ஆகட்டுமென் செவியிரண்டும் செவிடாய்

ஆகட்டுமென் செவியிரண்டும் செவிடாய்

  — யோகநாதன் துஷாந்தினி —

சற்றென விழிநீர் தரித்த

சிலநேரம்

எனை தொட்டால் சிணுங்கியென்றீரே

அந்நேரம்

மனச் சரிவிலும் துளிநீர் விதைக்கா

சிலநேரம்

எனை மனவழுத்தக்காரியென்றீரே

அந்நேரம்

தெரிந்துகொண்டதை பகிர்ந்துகொண்ட 

சிலநேரம்

எனை பெரும்பகட்டுக்காரியென்றீரே

அந்நேரம்

அறிந்திருந்தும் அமைதிகொண்ட

சிலநேரம்

எனை ஆய்வறிவற்றவளென்றீரே

அந்நேரம்

எதிரான பேச்சை உரைத்த 

சிலநேரம்

எனை புதிர் பித்தென்றீரே

அந்நேரம்

இசைவான பேச்சை உதிர்த்த

சிலநேரம்

எனை இயந்திர பொம்மையென்றீரே

அந்நேரம்

உதிக்கும் உட்கிடக்கையை விழுங்கிய

சிலநேரம்

எனை உம் எனும் முகக்காரியென்றீரே

அந்நேரம்

என் உணர்வே அவ்வளவுதான் என்றிருந்த

சிலநேரம்

எனை உள உயிர்ப்பற்றவளென்றீரே

அந்நேரம்

பிடித்தவற்றுக்கெல்லாம் நகைத்திருந்த

சிலநேரம்

எனை சூழ்ச்சிக்காரியென்றீரே

அந்நேரம்

நகுவதில் தயக்கம் காட்டியிருந்த

சிலநேரம்

எனை சுடுமூஞ்சுக்காரியென்றீரே

அந்நேரம்

அமைதியாக நின்றிருந்த 

சிலநேரம்

எனை அமுசடக்கியென்றீரே

அந்நேரம்

அதைகலைத்து நியாயம் பேசிய

சிலநேரம்

எனைப் பெரும்சபை குழப்பியென்றீரே

அந்நேரம்

ஆத்திரமாய் கேட்டுப் பார்த்த

சிலநேரம்

எனை நாவடக்கமில்லா பூவையொருத்தி என்றீரே

அந்நேரம்

அப்பட்டமாய் கதை உமிழ்ந்த

சிலநேரம்

எனை நாணமில்லா பாவையொருத்தி என்றீரே

அந்நேரம்

வீண்கருத்து சொல்ல முனையாச்

சிலநேரம்

எனை விபரம் குறைந்தவளென்றீரே

அந்நேரம்

விளக்கமாய் சொல்ல முற்பட்ட

சிலநேரம்

எனை விளம்பரக்காரியென்றீரே

அந்நேரம்

தொடர்ச்சியாக வினாத்தொடுத்த

சிலநேரம்

எனை திறன்முறையில்லா பறைசாற்றியென்றீரே

அந்நேரம்

தொட்டில் பழக்கம் தட்டிக்கேட்பதை விட்டுவிட முடியாதென விடைகொடுத்த

சிலநேரம்

எனை வரன்முறையில்ல வம்பிழுப்பாளியென்றீரே

அந்நேரம்

உட்கதை அகம் பேணிய

சிலநேரம்

எனை நஞ்சுறும் நெஞ்சுக்காரியென்றீரே அந்நேரம்

ஊர்கதை புறம்பேசாச்

சிலநேரம்

எனை நழுவிடும் வஞ்சனைக்காரியென்றிரே

அந்நேரம்

கையேந்தாமல் வாழ்ந்துவந்த 

சிலநேரம்

எனை பொல்லாக் காரியக்காரியென்றீரே

அந்நேரம்

கைமாறு கேட்டு நின்ற சிலநேரம்

எனை கைச்சுரண்டல்காரியென்றீரே

அந்நேரம்

குற்றமிழைத்தவரை சுட்டிப் பேசிய

சிலநேரம்

எனை ஆட்காட்டியென்றீரே

அந்நேரம்

தொட்டுக் காட்டாமல் தட்டிப்பேசிய

சிலநேரம்

எனை அகம் நடுங்கியென்றீரே

அந்நேரம்

கனவின் நகர்வை காட்சிப்படுத்தாதலைந்த

சிலநேரம்

எனை உலகம் தெரியாதவளென்றீரே

அந்நேரம்

காற்றோடு சாட்சிப்படுத்தித் திரிந்த

சிலநேரம்

எனை ஊர் சுற்றித்திரிபவளென்றீரே

அந்நேரம்

விரும்பவில்லை தற்காலிகமாய் திருமணமென்ற

சிலநேரம்

எனை வெட்டியாய் வாழ்பவளென்றீரே

அந்நேரம்

விவாகரத்தில் தாழாத சுதந்திரமென்ற

சிலநேரம்

எனை வாழா வெட்டியானவளென்றீரே

அந்நேரம்

தனியாக வாழ்ந்திருந்த

சிலநேரம்

எனை ஒன்டிக்கட்டையென்றீரே

அந்நேரம்

விருப்பத்துணை தேடிக்கொண்ட

சிலநேரம்

எனை ஓடுகாலியென்றீரே

அந்நேரமெல்லாம்

அவைபோன்ற நேரமெல்லாம்

உங்களையும்

உங்கள் ஊகிப்புக்களையும்

உருவ உருவகிப்புக்களையும்

உப்பற்ற பேச்சுக்களையும்

உய்த்துணரா பெயர் வார்ப்புகளையும்

உன்னிப்பாய் நோக்கிட்டால்

ஒருவேளையேனும் நின்று கேட்டிட்டால்

அக்கணமே ஆகட்டுமென் செவியிரண்டும் செவிடாய்