குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலைபோல் வடக்கு, கிழக்கு வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் வேட்பாளர்கள்.(பொதுத் தேர்தல் திருவிழா – 2024)

குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலைபோல் வடக்கு, கிழக்கு வாக்குகளை சிதறடிக்கும் தமிழ் வேட்பாளர்கள்.(பொதுத் தேர்தல் திருவிழா – 2024)

  — சின்னத்தம்பி குருபரன் —

சிறு பிள்ளைகளுக்கு பஞ்சு  மிட்டாய் வாங்கிக் கொடுப்பது போல் ஆகிவிட்டது அண்மைக்காலத் தேர்தல் நிலவரங்கள். தேர்தல் திருவிழா இறுதிக் கட்டச் சூடு பிடித்திருக்கிறது. காற்றில் அடிபட்டுச் செல்லும் இலவம் பஞ்சு போல் வேட்பாளர்கள் மேடைகளிலும் ஊடகங்களிலும் வாக்குறுதிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். கட்சிகளின் நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது போல் ஆகிவிட்டது. பல கடசிகளை ஆட்சியாளர்கள் பிரித்தனர். சில கட்சிகளை வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததனால் கட்டறுந்து சீர்குலைந்து பல துண்டங்களாகிக் கிடக்கின்றன. அதனால் வாக்குச் சீட்டு இரண்டு அடி நீழத்தையும் தாண்டிவிட்டது. 

இத்தனைக்கும் காரணமானவர்கள் ஜவ்வாது பூசி, முகமூடியும் தரித்துக் கொண்டு வாக்குக் கேட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது. வாக்காளப் பெருமக்கள் முன்புபோல் இல்லை.மாறிவிட்டார்கள். வேட்பாளர்களைப் பார்த்துக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் தைரியமும் பலரிடம் வந்திருப்பது சாதகமான சமிக்சையாகும். இந்த மாற்றம் 2022 அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டதாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றைய நிலவரப்படி வாக்காளர்களில் பெரும்பாலானோர் யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவு இல்லாமலே இருக்கின்றனர். நீண்டு கிடக்கும் வாக்குச் சீட்டிலுள்ள கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் மக்களால் அங்கீகரிக்கப்படாத ஊழல் பேர்வழிகள். புதிதாகத் தோன்றியிருக்கும் பல கட்சிகளும் அதன் வேட்பாளர்கள் பலரும் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மக்களால்  நிராகரிக்கப்பட்டவர்கள். இன்னும் சிலர் தான் சார்ந்த கிராமம், பிரதேசம், சமூகத்தில் நல்ல பெயர் எடுக்காதவர்கள். இவர்களைப் பார்த்து “ஐயோ நிங்களுமா தேர்தலில் குதித்திருக்கிறீர்கள்” என வேடிக்கையாக் கேட்கும் அளவுக்குத் தேர்தல் களநிலவரம் காணப்படுகிறது. 

இப்பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பாக மக்களிடம் காணப்படும் ஐயம், ஐமிச்சம் பல வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்காமல் தடுத்துவிடுமோ என்ற அச்சமும் புத்திஜீவிகள் மத்தியில் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. 

வாக்காளர்கள் மத்தியில் எந்தக் கட்சிக்கு, எந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது. அவர்களில் பொருத்தமானவரைத் தெரிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என்றால் நமக்கு இரண்டு சந்தேகங்கள் எழுகின்றன. ஒன்று, வேட்பாளர்களில் ஒரு சிலரைத் தவிர தாம் வாக்களிப்பதற்குப் பொருத்தமானவர்கள் இல்லையே என்ற கவலை. சரி அந்த ஒரு சிலருக்காவது வாக்களிக்கச் சின்னத்துக்குப் புள்ளடியிட்டால் அது தேசியப் பட்டியல் மூலம் தவறானவர்களைத் தெரிவு செய்வதற்குக் காரணமாகி விடுமோ என்ற அச்சம். மற்றையது, 75 வருட காலமாக இவர்களுக்கு வாக்களித்து எதனைக் கண்டோம். எவற்றைச் சாதித்தார்கள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்தார்களா? அதுவும் இல்லை. அவர்கள் அரசிடம் இருந்து சகல சுகபோகங்களையும் பெற்றுத் தாமும் குடும்பமும் சந்தோசமாக வாழ்வதற்கா வாக்களிப்பது என்ற ஐயம். இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. இவை இரண்டும் பிரதான காரணிகளாகப் பொரும்பாலான மக்களால் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சிக் காலத்திலும், ரனில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோதும் வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கும் ரனிலுக்கும் ஆதரவு வழங்கிக் கொண்டு அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்த சகல வாய்ப்புக்கள், வசதிகள், வரப்பிரசாதங்கள், அவிபாகங்கள், பெட்டிகள், அனுமதிப் பத்திரங்கள், பினாமிகளுக்கான கொந்துராத்துக்கள் யாவற்றையும் பெற்று அனுபவித்தக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். இன்னும் சிலர் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்களைச் சூறையாடிச் சொத்துச் சேர்த்தனர். போதாதென்று காணிகளையும் வழைத்துப் போட்டனர். அவர்களின் அட்டகாசங்களைப் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் மக்களிடம் இவ்வகையான சந்தேகம் ஏற்பட்டிருப்பது நியாயமே.

வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த தினத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்களின் வண்டவாளங்களைக் கிளறிப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர்கள் செய்த தில்லுமுல்லுக்கள், ஊழல், மோசடிகள், ஏமாற்றுக்கள், அடுத்துக் கெடுத்தல்கள் எல்லாவற்றையும் பதிவேற்றி அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில வேட்பாளர்களின் இரகசியங்கள், பிறப்பு, குடும்பம், தனிப்பட்ட விடயங்கள், பரம்பரை சம்பந்தப்பட்ட விடயங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி ஆட்டங்காண வைத்துள்ளார்கள். வலத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கும் சில பதிவுகள் நாகரிகமற்றவையாகவும் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது சமூக வலைத்தளங்களை இவ்வாறான கேவலமான விடயங்களுக்கும் பயன்படுத்துவா்களா எனப் பலர் வியப்படைந்து நிற்கின்றனர். மறுபுறம் பொது வெளியலும் பிரச்சார மேடைகளிலும் வேட்பாளர்களே மற்றைய வேட்பாளர்களின் வண்டவாளங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தமது கட்சிக்குள் உள்ள வேட்பாளர்கள் பற்றித் தமக்கு நம்பிக்கையானவர்களைக் கொண்டு குழிபறித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இப்பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் 2500 பேருக்கு உட்பட்டவர்கள் போட்டியிட வேண்டி இருந்தும் களத்தில் 8888பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இதில் உண்மையான வேட்பாளர்கள் 1000 க்கும் உட்பட்வர்களே. ஏனையோர் தேசிய மக்கள் சக்தியினதும் சில பிரதான கட்சிகளின் வாக்குகளையும் சிதறடிப்பதற்காகவும் தெரிவாகும் ஆசனங்களைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டவர்கள் என்பது பெப்ரல் அமைப்பினரின் கருத்தாகும். பல மாவட்டங்களின் வாக்குச் சீட்டுக்கள் நீண்டு நிமிர்ந்து வியப்பூட்டும் வகையில் காணப்படுகின்றன. வாக்குச் சீட்டினைப் பார்க்கின்ற வாக்காளப் பெருமக்கள் வியப்படைந்து நிற்கப் போகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பேரைத் தெரிவு செய்வதற்காக 49 கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களிலும் இருந்து 392 பேர் போட்டியிடுகின்றனர் அப்படியென்றால் வாக்குச் சீட்டின் நீளம் எப்படி இருக்கும் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சிகளுக்கிடையேயும் கட்சிக்குள்ளும், வேட்பாளர்களுக்கிடையேயும் காணப்படும், வெட்டுக் கொத்துக்கள், குழிபறிப்புக்கள், நயவஞ்சகங்களும் நீண்டு கிடக்கும் வாக்குச் சீட்டும் வாக்குகளைச் சிதறடிக்கப் போகின்றன. தமிழ்த் தேசியம் பேசும் தலைமை வேட்பாளர்களில் ஒரு சிலர் தாம் தோற்கடிக்கப்பட்டாலும் தேசியப் பட்டியல் மூலமாவது பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்ற வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வாக்காளர்களில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் படிப்பு மற்றும் தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதுவும் வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.

சூறாவளி, இனக் கலவரங்கள், படுகொலைகள், யுத்தம், சுனாமி, வெள்ளம், கொரோனா என்பவற்றால் பாதிக்கப்பட்டுப் பலவற்றை இழந்து நிற்கதியாக நிற்கும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு வடக்கு, கிழக்கில் இத்தனை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தேவைதானா. தமக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நின்று, கூட்டுப் பலத்தை இழந்து எதனைச் சாதிக்கப் போகின்றார்கள். ‘கழுதை தேயந்து கட்டெறும்பாகிய’ அதிகாரமுள்ள மாகாண சபைகளைக் கூட ஒழுங்காக நடத்த முடியாதவர்கள். 

உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தோன்றிய ஆயுதக் குழுக்கள் போட்டி போட்டுக் கொண்டு இலட்சியத்தை மறந்து தமக்குள்ளே அடிபட்டார்கள். பின்னர் காட்டிக் கொடுத்து அழித்தார்கள். இப்போது பல கட்சிகளாகப் பிரிந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகிறார்கள். 

வாக்களிப்பதில் விடப்படும் தவறு ஐந்து வருடங்களுக்கு மாற்றமுடியாத தவறுகளாக அமைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொண்டு வாக்களித்து, மாவட்ட அபிவிருத்திக்கும், மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்ற பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்வது சிறந்ததாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *