அசாத் மௌலானா!     சாட்சியா சந்தேக நபரா?

அசாத் மௌலானா!  சாட்சியா சந்தேக நபரா?

(மௌன உடைவுகள் – 44)

  — அழகு குணசீலன் —

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத்மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்ற குசுகுசுப்பு செய்தியை சனல் 4 உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது.

 இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில்  குண்டுத்தாக்குதலில் தனது தொடர்பு எந்தளவுக்கு இருந்தது, யாரெல்லாம் தாக்குதலின் பின் புலத்தில் இருந்தார்கள் , தான் யாரால் நெறிப்படுத்தப்பட்டேன், தனக்கு தெரிந்தவை எல்லாம் எவை என்ற  தகவல்களை அடுக்கியிருக்கிறார் அசாத். ஆக, மொத்தத்தில், 

   “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை ” என்றாகிறது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மானிட நேயத்திற்கு மாறான மதவெறித் தாக்குதல். மிருகத்தனமான  இத் தாக்குதலை இந்த நாகரிக உலகில் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சனல் 4 ஆவணத்தினால் ஏற்படட்டிருக்கின்ற  அதிர்வலைகள்  இதனை வெளிப்படுத்துகின்றன.

அனைத்து தரப்பிலும் இருந்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது. பாராளுமன்ற, ஜனாதிபதி, சர்வதேச ஆணைக்குழு விசாரணைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் இவை. இலங்கையில் இவ்வாறான கோரிக்கைகள் எந்தளவுக்கு செயற்படுத்தப்பட்டன, விசாரணைகளுக்கு, அவற்றின் அறிக்கைகளுக்கு  என்ன நடந்தது என்பதெல்லாம் தெரிந்திருந்தும்  இவை எழுகின்றன. 

 நம்பிக்கை இன்மைக்கு மத்தியிலும் ஒரு நல்ல சைகையாக இவற்றைக் கொள்ளலாம். எனினும் விசாரணைக்கான கோரிக்கைகள்,  அதற்கான ஒத்துழைப்பு அறிவிப்புக்களைப் பார்க்கும்போது இவற்றிற்கு  பின்னாலும் ஒரு அரசியல்  இல்லை என்று அடித்துச் சொல்லமுடியாது. சனல் 4  ஆவணம் கூட  ஒரு  திசையிலேயே நகர்கிறது. அந்த திசை சரியான திசையா… ?  தவறான திசையா….? அரசியல் கலப்படமற்றதா ?என்ற கேள்வியும் உண்டு.

பயங்கரவாத தாக்குதல் ஒன்று குறித்த விசாரணை  சட்டம், நீதித்துறை சார்ந்தது. மௌன உடைவுகள் பேச விரும்புவது அதையல்ல. சனத் 4 ஆவணப்படம், அது வெளிவந்தகாலம், அதன்தேவை பற்றியது. இவை அசாத்தின் அரசியல் தஞ்ச கோரிக்கையில் ஏற்படுத்தக்கூடிய சாதகங்கள், பாதகங்கள் பற்றியது.

அசாத் , கொழும்பு ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் ஊடாக அங்குள்ள இரு சர்வதேச நிறுவனங்களின் ஆலோசனையின்படி சுவிஸில் அரசியல் தஞ்சம் கோருவதே இலகுவானது என்று முடிவு செய்து நேரடி விசா பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதனால்தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான செங்கன் விசாவை பெற்று பிரான்ஸ் வந்த அசாத், அவருக்கு நம்பிக்கையான நண்பர் மூலம் தரைமார்க்கமாக சுவிஸிற்கு அழைத்து வரப்பட்டு அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்கள், ஒன்றிய மற்றும் இணைந்து செயற்படும் நாடுகளுக்கு இடையே நடைமுறையில் உள்ளது. 

1. செங்கன் ஒப்பந்தம்: இது ஐரோப்பிய ஒன்றியத்தைச்சேர்ந்த எதாவது ஒரு நாட்டில் விசா பெற்று அதனூடாக ஒன்றிய / செங்கன் நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும்.  உதாரணமாக பிரான்ஸ் தூதரகத்தில் விசா பெறப்பட்டாலும் செங்கன் நாடுகளுக்கான விசா என்று கடவுச்சீட்டில் பொறிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறாத ஆனால் செங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட  சுவிஸிற்கும்  இதன் மூலம் பயணிக்கலாம்.

2. டப்ளின் ஒப்பந்தம்:  இந்த ஒப்பந்தம் அரசியல் தஞ்சம் கோருவோருக்கானது. ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரும் ஒருவர் எந்த ஐரோப்பிய நாட்டில் முதல் கால்பதிக்கிறாரோ அந்த நாட்டிலேயே அவர் தஞ்சம் கோரமுடியும். அதே போன்று ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக பதிவு செய்துவிட்டு இன்னொரு டப்ளின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் தஞ்சம் கோருவது சட்டத்திற்கு முரணானது. அவ்வாறானவர்கள் முதலில் கால்பதித்த அல்லது பதிவு செய்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுவதை டப்ளின் ஒப்பந்தம் உறுதிசெய்கிறது.

இப்போது சனத் 4 ஆவணத்தையும் , அரசியல் தஞ்சக்கோரிக்கையையும் நோக்கினால் ……..

(*) அசாத் மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பது  மேற்படி இரு ஒப்பந்தங்களின் அடிப்படையில்  என்பதால் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. இல்லையேல் சம்பந்தப்பட்ட நாடுகள் இரண்டும் விசேட ஏற்பாடொன்றில் ஒரு இணக்கத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டு. 

(*) அசாத் 2022 பெப்ரவரியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார். தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்த போதும் அவர் விண்ணப்பமி இன்னும் “பரிசீலனையில்” இருப்பதாகவே அறியமுடிகிறது. கோப்பை கிடப்பில் போடுவதும் “பரிசீலனை” என்றே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இது  அவருக்கு சாதகமான  ஒரு நிலையல்ல.

(*) அசாத் சுவிஸ் வருவதற்கும், தஞ்சம் கோருவதற்கு ஆரம்ப ஆலோசனைகளை வழங்கியவர்களின் தகவல்களின் படி இதுவரை மூன்று சட்டத்தரணிகளின் கைகளுக்கு விவகாரம் கைமாறியிருக்கிறது. இதுவும் தஞ்ச கோரிக்கையின் பலவீனத்தையும், அவருக்கு மூன்று வெவ்வேறு தரப்பினர் உதவியிருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.

(*)  இந்த நிலையில்தான் சனல் 4 ஆவணம் வெளிவந்தது.  ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளின் ஆதாரப்பற்றாக்குறையை நிரப்புவதே சனல் 4 ஆவணத்தின் பணி. இதன் மூலம் சர்வதேசமட்டத்தில் தஞ்சக்கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதே முக்கிய காரணம். ஆவணத்தின் மூலம் அசாத் ஈஸ்டர் தாக்குதலுக்கான அதிமுக்கிய ஆதாரமாக தோற்றம் பெற்றுள்ளார். அவருக்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தரப்பினராலும் வரக்கூடிய அச்சுறுத்தல்களிடம் இருந்து அவரைக்காப்பாற்றவேண்டும். அதற்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற  கருத்தியலை சர்வதேச மற்றும் ஐ.நா.மட்டத்தில்  கட்டி எழுப்புவது இதன் நோக்கம்.

(*) சனல் 4 ஆவணம் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த அசாத்தின் ஒப்புதல் வாக்குமூலம். ஈஸ்டர் தாக்குதலில் அசாத் ஒரு பங்காளி. அவர் வழங்கும் சாட்சியம் அவரை ஒரு சந்தேகநபராக அடையாளப்படுத்துவதை தடுக்கமுடியாது. இதுவே அவரின் தஞ்சக்கோரிக்கைக்கு குறுக்கே நிற்கின்ற முக்கியமான தடை. தற்போதைய நிலையில் அவர் தனக்கு தானே போட்டுக்கொண்டது இது.

(*) பயங்கரவாத்திற்கு எதிரான சட்டங்கள் தற்போது உலகம் முழுவதும் ஒரு பொது நிலைக்கு வந்துவிட்டன. எனவே பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர் ஒருவரை சாதாரண அகதிக்கோரிக்கையாளர்களோடு ஒப்பிடமுடியாது. இவர்கள் ஐரோப்பாவின்  தேசியபாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து சிரியாவுக்கு சென்று அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சுவிஸ் பிரஷைகளான பெண்கள், பிள்ளைகள், ஆண்களை கூட சுவிஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(*) ஐரோப்பாவில் ஐ .ஸ்.ஐ.ஸ் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்று இருக்குமாயின் அது பிரான்ஸ்.  இந்தப் பின்னணியில் பிரான்ஸ்சில் அசாத்துக்கான தஞ்ச வாய்ப்பு சனல் 4 ஆவணத்தின் பின்னர் நினைத்துப்பார்க்கமுடியாதது.

(*) மொத்தத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத  நடவடிக்கைகளுக்கு தான் உடந்தையாக இருந்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம், அறிந்திருந்தும் அதைமறைத்து அந்த அநியாயம் சாத்தியமாக சித்தமாக இருந்தது, அறிந்த தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்காதது என்பன போன்ற பல குற்றச்சாட்டுக்களை சுமக்க  அவருக்கு வாய்ப்புண்டு. சனல் 4 ஆவணம் அசாத்தை சாட்சியாக அன்றி  அதிகம் சந்தேக நபராகவே சர்வதேசத்தில்  நிறுத்தியிருக்கிறது.

அசாத்தின் தஞ்சகோரிக்கை யுத்தகாலத்தில் நிழவில்லை. யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தது. ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்ததும் அல்ல. அங்கும் 4ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிலையில் சர்வதேச அரசியல் சதுரங்கத்திற்குள் இலங்கையை இழுத்துவிடுவதற்கு அசாத் உதவியிருக்கிறார். அசாத்தின் வாப்பாவை கொன்றவர்கள் – அசாத்தை சிறுவயதிலே தகப்பன் இல்லாத பிள்ளையாக்கியவர்கள் இப்போது அசாத்துக்காக அழுகிறார்கள். எல்லாம் “எதிரியின் எதிரி எனக்கு நண்பன்” என்ற அரசியல்.

அசாத்…!

உனது சாட்சியம் உண்மையானால்…… பயங்கரவாத்திற்கு சொந்த வாப்பாவை பறிகொடுத்த, கொடுமையை மறந்து இன்னும்  எத்தனையோ குழந்தைகள்  பயங்கரவாதத்திற்கு பலியாகப் போகிறார்கள் என்பது தெரிந்தும் மௌனித்த மனிதன் (?) நீ !

உனக்கு பின்னர்தான் நீ வெளியிட்டுள்ள பட்டியல்.