— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் தனது முன்னெடுப்பின் ஒரு கட்டமாக, அது குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளிடம் கேட்டிருந்தார்.
ஏற்கெனவே, அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவுடைய 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குக் கருத்துக்களைக் கேட்கவும் கூறவும் வேண்டிய அவசியமில்லை என்ற வாதம் ஒருபுறமிருக்க, மாகாண சபைகளிலிருந்து மீளப்பெறப்பட்ட அதிகாரங்களை வழங்கி காணி-பொலீஸ்-நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13 ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப்படுத்துமாறு ரெலோ, புளொட், ஈ பி ஆர் எல் எஃப் ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியனவும் இணைந்த (புதிய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் (தமிழ் ஊடகங்களும் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றன) குத்துவிளக்குச் சின்னத்தையுடைய ‘ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி’ முன்மொழிந்துள்ளது. அதற்கான கடிதத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் பா.உ. (ரெலோ) மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.உ. (புளொட்) ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் 07.08.2023 அன்று கையளித்துள்ளனர்.
ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்திருந்த ‘பழைய’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ மற்றும் புளொட் என்பன வெளியேறிய பின்பு தனித்து விடப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியும் இவ்வாறான ஒரு முன்மொழிவைத்தான் வைத்திருக்கும் அல்லது வைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அக் கட்சியின் ஊடக அறிவிப்புகள் அவ்வாறுதான் உள்ளன. இந்திய பிரதமர் மோடிக்கு ஏனைய சில தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தும் பின் தனித்தும் எழுதிய கடிதங்களில் தமிழரசுக் கட்சி இதனைக் கோரியிருந்தது.
இந்த முன்மொழிவில் எந்தத் தவறும் இல்லை. இந்த முன்மொழிவு சரியானதே.
ஆனால், இது குறித்து இப்பத்தி சொல்ல வருவதைத் தமிழ் மக்கள் கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கூறப்பெற்ற கட்சிகள் எல்லாம் 13 ஆவது திருத்தத்தை அதன் மூல (அசல்) அதிகாரங்களுடன் முழுமையாக அமுல் செய்ய வேண்டுமென்ற ஒரு மேலோட்டமான கோரிக்கையையே ஊடக அறிக்கைகள் மூலமோ அல்லது இந்திய பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களிலோ அல்லது தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பும் கடிதங்களிலோ முன் வைக்கிறார்களே தவிர- அத்தகைய முன்மொழிவுகளை மேலோட்டமாக முன் வைப்பதோடு தமிழ் மக்களுக்கான தமது ‘தமிழ்த் தேசிய அரசியல்’ கடமை முடிந்துவிட்டது என்று காட்டுகிறார்களே தவிர அது காரிய சித்தியாக வேண்டுமென்ற எண்ணத்தில் அல்ல.
அப்படி அது காரிய சித்தியாக வேண்டுமென்ற எண்ணமும் நோக்கமும் உளப்பூர்வமாக இக் கட்சிகளிடம் இருக்குமானால் 13 ஆவது திருத்தத்தை அதன் மூல (அசல்) வடிவத்திலேயே முழுமையாக அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும்-வழிவரைபடத்தையும் (ROAD MAP) கொடுக்க வேண்டும்; கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் இக்கட்சிகளிடம் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டுமென்பதில் விசுவாசமோ அக்கறையோ கிஞ்சித்தும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
இக்கட்சிகள் ஒப்புக்காகவும்-தேர்தல் அரசியற் தேவைகளுக்காகவும் அப்படி மேலோட்டமாகக் கோரிக்கைகளை முன் வைக்கிறார்களே ஒழிய அது நிறைவேற வேண்டுமென்பதில் அக்கறையில்லை. ஏனெனில், இவர்கள் இப்படி ஒரு பக்கம் உதட்டளவில் கூறிக்கொண்டு இக்கட்சிகளின் மூக்கணாங் கயிற்றைப் பிடித்திருக்கும் உள்நாட்டு-வெளிநாட்டு (புலம்பெயர் தேசம்) எஜமான முகவர்களின் கட்டளைகளுக்கிணங்கத் தமிழ் மக்களுக்குத் தமிழீழத் தனிநாடு அல்லது அதற்கு அதி குறைந்த பட்சமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டிக் கட்டமைப்பைத்தான் மறுபக்கத்தில் கனவாகப் ‘பராக்கு’ க் காட்டி கொண்டிருக்கின்றன. இந்தக் கனவு வேறு. களநிலை யதார்த்தம் வேறு.
13 ஆவது திருத்தத்தை அதன் மூல (அசல்) வடிவத்தில் அமுல் செய்வதற்கான வழிவரை படத்துடன்-அதற்கான வழிமுறைகளுடன் ஒரு முழுமையான முன்மொழிவை அரசியல் அரங்கிலே இதுவரை முன் வைத்தது அதிகாரப் பகிர்வு இயக்கத்தை முன்நகர்த்திக் கொண்டிருக்கும் அதன் ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவருமான கலாநிதி கா. விக்னேஸ்வரன் மட்டுமே.
08.05.2023 அன்று அதிகாரப் பகிர்வு இயக்கத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கமிடம் கையளிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 15.05.2023 அன்று நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுப் ‘பிள்ளையார் சுழி’ இடப்பெற்ற விடயம்தான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியல் ரீதியாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
தமிழ் மக்கள் கூட்டணி-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-தமிழர் விடுதலைக் கூட்டணி-அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி-ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய எட்டுத் தமிழ்க் கட்சிகளின் முழுமையான ஒருமித்த கோரிக்கையாக 08.05.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமிடம் கையளிக்கப்பட்ட மேற்படி ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு முதலில் சம்மதித்து விட்டு இறுதி நேரத்தில் ரெலோ-புளொட்-ஈபிஆர்எல்எஃப்-தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் மறுத்திருந்தன.
இவ்வாறு முன்பு கையெழுத்திட மறுத்துவிட்டு, இக்கட்சிகள் முன்பு கையெழுத்திட மறுத்த அதே ஆவணத்தின் உள்ளடக்கத்தையே இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்மொழிகின்றனவென்றால், அதில் உள்ள முரண்பாட்டையும் இக் கட்சிகளின் (ரெலோ-புளொட்-ஈபிஆர்எல்எஃப்-தமிழரசுக் கட்சி) இரட்டை வேட அரசியலையும் தமிழ் மக்கள் தெளிந்துகொள்ள வேண்டும். இந்தத் தெளிவு ஒன்றுதான் எதிர் காலத்தில் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய அறிவு பூர்வமான அரசியற் திசையைத் தீர்மானிக்க உதவும். இப்போது 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை அதன் மூல வடிவத்திலேயே வலியுறுத்தும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எஃப், தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகள், இதே விடயத்தை முன்வைத்த அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் 08.05.2023 ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது ஏன்?