— சோலையூர் குருபரன் —
கடந்த வருடம் 15.12.2025 இல் யாழ்ப்பாணம் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட சுவிச்சர்லாந்தில் வசிக்கும் கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்ரனின் ‘பாரதியும் நானும்’ கவிதைத் தொகுப்பு பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கு, தமிழ் இலக்கியத் தளத்தில் மகாகவி பாரதியின் தனித்துவம் இக்கவிதைத் தொகுப்பில் தென்படுவதனால், தமிழ் கவிதை இலக்கியத்தின் போக்குகள் பற்றிய மேலோட்டமான புரிதல் இருத்தலும் அவசியம் என்பதனால் இத்தகைய நீட்சி தேவைப்படுகிறது.
உலகில் முதன் முதல் தோன்றிய இலக்கிய வடிவமாகக் கவிதை கொள்ளப்படுகிறது. எழுத்து வரிவடிவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வாய்மொழி வழக்காகக் கவிதைகள் பாடப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல், சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
காலத்தின் போக்குக்கு இணங்கவும் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு ஏற்பவும் அவ்வக் காலத்துக்குரிய வழக்கில் இலக்கியங்கள் தோன்றுவது இயல்பு. அவ்வாறே சங்க காலம் முதற் கொண்டு இன்றுவரை தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் இம்மாற்றத்துக்கு உட்பட்டே வந்திருக்கின்றன.


சங்க காலம் (கி.மு. 300 – கி.பி. 300) தமிழ் இலக்கிய வரலாற்றில் “பொற்காலம்” எனலாம். இயற்கை, மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் பாடப்பட்டிருக்கின்ற அகப்பொருளில் காதல் வாழ்வைப் பொருளாகக் கொண்டும், புறப்பொருளில் போர், வீரம்,கொடை, மன்னர்களின் புகழையும் பாடுபொருளாகக் கொண்டும் கவிதைகள் பாடப்பட்டன.
சங்கமருவிய காலம் (கி.பி. 300 – கி.பி. 600) சமூகத்தில் ஒழுக்கநெறிகள் முக்கியத்துவம் பெற்ற காலம். இதனை “அறநெறிக் காலம்” எனவும் கூறுவர். இக்காலத்தில் அற ஒழுக்கங்களைக் கூறும் திருக்குறள், நாலடியார், திரிகடுகம் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங்காப்பியங்களும் தோற்றம் பெற்றன.
பக்தி இலக்கிய காலம் (கி.பி. 600 – கி.பி. 1200) சைவம், வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்ற காலம். இக்காலப் பகுதியில் இறைவனைப் புகழ்ந்து பாடும் பன்னிரு திருமுறைகள், நாலாயிரத்திவ்ய பிரபந்தங்கள் போன்ற இசைப்பாடல்களும் தோற்றம் பெற்றன. அத்துடன் இக்காலப் பகுதியில் காப்பியக் காலம் (கி.பி. 900 – கி.பி. 1200) உச்சம் பெற்றதாக தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சோழர் காலத்தில் நீண்ட நெடிய காப்பியங்கள் உச்சம் தொட்டன. கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகிய காப்பியங்களைக் குறிப்பிடலாம்.
சிற்றிலக்கிய காலப் பகுதியில் (கி.பி. 1200 கி.பி. 1800) பேரிலக்கியங்கள் குறைந்து, குறுகிய வடிவிலான தூது, உலா, பரணி, பள்ளு, குறவஞ்சி போன்ற 96 வகையான சிற்றிலக்கியங்களும் பிறவும் தோற்றம் பெற்றன.
நவீன காலத்தில் (கி.பி. 19-ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை)மேலை நாட்டு நவீன இலக்கியத்தின் வருகையால் ஏற்பட்ட தாக்கம், அச்சு இயந்திரத்தின் வருகை, பாதிரிமாரின் வருகை ஆகியன கவிதை இலக்கியத்தின் வடிவம், யாப்பு, பொருள், உள்ளடக்கம், உத்தி ஆகியவற்றில் புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்தின.
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலத்தில் மகாகவி பாரதியாரின் வருகை கவிதை இலக்கியத்தில் புதிய வேகத்தை ஏற்படுத்தியது. பாரதிதாசன் சமூக மாற்றத்தைப் பாடினார். புதுக் கவிதை மரபுபொன்று தோன்றி,மரபு சார்ந்த கட்டுப்பாடுகள்(யாப்பு) தகர்த்தெறிந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவமளிக்கும் கவிதைகளைப் பாடினார்கள். பிறகாலப்பகுதியில் மிகச் சுருக்கமான மூன்று வரிக் ஹைக்கூ கவிதைகள் பிரபலமாக ஆரம்பித்தன.
மரபுக் கவிதைகளின் யாப்பு (Grammar of Versification) எனும் கட்டுக்கோப்பை உடைத்து, பாமர மக்களும் புரியும் வகையில் உருவானதே நவீன கவிதை வடிவம் எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாகவி பாரதியார் நவீன தமிழ் கவிதையின் தந்தை எனப் போற்றப்பட்டார். குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுண்டு கிடந்த தமிழ் கவிதை மரபுக்கு முதன்முதலில் “விடுதலை”வாங்கிக் கொடுத்தார். அத்தோடு அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் (Walt Whitman) தாக்கத்தால், தமிழில் முதன்முதலில் ‘வசன கவிதை’ எனும் வடிவத்தை அறிமுகப்படுத்தினார். கடினமான செந்தமிழ் சொற்களைத் தவிர்த்து, மரபு ரீதியாகப் பின்பற்றி வந்த யாப்பமைவுகளைத் தகர்த்தெறிந்து வடிவம், பொருள், எள்ளடக்கம், உத்தி, ஆழம், கனதி ஆகியவற்றில் புதுமைகள் புகுத்தி பாமர மக்களும் புரியும் வகையில் எளிய நடையில் கவிதைகள் (Plebian Style) பாடினார்.
பாரதியாரின் கவிதைகளை ஆய்வு செய்த பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை (1968, தமிழ் சுடர் மணிகள், பக் 314) “பாரதியாரின் தமிழில் ஓர் ஒளி எங்கும் பரந்து விளங்கக் காண்கிறோம். இவ்வொளி தூய்மையின் புறத்தோற்றம்,மயக்கம், அறியாமை முதலியவற்றைப் போக்குவது, இன்பமயமாய் இருப்பது, ஆத்ம சிற்சக்தியின் ஓர் அரிய இயல்பு, எதிர்காலத்தையும், இறந்த காலத்தையும் நிகழ்வில் காண்பது, அரிய நுண்மையான உண்மைகளைக் கணப் பொழுதில் தடீரெனத் தெரிவிப்பது, தெய்வீக சக்தியொன்று திடீரென்று கவிஞரது ஆத்மாவிற் புகுந்து முழுவதும் இடங்கொண்டு பரவசப்படுத்தி, ஒளிப் பிழம்பு ஆக்குகிறது, இந்த ஒளியிலே ஆனந்தக் கனவுகள் நனவுகளாக முன்னிலைப்படுகின்றன.” என மதிப்பிடுகின்றார்.
பாரதிக்குப் பின்னர் 1960 வரை அவரைப் பின்பற்றி ஒரு புதிய தலைமுறை தோற்றம் பெற்றது. அதனைப் பின்வருமாறு இனங்காணலாம்.
- பாரதிதாசன்.
- கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை.
- கலைவாணன், ச.து.சு யோகியார்.
- பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன்.
இப்பரைம்பரை மணிக்கொடி காலத்துடன் உச்சம் பெற,எமுத்து இயக்கம், வானம்பாடி இயக்கம், மறுமலர்ச்சி, சமகாலம் என விரிந்து சென்றது.
மணிக்கொடி காலத்தில் (1930 – 1940) பாரதி காட்டிய பாதையில் கவிதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது ‘மணிக்கொடி’சஞ்சிகை எனலாம். இக்காலக்கட்டத்தில் கவிதை ஒரு இலக்கிய இயக்கமாக மாறியது. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் மணிக்கொடி சஞ்சிகையில் எழுதிப் புதுக் கவிதை யுகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தனர். இக்காலத்தில் “புதுக்கவிதையில் படிமங்கள் (Images), குறியீடுகள் (Symbols) அதிகம் பயன்படுத்தப்பட்டுக் கவிதை புதுப் பொலிவு பெற்றது.
எழுத்து, வானம்பாடி சஞ்சிகைக் காலத்தில் (1950 – 1980) புதுக்கவிதை மக்களிடையே பரவலாகச் சென்றடைந்தது. சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ இதழில் வெளிவந்தகவிதைகளில் சி.மணி, ஞானக்கூத்தன், பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன், சிவசங்கரன் போன்றோரும் போற்றி வளர்த்தனர். இலக்கணத் தூய்மையோடு நா.காமராசன்,சிற்பி, செந்தமிழ்மாறன்,தமிழன்பன், அப்துல் ரகுமான்,புவியரசு போன்றோரும் புதுக் கவிதைகளை மிகுதியாகவே பாடியுள்ளனர். இக்கவிதைத் துறையில் பெயர் பெற்ற பிற எழுத்தாளர்களான மேத்தா, இங்குலாப், அபி போன்றோர் தீவிரமான பரிசோதனைகளைச் செய்தது கவிதைகளை இயற்றி இருந்தனர். வானம்பாடி கவிதை இயக்கம் “மானுடம் பாடுதல்”என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு கோவையில் உருவானது. கவிஞர்கள்: சிற்பி பாலசுப்பிரமணியம், மேத்தா, நா.காமராசன், அப்துல் ரகுமான் போன்றோர் கவிதையைச் சமூகப் போராட்டத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினர்.
சமகால நவீன கவிதைகளில் (1990 முதல் இன்று வரை) சாதி, சமய ஒடுக்குமுறை, பெண்ணிய விடுதலை, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் அம்சங்கள், தேசியம், தனித்துவம் என்பவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு சுகிர்தராணி, மாலதி மைத்ரி போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பெண்களின் அக மற்றும் புற வாழ்வை வெளிப்படுத்தும் கருவியாகவும் கவிதைகளைப் பாடினர். இதே காலத்தில் பின்நவீனத்துவம் (Post-modernism) சார்ந்த சிந்தனைகளை மையபடுத்தியும் கவிதைகள் தோற்றம் பெற்றன.
ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் மண்ணின் மணம், சமூகப் போராட்டங்கள், அரசியல் நெருக்கடி, விடுதலைப் போராட்டங்கள், சாதி, சமய ஒடுக்கு முறைகள் என்பவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்ரோசமாகவும் வெளிப்படுத்தின. ஈழத்துத் தமிழ் கவிதை இலக்கிய மரபு சங்க காவத்தில் ஈழத்துப் பூதன் தேவனார் ஊடாக ஆரம்பமாகிறது. 1759 இல் யாழ்ப்பாணம் மானிப்பாயில் அச்சு இயந்திரசாலை நிறுவப்பட்டதில் இருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் புதுப் பொலிவுபெற ஆரம்பித்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினப் பின்வரும் கட்டங்களாகப் பிரித்து நோக்கலாம்.
பண்டித, புலவர் மரபு (கி.பி1750-1900) நிலவிய காலப்பகுதியில் வரத பண்டிதர், நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், இணுவைச் சின்னத்தம்பிப் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர, பூலோகசிங்க முதலியார் (அருளப்ப பாவலர்), கணபதி ஐயர், உமறுப் புலவர் இவர்களுடன் மேலை நாட்டினரும், மதம் மாறிய கிறிஸ்தவப் புலவர்களும் பல நூல்களை இயறறியுள்ளனர்.
மரபுக் கவிதை மரபு (1900-1940வரை) பிரபலமானது. சி.வை.தாமோதரம்பிள்ளை, வித்துவான் க. வேந்தனார், சோமசுந்தரப் புலவர், பாவலர் துரையப்பாபிள்ளை, விபுலாநந்த அடிகளர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நடேசையர், குறிஞ்சித் தென்னவன் போன்றோர் யாப்பு மரபை உறுதியாகப் பின்பற்றிக் கவிதை பாடினர். பாரதியின் சமகாலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை, விபுலாநந்த அடிகளர் போன்றோர் யாப்பில் எளிமையைப் புகுத்தி உள்ளடக்க மாற்றத்துடன் பாடினாலும் மரபுக் கவிதை மரபில் இருந்து விலகவில்லை.
2. மறுமலர்ச்சிக் காலத்தில் (1940 – 1960) ஈழத்துத் தமிழ்க் கவிதை புது வடிவம் பெற்று நவீனத்துவத்தை நாடிச் சென்றது. பாரதியாரின் தாக்கமும், சமூகச் சிக்கல்களும் அடக்கு முறைகளும் அரசியல் ஒடுக்கு முறைகளும் இதற்குப் பின்புலமாக இருந்தன. புதுக்கவிதை முயற்சிக்கு மகாகவி (து. உருத்திரமூர்த்தி), நீலாவணன் போன்றோர் யாப்பு மரபையும் நவீன உணர்வுகளையும் இணைத்து மறுமலர்ச்சி இதழில் கவிதை பாடினர். குறிப்பாக, சாதாரண மக்களின் பேச்சுத் தமிழை கவிதையில் கொண்டு வந்ததில் மகாகவி, நீலாவணன் ஆகியோருக்குப் பெரும் பங்குண்டு. 1956 ஆம் ஆண்டு இனக் கலவரம் இலக்கியப் பரப்பில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை சமகாலப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தன.
முற்போக்கு இலக்கிய (1960 – 1983) காலத்தில் கவிதைகள் வெறும் கலைக்காக மட்டுமன்றி, சமூக மாற்றத்திற்காகவும் பாடப்பட்டன. 1960 களின் கவிதைப் போக்கில் சமூகப் பிரச்சினைகளும், முற்போக்குச் சிந்தனைகளும் முக்கியத்துவம் கொடுத்துக் கவிதைகள் பாடப்பட்ன. முருகையன், பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை, எம்.ஏ.நுஹ்மான், சண்முகம், சிவலிங்கம், மௌனகுரு, ஈழவாணன், இ.சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக் கவிராயர், கலைவாதி கலீல், ஜீவா, ஜீவரெத்தனம், வி.கந்தசாமி, காரை சுந்தரம்பிள்ளை, மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், பா.சத்தியசீலன், இக்பால், அன்பு முகையிதீன், சில்லையூர் செல்வராஜன், மு.பொன்னம்பலம், வெ.குமாரசாமி, கருணை யோகன், சாருமதி போன்றோரும் சமகாலச் சிந்தனை ஓட்டத்தில் அன்றைய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை எழுதினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வர்க்கப் போராட்டம், சாதிய ஒழிப்பு, சமத்துவம் பெண்ணிய விடுதலை பற்றிப் பேசின. முருகையன், பசுபதி, கைலாசபதி (விமர்சகர்) போன்றோர் கவிதையின் போக்கை மாற்றினர். ‘முற்போக்குச்’ சிந்தனை ஈழத்து இலக்கியத்தில் தனிச்சிறப்பாக மாறியது.
போர்க்கால இலக்கியங்களில் (1983 – 2009 வரை) போரின் அவலம் இடப்பெயர்வு, மரணம், வலி, காணாமல் போதல் ஆகிய இழப்புகளைத் தத்ரூபமாகப் பாடினர். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை போன்றோர் இதில் முக்கியமானவர்கள். இக்காலத்தில் ஈழத்துப் பெண்களின் போர்க்கால நெருக்கடிகளைச் சிவரமணி, செல்வி, மைத்ரேயீ போன்றோர் மிகத் தீவிரமாகப் பதிவு செய்தனர். இலங்கையின் போர்ச் சூழல் ஈழத்துத் தமிழ் கவிதை உலகையே மாற்றியமைத்தது. உலகத் தரம் வாய்ந்த கவிதைகள் இக்காலத்தில் தோற்றம் பெற்றன.
புலம்பெயர் கவிதை இலக்கியம்(1983 – 2009 வரை அதற்குப் பின்னரும்) இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில் உயிருக்கு அஞ்சி உலகெங்கும் சிதறிப்போன ஈழத்தமிழர்கள், அங்கு உருவாக்கிய இலக்கியமே “புலம்பெயர் கவிதை இலக்கியம்” எனப்படுகிறது. இது தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது. கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் பாடப்பட்ட தமிழ்க் கவிதைகளில் இடப்பெயர்வு, அவல வாழ்க்கை, ஏக்கம், தவிப்பு, போர்க்கால அரசியல், புலம்பெயர்வு வாழ்க்கை, அந்நாட்டுச் சூழல் என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளைப் பாடினர். சேரன் (கனடா), வ. ஐ. ச.ஜெயபாலன் (நோர்வே), பத்மநாப ஐயர், திருமாவளவன் (கனடா) போன்றோரும் புகலிட வாழ்வின் துயரங்களையும் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடுகளை லதா (ஓவியா), மைத்திரேயி, செல்வம் அருளானந்தம் போன்றோர் ஆழமாகப் பதிவு செய்தனர். அவர்களுள் ஒருவராகவே கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்டனையும் (சுவிச்சலாந்து)பார்க்கிறேன். இந்தத் தொடர்பினை விரிவாகக் கூறியமைக்குக் காரணம், கவிதைத் தொகுப்பில் மகாகவி பாரதியாரின் பெயர் வந்தமையால் அமைந்தது இந்த வரலாற்றுத் தேடல்.
————
புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியின் கவிதைகளை ரசித்து ருசித்து இன்புற்றதனால் அவரின் கவிதைகளை ஆகர்சித்துக் கவரப்பட்ட நூலாசிரியர் ரூபாவின் உள்ளத்தில் காலத்துக்குக் காலம் உதித்த பாரதியின் நினைவுத் துளிகளைத் சொல்லோவியமாக வரைந்த கவிதைகளின் தொகுப்பாக ‘பாரதியும் நானும்’ தொகுப்பு நூல் 15-12-2025அன்று யாழ். கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பொருளில், பல்வேறு யாப்பமைதிகளில் ஓசை, ஒலி, இசை நயத்துடன் பாடப்பட்ட மரபுக் கவிதைகள் மற்றும் புதுக்கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கி இருக்கின்றன.
கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்டன் யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர். யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி, 24 மணித்தியாலத்துக்குள் யாழில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கட்டளைக்கு இணங்க கையில் அகப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு பெருநடை நடந்து வன்னிப் பெருநிலப் பரப்புக்குள் புகுந்தனர். இடம்பெயர்ந்த அகதி வாழ்கை்கையின் பின்னர் 2001இல் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து தற்பொழுது சுவிற்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் திருமகள் ரூபாவின் நூல் வரிசையில் ஐந்தாவது நூலாகப் ‘பாரதியும் நானும்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனது கவித்துவ ஆற்றலால் பாவலர், கலைமகள், திருமகள், கவிதாயினி,செம்மொழிக்காவலர், கவிபாரதி பாவலர்மணி எனப் பல்வேறு சிறப்புக் கௌரவங்களைப் பெற்றவர். உலகின் பல்வேறு அமைப்புக்கள் நிறுவனங்கள் அவரின் கவித்துவத்தைப் பாராட்டிப் பல்வேறு விருதுகள், வழங்கிப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. தற்பொழுது மொரிசியஸ் நாட்டில் தமிழ்மொழி ஆய்வுக் குழுவில் ஒருவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
‘பாரதியும் நானும்’ கவிதைத் தொகுப்பு நூலின் முன்னட்டை பாரதி மற்றும் நூலாசிரியரின் புகைப்படத்துடனும் பின்னட்டையிலும் நூலாசிரியரின் படத்துடன் ‘புரட்சி விதை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றும் காணப்படுகிறது. இந்நூல் மொத்தம் 65 பக்கங்களையும், அதில் 54 பக்கங்களில் 20 கவிதைகளும் பாரதியின் ஐந்து புகைப்படங்களும் சில கவிதை வரிகளும் காணப்படுகின்றன. இந்நூல் ஆசிரியரின் சமர்ப்பணக் கவியுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளையின் அணிந்துரையும், ஓய்வுநிலை அதிபர்திருமதி வரதலட்சுமி கதிரேசபிள்ளை, ஓய்வுநில ஆசிரியர் மனோன்மணி கந்தையா ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும், கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனின் வாழ்த்துப் பாவும், நூலாசிரியரின் தன்னுரை, நூல் விபரம், உள்ளடக்கம் என்பவற்றையும் கொண்டது. 20 கவிதைகளில் மகாகவி பாரதி பற்றியது 15 கவிதைகளாகும். அவற்றுள் மரவு மற்றும் புதுக் கவிதைகளும் அடங்கும். பிற விடயஙகளைப் பாடும் ஏனைய ஐந்துகவிதைகளும் மரபு, புதுக் கவிதைகளில் அமைந்திருக்கின்றன.
இத்தொகுப்பில் உள்ள 14 மரபுக் கவிதைகளிலும் கவிதைக்கே உரிய யாப்பு, வடிவம், உருவம், உள்ளடக்கம், கனதி, உத்தி ஆகியன தாராளமாகப் பின்பற்றப் பட்டிருக்கின்றன. ஒரு மரபுக் கவிதை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளைக் கொண்டிருக்கும். இதில் ஓசை முக்கிய இடம்பெற்றிருக்கும். ஓசையின்றி மரபுக் கவிதை அமைய முடியாது.நவீன கவிதை, வசன கவிதைகளில் இவை அனைத்தையும் எதிர்பார்க்க இயலாது. அதில் ஒள்றோ சிலவோ உள்ளடங்கி இருக்கலாம். இக்கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஆசிரியர் இவற்றைச் சிறப்பாக உள்வாங்கி இருக்கிறார்.
சங்க காலம் முதல் இன்றுவரை தமிழ்கவிதையின் வடிவம் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. தமிழ் கவிதைகளைப் பொதுவாக மரபுக்கவிதை, நவீன கவிதை ஆகிய இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நவீன கவிதைக்குள் புதுக் கவிதை, வசன கவிதை, குறுங் கவிதை (ஹைக்கூ)ஆகியன உள்ளடங்கும். வடிவம் என்பதில் ஒரு கவிதையின் புறக்கட்டமைப்பு. அதன் சட்டகம் ஆகியன கண்களுக்குத் தெரியும் வகையில் அமைந்திருக்கும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, புதுக்கவிதை, ஹைக்கூ போன்றவை அவை அவற்றுக்குரிய யாப்பிலக்கண விதிகளுக்கு உட்பட்டவை. அடி வரையறை, சீர், தளை, எதுகை,மோனை போன்றவை வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஒரு கவிதை ஈரடிகளில் அமைந்திருந்து, ஏழு சீர்களைக் கொண்டிருந்தால் அதன் வடிவத்தைக் “குறள் வெண்பா” என்பர். தமிழ் இலக்கிய வரலாற்றில் வடிவம் என்பதை மரபு மற்றும் புதுமை என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மரபுக் கவிதைகளில் வடிவம் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்வையாக அமைந்தருக்கும். கவிஞர் திருமகள் ரூபாவின் மரபுக் கவிதைகள் இந்த வரம்புக்கு உட்பட்டு அக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கவிதைகளின் ‘உருவம்’கவிதையின் கட்டமைப்பு, யாப்பு முறை, உத்தி, அதன் புறத்தோற்றத்தைக் குறித்து நிற்கும். ஒரு கவிதை எந்த வடிவத்தில் வாசகனை வந்தடைகிறது என்பதே அதன் உருவமாகும். வடிவம், உருவம் இரண்டும் புறத்தோற்றத்தில் ஒன்று போலவே தென்படும். அதனை ஆழமாகப் பார்ப்பவருக்கே இரண்டினதும் வேறுபாடு தென்படும். உருவம் கவிதையின் உள்ளடக்கமும் வடிவமும் ஒன்றிணைந்து வாசகன் மனதில் தோன்றும் ஒட்டுமொத்தத் தோற்றம். ஒரு கவிதையில் கருப்பொருள் (Theme) எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, சொற்கள் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன என்பதை இது குறிக்கும். ஒரு சிற்பத்தில் காணப்படும் கல் வடிவம் என்றால், அந்தச் சிற்பம் வெளிப்படுத்தும் கலைநயம் ‘உருவம்’ எனலாம். புதுக்கவிதையில் மரபுசார்ந்த “வடிவம்” இல்லாவிட்டாலும், அதன் சொல் அடுக்குகளால் ஒரு தெளிவான “உருவம்” தென்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய உருவ அமைப்பினை ரூபாவின் கவிதைத் தொகுப்பில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. வடிவம், உருவம் என்பவற்றில் அதிக கவனம் எடுத்திருப்பதும் கவிதைகளில் தென்படுகின்றன.
இத்தொகுப்பிலுள்ள மரபுக்கவிதைகள் வெண்பா, ஆசிரயப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிலும் உப பிரிவுகளான தாழிசை, துறை, விருத்தம் ஆகிய யாப்பமைவுகளிலும் பாடப்பட்டிருக்கின்றன. பாரதியின் வாழ்வியல் நூற்று அந்தாதி, பாரதியின் புரட்சி விதை, என்றுணர்வாய் பாரதி ஆகிய மூன்று கவிதைகளும் அந்தாதி வடிவில் அமைந்திருக்கின்றன. வெண்பாவில் கவிதை பாடுவது சிரமமாக இருந்த போதிலும் இலகு தமிழல் சுவைபட உணர்ச்சிபூர்வமாகப் பாடி இருக்கின்றார். பெரும்பாலான கவிதைகள் ஆசிரியப்பாவிலும் கலிப்பாவிலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், உயர்வு நவிற்சி, தொடை ஆகிய அழகியல் அணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடி இருப்பதையும் அவதானிக்கலாம்.
கவிதையில் யாப்பும் உள்ளடக்கமும் உடலும் உயிரும் போன்றவை. ஒரு சிறந்த கவிதையின் உள்ளடக்கத்தில் கவிதையின் கரு, உணர்ச்சி, கற்பனை, படிமம், குறியீடு ஆகியவற்றுடன் தரிசனம், தெளிவு, செறிவு, முரண், உள்ளுறை, இறைசசி ஆகிய கூறுகளையும் உள்ளடக்கம் கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் காதல், அன்பு, குடும்ப உறவுகள் போன்ற அகம்சார் தனிமனித உணர்வுகளும்,
வீரம், கொடை, சமூக நீதி, அறம், வரலாறு, நாட்டுப்பற்று ஆகிய புறம்சார் விடயங்களும் மகிழ்ச்சி, சோகம், கோபம், வியப்பு, சாந்தம் ஆகிய நவரசங்களும் உள்ளடக்கத்தில் இழையோடி இருக்கின்றன.
கவிஞர் ஒருவர் கவிதையில் சொல்ல வந்த கருத்தை எவ்வளவு அழகாகவும், ஆழமாகவும் வாசகரிடம் கொண்டு சேர்க்கின்றார் என்பதில் அவரின் உத்தி அடங்கியுள்ளது. சங்க இலக்கியம் முதல் நவீன கவிதை வரை பண்டிதர்களும் புலவர்களும் கவிஞர்களும் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். கவிதைகளின் வடிவம், உருவம், யாப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில தமக்கேயுரிய பாணியில் தமக்குப் பரீச்சயமான உத்திகளைப் பயன்படுத்துவர். அத்தோடு உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி, படிமம், குறியீடு, முரண், அங்கதம், நயங்கள், எதுகை, மொனை ஆகியவற்றையும் தேர்ந்த கவிஞர் ஒருவர் தமது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பர். தற்காலப் புதுக் கவிதைகளில் இவற்றுள் சிலவற்றைப் பயன்படுத்திக் கவிதை ஆக்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றன. மேமன்கவி, ராஜகவி ராகில் போன்றோர் தமது கவிதைகளில் பெருவாரியாகக் குறியீடு, படிமங்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கவிதைத் தொகுப்பிலுள்ள ஒன்பது கவிதைகளில் உத்தியினைச் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருப்பதனைக் காணமுடிகிறது.
ஆக்க இலக்கியத்தில் அதன் கனதி பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. கனதி என்பது ஒரு கவிதையின் சொல்லமைப்பிலும், அது வெளிப்படுத்தும் பொருளிலும் உணர்விலும் ஆழத்திலும் உள்ள அடர்த்தியைக் குறிக்கும். இது கவிதையின் எடையை (Weight)அல்ல, மாறாக அதன் உணர்வுடனான கருத்தாழத்தின் செறிவைக் குறிப்பதாகும். ஒரு சிறந்த கவிதை என்பது “சொற்பமான சொற்களில் சொர்க்கத்தைக் காட்டுவது” என்பார்கள். அந்தச் செறிவே கனதி எனப்படுகிறது. இதன் முக்கிய கூறளாக சொற்செறிவு(Verbal Density), பொருளாழம்(Semantic Depth), படிமம், குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பண்புகளைக் கவிஞர் ரூபாவின் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனையவற்றில் மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வீரம், நறுமுகை, புரட்சி விதை, விழித்தெழு, அந்தாதிக் கவிதைகளிலும், கடும் புனல்,உச்சிமீது வானிறங்கினும்,சுவாசக் காற்றே, அச்சமில்லை ஆகிய கவிதைகளில் அதன் கனதியை மிகத் தெளிவாகக் காணலாம்.
பாரதியும் நானும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ரூபா, பாரதியையும் பாரதியின் கவிதைகளையும் மானசீகமாக நேசித்து, இரசித்து, ருசித்து, காதல் கொண்டு அவர்மீது கொண்ட ஊடாடத்தினைப் 15 கவிதைகளில் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கின்றார். ‘பாரதியும் நானும்’ என்ற கவிதை பாரதிமீது கொண்ட மையலை வெளிப்படுத்தி நிற்கின்றது. “பாரதியும் நானும் பருவ மழையில்
ஆரத் தழுவிடும் ஆற்றிலே நல்லாற்றல்….” என்ற பாடலடி தக்க சான்று பகர்கின்றது. கடும் புனல் என்ற நவீன கவிதையில் 24 மணி நேரத்துக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கட்டளையை ஏற்று கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு, சோறு, தண்ணீர் இல்லாது உயிரைப் பாதுகாக்க வன்னிப் பெருநிலப் பரப்புக்கு நடந்து வந்து, அகதி வாழ்க்கையில் பட்ட ஏக்கம், தவிப்பு, துன்பதுயரங்களைச் சொல்லோவியமாகச் சித்திிரித்திருக்கின்றார். இத்தொகுப்பில் வரும் ஆறு நவீன கவிதைகளில் இதுவும் ஒன்று. இவைகள் நவீன கவிதைகளாக இருந்த போதிலும் வடிவம், உள்ளடக்கம், ஓசை என்பவற்றை அவதானிக்கும் போது மரபுக் கவிதைக்குரிய சாயல் தென்படுவதனையும் அவதானிக்கலாம். இதற்கு அவர் ஒரு மரபுக் கவிஞராக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பாரதியின் கவிதைகளைக் கற்றதனால் தனது மனதில் உதித்த வீரம், ஆவேசம், புரட்சித் தீ, வெறுப்பு, போராட்டம், உள்ளக் குமுறல்கள், மனிதாபிமானம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக 10 கவிதைகள் காணப்படுகின்றன.
ஒரு இலக்கிய கர்த்தாவின் மனிதாபிமானம் பற்றிக் கூறுகையில் “இலக்கிய கர்த்தா மனிதாபிமானம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். மனிதாபிமானம் என்பது துன்பத்தில் உழலும் மக்கள் மீது வெறுமனே கருணை காட்டுவது அல்ல, பிரச்சினைகளையும் துன்பங்களையும் நீக்குவதற்கான ஒப்பற்ற ஆற்றல் அம்மக்களிடம் உண்டு என்ற அசையாத நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழி வகைகளையும் காட்ட வேண்டும்.”எனப் பேராசிரியர் க.அருணாசலம்(1984, பாரதியார் சிந்தனைகள், பக்.28) கூறும் கருத்தினைப் பாரதியின் கவிதைகளில் காண்பது போல் குளோரியா ரூபா அன்ரனின் கவிதைகளிலும் நன்கு காணலாம். இத்தொகுப்பிலுள்ள மரபுக் கவிதைகளில் இரண்டு கவிதைகள் வெண்பா யாப்பிலும், ஏழு கவிதைகள் ஆசிரியப்பாவிலும், ஏனையவை கலிப்பா,வஞ்சிப்பாவிலும் அமைந்திருக்கின்றன. இவை மரபுக் கவிதைகளாக இருந்த போதிலும் அவற்றின் கரு, வடிவம், உருவம், உள்ளடக்கம், மொழிநடை, உத்தி, சமகாலப் பிரக்ஞை, உணர்ச்சி என்பவற்றை அவதானிக்கும்போது சமகாலப் போக்கில் அமைந்த மரபுக் கவிதைகளாகவே தென்படுகின்றன.
இத்தொகுப்பைப் பொறுத்தவரை சில அவதானிப்புக்களையும் உள்ளடக்குவது பொருத்தமாக அமையும். முன்னட்டையில் நூலாசிரியரின் பெயர் இடம்பெறவில்லை. பின்னட்டையில் நூலின் உள்ளடக்கத்திலுள்ள ஆசிரியரின் ஆறாவது கவிதையைப் (புரட்சி விதை) பதிவு செய்தமைக்குப் பதிலாக நூலாசிரியரைப் பற்றியோ அவரின் கவிதைகளைப் பற்றியோ பிற அறிஞர்கள் கூறிய கருத்துக்களை அல்லது கருத்தைப் பதிவு செய்திருக்கலாம். பக்க வடிவமைப்புக்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இடையில் இரு பக்கங்கள் எதுவுமற்றுக் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூல் வடிவமைப்பிலும் அச்சகத் தொழிலிலும் சிறப்புமிக்க எவகிறின் அச்சகம் (பிரைவேட்)லிமிடெட்டின் அச்சுப் பதிப்பில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. பக்க வடிவமைப்பில் அவசர அவசரமாகச் செயற்பட்டமை போன்றதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அவசர அவசரமாகப் புலம்பெயர் புலத்துக்குத் திரும்புவதற்கு விமானப் பதிவு செய்யப்பட்டமையும் காரணமாக அமைந்திருக்கலாம்.
கவிதையில் சொற்செறிவும் சொற் சிக்கனமும் ஓசை அமைப்பும் மிக ஆழமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. சொல்லின் முக்கியத்துவம் உணர்ந்து கவிதையின் ஓசைக்குத் தக்கவாறு எழுத்து மற்றும் சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக அமையும். ஒத்த கருத்துள்ள சொற்களைப் பயன்படுத்தும் போது ஓசை உணர்ந்து மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எழுத்துக்கள் சேர்ந்து அசையை உருவாக்கும். அசையே கவிதையின் அடிப்படை ‘ஒலியாகும். அசைகள் இணையும்போது ஒரு சீரும் அடுத்த சீரும் ஒன்றிப்பதனால் தளை உருவாகிக் கவிதைக்குரிய ஓசையைத் தீர்மானிக்கிறது. பல சீர்கள் சேர்ந்து ஒரு வரி(அடி-Line) உருவாவாகிறது. அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துக்கள் மீண்டும் வரும் அழகினைத் தொடை என்கிறது யாப்பிலக்கணம். மரபுக் கவிதைகளில் இவற்றைக் கவனித்து கவிதை புனைவது அவசியம். உதாரணமாக ஆகிய, போன்ற, எல்வாம், முதலான, எல்லமான, முதலிய, என்பன போன்ற சொற்கள் ஒத்த கருத்திலும் இடம், பொருளுக்கு ஏற்ற வகையில் வேறுபட்ட பொருளிலும் வரலாம். இது போன்ற சொற்களை இடமறிந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது கவிதைக்குச் சிறப்பாக அமையும். கவிதையின் கனதி, ஓசை வரத்தக்க சொல்வைப்பு முறையிலான தவறுகள் பல இடங்களில் காணப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் அவற்றையும் திருத்திக் கொள்வது சிறப்பாக அமையும். ஓசை மரபுக் கவிதை, நவீன கவிதைகளிலும் கவனிக்கப்பட வேண்டியவை. அத்தோடு பாடலடிகளில் எழுத்து, அசை, சீர், தளை ஆகியவற்றிலும் கவனமெடுப்பது, எதிர்காலத்தில் தம்மைப் பிரபலமான கவிஞராக அடையாளப்படுத்த உதவும்.
இன்று பலர் புதுக் கவிதை, வசன கவிதை, பின்நவினத்துவம் என்று கவிதைகளை எழுதிக் குவிக்கின்றனர். அவற்றின் வடிவம், உள்ளடக்கம், பொருள்,உத்தி, ஆழம், கனதி, சொல் வைப்பு முறை தெரியாமல் போகிற போக்கில் எழுதிக் குழப்பி வைக்கின்றனர். சில வேளைகளில் அதன் கருப்பொருள் கவிதை எழுதியவருக்கே புரியாமலும் இருக்கலாம். இவ்வாறான கவிதைகளை உள்ளடக்கிய கவிதை் தொகுப்புக்கள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கவிதை எழுதுவதை இலகுவான வழக்கெனப் பலரும் நினைத்துக் கொண்டு எழுதுவதையும் அவதானிக்க முடிகிறது. இத்தகைய குறைபாடுகளை கவிஞர் ரூபாவின் கவிதைகளில் காண முடிவதில்லை என்பது பெருமையளிக்கிறது.
கவிஞர் திருமகள் ரூபா பல கீர்த்தனைகள், அந்தாதிகள், வெண்பாவில் அமைந்த குறள்கள், கொச்சகக் கலிப்பா, கலி வெண்பா, ஒற்றாழிசைக் கலிப்பா, அறுசீர், எழுசீர், எண்சீர் கெழிநெடிலடி ஆசிரியப்பா, அந்தாதிகள், புதுக்கவிதை, வசன கவிதை, ஹைக்கூ ஆகியவற்றிலும் பல கவிதைகளை இயற்றிக் குவித்திருக்கிறார். அவரின் பல கவிதைகளில் மரபும் மாக்சீசமும் கலந்த இயக்கவியல் சிந்தனை வெளிப்பட்டிருப்பதையும் காணலாம். பல நூற்றுக் கணக்கான கவிதைகள் நூல் வடிவம் பெறாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நீடித்த ஆரோக்கியத்துடன் மேலும் பல கவிதைகள் எழுதி, அவற்றையும் வெளிக்கொணர்ந்து இலக்கிய உலகுக்கு நிலையான பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
–
