ஊடகம்:                 பொய்யைச் சொன்னாலும் பொருந்தச்          சொல்லனும் காண்…! (வெளிச்சம் 061)

ஊடகம்:  பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் காண்…! (வெளிச்சம் 061)

— அழகு குணசீலன் —

இன்றைய  டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் மரபுரீதியான தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்று சமூக ஊடகங்களுக்கும் சமூகத்திற்கான தகவல் பரிமாற்றத்தில் பெரும் பங்குண்டு. அதனை உண்மையாகவும், நேர்மையாகவும், திரிபுபடுத்தல்கள்,  பொய், புரட்டுக்கள், கயிறு திரித்தல்கள் இன்றி தகவல்களை தகவல்களாக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமைப்பாடும்,உரிமையும் இவற்றிற்கு இருக்கிறது.   இலங்கையில் பொதுவாகவும் குறிப்பாக வடக்கு -கிழக்கு பிரதேசங்களில்  சிறப்பாகவும் இது அரசாங்கத்தின் “லங்காபுவத்காலம்” – இயக்கங்களின் “போட்டி போராட்ட காலம்”  முதல் இந்த பணி திருப்திகரமாக இருக்கவில்லை.  இந்த திருப்தியின்மை  சமூக ஊடகங்கள்  அற்ற  மிலேனியம் வரை  வெகுஜன ஊடகங்களுக்கு பொருத்தமானது. ஆனால் அதற்கு பின்னர் மரபு ரீதியான வெகுஜன ஊடகங்களையும் விஞ்சி நிற்கின்ற இன்றைய சமூக ஊடகங்களும் அந்த சாக்கடை சேற்றிலேயே புதைந்து கிடக்கின்றன.

“GIVE MORE THAN YOU TAKE” என்பது சமூக ஊடகங்களுக்கான அடிப்படை சுலோகம். “இதை நமது சமூக ஊடக, மற்றும் ஊடகக்காரர்கள் சரியாகத்தான் விளங்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்று கேட்கவேண்டி உள்ளது. அந்த ஊடகங்களுக்கு கிடைக்கின்ற உண்மையான, சரியான, நேர்மையான தகவல்களை ஊடக தர்மம் சார்ந்து வழங்காமல் கிடைப்பதை விடவும் அதிகமாக  பொய்யையும், புரட்டையும், திரிபுகளையும் செய்து வழங்குவது  என்று இவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் போலும். 

இதனால் அவர்களின் புரிதல் பற்றி சந்தேகம் எழுகிறது. வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படும் மக்கள் மீதான  இந்த ஊடக வன்முறை ஜனநாயக ரீதியாக, சரியான தகவல்களை மக்கள் அறியும் உரிமையை மறுதலிக்கிறது. சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்துகிறது. உண்மை தெரிந்திருந்தும் ஒரு தரப்பை உண்மைக்கு புறம்பாக சேறுபூசியும், மறு தரப்பை இனந்தெரியாதவர்கள் என்று மூடிமறைத்தும் வளர்ந்த/ வளர்க்கப்பட்ட ஊடகபாரம்பரியத்தின் தொடர்ச்சி இது.

 விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் பொய்யான உரிமைக்கோரல்களில் ஆளுக்காள் அடிபட்டு அழிந்து/அழிக்கப்பட்டு ஏகபோக உரிமை கோரல் ஊடாக சமூகத்தின் கருத்துருவாக்க , கருத்துச்சுதந்திர, மாற்றுக்கருத்து ஜனநாயக, மனித உரிமைகளுக்கு வாய்ப்பூட்டு போட்ட வரலாற்று வளர்ச்சியின் தொடர்ச்சியான  இதை போர் முடிந்த பின்னர் சமூக ஊடகங்கள்  போர்க்கால பாணியில் ஊடக (அ) தர்மத்தை தலையில் சுமந்து  இன்னும் பணி செய்து கிடக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற புலனாய்வுத்துறையினரின் தேடுதல் நடவடிக்கை குறித்து மரபு ரீதியான ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொய்யான பழைய செய்திகளையும், தகவல்களையும் வெட்டி,ஒட்டி  பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேடுதல்களில் காட்சிப்படுத்தப்பட்ட படங்களையும்  ஏட்டிக்கு போட்டியாக, போட்டி போட்டுக்கொண்டு பொய்களை சமூகப்பொறுப்பற்று உலாவிட்டதன் விளைவே இப்பதிவையிட “வெளிச்சத்தை” தூண்டியது.

 சட்டம் தனது கடமையைச்செய்ய வேண்டும். நீதி, நிர்வாகம், சட்டவாக்கத்துறை சுதந்திரமாக இயங்க வேண்டும். இவை கடந்த அரசாங்கங்களின் காலத்தில் -ஜே.வி.பி. பங்காளராக இருந்த ஆட்சியிலும்  கூட சுதந்திரமாக இயங்கவில்லை. இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வோ அல்லது  எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று அரசியல் எதிரிகளை அதுவும் பலவீனமான அரசியல் எதிரிகளை பழிவாங்கும் எண்ணத்திலோ என்னவோ  அரசாங்கம் இதைச் செய்யலாம். இதுவல்ல இங்கு பேசவேண்டிய விடயம். இந்த அரசியல் சூழலில் பொறுப்பு வாய்ந்த சமூக, மற்றும் ஊடகங்கள் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இதை பிள்ளையானும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் மாத்திரம் எதிர்கொள்ளவில்லை. தமிழ்த்தேசிய கட்சிகளும், அவர்களின் தலைமைகளும், உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய எதிர்த்தரப்பும், முஸ்லிம் கட்சிகளும் எதிர்கொள்கின்றன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு எதிராக அவர்கள் போராடவேண்டியுள்ளது. இன்று உனக்கு…. ,எனக்கு…… நாளை என்ற நிலையே காணப்படுகிறது.

இந்த மரபு ரீதியான ஊடகங்களும், நவீன சமூக ஊடகங்களும் குடிமக்களின் கருத்துக்களையும், விருப்பங்களையும் உருவாக்வதில் – கருத்துருவாக்கத்தில் முக்கியமானவை. இந்தப்பணியை இவை சரியாகச்செய்யாதவிடத்து தவறான தகவல்கள் > தவறான கருத்துருவாக்கத்திற்கு காரணமாகி > தவறான தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த ஊடகங்களே மக்களை தவறாக வழிநடத்துவதாக அமையும். இந்த செயற்பாடு ஊடகங்களின் ஜனநாயகத்திற்கான பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை  கிடப்பில் போடுவதாகும். ஊடகங்கள் உண்மையான தகவல்களை வழங்கி சமூகத்தை அரசியலில் அணிதிரட்டவும், சமூகத்தின் அரசியல் பங்குபற்றலை அதிகரிக்கவும் பெரும் பங்கை வகிக்கமுடியும். 

மறுபக்கத்தில் இதில் உள்ள ஆபத்து அரசியல் நோக்கத்திற்காக சமூக ஊடகங்கள் இலகுவில் பயன்படுத்தப்படலாம்  என்று  சமூக ஊடக ஆய்வாளர்களும், நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.  இது ஜனநாயகத்தின் பற்றாக்குறையாக அல்லது  தகவல் பரிமாற்றத்தின் தரக்குறைவாக அமையும் என்பது அவர்கள் கருத்து. அதேவேளை குடிமக்களுக்கான  சிறந்த தகவல்கள் என்பவை அவற்றின் தரத்தை குறித்து நிற்கின்றன. தகவல்களின் தரமே சமூக ஊடக பயனாளர்களின் நம்பிக்கை, நேர்மை, பன்மைத்துவ நோக்கு,  சிந்தனை ஆற்றல் என்பனவற்றை தூண்டி சரியான கருத்துருவாக்கத்திற்கு கருக்கூட்டுவதாக அமைய முடியும்.

சமூக ஊடகங்களில் தகவல்களை தேடுதல், கண்டறிதல், பகிர்தல், பயன்படுத்தல் என்ற படிமுறை இங்கு முக்கியம் பெறுகிறது. அது மட்டுமின்றி சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் செய்யாமல் பயனாளிகளிடையே சமூக உறவுகளை உருவாக்குவதற்கும், சமூகங்களை உருவாக்குவதற்கும் உதவுகின்றன. சமூக ஊடகங்கள் ஊடாக,  சமூக மூலதன உருவாக்கம் ஏற்படுகிறது. இது இருக்கும் உறவுகளை பலப்படுத்தல், மற்றும் புதிய உறவுகளை உருவாக்குதல் மூலம் ஏற்படுகிறது. ஆனால் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை குறித்த தகவல் பரிமாற்றத்தில்/ செய்தியில் சமூக ஊடகங்களின் தேடுதல், கண்டறிதல், பகிர்தல் என்ற சமூக ஊடக அடிப்படை கருத்தியல் பொய்யான, பழைய தகவல்களை திரிபு படுத்தி பதிவிட்டு, படம் போட்டு கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவறானவை என்று வெளிப்படையாக தெரியவந்த பின்னரும்/ பிடிபட்ட பின்னரும் எந்த ஒரு மரபு ஊடகமும், சமூக ஊடகமும் அதற்கான பொறுப்பை ஏற்று  தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை.  இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்படியானால் மற்றவர்களை பொறுப்புக்கூறச் சொல்ல இவர்களுக்கு இருக்கின்ற தார்மீக உரிமை என்ன?

மட்டக்களப்பு ஏரிக்கரை தேடுதல் குறித்த செய்திகளை/ பதிவுகளை அவதானித்தால்……,

1. வெற்று தோட்டாக்களும், இளம் நீல நிற பை ஒன்றும் உள்ள ஒரு படம் ரி.எம்.வி.பி. காரியாலய தேடுதலில் மீட்டக்கப்பட்டதாக காட்ட அந்த ஊடக, சமூக ஊடகச் செய்திகள் வலிந்து நிற்கின்றன. இந்த செய்தியும், அதற்கான படமும் 9/30/2014 , 08.45.00 pm  திகதியிலும், நேரத்திலும் www.kurunews.com என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒன்று. அந்த செய்தியின் தலைப்பு: தம்பிலுவில் பகுதி வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு. இந்த செய்திக்கு அந்த பகுதி இராணுவ மேஜர் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.

2.  இதே படத்தை தாங்கிய இன்னொரு பதிவு செப்டம்பர் 03. 2014 இல் RAJ என்பவரால் கரடியனாறு பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதற்கும் பதிவிடப்பட்டுள்ளது. இங்கு செப்டம்பர், 2014 இல் 03, திகதிய பதிவிலும், 30ம்திகதிய பதிவிலும் இரு வேறு செய்திகளுக்கு ஒரே படங்களை பயன்படுத்தி சமூக ஊடக பயனாளிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது பதினொரு வருடங்களுக்கு பின்னர் பிள்ளையானின் கட்சி காரியாலயத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக மூன்றாவது தடவையாக  அதே படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. ரி.எம்.வி.பி. காரியாலய தேடுதல் சமூக ஊடக பதிவுகளில் சொட் கண் (SHOT GUN) படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இதன் பின்னணி சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த படம் அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தில் துப்பாக்கி மீட்பு ! ஒருவர் கைது என்று கூறிய  ஒரு பழைய செய்திக்குரியது. இது  BATTINEWS.COMதளத்தில் OCTOBER 21,2000 ம் ஆண்டு By Sayanolipavan என்று பதிவிடப்பட்டுள்ளது. இது சுமார் 25 வருடங்களுக்கு முன்னரான செய்தி.

இவ்வாறான  பதிவுகள்/ தகவல்களை ஈ அடிச்சான் கொப்பியாக சமூகத்திற்கு வழங்கும்  இந்த ஊடகங்களின்  சமூகம் மீதான அக்கறை எப்படி அமைந்திருக்கும். யாரைத்திருப்திப்படுத்த  இந்த சமூக ஊடக நபர்களும், ஊடகங்களும் முயற்சிக்கின்றன. இவை ஊடக உரிமையை துஷ்பிரயோகம் செய்யும்  நடவடிக்கைகள். பிள்ளையானின் அலுவலகத்தில் மீட்கப்பட்டதாக அந்த வெற்றுத்தோட்டாகோது, நீலப்பை படத்தை தனது தளத்தில் பதிவிட்டு  31.05.2025 ,  SOORIYAN FM ஊடக நேர்மையை துஷ்பிரயோகம் செய்திருப்பது மற்றொரு ஊதுகுழல்தனம்.

சமூக ஊடகங்கள் தகவல்களை வழங்கும் போது பயனாளிகளின் “கேள்விகள்” என்னவாக இருக்கும் என்பது இங்கு முதன்மை பெறுகிறது. 

அந்த கேள்விகள்/ தேவைகளுக்கான பதிவாகவே செய்திகள் அமைய வேண்டும். இது ஊடகங்களின் பொறுப்பு……

(*) இந்த செய்தியின் மூலம் சமூகம் எவற்றை கற்றுக்கொள்ள முடியும்?

(*) இந்தச் செய்தி சமூகத்திற்கு எவ்வாறான ஊக்கத்தை அளிக்கும்?

(*) இந்தச்செய்தி சமூகத்திற்கு இருக்கின்ற ஒரு பிரச்சினையை தீர்க்கக்கூடியதா?

(*) இந்தச்செய்தி சமூகத்திற்கு குறிப்பிட்ட விடயம் சார்ந்து ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துமா?

இந்த முன் நிபந்தனைகளை கருத்தில் எடுக்காத எந்த ஊடகச்செய்திகளும், தகவல்களும் சமூகத்தின் தேவைகளை /தகவல் தேடல்களை நிறைவு செய்வனவாக இருக்கமாட்டாது.

மட்டக்களப்பின் ஆரோக்கியமான சாமானிய மக்களுக்கு  இந்த செய்திப் பதிவுகள் ஆரோக்கியமற்ற மன நோயாளர்களால் பதிவிடப்பட்டவை என்பது இலகுவில் புரிந்து விடும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி அலுவலகமாக இந்த இடம் சுமார் இருபது ஆண்டுகளாக இருக்கிறது.  பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு பதவிகளை வகித்து போதும் இதுதான் கட்சி காரியாலயம். ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் கட்சி தலைமையகம் இதுதான். 

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டது  08.04.2025.  புலனாய்வுத்துறை சோதனை நடந்தது  31.05.2025. 01.06.2025 இல் ரி.எம்.வி.பி . கட்சியின் கூட்டம் ஒன்றும் இங்கு நடாத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இருபது ஆண்டுகளாக ஆயுதங்களையும், சடலங்களையும், பழைய வெற்று தோட்டாக்களையும், எலும்புக்கூடுகளையும் வெட்டி புதைக்க பிள்ளையானும் அவரது கட்சியினரும் இந்த ஊடகவியலாளர்கள் போன்று முட்டாள்கள் அல்ல. பிள்ளையானுக்கு புலிகள் இயக்கத்தில் என்ன பொறுப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அவர் புலிகள் இயக்கத்தில் வளர்ந்தவர். சோத்துப்பானை இயக்க காரியாலயங்கள் போன்று ரி.எம்.வி.பி..காரியாலயத்தை  ஆரோக்கியமான எந்த ஒரு சாதாரண மனிதனும் நினைக்கமாட்டான். 

சமூக ஊடகசேவையை வழங்கும்  FACEBOOK, INTERGRAM, YOUTUBE, XING, LINKEDLN, TIKTOK  , X ….-போன்ற  குறிப்பிடக்கைடிய  முக்கிய தளங்களின் பலவீனம் அவை அவற்றின் உற்பத்திகளை முழுமையாக கண்காணிக்க முடியாமல் இருப்பதாகும். இதை பெரும்பாலான நிறுவனங்கள் தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்று தங்கள் நாட்டுச் சட்டங்கள் ஊடாக கடந்து சென்று விடுகின்றன. ஜனநாயக விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற  அவ்வாறான ஒரு சமூகத்தில் இது கருத்துச்சுதந்திர உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதற்கு வழி வகுக்கலாம். ஆனால் இலங்கை போன்ற யுத்தத்தினால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த ஒரு தேசத்தில் இன்னும் இது வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான். முறைமை மாற்றம் இந்த திசையில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் காரியாலய  தேடுதல் விவகாரம் 40 ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க வேண்டியது. 1987 இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இந்திய இராணுவம் மட்டக்களப்பிற்கும் வந்தது. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப் -ராஸிக் குழுவினருடன் இங்கு குடிபுகுந்தது. இந்திய இராணுவம் ஈ.பி.ஆர்.எல்.எப். இராணுவ முகாமுக்கு பாதுகாப்பு வழங்கியது. இது இந்திய இராணுவம் வெளியேறும் வரை தொடர்ந்தது. இதனையடுத்து இலங்கை இராணுவம் இங்கு முகாமைத்திருந்தனர். 2007  ஒக்டோபரில் இலங்கை இராணுவத்தினர் இந்த இடத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிடம் ஒப்படைத்தனர். 

ஆக,  38 ஆண்டுகளில் 1987மதல் 2007 வரையான இருபது வருடங்கள் மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள இந்த இடம் இந்திய, ஈ.பி.ஆர்.எல்.எப், இலங்கை இராணுவப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற பல வன்முறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இவர்கள் பொறுப்பு என்று இந்த ஊடகங்கள் அனைத்தும்  ஒரு காலத்தில் பேசின. ஈ.பி.ஆர்.எல்.எப் – ஈ.என்.டி.எல்.எப் கூட்டு மாகாண ஆட்சியில் இடம்பெற்ற  “பிள்ளை பிடி” கட்டாய தமிழ்த்தேசிய இராணுவ கட்டமைப்பிலும். ராஸிக்குழுவுக்கும், இந்த முகாமுக்கும் பெரும் பங்குண்டு. பின்னர் ஜே.வி.பி. யின்  யுத்தத்திற்கான மறைமுக, நேரடி  ஆதரவுடன் இந்த முகாம்  மட்டக்களப்பு நகரின் மத்தியில் இலங்கை இராணுவ முகாமாக மேலும் வலுப்பெற்றது.

எனவே உண்மையை “தோண்டுவதாயின்” இந்த கால இடைவெளிகள்  கவனத்தில் கொள்ளப்பட்டு சரியான நெறிமுறையின் கீழ் இராணுவ புலனாய்வு, இரசாயன பகுப்பாய்வு செய்யப்படவேண்டும். தோண்டுதல் கண்டுபிடிப்புக்கு 1987 இல் இருந்து இலங்கையின் இன்றைய ஜே.வி.பி.ஆட்சியாளர்கள் வரை இதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

இந்த காலப்பகுதியில் கடமையில்  இருந்த-சம்பந்தப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவை பயன்படுத்தி புலனாய்வு செய்வது கள்வனைப்பிடித்து விதானை வேலை கொடுக்கும் அரசியல். ஜே.வி.பி. தனது அரசியல் தேவைகளுக்காக சேற்றைக்கண்ட இடத்தில் மிதிப்பதும், நீரைக்கண்ட இடத்தில் கழுவுவதுமாக அரசியல் செய்ய முடியாது.  அது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஓதும் அரசியல் வேதமாகவும்  அமையாது.