— கருணாகரன் —
மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது.
சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை.
ஆனால், இந்தத் தடவை வடக்குக் கிழக்கிலும் முதன்மையிடத்தை தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்றுள்ளது. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியற் கோட்பாட்டினதும் நடைமுறைகளினதும் வெற்றியா? அல்லது அதன் மீதான நாடளாவிய நம்பிக்கைகளின் விளைவா? என்பது ஆராய்வுக்குரியது.
பல தசாப்தங்களாக சமூகப் பிராந்தியம் (Social region) மற்றும் புவியியற் பிராந்திய (Geographical region) அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த தமிழ்த்தேசிய, முஸ்லிம் தேசிய, மலையகத் தேசியக் கட்சிகளையும் அவற்றின் அரசியலையும் கடந்து தேசியமக்கள் சக்தி (NPP) யை மக்கள் நெருங்கிச் செல்ல நேர்ந்தது எதற்காக அல்லது எதனால்?
தேசிய மக்கள் சக்தி இந்த மக்களுக்கு இதுவரை ஆற்றிய நல்விளைவுகளினாலா?
நிச்சயமாக இல்லை. அதற்கான ஆட்சியதிகாரத்தை அது கொண்டிருக்கவுமில்லை. அதனுடைய ஐம்பது ஆண்டுகால அரசியற் செயற்பாட்டுப் பரப்பில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களோ, மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகப் பிராந்தியங்களோ உள்ளடங்கியிருக்கவுமில்லை. உதிரிகளாக சிலர் தேசிய மக்கள் சக்தியோடு அல்லது ஜே.வி.பியோடு இணைந்திருந்தனரே தவிர, சமூகப் பிராந்தியமாகவும் புவியியற் பிராந்தியமாகவும் இணைந்திருக்கவில்லை.
ஆனால், தேசிய மக்கள் சக்தி (NPP) யை இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களும் நம்பியிருக்கிறார்கள். அதனுடைய இளைய தலைமுறை உறுப்பினர்களின் ஆற்றலையும் நேர்மையையும் மதிக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் – மதிப்பின் வெளிப்பாடே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் நாடளாவிய ரீதியில் பெற்ற மாபெரும் வெற்றியாகும். இது வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகிறது. அது உண்மையும் கூட.
மாற்றத்தை அல்லது தாங்கள் விரும்புகின்றதொரு அரசியற் சூழலை – தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே அதனை நோக்கி மக்களை நெருங்கிச் செல்ல வைத்தது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய வெற்றியாகும்.
அதேவேளை மக்கள் எதிர்பார்க்கின்ற – விரும்புகின்ற வெற்றியை தேசிய மக்கள் சக்தி வழங்கினால், அது மக்களுக்குக் கிடைக்கும் – மக்கள் பெறுகின்ற வெற்றியாக அமையும்.
இந்தப் பின்னணியில் மக்கள் தமக்குரிய – தமக்குப் பொருத்தமானதெனக் கருதுகின்ற – அரசியற் தெரிவைச் செய்வது அவர்களுடைய உரிமையும் தேவையுமாகும். அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
இந்தச் சூழலிற்தான் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் பிராந்திய அரசியலின் எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளைப் பலமாக்கியிருக்கிறது. இப்படித்தான் நடக்கும் என விடயங்களைக் கூர்மையாக நோக்குவோர் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தனர். அது நடந்திருக்கிறது.
இதற்குக் காரணம் –
1. பிராந்திய (தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம்) அரசியற் கோட்பாட்டின் வீரியமின்மையும் நடைமுறைப் பலவீனங்களும்.
2. ஆளுமைக் குறைபாடும் ஆற்றலின்மையும் கொண்ட தலைமைகள்.
3. கட்சிகளின் கட்டமைப்புப் பலவீனம்.
4. செயற்பாட்டுத் திறனின்மை.
5. மக்களுடனான உறவுச் சிக்கல்.
6. நேர்மையீனம்.
7. ராசதந்திரப் போதாமை.
8. சமூக, பொருளாதார அடிப்படைகளில் அக்கறையற்ற தன்மை
9. அர்ப்பணிப்பின்மை
10. வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.
11. பொறுப்புக் கூறல் – பொறுப்பெடுத்தல் – பொறுப்புணர்தல் ஆகியவை இல்லை.
12. ஜனநாயக விழுமியங்களைப் பொருட்படுத்தாக நடவடிக்கைகளும் நடத்தைகளும்.
13. பிராந்திய அரசியலையும் தேசிய அரசியலையும் கையாள்வது தொடர்பில் கொண்டுள்ள குழப்பங்களும் முரண்பாடுகளும்.
14. பிராந்திய மட்டத்திலும் தேசிய ரீதியிலும் காணப்பட்ட குறைபாடுகள், குற்றச் செயல்கள், அநீதிகள், மக்கள் விரோதச் செயல்கள், இயற்கை வளச் சிதைப்புகள், ஊழல் முறைகேடுகள், நிர்வாக துஸ்பிரயோகம் போன்ற எதைப்பற்றியும் பொருட்படுத்தாத அரசியல் தலைமைகளின் பொறுப்பின்மை.
இப்படியான பல காரணங்களால் பிராந்திய அரசியலின் அடித்தளம் பலவீனப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பினை பிராந்திய அரசியலை மேற்கொண்டு வந்த – வருகின்ற அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் நேர்மையோடு ஏற்க வேண்டும். அத்துடன், பிராந்திய அரசியலை ஆதரித்த – ஆதரிக்கின்ற – ஊடகங்களும் அதை முன்னிறுத்தி எழுதும் பத்தியாளர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே அரசியல் நேர்மையும் அறமுமாகும். அப்படிச் செய்தால்தான் அடுத்த கட்ட அரசியலையாவது பொருத்தமானதாக – யதார்த்தமானதாக – முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.
பிராந்திய அரசியல் வீழ்ச்சிக்கான காரணங்கள் வெளிப்படையாகவே தெரிந்தவை எனக் கண்டோம். இவை அனைத்தும் ஏற்கனவே பலராலும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டவை. ஆனாலும் அவை குறித்து எந்தக் கவனமும் கொள்ளப்படவில்லை. (இப்போதும் அதுதான் நிலைமை) பதிலாக அவை அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டன. மட்டுமல்ல, இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டியோரையும் இவற்றின் மீதான விமர்சனங்களை வைத்தவர்களையும் புறமொதுக்கி, துரோகப்பட்டியலில் சேர்த்ததே நடந்தது.
விளைவு?
இன்று பிராந்திய அரசியல் நெருக்கடிக்குள்ளானதேயாகும்.
இதை உரிமைகளுக்கான அரசியல் எனச் சித்திரித்தாலும் மறுபுறத்தில் குறுந்தேசியவாத அரசியலாகவே சுருக்கப்பட்டிருந்தது. குறுந்தேசியவாத அரசியலினால் ஒருபோதும் மக்களுடைய தேவைகளையோ பிரச்சினைகளையோ தீர்த்து வைக்க முடியாது. ஆனால், குறுந்தேசியவாதத்தினால் ஒரு எல்லைவரையில் மக்களுடைய உணர்வுகளைச் சீண்டிக் குவிமையப்படுத்த முடியும்.
அதுவே நடந்தது.
ஆனால், மக்கள் எப்போதும் தங்களுடைய வாழ்க்கைக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் ஓரங்கட்டி விட்டு உணர்ச்சிகரமான அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியிருக்கவும் முடியாது. ஏற்கனவே இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்ட பலரும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேறிப் புலம்பெயர்ந்து விட்டனர். (அங்கே போயிருந்து கொஞ்சம் தங்களை வளப்படுத்திக் கொண்டு, பிறகு இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றவர்களும் உண்டு). மிஞ்சியோர் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டனர். சிலர் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஒரு தொகுதியினர் மட்டும் இதை ஒரு வியாபார உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே ஒரு சிறிய தரப்பைத் தவிர, ஏனையோர் ஏதோ ஒரு நிலையில் அல்லது வேறு சூழலில் தமது வாழ்க்கையையும் அதற்கான தேவைகளையம் முதன்மையாகக் கொண்டுதான் சிந்திப்பர். அதற்கான அரசியலையே அவர்கள் நாடுவர். இதுதான் உலகெங்கும் உள்ள பொதுவான இயல்பும் நடைமுறையுமாகும். இது தவிர்க்க முடியாதது.
ஏனென்றால், எல்லாவற்றையும் விட முக்கியமானது வாழ்க்கை. வாழ்க்கைக்கே விடுதலையும் பொருளாதாரமும் அரசியலும். ஆகவே ‘வாழ்க்கையை விட்டு விட்டு நீங்கள் உங்களை முழுதாக ஒறுத்து, விடுதலைக்கான அரசியலுக்காக முன்வாருங்கள். வாழ்க்கையையும் விட விடுதலையே முதன்மையானது‘ என்றால் ஒரு எல்லை வரைதான் வருவார்கள். அதற்குப் பிறகு, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குவர். அதுவே இப்பொழுது நடந்திருக்கிறது.
இதை –இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை – உணர்ந்து கொள்ளத் தயாரில்லாதவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் மக்களெல்லாம் தமது இன உணர்வையும் உரிமைக்கான அரசியற் பயணத்தையும் மறந்து விட்டனர் என்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் புலம்பத்தொடங்கி விட்டனர். தாங்க முடியாமற் துயரத்தைப் பகிர்கின்றனர். சிலர் இதற்கும் மேலே சென்று சனங்களைத் திட்டித் தீர்க்கின்றனர். எந்த வகையான உத்தரவாதத்தின் அடிப்படையில் NPP க்கான ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கலாம் என்று சிலர் கேட்கின்றனர். இதுவரையில் NPP யோ JVP யோ தமிழ்மக்களுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்றும் கேட்கிறார்கள்.
சனங்களைத் திட்டுவதற்கான உரிமையும் தார்மீக அடிப்படையும் யாருக்கும் இல்லை. சனங்கள் இவ்வளவு காலமும் பிராந்திய அரசியலை மேற்கொண்ட தலைவர்களின் கருத்துகளையும் அந்தக் கட்சிகளின் அரசியலையும் ஏற்றே நின்றனர். ஏறக்குறைய 75 ஆண்டுகள். 75 ஆண்டுகள் என்பது ஆறு தலைமுறையின் இளமை அழிந்த காலமாகும். இதற்குள் தங்களுடைய இளமையை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உறவுகளையும் வாழிடங்களையும் வளமான சூழலையும் இழந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் காலத்தில் மக்களை விடப் பன்மடங்கு மேலான வாழ்க்கையையே தலைவர்கள் வாழ்ந்தனர். அதேவேளை மக்கள் தமது சக்தியையும் மீறி இவர்களுடைய தலைமையை, அரசியலை ஏற்று நின்றனர். அதற்காகப் பெருந்தியாகங்களைச் செய்தனர்.
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், தாம் எப்படி நடந்து கொண்டாலும் தமிழ்த்தேசியத்தின் பேராலும் இன உணர்வினாலும் அதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வர் என்ற திமிரோடிருருந்தனர். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டே இந்தத் தேர்தலில் கூட இந்தக் களைக் கூத்தாடிகள் கூத்தாடினர்.
இதைக் குறித்தெல்லாம் அதாவது இந்தத் தவறுகளைக் குறித்தெல்லாம் இவர்களில் எவரும் கவலைப்படவில்லை. இவர்களை ஆதரித்தோரும் கண்டு கொள்ளவில்லை, கண்டிக்கவில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் தாம் எப்படி, எதைச் செய்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மக்கள் மந்தைகளாகவே இருப்பர். அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாகும்.
ஆனால் மக்களோ வரலாறோ ஒரு போதும் அப்படியே இருப்பதில்லை. அதுவே இப்போது நிகழ்ந்திருப்பதாகும். தென்னிலங்கையிலுள்ள மக்கள் விரோதச் சக்திகளுக்கு நடந்ததே வடக்குக் கிழக்குப் பிராந்தியத்திலும் நடந்திருக்கிறது. ஏறக்குறைய இதே காட்சிகள் மலையகத்திலும் முஸ்லிம் பிராயத்தியத்திலும் நடந்திருக்கிறது; சிற்சில வேறுபாடுகளுடன்.
பிராந்திய அரசியலினதும் அதை மேற்கொண்டு வந்த அரசியற் கட்சிகளின் தவறுகளுக்கான கூட்டுத் தண்டனையாகவே தற்போதைய தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. இது கூடச் சடுதியாக ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு முன் கடந்த தேர்தல்களின் போதே இந்த வீழ்ச்சியை – மாற்றத்தை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த தேர்தல்களில் யாழ்ப்பாணத்தில் டக்களஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் ராமநாதன் போன்றோரும் கிழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் போன்றோரும் இதற்கான அடையாளங்களாகும்.
அதைக்கூட இந்தத் தலைமைகள் எதுவும் கணக்கிற் கொண்டு திருந்திக் கொள்ளவில்லை. விளைவு இப்போது ஒட்டு மொத்தமாக ஒரு பாரிய வீழ்ச்சியையும் மாற்றத்தையும் சந்திக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.
ஆக பிராந்திய அரசியலைப் பலவீனப்படுத்தியதில் முக்கியமான பங்கு அந்த அந்த அரசியற் குறைபாட்டுக்கும் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தியோருக்கும் அதை மேற்கொண்டோருக்குமே உரியது. பழியை பிறரின் மீது போட்டுத் தப்பி விட முடியாது.
இப்போது நிலைமை கையை மீறி விட்டது.
இது பிராந்திய அரசியலைக் கடந்த தேசியவாத அரசியலின் காலம். மக்கள் இலங்கை முழுவதற்குமான பொதுப்பிரச்சினைகளில் ஒன்றிணையத் தொடங்கி விட்டனர். அவர்களை நேரடியாகத் தாக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல், அதிகார துஸ்பிரயோகம், சூழல் பாதுகாப்பு, சமத்துவமின்மை, பன்மைத்துவத்துக்கான இடம், வேலை வாய்ப்பு போன்றவற்றையே தமது அரசியற் பரப்பாகக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதனால் அதற்குரிய அரசியலையும் அரசியற் தரப்பையும் அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இதிற் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ஒன்று உள்ளது – அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய புதிய தலைமுறை உருவாகி விட்டது. அதனுடைய உணர்நிலைகளும் பிரச்சினைகளும் வேறானவை. அந்தத் தலைமுறை முதல் தலைமுறையினரைப்போலவே சிந்திக்கும் என்றில்லை.
ஆகவே இந்தப் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட தரப்பு (NPP) அதற்கான உத்தரவாதத்தோடு நடந்து கொள்ளுமா? அவர்களுடைய தேவைகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படும்? அவர்களுடைய பிரச்சினைகள் எவ்வளவுக்குத் தீர்த்து வைக்கப்படும் என்பதைச் சில ஆண்டுகள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
புதிய ஆட்சித் தரப்பு இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதது. ஆட்சியதிகாரத்துக்கு வெளியே இருந்து அதிகாரத் தரப்பின் தவறுகளையும் ஆட்சிக்குறைபாடுகளையும் கண்டு, விமர்சித்து வந்தது.
அதனால் தன்னுடைய ஆட்சியையும் தான் பெற்றுள்ள அதிகாரத்தையும் முடிந்த வரையில் அது மிகப் பொறுப்புடன் நிர்வகிக்கும் என நம்பமுடியும். ஆனாலும் அதனுடைய ஆட்சி எவ்வாறு அமையும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், அவர்கள் (NPP) வந்த வழிகளின் சுவட்டைக் கொண்டு மதிப்பிடும்போது, மக்களுக்கான ஒரு நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதில் கூடுதலான அக்கறை கொள்ளப்படும் என நம்பலாம்.
இந்த நம்பிக்கை வெற்றியளிக்குமானால், பிராந்திய அரசியல் முடிவுக்கு வந்து விடும். அதாவது, தற்போது உருவாகியிருக்கும் தேசிய அரசியலே மேலும் வலுப்பெறும். குறுந்தேசிய அரசியல் இல்லாதொழியும்.
எந்த வழியிலாயினும் மக்கள் மீட்சியடைவதே அரசியற் சிறப்பாகும்.