்த செய்தியாளர் தொடர்ந்தும் ஓய்வு குறித்து கேள்விகளைக் கேட்கவே முகாபே ஆத்திரமடைந்து “நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு  ஒரு குத்துவிட்டு நிலத்தில் வீழ்த்தித்தான் நிரூபித்துக்காட்டவேண்டும் என்று விருப்புகிறீர்களா?” என்று கேட்டார். 

  சிம்பாப்வே மக்களுக்கு விடுதலை வேண்டிக்கொடுத்த முன்னாள் புரட்சிவாதி அதிகாரவெறி காரணமாக மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிவந்தது. முகாபேயின்  கட்சியினரே அவருக்கு எதிராக சதி செய்து உப ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவந்தார்கள். அல்லாவிடடால் அவர் இறங்கியிருக்கவே மாட்டார். இறுதியில் 2019 செப்டெம்பரில் தனது 95 வயதில் முகாபே மரணமடைந்தார். 

   இவரைப் போன்றே ஆபிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியில் இருந்து கறுப்பின மக்களுக்கு  விடுதலை பெற்றுக்கொடுத்த இன்னொரு  வரலாற்று முக்கியத்துவம் கொண்ட  போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒரு  தலைவர் பதவி ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் அரசியல் ஞானியாக நடந்துகொண்ட காரணத்தால் உலகின் பெருமதிப்பைப் பெற்றார். அவர் தான் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா.

   சிறுபான்மை வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக 1994  ஆம் ஆண்டு  பதவிக்கு வந்த மண்டேலா ஒரு ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு பிறகு 1999 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கி ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அடுத்த மட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவியில் இருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தால் எவரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். 

  2004 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெற்றுக்கொண்ட மண்டேலா 2013 டிசம்பரில் தனது 95  வயதில் மரணமடைந்தார். 

   தங்களது மக்களுக்கு வெள்ளையர்  ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுக்கொடுத்த இரு ஆபிரிக்கத் தலைவர்களில் ஒருவர் பதவிவெறி காரணமாக  சொந்த மக்களினால் வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளான அதேவேளை மற்றவர் பதவி ஆசையே இல்லாமல் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தமைக்காக உலகில் எமது யுகத்தின் தலைசிறந்த  அரசியல்ஞானிகளில் ஒருவராகப்  போற்றப்படுவதைக்  காண்கிறோம்.

  இந்த கதைகளை இன்று கூறி ஒரு பீடிகையைப் போடுவது நாட்டின் உயர் பதவியை வகித்து பதவிக்காலம் முடிந்து வீட்டுக்கு போய்விட்ட பின்னரும்  அரசியலைக் கைவிட மனமில்லாதவர்களைப் பற்றியும்  மற்றும்  அதிகாரத்தில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டாலும் கூட மீண்டும் பதவிக்கு  வருவதற்கு துடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியும் வெளியாகின்ற செய்திகள் மீது ஒரு பார்வையை செலுத்துவதற்கேயாகும்.

   தற்போது இலங்கையில் நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்கவும் மகிந்த ராஜபக்சவும் இரு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள். மைத்திரிபால சிறிசேன ஒரு பதவிக்காலத்துக்கு மாத்திரம் அதிகாரத்தில் இருந்த அதேவேளை கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தின் இடைநடுவில் கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து பதவியில் இருந்து விலகியவர். இவர்களில் எவருமே அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராயில்லை. வாழும் முறையால் வழிகாட்டவேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு நயநாகரிகம் இல்லாதவர்கள்.

    திருமதி குமாரதுங்கவைப் பொறுத்தவரை பதவியில் இருந்து இறங்கிய பின்னர் அவரது அரசியல் ஈடுபாடு என்பது பெருமளவுக்கு ராஜபக்சாக்களுக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு உதவும் நோக்குடனேயே இருந்து வந்திருக்கிறது.

   மகிந்தவுக்கு எதிராக இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொது வேட்பாளர்களை களமிறக்குவதில் திருமதி குமாரதுங்க முன்னின்று செயற்பட்டார். மற்றும்படி முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் அவ்வப் போது  ஊடகங்களுக்கு நேர்காண்களை வழங்குவது, அறிக்கைளை வெளியிடுவதுடன் அவரது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன.

    கடந்த நூற்றாண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருடகால ஆட்சிக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த  பெருமைக்குரிய திருமதி குமாரதுங்க இந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தங்களது குடும்பத்தின் தலைமைத்துவத்தில் இருந்த கட்சி இன்று சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மக்கள் செல்வாக்கை இழத்து நிற்பதை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மீட்பு முயற்சி எதையும் முன்னெடுக்கக்கூடிய வல்லமை அவரிடம் இல்லை.

   மகிந்தவைப்  பொறுத்தவரை  2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சுதந்திர கட்சியை பண்டாரநாயக்க குடும்பக் கட்சி என்ற நிலையில் இருந்து ராஜபக்ச குடும்பக் கட்சியாக மாற்றினார். இரு பதவிக் காலங்களுக்கு ஜனாதிபதியாக இருந்த அவரினால் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவிடம் தோல்விகண்ட பிறகு சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தங்கள்வசம் வைத்திருக்கமுடியாமல் போய்விட்டது. பிறகு ராஜபக்சாக்கள் தங்களுக்கென்றே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கி மீண்டும் ஆட்சியையும் பிடித்தார்கள்.

   ஆனால், ராஜபக்சாக்கள் கனவிலும் ஒருபோதும் நினைத்துப்பார்த்திருக்க முடியாதவகையில் கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சி அவர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டியது. ஆனால் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள்.

   இலங்கையில்  முன்னென்றும் இருந்திராத பல படுமோசமான தவறான அரசியல் மற்றும் ஆட்சிமுறைப்  போக்குகளுக்கு வழிவகுத்தவராக விளங்கும் மகிந்த  நாட்டின் உயர்பதவியை வகித்துவிட்டு சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதில்  எந்த அளெகரியத்தையும் எதிர்நோக்கியதாக தெரியவில்லை.

   2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக இருந்த அவர் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது சகோதரரின் அரசாங்கத்தில் பிரதமராக பதவிக்கு வந்தார். அதற்கு பிறகு நடந்தவை எல்லாம் அண்மைக்கால வரலாறு.

   இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மக்கள் கிளர்ச்சியின் விளைவாக பதவியில் இருந்து இறங்கிய அரசாங்கம் என்றால் அது ராஜபக்சாக்களின் அரசாங்கம்தான். 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டம் பிரதமர் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கத்தை உலுக்கியது எனினும் அவர் உடனடியாகப் பதவி விலகவில்லை. இரு மாதங்கள் கழித்து அக்டோபர் மாதமே அவர் பதவி விலகினார். 

   முன்னரும் இலங்கை அரசியல் குறிப்பிட்ட சில உயர்வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது என்றபோதிலும்  ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கியதைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை. இத்தகைய வரலாற்று அவமதிப்புக்குள்ளான ஒரு குடும்பம் இன்னமும் கூட அரசாங்கத்தை பின்னணியில் இருந்து இயக்கக்கூடியதாக இருப்பது இலங்கை அரசியலின் ஒரு பெரிய  முரண்நகையாகும்.

   மகிந்தவைப்  பின்பற்றி முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவும் கடந்த பொதுத்தேர்தலில் அதுவும் பொதுஜன பெரமுவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தார். ஜனாதிபதியாக நாட்டை ஆட்சிசெய்த இலட்சணத்தில் மீண்டும் ஜனாதிபதியாவதற்கான தனது விருப்பத்தை அவர் இடைக்கிடை வெளியிடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

   இரு முன்னாள் ஜனாதிபதிகள் இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க மாத்திரம் அவ்வாறு செய்வில்லை.

   அடுத்து கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக எதையும் பேசாவிட்டாலும், அவரைப் பயன்படுத்தி தங்களுக்கு மக்கள் மத்தியில்  செல்வாக்கை தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சில சக்திகள் செயலில் இறங்கியிருக்கின்றன.

  உலகின் வேறு எந்த  நாட்டிலும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து வெளியேறிய எந்தவொரு தலைவரும் கோட்டாபய  போன்று விரைவாக நாடு திரும்பக்கூடியதாக இருந்ததில்லை. வெளிநாடுகளில் தஞ்சமடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில் அவருக்கு இப்போது இலங்கையைத் தவிர பாதுகாப்பான நாடு இல்லை என்ற நிலை.

   கோட்டாபய பதவி விலகிய பின்னர் அவரை மீண்டும் அரசியலுக்கு  இழுப்பதற்கு விசுவாசிகள் பல தடவைகள் விருப்பத்தை வெளிப்படுத்திவந்தனர். கடந்த வருடம் ஆகஸ்டில்  தாய்லாந்தில் தங்கியிருந்த வேளையில் கூட அவரை பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டதாகவும் அதற்கு வசதியாக தனது பதவியை துறக்க அந்த கட்சியின் பெண்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. 

   பிறகு ஒரு கட்டத்தில் கோட்டாயவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து பிரதமராக்கவேண்டும் என்று  பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவில் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினர் முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. 

   ஆனால் இப்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் சகோதரர் ஹேமகுமார நாணயக்கார  வசமிருந்த மௌபிம (தாய்நாடு ) ஜனதா கட்சியை கோட்டாபயவின் நெருங்கிய சகாவும் பல ஊடக நிறுவனங்களின் உரிமையாளருமான திலித் ஜயவீர பொறுப்பேற்றிருப்பதாகவும் அதற்கு அவர் தனது ஆசீர்வாதத்தையும்  ஆதரவையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

    மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த ஆட்சிமுறைத் தோல்விக்கு கோட்டாபய மாத்திரமே காரணம் என்று கூறி அவரை தனிமைப்படுத்த பொதுஜன பெரமுன  முயற்சிக்கும் ஒரு நேரத்தில் — அதுவும் அடுத்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்படும் நிலையில் அவர் தனது  சகாவின் கட்சியை ஆதரிக்கக்கூடும் என்ற பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன.

  எது எவ்வாறிருந்தாலும்,  அவருக்கு அரசியலில் ஒரு இடத்தை தேடிப்பிடிப்பிடித்து கொடுப்பதற்கு விசுவாசிகள் இயன்றவரை முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டுக்கு செல்லாமல் இலங்கையில் தொடர்ந்து  வசிப்பதற்கு அவர் முடிவெடுத்தால்  அவருக்கு எதிர்காலத்தில் ‘ சிறப்புரிமைகளுடன் ‘ வாழ்வதற்கு  குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனமாவது வேண்டாமா என்ன? இரு முன்னாள் ஜனாதிபதிகள் அதற்கு ஏற்கெனவே வழிகாட்டியிருக்கிறார்களே!

  ராஜபக்சாக்கள் என்னதான் மக்கள் ஆதரவை இழந்திருந்தாலும், அவர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று பாடுபடும் கணிசமான ஒரு பிரிவினர்  இருக்கவே செய்கிறார்கள். ராஜபக்சாக்கள்  அதிகாரத்தில் இருந்தபோது அவர்களின் முழுமையான அனுசரணையுடன் முறைகேடான வழிகளில்  சொத்துக்களைக் குவித்த அரசியல்வாதிகளும் கோர்ப்பரேட் முதலாளிகளுமே அவர்கள்.

   தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் பொதுச்சொத்துக்களை வாரிச்சுருட்டுவதற்கு வசதியாக ராஜபக்சாக்கள் கடைப்பிடித்த ‘புரவுக் கலாசாரம்’ ( Patronage Culture ) இத்தகைய பழிபாவத்துக்கு அஞ்சாத கும்பல்களை உருவாக்கியிருக்கிறது என்று முன்னரும் ஒரு தடவை இந்த பத்தியில் எழுதப்பட்டது.

   இந்த கும்பல்களின் விசுவாசம் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்களிடையே பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி கோட்டாபயவுக்கும் சேரும். ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க கோட்டாபய நெடுகவும் மௌனம் சாதிக்கமுடியாமல் போகும் என்பது நிச்சயம்.

தனது இரண்டில் ஒரு நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாகக் கூறவேண்டியிருக்கும். 

   இவ்வாறாக எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் பற்றி நாம் பேசும்போது இன்னொரு முக்கிய விடயத்தை அவதானிக்கவும் தவறக்கூடாது.

   இவர்கள் எல்லோரும் தொடர்ந்தும்  கோடிக்கக்கில் மக்களின் பணத்தில்தான்  பராமரிக்கப்  படுகிறார்கள். ஓய்வூதியம், பாதுகாப்புடன் கூடிய சிறப்புவசதிகளை அனுபவிக்கிறார்கள். இவர்களில் எவருமே தங்கள் சொந்தத்தில் வசதியாக வாழ முடியாதவர்கள் அல்ல. 

    பொருளாதார மீட்சிக்கு தவிர்க்கமுடியாதவை என்று கூறிக்கொண்டு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு  சேவைகளுக்கான கட்டணங்களையும்  பல்வேறு  வரிகளையும்  அதிகரித்து பொருளாதார மறுசீரமைப்பின் சுமையின் பெரும்பகுதியை நாட்டு்மக்கள் மீது சுமத்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும்  ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அரசியலுக்கு வராமல் இருந்தால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளை அரசாங்கம் பராமரிக்கும் என்று ஒரு புதிய நடைமுறையையாவது குறைந்தபட்சம்  கொண்டுவந்தால் என்ன? மகிந்தவும் சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளையும் அல்லவா அனுபவிக்கிறார்கள்.