இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…!

இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…!

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

     வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் உயர் பதவிகளுக்கு வரும்போது இலங்கையிலும் அவ்வாறு நடைபெறமுடியுமா என்று  மக்கள் மத்தியில் பேசப்படுவதும்  ஊடகங்களில் அலசப்படுவதும்  வழமையாகிவிட்டது.

   அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவானபோது, இந்திய — ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் கடந்த வருடம்  பிரிட்டிஷ் பிரதமராக வந்தபோது அவ்வாறெல்லாம் பேசப்பட்டது.

   இப்போது யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்ட   தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதை அடுத்தும் அதே நிலைமையை  காண்கிறோம். 

    செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்ற சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரு சீன வேட்பாளர்களை தோற்கடித்து அமோக வெற்றியைப் பெற்ற பிறகு நிகழ்த்திய எந்தவொரு உரையிலும்  தர்மன் தனது பூர்வீகத்தைப் பற்றி  எதையும் குறிப்பிட்டதாகக் காணவில்லை.  என்றாலும் அவரின் வெற்றி குறித்து  இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படுவது  இயல்பானதே.

   சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் முதலாவது தமிழர் தர்மன் அல்ல. அவருக்கு  முதல் இந்திய வம்சாவளி தமிழரான எஸ். ஆர். நாதன் இரு தடவைகள் ( 1999, 2005 ஜனாதிபதி தேர்தல்களில் )  ஜனாதிபதியாக அதுவும்  போட்டியின்றித் தெரிவானார். தர்மன் தெரிவாகியிருப்பது ஒரு தசாப்தத்துக்கு அதிகமான காலத்துக்கு பிறகு அங்கு நடைபெற்ற போட்டித் தேர்தலில் என்பது குறிப்பிடத்தக்கது.

   யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக்கொண்ட தமிழர்களோ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களோ  சிங்கப்பூரில் அரசியல் பதவிகளுக்கு வருவது ஒன்றும் புதுமையல்ல. பலர் முக்கிய பதவிகளில் காலங்காலமாக  இருந்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்ட சின்னத்தம்பி இராஜரத்தினம் அந்த நாட்களில் உலக அரங்கில் மிகவும் பிரல்யமானவராக விளங்கினார்.     தற்போதும் தமிழர்கள் பலர்  சிங்கப்பூரில் பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகளில் இருக்கிறார்கள். 

   பொருளாதார நிபுணரான 66 வயதான  தர்மனும் கூட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக பல வருடங்களாக நிதியமைச்சர், கல்வியமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துவந்ததுடன்  இறுதியாக பிரதி பிரதமராகவும் இருந்தார். 

     அந்த நாட்டில் காணப்படுகின்ற அரசியல் கலாசாரமும் ஆட்சிமுறைமையும் அவ்வாறு பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் முக்கிய அரசியல் பதவிகளுக்கு வருவதற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கிக்  கொடுத்திருக்கின்றன.

   தர்மனின் தேர்தல் வெற்றியை அடுத்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன ருவிட்டரில் செய்த பதிவொன்றில் “சிங்கள இனத்தைச் சாராத இலங்கையர்கள் சொந்த நாட்டில் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வருவதற்கு முன்னதாக இன்னொரு நாட்டில் பிரதமராக அல்லது ஜனாதிபதியாக  வருவார்கள் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இனம், சாதி, மதம் மற்றும் வர்க்க வேறுபாடுகளில் இருந்து விலகி நாமும் திறமை,தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கவேண்டும் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

   இன,மத,சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் தகுதியும் திறமையும் அனுபவமும் கொண்டவர்கள் அரசியல் உயர்பதவிகளுக்கு வரக்கூடியதாக ஒரு  மாற்றத்தை இலங்கையில் வேரூன்றியிருக்கும் அரசியல் கலாசாரம் அனுமதிக்குமா இல்லையா என்பதை விக்கிரமரத்ன  நன்கு அறிவார் என்ற போதிலும், சீனர்களைப் பெரும்பான்மை இனத்தவர்களாகக் கொண்ட  சிங்கப்பூரில் யாழ்ப்பாணப் பூர்வீகமுடைய  தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டது (இலங்கையின் இன உறவுகள் நிலைவரத்தை மனதிற்கொண்டு பார்க்கும்போது) ஏதோ ஒரு வகையில் அவரை  உறுத்தியிருக்கிறது போலும். 

   அவரது கருத்துக்கு பலரும்  ருடிவிட்டரில் எதிர்வினையாற்றி பதிவுகளை செய்திருந்தார்கள். இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கலாசாரத்தின் மத்தியில் சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்கள் அத்தகைய உயர் அரசியல் பதவிகளுக்கு வருவது ஒருபோதும் சாத்தியமாகாது என்று பெரும்பாலும் தமிழர்கள் பதிவுகளைச் செய்த  அதேவேளை,  பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் “சிங்கப்பூரில் ஜனாதிபதி பதவி பெருமளவுக்கு சம்பிரதாயபூர்வமானது. சீனர் அல்லாத ஒருவர் அந்த நாட்டின் பிரதமராக வரமுடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்” என்று கூறியிருந்தனர். 

  சிங்கப்பூர் ஜனாதிபதி   பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் நடைமுறையே முதலில்  இருந்தது. ஆனால், ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த பதவியை முற்றிலும்  சம்பிரதாயபூர்வமானது என்று கூறமுடியாத அளவுக்கு சில அதிகாரங்கள் அதற்கு இருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.

  தனது மக்கள் நடவடிக்கை கட்சிக்கு .(People Action Party)  பாராளுமன்றத்தில் இருந்த 14 வருடகால ஏகபோகத்தை தகர்க்கும் வகையில் 1981 ஆம் ஆண்டில்  இடைத்தேர்தல் ஒன்றில் தொழிற்கட்சி தலைவரான ஜொஷுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் (இவரும் யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டவரே ) வெற்றி பெற்றதை அடுத்தே ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தெரிவுசெய்யும் நடைமுறையைக் கொண்டுவரவேண்டும் என்ற யோசனை அன்றைய பிரதமர் லீ குவான் யூவுக்கு பிறந்ததாகக்  கூறப்படுகிறது.

     அந்த இடைத்தேர்தலுக்கு பிறகு 1984 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் அதிர்ச்சியைத் தரக்கூடிய முடிவுகளைக் கொண்டுவரலாம் என்று அச்சமடைந்த  பிரதமர்  லீ  நாட்டின் கையிருப்புக்களை சூறையாடக்கூடிய ஊழல் பேர்வழிகள் ஆட்சிப்பொறுப்புக்கு  வந்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்து அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு மக்களால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் நடைமுறை குறித்து தீவிர கவனம் செலுத்தினார் என்று ஜனாதிபதி தேர்தல் முறை தொடர்பிலான ஆவணம் ஒன்றில் வாசிக்கக்கிடைத்தது.

    ஏழு வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் வகிபாகம், கடமைகள் மற்றும் அந்த பதவி தெரிவுசெய்யப்படும் முறையில்  மாற்றங்களைச் செய்வதற்கு சிங்கப்பூர் குடியரசின் அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. நாட்டின் கையிருப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் முக்கியமான பொதுச்சேவைப் பதவிகளுக்கு நியமனங்களைச் செய்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு ‘வீட்டோ ‘ அதிகாரத்தை கொடுப்பது அந்த மாற்றங்களில் முக்கியமானது.

  இத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஜனாதிபதி மக்களின் ஆணையைப் பெற்றவராக  இருக்கவேண்டும் என்பதாலேயே அவரை மக்கள் நேரடியாக தெரிவுசெய்யவேண்டிய அவசியம் உணரப்பட்டது. அதனால்  பல நாடுகளில் இருப்பதைப் போன்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி பதவிகளுடன் சிங்கப்பூர் ஜனாதிபதி பதவியை ஒரே விதமாகப் பார்ப்பது பொருத்தமானது எனலாம். முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1993 செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்றது.

   தர்மனின் தெரிவில் இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தும் நோக்குடனேயே சிங்கப்பூரின் பிரதமர் பதவிக்கு சீனர் அல்லாதவர் வருவது சாத்தியமில்லை என்ற தொனியில் சிலர் கருத்துக்களை  வெளியிடுகிறார்கள். பெரும்பான்மையினராக சீனர்களைக் கொண்ட நாட்டில் அதே இனத்தைச் சேர்ந்த இரு  வேட்பாளர்களுக்கு மேலாக தர்மனை சிங்கப்பூர் மக்கள் அமோகமாக வாக்களித்து (70.4 சதவீத வாக்குகள் ) ஜனாதிபதியாக தெரிவுசெய்திருப்பது  இன அடிப்படையில் அந்த மக்கள் அரசியலைப் பார்க்கவில்லை என்பதற்கு பிரகாசமான சான்று. 

   நாய்க்கு அதன் உடலின் எந்தப் பாகத்தில் அடிபட்டாலும் அது பின்னங்காலையே தூக்கிக்கொண்டு ஓடுவது போன்று இலங்கையில் நாம் எந்தப் பிரச்சினையையும்  பெரும்பாலும் இனவாத அடிப்படையில் நோக்குவதற்கு பழக்கப்பட்டுவிட்ட துரதிர்ஷ்டவசமான போக்கினால் போலும் சிங்கப்பூரின் அரசியலைப் பேசும்போதும் எமது பழக்கதோசத்தை பிரயோகிப்பதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறோம். 

   இதுவரையில் சிங்கப்பூரில் ஆறு ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் முதல் ஐந்து தேர்தல்களிலும் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு  வாய்ப்புக்கிட்டியிராத  ஒரு சமூகத்துக்கு அந்த  வாய்ப்புக்கிடைப்பதை உறுதிசெய்வதற்காக —  அடுத்த தேர்தலில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு வகைசெய்யக்கூடியதாக 2016 ஆம் ஆண்டில் இன்னொரு அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாகவே  மலே சமூகத்தைச் சேர்ந்த  ஹலீமா ஜாக்கோப் 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு கடந்த ஆறு வருடங்களாக அந்த பதவியில் இருந்தார்.

   தர்மன் எதிர்வரும் வியாழக்கிழமை சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார். 1959 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டை ஆட்சிசெய்துவரும் மக்கள் நடவடிக்கை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியில் இருந்து விலகினார். ஆட்சியதிகார வர்க்கத்துக்கு மிகவும் நெருக்கமானவராக நோக்கப்படும் அவரின் மாபெரும் வெற்றியை மக்கள் நடவடிக்கை கட்சி மீது சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

  சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டதன் விளைவாகவே தனது நாட்டை இன மோதல்கள், மொழிச்சர்ச்சை, மதரீதியான தகராறுகள் இல்லாத வெற்றிகரமான அரசாக கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது  என்று முன்னாள் பிரதமர் லீ குவான் யூ பல தடவைகள் கூறியதை இசசந்தர்ப்பத்தில் நினைவு படுத்துவது பொருத்தமானதாகும்.

  தோல்வி கண்ட அரசுகளின் (Failed States ) உதாரணங்கள் தங்கள் முன்னால் இருந்ததால் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில்  எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டதாகவும் சிங்கப்பூர் மக்களில் சீனர்களே பெரும்பான்மையானவர்களாக இருந்தபோதிலும், தங்களது செயற்பாட்டு மொழியாக ஆங்கிலத்தையே தெரிவுசெய்ததாகவும் லீ கூறியிருந்தார்.

   சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் அனுபவத்தையும் சிங்கப்பூரின் அனுபவத்தையும் நோக்கும்போது அந்த நாட்டில் காணக்கூடியதாக இருக்கின்ற மாற்றங்கள் எங்களுக்கு மருட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த தர்க்க நியாயமும் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

   ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான கால இனப்பிரச்சினை மற்றும் அதன் விளைவான மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை சிங்கள அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில்  நேர்மறையான எந்த  மாற்றமும் ஏற்பட்டதாக இல்லை.. கடந்த கால அவல அனுபவங்களுக்கு பிறகு எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றை முன்னரை விடவும் உறுதியாக தொடர்ந்து கடைப்பிடிப்பதில் சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதி  அக்கறை காட்டுவதையே எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பிலான அண்மைக்கால நிகழ்வுப்போக்குகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

   இன அடிப்படையிலான தப்பெண்ணங்களையும் பிளவுகளையும் இனிமேலாவது கைவிடக்கூடியதாக மக்களை வழிநடத்த இலங்கை அரசியல் சமுதாயம் தயாராயில்லை.

  ஒபாமா அமெரிக்கர்களினால் குறிப்பாக, வெள்ளை அமெரிக்கர்களினால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருந்ததற்கு பிரதான காரணம் அமெரிக்காவின் ஆங்கில கிறிஸ்தவ கலாசாரத்தின் முக்கியத்துவத்தை (மறுவாத்தைகளில் மேலாதிக்கம்) அவர் ஏற்றுக்கொண்டமையேயாகும் என்று ஒபாமாவின் தேர்தல் வெற்றியை அடுத்து அன்று கடும்போக்கு  சிங்கள பௌத்த தேசியவாதியான போராசிரியர் நளின் டி சில்வா பத்திரிகையில் எழுதியதை வாசித்தது நன்றாக நினைவில் இருக்கிறது.

    இலங்கையில்  சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் கூட அதிகாரம் எதுவும் இல்லாத பிரதமர் பதவிக்கேனும் வரமுடியாது என்பதை  முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு  2004 பொதுத்தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் எமக்கு உணர்த்துகிறது.

 அதனால், இலங்கைக்கு தேவை ஒரு தர்மன்  அல்ல, இனப்பிரச்சினைக்கு  சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய உருப்படியான  அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தையும் இனிமேலும் அத்தகைய தீர்வொன்றைக் காணத்தவறினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சிங்கள மக்களுக்கு முறையாக விளங்கவைத்து  அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றலும் தொலைநோக்கும் கொண்ட  ஒரு சிங்களத்  தலைவரேயாகும்.

( வீரகேசரி வாரவெளியீடு )