“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 55)

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 55)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

      — செங்கதிரோன் —

 மட்டக்களப்பையடைந்து, அன்று மாலை 6.00 மணியளவில் கோகுலன் மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள அவனது மனைவியின் வீட்டில் நின்றிருந்தான்.

 இரண்டு ‘ஜீப்பில்’ இராணுவ வீரர்கள் வந்து வீட்டடியில் இறங்கிக் கோகுலனின் மனைவியின் தாயாருடன் ஏதோ ‘கேற்’ றடியில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோகுலன் என்ன விடயமென்று அறிய அருகில் சென்றபோது மனைவியின் தாயார் கோகுலனின் பக்கம் திரும்பி “உங்களத்தான் கேட்கிறாங்க” என்றார்.

 ஏதோ என்னவோ என்று சிந்தித்தவாறு முகக்குறிப்புக்கள் எதனையும் காட்டிக் கொள்ளாது சிங்களத்திலேயே ” மொகக்த வெதகத்” (என்ன விடயம்) எனக் கேட்டான் கோகுலன்.

 “மட்டக்களப்புவ டிஸ்திரிக் அமத்தியத்துமா ஒபவ ஹதிசியெ ஹந்தவய்” 

 (மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர் உங்களை அவசரமாகக் கூட்டி வரட்டாம்) என்றார் அவர்களிடையே நின்றிருந்த ஓர் இராணுவ அதிகாரி. அவர் வந்திருந்த இராணுவ வீரர்களின் மேலதிகாரியாக இருக்க வேண்டும்.

 உடன் உள்ளே சென்று உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அவர்களுடன் அவர்களுடைய வாகனத்திலேறி கனகரட்ணத்தின் கல்லடியிலுள்ள அவரது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்குச் சென்றான். அவருடைய வாசஸ்தலத்திற்கு அருகில்தான் கல்லடி இராணுவமுகாம் இருந்தது. 

 கோகுலனைக் கண்டதும் மண்டபத்தில் நின்றிருந்த கனகரட்ணம் “தம்பி! வா. இரு” என்று விட்டு அவரும் அங்கு போடப்படடிருந்த ‘செற்றி’ யில் அமர்ந்து கொண்டார்.

 “தம்பி! இண்டைக்கு மத்தியானந்தான் பொத்துவிலிலிருந்து வெளிக்கிட்டு மட்டக்களப்புக்கு வந்த நான். வரும்போது கோமாரிக் ‘குவாட்டஸ்’ இல உன்ன விசாரிச்சன். நீ மட்டக்களப்புக்குப் போய்விட்டதாகச் செய்தி கிடைச்சிது. பொத்துவில் ‘இரிக்கேசன் சேர்கியூட் பங்களாவில’ தான் தங்கி நிண்டநான். இண்டைக்குக் காலம பொத்துவில் ‘பொலிஸ் ஓ.ஜ.சி’ என்னிட்ட அங்க வந்து உன்ர பெயரச் சொல்லி சில விசயங்களச் சொன்னான். அதுதான் உன்ன அவசரமாகக் கூப்பிட்டனான்” என்றார்.

 “அப்பிடி என்ன விசயங்கள்?” என்று ஆவல் ததும்பக் கேட்டான் கோகுலன்.

 கனகரட்ணம் கூறிய விடயங்கள் இவைதான்.

 கோகுலன் தமிழ்த் தீவிரவாத இளைஞர் இயக்கங்களுடன் தொடர்புடையவனாம். இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்துப் படகுகள் மூலம் உமிரிக் கடற்கரையிலிருந்து இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்புகிறானாம். உமிரிக் கடற்கரையில் ஆச்சிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகள் ஆற்றி வருகின்ற ‘ஹரேராமாஹரே கிருஷ்ணா’ அமைப்புடன் கோகுலன் தொடர்புடையவனாம். அவர்களுக்கும்கூடத் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதாம். அண்மையில் உமிரிக் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் கோகுலனும் உள்ளானாம். தஞ்சை நகரிலிருந்து வந்த தமிழ் அகதிகளைச் சங்கமன் கண்டியில் குடியமர்த்தியதும் கோகுலன்தானாம். இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லிக் கனகரட்ணத்தை அவரது பாதுகாப்பு விடயமாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறிக், கோகுலனின் நடமாட்டங்களைப் பொலிஸ் அவதானித்து வருவதாகவும் அவசியமேற்பட்டால் கோகுலனைப் பொலிஸ் கைது செய்யுமாம்.

 இப்படிப் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான சிங்களவர் தன்னிடம் வந்து கூறிய விடயங்களையெல்லாம் விலாவாரியாகக் கோகுலனிடம் சொன்ன கனகரட்ணம் சொல்லி முடித்தபின், “தம்பி பயப்படாத. நான் இருக்கு மட்டும் ஒன்றும் நடக்காது. என்ன மீறிப் பொலிஸ் உன்னில கைவைக்காது. உன்ன நான் அவசரமாக் கூப்பிட்டு அனுப்பினது உன்னக் கவனமாக இரிக்கும்படி சொல்லத்தான். கொஞ்ச நாளைக்கு நீ சங்கமன்கண்டியில குடியமர்த்தியிருக்கிற தஞ்சைநகர் அகதிகளைப் பார்க்கப் போகாத. எனக்கு உன்னப்பத்தி எல்லாம் தெரியும்தானே. யாரோ உன்னில எரிச்சல் புடிச்சவன் மூட்டியிருப்பான். உன்னக் கூட்டிவர இராணுவத்த வேண்டுமெண்டுதான் அனுப்பினநான். நீ என்ர ஆள்-அரசாங்கத்தின் பக்கம் நிற்கிற ஆள்-எண்டமாதிரி ‘ஆமிக்கு’ விளங்கவேணும். அது உனக்குப் பாதுகாப்புத்தானே. அதுதான் அவங்கள அனுப்பினநான்” என்றார்.

 கனகரட்ணம் கூறியவற்றையெல்லாம் கவனமாக உள்வாங்கிய கோகுலன் அன்று பகல் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோமாரிக்குத் தன்னைத் தேடிவந்து விசாரித்துக் ‘குவாட்டஸ்’ காவலாளியிடம் விட்டுச் சென்ற தகவலை அவரது கவனத்திற்குக் கொணர்ந்தான்.

  “தம்பி யோசியாத. பொத்துவில் பொலிஸ் ஓ.ஜ.சி. யிட்ட உன்னப் பற்றிச் சொல்லிட்டன். எதுக்கும் நான் ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலுக்குப் போறன். பொத்துவிலில உனக்குத் தெரியும்தானே ‘இரிக்கேசன் சேற்குயிற் பங்களா’ விலதான் தங்கி நிற்பன். நான் பொத்துவில நிற்கிற நாளையில பாதுகாப்புக் கடமைக்கு எண்டு நான் தங்கி நிற்கிற இடத்துக்கு ஓ.ஜ.சி வாறவன். திங்கட்கிழம அவன் பொத்துவில் ‘இரிக்கேசன் சேக்கிற் பங்களா’வுக்கு வருவான். காலையில ஒரு பதினொரு மணிபோல நீயும் அங்கு வா. அங்க வச்சிப் பிரச்சினயத் தீர்த்திடுவம்” என்ற கனகரட்ணம், இராணுவ அதிகாரியைக் கூப்பிட்டு கோகுலனைத் திரும்பக் கொண்டுபோய் முகத்துவாரம் வீட்டில் விடும்படி பணித்தார்.

 இராணுவ ‘ஜீப்’ பில் தன் மனைவியின் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் கோகுலன் முன்பு நடந்த சம்பவங்களை அசை போட்டான்.

 இந்த ஆண்டு யூலை மாதம் உகந்தை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின்போது கனகரட்ணம் உகந்தையில் வந்து தங்கியிருந்தார். கோகுலனை அங்குவந்து சந்திக்கும்படி அவசரச் செய்தியொன்றைக் கோமாரிக்கு அனுப்பியிருந்தார். கோகுலன் அங்கு சென்றிருந்தபோது ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ அமைப்பைச் சேர்ந்த காவியுடை தரித்த ஒருவர் கனகரட்ணத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவரைக் கோகுலனுக்கு அறிமுகம் செய்து வைத்த கனகரட்ணம் “தம்பி! இவங்களுக்கு அம்பாறை மாவட்டத்துக் கரையோரத்தில ஆச்சிரமம் அமைக்க அரச காணியொண்ட என்னிட்டக் கேட்டு வந்திரிக்காங்கள். இவங்களுக்கு நல்லதொரு இடத்தக் காட்டு” என்றார்.

 இதன்படி கோகுலன் ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ ஆட்களைக் கூட்டிச் சென்று அவர்கள் ஆச்சிரமம் அமைக்கக் காட்டிய இடம்தான் உமிரிக் கடற்கரையோரம். அவர்கள் அங்கு வந்து உமிரியிலிருந்து ஆரம்பித்து கோமாரியை நோக்கி ‘திமிட்டா’ த் தென்னந்தோட்டம்வரை கடற்கரையோரமாகப் படர்ந்திருந்த பற்றைக் காடுகளை வெட்டித் துப்பரவு செய்து தென்னங்கன்றுகளை நட்டு துப்பரவு செய்திருந்த பூமியின் நடுவில் காட்டுக்கம்புகளாலும் தென்னங்கிடுகளாலும் பெரிய கொட்டில் அமைத்து ‘ஆச்சிரமம்’ அமைத்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்கு பஜனையுடன் பூஜை பெரிதாக நடக்கும். உள்ளூர்வாசிகள் சிலருடன் தஞ்சைநகரிலிருந்து வந்து சங்கமன்கண்டி – உமிரி வீதியில் குடியேறிய மக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் உமிரியில் நடக்கும் பஜனை, பூசைகளில் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டுச் செல்வர்.

 ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ அமைப்பின் ஆச்சிரமம் அமைப்பதற்குக் கோகுலன் உமிரிக் கடற்கரையோரத்தைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணமொன்றிருந்தது.

 ஓரிரு வருடங்களாக இலங்கையின் வடமேல் மாகாணத்திலுள்ள வென்னப்புவ எனும் கிராமத்திலிருந்து சிங்கள மீனவர்கள் உமிரிக் கடற்கரைக்கு வந்து பருவகாலங்களில் மீன் பிடித்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தற்காலிகக் கொட்டில்கள் அமைத்துத் தங்கிச் செல்வர். திருக்கோவில் கத்தோலிக்க தேவாலயத்தில் குருவாயிருந்த பாதர் சொய்சா என்பவர் இச்சிங்கள மீனவர்களுக்கு உதவிகள் செய்பவர். அவரும் வென்னப்புவக் கிராமத்தைச் சேர்ந்தவராகவும் இச்சிங்கள மீனவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தமை இதற்குக் காரணமாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தனா அரசாங்கத்தில் மீன்பிடி அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டிருந்தவரான பெஸ்டஸ் பெரேராவும் வென்னப்புவைச் சேர்ந்தவரே. பாதர் சொய்சா அவர்கள் உமிரியில் வந்து பருவகாலங்களில் தற்காலிகக் கொட்டில்கள் அமைத்துத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த வென்னப்புவக் கத்தோலிக்கச் சிங்களவர்களை அங்கு வீட்டுத் திட்டமொன்றை அமைத்து நிந்தரமாகக் குடியேற்றும் எண்ணத்தைக் கொண்டு அதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டிருந்தது கோகுலனுக்குத் தெரிந்திருந்தது. பாதர் சொய்சா கோகுலனுக்கு நண்பரும்கூட. தஞ்சை நகரிலிருந்து வந்து சங்கமன் கண்டியில் குடியேறிய மக்களுக்குச் சில வாழ்வாதார வசதிகளுக்குப் பாதர் சொய்சா ‘எகெட்’ நிறுவனத்தின் மூலம் உதவியுமிருந்தார்.

 உமிரிக்கடற்கரையோரம் ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ அமைப்பினர் ஆச்சிரமம் அமைத்துவிட்டால். அங்கு வென்னப்புவ சிங்கள மீனவர்களை நிரந்தரமாகக் குடியேற்றும் பாதர் சொய்சாவின் எண்ணத்தைத் தானாகவே கைவிடச் செய்துவிடலாம் என்பதே கோகுலன் வகுத்த தந்திரோபாயமாகவிருந்தது.

 ஆனால், துரதிஸ்டவசமாக வென்னப்புவச் சிங்களவர்கள் உமிரிக்குவந்து மீன்பிடித்துச் செல்வதை விரும்பாத உள்ளூர்வாசியொருவர் ஒருநாள் இரவு சிங்களவர்கள் தங்கியிருக்கும் தற்காலிக கொட்டிலை நோக்கிச் சுட்டதில் மீன்பிடி வாடிக்குள் இருந்த உள்ளூர்முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டார். கோகுலன் அந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதே தவிர அதுபற்றி எதுவும் அவனுக்குத் தெரியாது. அந்தத் துவக்குச் சூட்டுச் சம்பவத்தின் பின் சிங்களவர்கள் அங்கு மீன் பிடிக்க வருவதை நிறுத்திக் கொண்டார்கள்.

 ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா’ அமைப்பினரும் சொல்லிக் கொள்ளாமலே தங்கள் ஆச்சிரமத்தைக் கைவிட்டுப் படிப்படியாக அகன்று கொண்டிருந்தார்கள். கோகுலனும் இவைபற்றி அமைதியாக இருந்துவிட்டான். அதே வேளை இந்தத் துவக்குச் சூட்டை மேற்கொண்டவர் எனச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஒரு தமிழரைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கும் போய்க் கொண்டிருந்தது. 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரைக் கோகுலனுக்கு நன்கு தெரியும். அவர் தாண்டியடிக்குளம் வட்டவிதானையின் மகன். தாண்டிக்குளம் புனரமைப்பு வேலைகள் கோகுலனின் பொறுப்பிலேயே நிறைவேறின. அப்போதிருந்தே வட்டவிதானையின் மகனைத் தெரியும். மட்டுமல்லாமல் தஞ்சை நகர் அகதிகளைச் சங்கமன்கண்டியில் குடியேற்றியதில் அவர் தானாகவே முன்வந்து சரீர உதவிகள் பல செய்திருந்தார். அதனால் வழக்கை எதிர்கொண்டுள்ள அவருக்கு உதவவேண்டுமென்று எண்ணிய கோகுலன் அமிர்தலிங்கத்திடம் சொல்லி சட்டத்தரணி அஸ்ரப்பை அமர்த்தியிருந்தான். ஆனாலும் அஸ்ரப்புக்குக் கட்டணம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான பணவசதி தாண்டிக்குள வட்டவிதானையிடமோ அல்லது அவருடைய மகனிடமோ இல்லை. அதனால் வழக்குக்கான சட்டத்தரணி கட்டணத்தைக் கோகுலனே ஏற்றிருந்தான். இத்தகையதொரு பின்புலத்தில்தான் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கனகரட்ணத்தைப் பொத்துவில் ‘இரிக்கேசன் குவாட்டஸ்’ சில் சந்தித்துக் கோகுலனைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

 மற்றப்படி தீவிரவாதத் தமிழ் இயக்கங்களுக்காக ஆள்சேர்த்து இந்தியாவுக்கு அனுப்புவது என்பது வெறும் கட்டுக் கதையே தவிர கோகுலனுக்கு அதுபற்றி எதுவுமே தெரியவும் மாட்டாது; தொடர்பும் இல்லை.

 உமிரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் சில நாட்கள் கடந்தபின் உள்ளூர்த் தமிழரான தாண்டியடிக்குள வட்ட விதானையின் மகனைப் பொலிசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து வழக்கு போட்டிருந்தாலும்கூட அவன் அதனை உண்மையில் செய்தானா? என்பது பற்றிக் கோகுலனுக்குத் தெரியாது. அவன் வசதியான குடும்பத்தைச் சேர்தவனல்ல என்பதாலும் அவனுடைய தந்தை வந்து தன்மகனுக்கு உதவும்படி கோகுலனைக் கேட்டிருந்தமையினாலுமே வழக்கில் அவன் விடுதலையாகி வெளியில் வருவதற்குப் பண உதவி செய்துகொண்டிருந்தான் கோகுலன்.

 இவைகளையும் தஞ்சைநகர் அகதிகளைச் சங்கமன்கண்டியில் முன்னின்று குடியமர்த்தியது கோகுலன் என்பதையும் தமிழர்களுடைய விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபாட்டுடன் இயங்கியதையும் சேர்த்துத்தான் கோகுலன்மீது காழ்ப்புக்கொண்ட யாரோ ஒருவர் இவ்வாறானதொரு கதையைப் பின்னிப் பொத்துவில் ‘பொலிஸ்’சுக்குச் சொல்லியிருக்க வேண்டுமென்று கோகுலனின் உள்மனம் ஊகித்துக்கொண்டது.

 ஆனால், இந்த விடயங்கள் பற்றி வேறு எவரிடமும் எதுவும் கூறுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்தான். ஆனை அடிக்க முதல் தானே அடித்துக் கொண்டு சாகக்கூடாது என்று நினைப்பவன் கோகுலன். கனகரட்ணத்தின் அறிவுரைப்படி எச்சரிக்கையாகவே நடந்து கொள்ள வேண்டுமென்றும் எண்ணினான். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியாதல்லவா?

 இந்த நினைவோட்டங்களினூடே பயணித்து இராணுவ வாகனத்தில் தனது மனைவியின் வீடுவந்து இறங்கினான் கோகுலன்.

 தன்னைச் சுற்றி ஒரு ‘சதிவலை’ பின்னப்படுகிறதென்று கோகுலனுடைய உள்மனம் அவனை எச்சரிக்கை செய்தது. என்றாலும் பயப்படக்கூடும் என்பதால் விடயத்தைத் தன் மனைவியிடம் கூறுவதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொண்டான் கோகுலன்.

(தொடரும் …… அங்கம் – 56)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *