பாரதியாரின்         கியாதியை    வெளியுலகுக்குத் தந்த விபுலாநந்தர்

பாரதியாரின் கியாதியை  வெளியுலகுக்குத் தந்த விபுலாநந்தர்

— இரண்டாம் விசுவாமித்திரன் —

மகாகவி பாரதியார் நவீன கவிதையின் முன்னோடி என்ற ஒற்றைச் சொற்றொடருடன்  அவனைக் கடந்து விடுகிறோம்.

புரட்சியும் வறுமையும் காதலும் அன்பும் தேசியமும் விஞ்ஞானமும் ஆன்மீகமும் என்று அவன் பல தளங்களில் வாழ்ந்தவன்.

அவன் கவிஞன் மட்டுமல்ல ஒரு புனைகதை எழுத்தாளன். உணர்ச்சி மிக்க பேச்சாளன். தேசவிடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை என்று தொடராக இயங்கியவன். 

தமிழ் உலகின் பொக்கிசம் என்று மூதாட்டி ஒளவையாரை புகழ்ந்து பேசியவன். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப்போல் யாங்கணுமே பூமிதனில் பிறந்ததில்லை என்று மூவரையும் பாராட்டியவன்.

பாவம் பாரதியார்: 

அவன்வாழ்ந்த காலத்தில் அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவனது திறமைகளை பெருமைகளை யாரும் பேசியதில்லை . அவனுடைய இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களுமாக  23 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டதான தகவல்  உள்ளது.

இந்தநிலைதான் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் பாரதியாரின் மேதாவிலாசத்தை ஓங்கி ஒலித்தார்.  இன்று அவன் உலகம் போற்றும் கவிஞனாக உலா வருகிறான்.

பாரதியாரின்  பிரமாண்டத்தை தமிழ் உலகில் காட்சிப்படுத்தியதன் பங்கும்

பணியும் பற்றியதே இக்கட்டுரையாகும்.

பேசப்படாமை: 

கியாதி பலவற்றைக் கொண்டிருந்த மகாகவி பாரதியார் ஏன் அன்றைய சமுதாயத்தினரால் கண்டு கொள்ளப்படவில்லை என்பது தொடக்கப் புள்ளியில் எழும் ஒரு கேள்வி ஆகும்.

பாரதியார் பிறப்பால் ஒரு பிராமணன். அந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்தவன். பூணூல் அணிந்தவன். ஆனாலும் அவன் தனது நடத்தையில், எழுத்தில், பேச்சில்  மரபுரீதியான பிராமணியத்துக்கு எதிராகவே நடந்து கொண்டான். 

செல்வாக்குப்  பெற்ற பிராமணர்களைக் கொண்டிருந்த அன்றைய சமுதாயத்தில் ஓரிருவரின் ஆதரவைத் தவிர அவனுக்கு பிராமண சமூகம் முழுவதுமான எதிர்ப்பை வெளியிட்டது.

மற்றொரு காரணமும் இருந்தது. எளிய மக்களை நோக்கிய பாரதியாரின் கவிதைகளினாலும் புரட்சிகரமான கருத்துக்களினாலும்  அன்றைய பண்டிதர்கள் சலிப்புற்றிருந்தனர். அவன் தந்த பாடல்களில் வரும் சொல்லிலும் கருத்திலும் யாப்பிலக்கணத்திலும் பிழைகளைக் கண்டுபிடித்து அவனுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தனர். 

பண்டிதத் திமிரை பல்வேறு கோலத்தில் வெளிப்படுத்தினர்.

எனினும் பிரபல அரசியல்வாதியாகத் திகழ்ந்த சொற்பொழிவாளர் எஸ்.சத்திய மூர்த்தி, பாரதியின் நெருங்கிய தோழமையும் தமிழ் வெளியின் முதல் நாவலாசிரியருமான வ.வே.சு ஐயர், பாரதியாரால் தம்பி என அழைக்கப் பட்டவரும் பாரதிக்குப் பண உதவி செய்தவருமான பரலி நெல்லையப்பர் மற்றும் அண்ணாமலைச் செட்டியார் போன்ற பிரபலங்கள் பாரதியாரோடு நட்புப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஆதரவுக்கான பின்னணி: 

மகாகவி பாரதியாரின் புகழும் பெருமையும் வெளியில் வர சுவாமி விபுலாநந்தர் எடுத்த முன்னெடுப்பு களின் பின்னணியில் சில காரணிகள் இருந்தன.

ஆன்மீகம் சார்ந்தும் தமிழறிவு சார்ந்தும் அவை இரு வகையின.

ஆன்மீகம் சார்ந்த காரணி பின்வருமாறு விரிவுபடுகின்றது.

ஸ்ரீராமகிருஸ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர் சுவாமி விவேகாநந்தர். சுவாமி விவேகாநந்தருடைய நேரடி சிஷ்யை

நிவேதிதாதேவி.  நிவேதிதாதேவியின் நேரடி சீடர்தான் மகாகவி பாரதியார். 

இந்த இடத்தில் பாரதியார் மற்றும் முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் ஆகியோருக்கிடையே இருந்த ஆன்மீகத் தொடர்பினை விளங்கிக்கொள்ள நிவேதிதாதேவி அவர்கள் பற்றி மேலதிகமாக சில விடயங்களைப் பேச வேண்டியுள்ளது. 

செல்வி மாக்கிரட் எலிசபெத் நோபிள் என்ற பெயர் கொண்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரே நிவேதிதாதேவி ஆவார்.

சுவாமி விவேகாநந்தரின் ஆன்மீக உரை கள்மீதும் அதனை ஆங்கில மொழியில் அவர் விளக்கும்பான்மையினாலும் கவரப்பட்ட  ஆங்கிலேயர்களில் எலிசபெத் நோபிளும் ஒருவர். அவர் சுவாமி விவேகாநந்தரின் நேரடி  சிஷ்யையாக மாறி  இந்தியா வந்து நிவேதிதா என்று துறவுப் பெயர் பூண்டு ஞானவழியில் உபதேசம் செய்தவர்.

பாரதியாருக்கு நிவேதிதாதேவி ஞானகுருவாக இருந்தார்.  பாரதியாருக்கு தேசபக்தியை ஊட்டியவரும் அவரே.தனது மனைவி மீது கைநீட்டும் ஆணாதிக்கவாதி என்ற கோலம் களைய பாரதியாருக்கு சிகிச்சையளித்தவர் நிவேதிதாதேவி என்று பலராலும் விசுவாசிக்கப்படுகின்றது.

பாரதியாரோடு தொடர்புபட்ட நிவேதிதாதேவியின் இவ்வாறான விடயங்களையெல்லாம் உற்றுநோக்கித் தெளிந்துகொண்ட சுவாமி               விபுலாநந்தருக்கு பாரதியார்மீது ஒரு பிடிமானம் ஏற்பட்டது.

மறுபுறத்தில்  பரமஹம்சரின் நேரடி சீடனாக இருந்தவர் சுவாமி சிவாநந்தர். சுவாமி சிவாநந்தரின் நேரடி சீடனே விபுலாநந்தர் அவர்கள்.

எனவே ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சரின் சீடர் வரிசையில் மகாகவி பாரதியார் வருவதும் மற்றொரு கிளைவழியாக பரமஹம்சரின் சீடராக விபுலாநந்தர் வருவதுமான தொடர்பு பாரதியார் மீது விபுலாநந்தர் பற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

தமிழறிவு சார்ந்த காரணி: 

சுவாமி விபுலாநந்தர் அவர்கள் பண்டிதர் மயில்வாகனனாக இருந்த காலத்திலேயே சிலப்பதிகாரத்தின்மீது மிக்க ஈடுபாடு கொண்ட ஒருவராகத் திகழ்ந்தார். அதன் காரணமாக

வள்ளுவன் தன்னை உலகினுக்கே –தந்து 

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  – நெஞ்சை 

அள்ளும் சிலப்பதிகாரம் 

என்றோர் மணி

ஆரம் பதித்த தமிழ் நாடு 

என்ற பாடலின்மீது மனதைப் பறிகொடுத்தார். தொடர்ந்து  பாரதியாரின் கவிதைகள்மீது அவருக்கு ஆர்வம் ஏற்படலாயிற்று.

இன்னுமொரு  காரணமும் உண்டு.

சுவாமி விபுலாநந்தர் துறவறம் பூண்டு சுவாமியாக முன்னர் பண்டிதர் மயில்வாகனனாக இருந்தவர். அக்கால கட்டத்தில் அடிக்கடி இந்தியா சென்று திரும்புவதுண்டு. இந்தியா சுதந்திரம் வேண்டிநின்ற காலம்.               

அவ்வேளைகளில் பாரதிபற்றியும் அவர் பாடல்கள்பற்றியும் கேள்வியுற்று  அப்பாடல்களை மாந்தி மகிழ்ந்தவர்.

வேறொரு காரணமும் உண்டு. பண்டிதர் மயில்வாகனம் அவர்கள் துறவறம் பூணும் எண்ணத்தில் சென்னை இராமகிருஸ்ண மடத்தில் 1922 இல் இணைந்தார். மூன்று வருடங்கள் துறவறம் பயின்று 1924 இல் சுவாமி விபுலாநந்தரானார்.

பாரதியார் மறைந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலை. சென்னையில் இருந்த இம்மூன்று வருட காலத்துள் பாரதியார் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

பிறிதொரு காரணமும் உண்டு. விபுலாநந்தர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியராக  1931 இல் நியமனம் பெற்றார். விபுலாநந்தர் ஊடாக பாரதியார் மேற்கிளம்பி வர இப்பதவி ஏதுவாக அமைந்தது.

வேறொரு கிளைக் காரணமும் உண்டு. 

விபுலாந்தர் விஞ்ஞான அறிவு மிக்கவர். விஞ்ஞானப் பட்டதாரி. தமிழறிந்து விஞ்ஞானபான்மையோடு வாழ்ந்தவர். இசையறிவும் வாய்க்கப் பெற்றவர்.

பாரதியாரும் அவ்வாறான தொரு ஆளுமையே. விஞ்ஞான அறிவு கொள்ளவும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்கவும் கவிதையூடாக விண்ணப்பித்தவர்.

இது போன்ற பல காரணங்கள் விபுலாநந்தர் பாரதிமீது பற்றுக்கொள்ளக் காரணங்களாய் அமைந்தன.

பாரதி பற்றிய நிகழ்வுகள்: 

துறவு பூண்டு  1925 இல் நாடு திரும்பிய சுவாமி விபுலாநந்தர் பாரதி பற்றிய பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு செய்தும் பங்கு கொண்டும் வரலானார்.

அவ்வாறான ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம் கீரிமலையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு மாணவர் மகாநாட்டுக் கருத்தரங்கு ஆகும். 28/04/1925 இல் நடைபெற்றது. 

பாரதியாரை முன்வைத்து தேசிய இலக்கிய மறுமலர்ச்சி என்ற தலைப்பில் அடிகள் பேசினார். 

பாரதியார் பற்றி முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் பொதுமேடையில் பேசப்பட்ட வரலாற்று நிகழ்வு அது.

அடிகளார் மகாகவி பாரதியின் கவிதைகளைக் கையிலெடுத்து கட்டுரைகள் வரைந்தார். அவ்வாறான கட்டுரைகள் 1925/26 காலகட்டங்களில் விவேகாநந்தன் என்ற சஞ்சிகையில் வெளியாகின.

இலங்கையில் பாரதியாரின் கவிதைகளை பாடநூல்களில் உள்ளடக்கும் பணி 1930களில் இடம்பெற்றது. இதன் பின்னனியில் இருந்தவர் விபுலாநந்த அடிகளே.

மூன்றாம்  வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையான பாடநூல்களுக்குப் பொருத்தமான பாடல்களைத் தெரிவு செய்தவரும் விபுலாநந்த அடிகளே.

திருகோணமலையில் பாரதி: 

எட்டயபுரத்துப் பாரதி திருகோணமலை வந்தாரா? என்று கேட்டு விடாதீர்கள். இலங்கையில் முதன்முதலாக 1928 இல் திருகோணமலையில்தான் பாரதியாரின் திருவுருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது. 

மேற்படி நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரியில் இடம் பெற்றது.

இந்த விழாவினை விபுலாநந்தரே ஏற்பாடு செய்தபோதிலும் மட்டக்களப்பில் இருந்த அடிகளால் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவரின் வேண்டுதல்படி கல்லூரி அதிபர் திரு.எஸ்.இராமசாமி ஐயர் தலைமையில் பாரதியார் திருவுருவப்படம் திரைநீக்க விழா இனிதே நடந்து முடிந்தது.

இந்நிகழ்வு இடம் பெற்று ஒரு வாரத்தின் பின்னர் மட்டக்களப்பில் பாரதியாரின் திருவுருவம் திரைநீக்கம் செய்யப்பட்டது. இது இரண்டாவது திரைநீக்கு விழாவாகும்.

விபுலாநந்த அடிகள் மட்டக்களப்பு கல்லடியில்  வசித்தபோதும் வந்து தங்கும்போதும் துறவிகள் தங்குவதற்காகவும் பயன்பட்ட குடிமனை சிவபுரி என அழைக்கப்பட்டது. பாரதியாரின் திருவுருவம் இங்குதான் திரை நீக்கம் செயப்பட்டது.

அண்ணாமலை பல்கலையில்: 

சுவாமி விபுலாநந்த அடிகள் 1931இல் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைமைப்       பேராசிரியராக நியமனம் பெற்று பதவியில் இருந்த காலத்தில் பாரதியார் தொடர்பில்  கனதியான பணிகளில் ஈடுபட்டார்.

பல்கலைக்கழக வகுப்பறை பாரதியாரின் பாடல்களால் உணர்வு பெற்று எழுந்து நின்றது. பாரதியார் மகாகவி ஆனார். பாரதியாருக்கு எதிராகக் கிளர்ந்துவரும் சுயநல கோசங்களுக்கான எதிர்வினைகள் பிரமாஸ்திரங்களாக வீசப்பட்டன.

பாரதியார் படிப்பு வட்டம்  1932 இல் தொடங்கப்பட்டது. வாரத்துக்கு இரண்டு தடவைகள் மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியார் பற்றியும் அவர்தம் கவிதைகள் பற்றியும் இனிக்க இனிக்கப் பேசுவார்கள்..  

படிப்பு வட்ட அமைப்பினால் துறைசார்ந்த தமிழறிஞர்கள் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

தேசபக்தரும் பாரதிநேய பிராமணருமான எஸ்.சத்தியமூர்த்தி அவர்களினால் பாரதியின் திருவுருவம் திரைநீக்கம் செய்யப்பட்டு சிறப்புச் சொற்பொழிவு  இடம்பெற்றது .

இந்த நிகழ்வின் பின்னர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தனது பாரதி விசுவாசப் பணிகளை தீவிரப் படுத்தினார். பல்கலைக் கழகத்துக்கு வெளியே பாரதி கழகங்களை நிறுவினார்.

காணாமல் புதைக்கப்பட்டிருந்த பாரதியாரின் புகழும் பெருமையும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சடைத்தெழுந்தது.  பேராசிரியர் விபுலாநந்தர் பாரதியின் எழுச்சிக்குத்  தலைமை தாங்கினார். 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பாரதியா? பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் பேசினாரா? என்று தமிழுலகம் விழித்துக் கொள்ளத் தொடங்கியது .

விளைவு?பாரதியாரின் அசாத்தியத் திறமைகள் அனைவராலும் ஏகமனதாக அங்கீகாரம் பெற்றன.

இந்தப் புள்ளியில் இன்னுமொன்றையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

சுவாமி விபுலாநந்தர் பாரதியாரின் மேன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கு முன்னரே தொட்டம் தொட்டமாக பாரதியாரின்  கவிதைகள்  அச்சில் வந்த சந்தர்ப்பங்கள் உண்டு.

பாடநூல்களில் அவரின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. கூட்டங்களில் பாரதி பற்றிப் பேசப்பட்டதுமுண்டு. பரலி நெல்லையப்பர் போன்றவர்களால் பாரதி பாடல்கள் நூல்களாக வந்தன.

பாரதியார்கூட தனது அந்திம காலத்தில்

தனக்கான பெருமையினை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர் என்பதை விளங்கியிருந்தார்.

ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விபுலாநந்த அடிகளின் முன்னெடுப்புகளின் பின்னரே பாரதியாரின் மேன்மைகள் முழுவீச்சில் அங்கீகாரம் பெற்றன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முடிப்பு: 

தமிழில் சமய சிந்தனைகளின் நோக்கு (The Development of Tamil Religious Thoughts)

என்ற கட்டுரையில் விபுலாநந்த அடிகள் 

தொல்காப்பியர் தொடங்கி  பாரதியார் வரையுமுள்ள காலத்தில் தமிழ் சிந்தனைகள் எவ்வாறு மனித மேம்பாட்டிற்கும் நன்நெறிகளுக்கும் வழிகாட்டியுள்ளன என்பதை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார்.

தமிழ் பண்பாட்டினதும் கலாசாரத்தினதும் முக்கியத்துவத்தை அக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்

கலாச்சாரம், பண்பாடு, தேசியம், தெய்வீகம் என்பவற்றை பாரதியார் எவ்வாறு நோக்கினாரோ அவ்வாறே தமிழ் மக்களும் அணுக வேண்டும் என்று அக்கட்டுரை பேசுகின்றது.

பாரதியாரின் அணுகுமுறையில் விபுலாநந்தர் கொண்டிருந்த விசுவாசத்தை தெளிவாக மேற்படி கட்டுரை எண்பிக்கின்றது.

விபுலாநந்தர் இல்லையேல் பாரதியார் இல்லை என்ற சமன்பாடு எதேச்சையாகத் தோன்றியிருக்க மாட்டா என்பதையும் 

பாரதியாரின் கியாதி விபுலாநந்தராலேயே வெளியே வந்தது என்பதையும் இக்கட்டுரை ருசுப்படுத்த எத்தனிக்கின்றது.