வெட்கமில்லை, வெட்கமில்லை, வெட்கம் என்பது இல்லையே….! (வெளிச்சம் :024)

வெட்கமில்லை, வெட்கமில்லை, வெட்கம் என்பது இல்லையே….! (வெளிச்சம் :024)

— அழகு குணசீலன் —

“வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சியை தனியான அரசியல் தலைமையாக அங்கீகரித்து இருக்கிறார்கள். அதற்கு கிழக்கின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது” என்கிறார் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், கட்சியின் தலைமை பதவி போட்டியிலும், கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன்.  பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு வடக்கில் மக்கள் “வேட்டியை” அவிழ்த்து  “அம்மணமாக்கி”  ஓட விட்ட நிலையில் அதற்கு “கோவணம்” கட்டி மானத்தை காப்பாற்றிய கிழக்கு தமிழ் மக்கள், கிழக்குக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று  கோருகிறார்கள்.

“வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்த தேர்தலால் முடிந்து இருக்கிறது” என்று கூறுகிறார் ஜனாதிபதி. ஆனால் அதே திசைகளில் இருந்து திசைகாட்டி சரியான திசையைத்தான் காட்டும் என்று வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை அமைச்சர்கள் நியமனத்திலும், அவற்றிற்கான செயலாளர் நியமனத்திலும் ஒரே மையப்புள்ளியில் இணைக்க முடியவில்லை என்கிறார்கள்” ஒரு பகுதி மக்கள். இவர்கள் “இலங்கையர்கள்” என்று தங்களை அடையாளப்படுத்திய தமிழ், முஸ்லீம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு தமிழ்ச்சமூகப் பிரதிநிதித்துவம்  அமைச்சரவையில் உள்ளபோதும், அது பாலின சமத்துவத்தை 50:50 ஆக கொண்டுள்ள போதும்  அது “அவர்களுக்கு ” , “எங்களுக்கு” இலங்கை தமிழர்களுக்கு இல்லையே என வழக்கமான யாழ்.மேலாதிக்க வேளாளிய தமிழர் அரசியல் முணுமுணுக்கிறது. இது பொன்னம்பலத்தார்களும், அவர்களின் வாரிசுகளும் விதைத்த நச்சுவிதை. “அவர்கள்” மலை நாட்டார். “நாங்கள்” யாழ்ப்பாணிகள். அதற்குள் தமிழன் என்று சொல்லடா….! தலை நிமிர்ந்து நில்லடா……!

இலங்கை முஸ்லீம்கள் மத்தியிலும் தாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதான. உணர்வு உரத்து  ஒலிக்கிறது. இவர்களில் ஒரு பகுதியினர் கட்சியின் பெயரில் “சிறிலங்காவை” சுமந்தும், தென்னிலங்கையில் இரண்டறக்கலந்தும் வாழ்பவர்கள். இந்த தமிழ், முஸ்லீம் தரப்பினரில் கணிசமானவர்கள் தங்கள் தனித்துவ சமூக அடையாளங்களையும், புவியியல் பிராந்திய அடையாளங்களையும் கடந்து “இலங்கையர்” கோஷத்தை  அண்மைய தேர்தல்களில்  தோளிலும், தலையிலும் சுமந்தவர்கள். 

தமிழ், முஸ்லீம் சமூகங்களின் “குற்றப்பத்திரங்களுக்கு” எதிராக ஆஜராகி இருக்கிறார் இன்னும் அமைச்சராக வெதுப்பிய சூடு ஆறாத பிமல் ரத்நாயக்க. அவரின் வாதம் இது….,

” இனரீதியான அமைச்சர் நியமனம் மக்கள் ஆணைக்கு முரணானது. முஸ்லீம்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்”. என்பது  ரத்நாயக்க வாதம். ஆனால் மக்களிடம் வாக்கு கேட்கும் போது என்.பி.பி. “இலங்கையர் ” என்ற போர்வைக்குள் நின்று கேட்டதேயன்றி  சிறுபான்மை தேசிய இன அடையாளங்களை “இலங்கையர் ” என்ற பௌத்த சிங்கள மேல்நிலை அடையாளம் விழுங்கி விடும் என்று தெளிவுபடுத்தவில்லை. பிமல் ரத்நாயக்கவின் கருத்து இடதுசாரி (?) ஆட்சி அதிகாரம் ஒன்றின் முதலாளித்துவ “பல்தேசிய கம்பனி” ஒன்றின் தனியுரிமை சந்தை வியாபாரம் போல்  தோன்றுகின்றது.

சர்வதேச பொருளியலில் இதை “கழுத்தறு போட்டி” என்று  சொல்லப்படும். பலமான பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை தங்களுக்குள் உள்வாங்கி விழுங்கி அவற்றின் அடையாளத்தை அழித்து விடுதல். இதற்கு  போட்டியற்ற ‘கொக்காகோலா ‘  அரசியல் வியாபாரம் என்றும் சொல்லலாம்.  இந்த நிலைப்பாடு ஜனாதிபதி அமைச்சர்கள் பதவியேற்பின் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட “அதிகார உச்ச வரம்பு” வரையறையை முற்று முழுதாக மறுதலிக்கிறது. அதிகார எல்லையைத் தாண்டுகிறது.

கம்யூனிஸ்ட், சோஷலிச ஆட்சிகளில் சமூகம் சார்ந்த இன,மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. அங்கு வர்க்கம் முதன்மை பெறுகிறது. பட்டாளி, தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது.  இந்த நிலைப்பாடு இன்றைய இலங்கைக்கு பொருந்துமா? இதற்கு இலங்கை சமூகங்கள் அரசியல் தத்துவார்த்த ரீதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனவா?  இந்த தயார்ப்படுத்தல் பெரும்பான்மை சமூகத்தை விடவும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் செய்யப்படவேண்டும். 

அதை சிறுபான்மை தேசிய இனங்கள் தங்கள் சுய சமூக அடையாளங்கள், புவியியல் பிராந்திய அடையாளங்களை விட்டு வர்க்க ரீதியில் ஒன்றிணைக்கப்படாமல் செய்ய முடியாது. அதுவும் பொருளாதார வங்குரோத்து நாடொன்றில் சூழ்நிலையின் கைதியான மக்களிடம்  “தவித்த முயல் அடித்த” அரசியல் செய்து வாக்கு பெற்று அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகவே  கொள்ள வேண்டி உள்ளது. குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக , அவர்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளுக்கு எதிராக கோட்பாட்டு ரீதியான பதில்களை என்.பி.பி. அரசாங்கம் அளிப்பது நடைமுறை ஜதார்த்த அரசியல் அல்ல வெறும் கனவுலக அரசியல்.

இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் தாங்கள் இன,மத, மொழிகளை கடந்தவர்கள் என்று கூறுகின்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்  -என்.பி.பி/ஜே.வி.பி. ஆட்சியில் சகோதரத்துவ மத அடையாளங்களை புறக்கணித்து பௌத்த மதத்திற்கு அமைச்சு ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பது. இதற்கான செலவும் பௌத்த மதம் அல்லாதவர்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தனது அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை “செஞ்சேலை” அணிந்து பொறுப்பெடுத்த அமைச்சர் சரோஜா போல்ராஜ் புத்த சிலைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கடமையை ஆரம்பிப்பது என்.பி.பி.யின் குறைந்த பட்ச இடதுசாரித்தனம் குறித்து வியப்பை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு சிறுபான்மை தேசிய இனங்கள் தங்கள் சமூக அடையாளங்களை தொலைத்து விட்டு  “இலங்கையர்” என்ற பௌத்த சிங்கள மாஜாஜாலத்தில் கரையுங்கள் என்று கோருவதற்கு ஒரு இடதுசாரி (?) அமைப்பாக, ஆட்சியாக, அதிகார மையமாக வெட்கமில்லையா….?

திசைகளை ஒரு மையப்புள்ளியில் இணைப்பது அல்ல இடதுசாரி அரசியல்.  அது  திசை காட்டி. சகல மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் அடையாளங்களும் , தனித்துவங்களும் ஒரு மையப் புள்ளியில் இணைக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்தரமாக புவியியல் பிராந்திய ரீதியான தனித்துவ மையப்புள்ளி ஒன்றில் இலங்கை தமிழர், முஸ்லீம், மலையக தமிழர்கள் தங்களுக்கான தனித்துவமான நிர்வாக கட்டமைப்பை கொண்டிருப்பதே கொழும்பு அதிகாரத்திற்கு பலம் சேர்க்கும் மையப்புள்ளியாக அமையும்.

இனி மெல்லத் தமிழரசுக்கு….,

தமிழ்த்தேசியத்திற்கு கோவணம் கட்டி மானம் காத்த கிழக்கு மாகாண மக்கள் கட்சி நிர்வகிப்பில் பங்கு கேட்கிறார்கள். அந்த மக்களின் கோரிக்கை எந்த வகையிலும் தட்டிக்கழிக்க முடியாத அரசியல்,  புவியியல் பிராந்திய , சமூகநீதியை கொண்டுள்ளது. கிழக்கு தமிழ் மக்களின் இந்த கோரிக்கைக்கு பின்னால் உள்ள நியாயங்கள் என்ன?

அவர்களின்  பதவி சார் கோரிக்கைகள் என்ன?

1. தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி .

2. தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி.

3.  தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற பிரதம கொறடா பதவி.

4.தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற அலுவல்கள் (பிஸ்னஸ்) கையாளுபவர் பதவி.

5. தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவி , செயலாளர் பதவி, பேச்சாளர் பதவி.

இத்தனை பதவிகள் வெற்றிடமாக அல்லது சட்டரீதியாக நிரப்பப்படாமல்/நியமிக்கப்படாமல் இருந்த  அரசியல் தில்லுமுல்லு நிலையில் தான் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் இரண்டும் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலைமையானது ஒரு கட்சியின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குவது, ஆக்கியிருக்கிறது.

உரிய அதிகாரம் அற்ற வகையில் வருடக்கணக்காக  மாவை கூட்டங்களில் தலைவர் கதிரையில் வந்து அமர்கிறார். பதில் (தற்காலிக)செயலாளராக சத்தியலிங்கம் வருடங்களை கடத்துகிறார். சம்பந்தர் காலத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு(ரெலோ) இணக்கம் காணப்பட்டபோதும் சுமந்திரன் இன்னும் அதை தன்னோடு வைத்துள்ளார்.  இந்த பதவிகளை பொதுச்சபை , நீதிமன்ற விவகாரமாகவும் , தமிழரசுக்கட்சி தனித்து இயங்குகின்ற நிலையிலும் இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக எவரும் போட்டியிட முன்வராதநிலையில் (தோல்வி நிச்சயம், வருமானம் இல்லை, பதவி இல்லை, சாராயக்கடை இல்லை, கார் பேர்மிட்  இல்லை)  கிடைத்தான் ஒரு மட்டக்களப்பு மடையன் பா.அரியநேந்திரன்,  கிழக்கில் இருந்து போட்டியிட்டு வடக்கு கிழக்கில் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். இதை கிழக்கார் ஒருவனுக்கு வடக்கார் வழங்கிய மாபெரும் அங்கீகாரமாகவும், வரலாற்று சாதனையாகவும் பொதுவேட்பாளர் ஆதரவு தமிழ்தேசிய பத்திஎழுத்தாளர்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் பேனாவில் மை முடியும் வரையும், கடவாயில்  நுரைகக்கும் வரையும் எழுதியும் பேசியும் தள்ளினார்கள். தமிழ்த்தேசியம் காப்பாற்றப்பட்டது.

இப்போது பாராளுமன்ற தேர்தலில் தமிழரசின்- தமிழ்த் தேசியத்தின் மானம் கிழக்கால் மீண்டும் ஒரு முறை காப்பாற்றப்பட்டுள்ளது.  பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கில் 93,035 வாக்குகளை பெற்ற நிலையில் கிழக்கில் 1,64,775 வாக்குகளை பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழரசு பெற்ற வாக்குகளில் கிழக்கில் பெற்றது 60 வீதத்திற்கும் அதிகமானது.  வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் பெற்ற 93,035 வாக்குகளை விடவும் ஒரு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெற்ற 96,975 வாக்குகள் அதிகமானவை. 

தமிழரசுகட்சிக்கு தேசிய பட்டியல் எம்.பி.  கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளாலேயே கிடைத்தது. இது தவிர மற்றைய 7 ஆசனங்களில் 5 கிழக்குமாகாண ஆசனங்கள். அதிலும் மட்டக்களப்பில் 3.  மொத்த தமிழரசு ஆசனத்தில் 70 வீரத்திற்கும் அதிகமானது கிழக்கில் இருக்கிறது. மட்டக்களப்பில் மட்டும் 50 வீதத்திற்கு சற்று குறைவானது. இந்த நிலையில் கிழக்கிற்கு தேசிய பட்டியல் எம்.பி.வழங்கப்படாமையானது ஓரநியாயம். சொல்ல்லப்படுகின்ற காரணங்கள் திருகுதாளங்கள்.

 80 வயதிலும் மேலாதிக்க பதவி வெறி யாரை விட்டது. தமிழரசு அரசியலில் குறுக்கும் மறுக்கும் ஓடிய மாவை சேனாதிராஜா  அழாத குறையாக கெஞ்சு ..கெஞ்சு என கெஞ்சியும், இறுதியில் இரண்டு வருடத்திற்கு கேட்டும் சரி வரவில்லை எனத் தெரியவருகிறது. வாயைத்திறந்தால் தமிழ்த்தேசிய தேன் ஒழுகும். விடுவாரா?

உண்மையான தேசிய பட்டியலில் 18 பெயர்கள் இருந்தன. இவர்களிலும் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தவர்கள். இந்த பட்டியலை பதில் செயலாளர் என்ற சுமந்திரனின் பொம்மை சத்தியலிங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பவில்லை என்று தெரியவருகிறது. இவருக்கும் இந்த பெயருக்கும் சத்தியமாக சம்பந்தமே இல்லை .  இவர்தான் தற்போது  கிழக்காரின் – மட்டக்களப்பாரின் வாக்குகளால்  எம்.பி.யாகி பாராளுமன்றத்தில்  ‘சத்தியம் ‘ செய்ய இருக்கிறார்.  வட மாகாண சபையில் அமைச்சராக இருந்த காலத்தில் இவர்மீதும் ஊழல்குற்றச்சாட்டுக்கள் உண்டு.

சரி, அந்த 18 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் இருந்தார்கள். ஒருவர் யாழ்ப்பாணம் நிர்மலா ,மற்றவர் மட்டக்களப்பு றஞ்சினி. பெண்கள் என்ற வகையில் இவர்களில் ஒருவருக்கு கொடுத்திருந்தாலும் கிழக்கு/ வடக்கு மக்களை திருப்திப்படுத்த ஒரு நியாயம் இருந்திருக்கும். அதுவும் இல்லை. அல்லது மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்ற இந்த நாளில், மாவீரர்களின் பெயரால் வாக்கு கேட்டவர்கள் முன்னாள் போராளிகளில் ஒருவருக்கு அல்லது போரில் அங்கவீனமானோருக்கு வழங்கியிருந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். இவற்றை எல்லாம் பேசுவதற்கு அந்த தமிழ்தேசிய பத்தி எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் தயாராக இல்லை. ஜே.வி.பி.யும் எங்களைப்போன்று இழப்புக்களை சந்தித்தது, சாம்பலில் இருந்து எழுந்தது என்றெல்லாம்  கதையளக்கத்தான் இவர்களால் முடியும். அதற்குள் அக்ரீவ் அரசியல்,ரீஅக்ரீவ் அரசியல், தேசத்திரட்சி, மக்கள் திரட்சி என்ற மாட்டுக்கு “புண்ணாக்கு” போடும் பத்தி எழுத்துக்களும், ஆய்வுகளும் .

ஜே.வி.பி.பற்றி பேசுவதற்கு தமிழ்த்தேசிய அரசியலுக்கு உள்ள அருகதை என்ன? பாராளுமன்றத்தில் 18 பெண்கள், அமைச்சரவையில் 2 பெண்கள்.  கண்பார்வையை கிரிக்கெட் விளையாட்டில் ஏழு வயதில் இழந்த சமூகவியலாளர் சுகத் வசந்த டீ. சில்வாவுக்கு தேசிய பட்டியல் எம்.பி.நியமனம். ச்சீ….. இன்னும் தமிழ்த்தேசியம்….திலீபன்…

அன்னை பூபதி….., மாவீரர்கள் பற்றி பேச உங்களுக்கு வெட்கம் இல்லை ? தயவு செய்து பேசவேண்டாம் தொடர்ந்தால் வாய் புழுக்கும்!

தேசியப்பட்டியலுக்கு இந்த நிலை என்றால் பாராளுமன்ற குழுத்தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தெரிவு மத்தியகுழுவினுடையதா? பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. உலக வழக்கில் பாராளுமன்ற குழுவே தலைவரைத் தெரிவுசெய்வது வழக்கம்.  ஜே.வி.பி. போன்று கட்சியும், பாராளுமன்ற குழுவும் இரு வேறு கட்டமைப்புகள். கட்சியின் தீர்மானங்களை பாராளுமன்றத்தில் செயற்படுத்துவதே பாராளுமன்ற குழுவின் வேலை.  தமிழ்த்தேசிய அரசியலில் இது கிலோ என்ன விலை. எம்.பி.க்கள் தான் எல்லாம்.  எப்படி சாராயத்தவறணை குறையைப் போகிறது? 

எம்.பி.க்களின் முடிவு என்றால் கிழக்கு எம்.பி.க்கள் பெரும்பான்மையாக இருந்திருப்பார்கள். இதைத்தடுப்பதற்காக சுமந்திரனின் விசிறிகளை கொண்ட  மத்திய குழுவே இந்த தெரிவை மேற்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கிறது. சிறிதரன் நீண்ட கால பாராளுமன்ற அனுபவம் கொண்டவர் தான். ஆனால் அது மட்டும் பாராளுமன்ற குழு தலைவருக்கான தகுதியாக கொள்ள முடியாது. பாராளுமன்ற குழுத்தலைவர்கள்  கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், கட்சியின் நிலைப்பாட்டை பல்வேறு விடயதானங்கள் குறித்து முன் வைப்பதற்கும் பல்மொழி தொடர்பாடல் அவசியம். மேலும் சர்வதேச பாராளுமன்ற குழுக்கள், பிராந்திய, மற்றும் நாடுகளின் பாராளுமன்ற குழுக்கள் இலங்கை பாராளுமன்றத்திற்கு நட்புறவு அல்லது வேலைத்திட்ட ஒத்துழைப்பு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவர்களோடு கலந்துரையாடுவதற்கும் மொழியறிவு முக்கியமாகிறது. அந்த வகையில் சாணக்கியன் மீதான கடந்த கால பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால் அவரைவிடவும் தகுதியானவர் இன்றைய தமிழரசு குழுவில் இல்லை. இது வரவு செலவுத் திட்ட விவாதத்தில் “தேவார திருவாசகம் திருப்புகழ்” பாடுவதில்லை என்பதை மத்திய குழு அறிந்திருந்ததா? அல்லது சிறிதரனின்  செயற்பாட்டு பலவீனங்களை அம்பலப்படுத்துவதற்கான தந்திரோபாயமா? என்று கேட்கத்தோன்றுகிறது.

பாராளுமன்ற குழுவின் பேச்சாளர் பதவியை “நாங்கள் எங்களுக்குள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற சிறிதரனால்  பாராளுமன்ற குழுத்தலைவரையும் எங்களுக்குள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல முடியாமல் போனது ஒன்றும் இரகசியம் அல்ல. அப்படியானால் பாராளுமன்ற குழுவில் கிழக்கார் பெரும்பான்மையாக இருந்திருக்கும் அது சாணக்கியனுக்கு சாதகமாகிவிடும்.  சுமந்திரன் கூட இது விடயத்தில் சாணக்கியன் பாராளுமன்ற குழுத்தலைவராவதை விரும்பவில்லை என்று தெரிகிறது.

போடுகாய் பதவி ஒன்று, அதுவும் சிறிதரனோடு கட்டிப்போட்ட இணைப்பதவி சாணக்கியனுக்கு. மத்திய குழு வழங்கியிருக்கிறது. பாராளுமன்ற பிஸ்னஸ்சை சிறிதரனோடு சேர்ந்து செய்வது. ஞா.சிறிநேசன் கடந்த பொதுச்சபையில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர். யோகேஸ்வரன் தலைவர் பதவி போட்டியில் இருந்து இறுதியில் சுமந்திரனுக்கு விட்டுக்கொடுத்தவர். அரியநேத்திரன் பொதுவேட்பாளராக போட்டியிட்டவர். கோடீஸ்வரன் மீண்டும் பாராளுமன்றம் வருகிறார். இந்த நிலையில் தமிழரசுகட்சியில் கிழக்கிற்கான தலைமைத்துவ, நிர்வாக பங்கை போராடாமல் கிழக்கு மாகாண மக்கள் பெறமுடியாது என்பது தற்போது தெளிவாகின்றது. 

தென்னிலங்கை அரசியல் போன்று ” இலங்கையர்” என்றும் , இனவாதம் என்றும் , வடக்கு அரசியல் “தமிழர்” என்றும், பிரதேச வாதம் என்றும் பேசுவது மேலாதிக்க அதிகார மனோநிலையின் வெளிப்பாடு. இதற்கு தெற்கு என்றும், வடக்கு என்றும் வேறுபாடில்லை. இந்த ஆதிக்க அரசியல் வரலாற்று பாடமே தொடர்கிறது.

உச்சி மீது வானிடிந்த போதிலும்………..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *