தமிழர் கட்சிகளின் நிறம்

தமிழர் கட்சிகளின் நிறம்

 —- கருணாகரன் —

ஈழத் தமிழர்களின் அரசியல் இன்று பிரதானமாக மூன்று வகைப்பட்டதாக உள்ளது. ஒன்று, “தமிழ்த் தேசிய அரசியல்” என்ற பிரகடனத்தின் கீழ் அரச எதிர்ப்பு மற்றும் தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவதாகும். இதற்குத்தான் தமிழ்ப் பெருந்திரளினர் ஆதரவளிக்கின்றனர். இதனால் இந்தத் தரப்பே பாராளுமன்றத்திலும் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றிலும் முன்னிலையில் உள்ளது.

1980 – 2009 வரையில் இது ஆயுதப் போராட்ட அரசியலாக – செயற்பாட்டு அரசியலாக இருந்தது. 2009 க்குப் பின்னர், செயற்பாட்டுப் பாரம்பரியம் இல்லாதொழிந்து, பேச்சு அரசியலாக – அறிக்கை அரசியலாகச் சுருங்கி விட்டது.

அதனால்தான் இதை “தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவது” என்று குறிப்பிடுகிறோம். இந்தப் பண்பினால்தான் இந்தத் தரப்புக்குக் கடுமையான விமர்சனங்களும் உண்டு.

செயற்பாட்டுப் பாரம்பரியமொன்றிற் கூடாகப் பயணித்து வந்த மக்களுக்கு, அது இல்லாமற் போனது ஏமாற்றத்தை  அளிக்கிறது. ஆனாலும் அவர்கள் மனங்கசந்த நிலையிலும் இந்தப் பேச்சு அரசியலுக்கே ஆதரவளித்து வருகிறார்கள். அதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையின் போக்கில் நீங்கள் அறிய முடியும்.

மக்களுடைய கசப்பு, அதனால் எழுகின்ற விமர்சனங்கள் எல்லாம் இருந்தாலும் இந்த அரசியற் தரப்பினர் இவை குறித்துத் தம்மை மறுபார்வைக்குட்படுத்தவோ புதுப்பித்துக் கொள்ளவோ முயற்சிப்பதில்லை.

 இதனால் எழுந்த புற அழுத்தங்களாலும் உள்ளக முரண்பாடுகளாலும் இந்தத்  தரப்புப் பல அணிகளாகக் கடந்த பத்து ஆண்டுகளில் உடைந்து, துண்டு துண்டுகளாகியுள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள்.. என இந்தப் பட்டியல் நீள்கிறது.

ஆயுதப் போராட்ட – செயற்பாட்டு – ப் பாரம்பரியத்திற்கூடாக வந்தவர்களும் அதற்கு மறுதலையாகப் “பேச்சுப் பாராம்பரியத்திற்குள்” சிக்கி விட்டனர் என்ற கசப்பான அனுபவத்தையும் நாம் ஜீரணிக்க வேண்டியுள்ளது.

இதற்குள் ஏராளம் கவனிக்க வேண்டிய புள்ளிகளும் கோடுகளும் உள்ளன.

இந்தத் தமிழ்த் தமிழ்த்தேசிய அரசியலில் அரச எதிர்ப்பைக் காட்டும் அளவுக்கு இந்திய விசுவாசம் காண்பிக்கப்படுகிறது. அதாவது தமக்கு இந்தியாவுடன் நெருக்கம் உண்டெனக் காட்டப்படுகிறது. அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர்த்து ஏனையவை அனைத்தும் இந்திய விசுவாசத்தின் கீழ் உறைந்து போயுள்ளன. இவையே இலங்கை – இந்திய உடன்படிக்கையைக் குறித்தும் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருப்பன. இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவான 13 ஆவது திருத்தத்தைப் பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஈடுபாட்டுடன் இவை இருப்பதையும் காணலாம்.

இன்னொரு நிலையில் இவை அனைத்தும் “இந்தியா கை விட்டால் எப்படியும் சர்வதேச சமூகத்தின் (மேற்குலகின்) ஆதரவும் நீதியும் நியாயமும் கிடைத்து விடும்” என்று ஆழமாக நம்பிக் கொண்டிருப்பன. இதையே மக்களுக்கு அவை “விடுதலைக்கான ஒரே வழி”யாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவும் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களின் விடுதலையிலும் சரி, அவர்களுடைய அரசியலிலும் சரி ஒருபோதுமே நெருங்கி நின்றதும் இல்லை. தீர்வை முழுமையாகப் பெற்றுக் கொள்ள உதவப் போதுமில்லை. அதற்கான களச் சூழலும் சர்வதேச நிலைமையும் இப்போது வரைக்கும் இல்லை. இதுதான் உண்மை.

இல்லையென்றால் இந்தக் குட்டி இலங்கையில் இந்த இனப்பிரச்சினை இப்படித் தீர்க்கப்படாமல் இழுபட்டுக் கொண்டிருக்காது. ஆனால் இவை பிரச்சினை முற்றிப் போகாமல் இருக்கும் அளவுக்கு ஒரு இடைத் தலையீட்டையும் மறைமுக அழுத்தத்தையும் கொடுக்கின்றன. இவற்றின் பாத்திரமும் இதுவரையான வகிபாகமும் அப்படித்தானுள்ளது.

இதையெல்லாம் இந்தச் சக்திகளுக்குத் தெரியாது என்றில்லை. இருந்தாலும் இதை விட்டால் – இப்படிக் கதை விடுவதை விட்டால் இவற்றுக்கு வேறு கதியும் இல்லை. வேறு வழியும் இல்லை. என்பதால் இந்திய – சர்வதேச வித்தையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

 அதேவேளை இந்தத் தமிழ்த்தேசியவாதச் சக்திகள்  சமூக அசமத்துவத்தைப் பற்றியோ சமூக விடுதலையைப் பற்றியோ பேசுவதேயில்லை. மட்டுமல்ல தமிழ் மக்களின் பொருளாதாரம், அவர்களுடைய வாழ்க்கை நிலவரம் பற்றி ஒன்றுமே கதைப்பதில்லை. இது இவற்றின்  பெருங்குறைபாடாகும்.

இதனால் பெருந்தொகுதி மக்கள் தொடர்ந்தும் சாதி, மதம், பிரதேசவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். அத்துடன் மக்களுடைய பொருளாதார நிலையும் மோசமாகச் சரிவடைந்து சென்று கொண்டேயுள்ளது. இதற்கான மாற்றீடுகளும் எதிர்ப்பொறிமுறைகளும் இதுவரை காணப்படவில்லை. இது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இவை இதுவரையிலும் ஒரே புள்ளியில் தீர்வு பற்றியோ மக்களுக்கான அரசியற் பணிகள் பற்றியோ சிந்திப்பதற்கு இணையவில்லை. இதனால் தமிழ் மக்களுக்கான தீர்வு யோசனையை “13, 13 க்கு அப்பால், சமஸ்டி, இரு நாடு ஒரு தேசம்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு கோணத்தில் முன்வைத்துள்ளன.

இது மக்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குவதுடன், எதிர்த்தரப்பான அரசுக்கும் ஏனைய சக்திகளுக்கும் வசதியாக உள்ளது. இப்படிப் பல நிலைப்பாடுகளை முன்வைத்தால் நாம் எத்தகைய தீர்வை வழங்குவது என்று சாட்டுச் சொல்வது அரசுக்கு வாய்ப்பாகும். ஏற்கனவே தீர்வைத் தர விரும்பாத அரசுக்கு இது நல்வாய்ப்பை வழங்கி விடுகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

இரண்டாவது, அரசாங்கத்தின் மீது உள்ளார்ந்த விமர்சனங்கள், எதிர்ப்புணர்வு இருக்கும்போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அதனுடன் இணைந்து (கரைந்து)  செயற்படும் தரப்பாகும். இவையும் ஒரு காலகட்டத்தில் அரசை எதிர்த்துப் போராடியவைதான். ஏன் ஆயுதப் போராட்ட அரசியலின் வழியாக வந்தவையும்தான். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போன்றவை இதற்கு உதாரணம். எப்படியோ இன்று இவை அரசுடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்துக்குள் கரையத் தொடங்கி  விட்டன.  தமது வழியை இவை இணக்க அரசியல் என்று குறிப்பிடுகின்றன.

“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று இவை சொன்னாலும் பிரதேச சபையில் கூட சுயத்தன்மையைப் பேண முடியாத நிலையில் மத்தியினால் கட்டுப்பட்டிருப்பவை. இவை தமது வழிமுறையை அல்லது சாதனையை “அபிவிருத்தி” என்று சொல்லிக் கொண்டாலும் சரி, “அபிவிருத்தி அரசியலை” மேற்கொண்டாலும் சரி, இவற்றினால் எந்த எல்லைகளையும் தனித்துவமாகத் தொட முடியவில்லை.

ஆனால், அரச எதிர்ப்புத் தரப்பை விடவும் ஒப்பீட்டளவில் மக்களுக்கான தேவைகள், மக்கள் நலன்சார் நடவடிக்கைகள் என்ற வகையில் சில முன்னேற்றகரமான பங்களிப்புகளைச் செய்திருப்பவை என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதைத் தவிர அரசியல் ரீதியாக  இவற்றினால் மக்களுக்கும் சரி, தமக்கும் சரி எந்த முழு வெற்றியையும் பெற முடியாதிருப்பவை.

இவை சர்வதேச சமூகத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொள்வதுமில்லை. அதைப்பற்றி அக்கறைப் படுவதுமில்லை. ஆனால் இந்தியாவை தமது  நெருங்கிய சகாவாகப் பார்க்கின்றன. அல்லது இந்தியாவை விமர்சிப்பதைத் தவிர்க்கின்றன. அத்துடன் இலங்கை இந்திய உடன்படிக்கையையும் 13 ஆவது திருத்தத்தையும் அதற்கும் மேலான தீர்வையும் யாசிப்பவை.

ஆனாலும் இவற்றினாலும் ஒரு போதும் தாம் குறிப்பிடும் எல்லைகளைக் கூட தொட முடியாது. வேண்டுமானால் இருக்கும் காலம் வரையிலும் ஒன்றிரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெறவும் முடியாது. தனித்துவமாக இயங்கவும் முடியாது.

அடுத்த தரப்பு இந்திய எதிர்ப்புடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பது. இதற்கு உதாரணம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற திரையில் மறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்க்காங்கிரஸாகும். இது சற்றுத் தீவிரமானது. இவற்றுக்கும் சமூக அரசியல் பொருளாதாரப் பார்வை இல்லை. முற்றிலும் உணர்ச்சிரமான அதி தீவிர அரசியலை முன்னெடுப்பவை. இவற்றுக்குப்  பெரிய அளவில் மக்கள் ஆதவில்லை என்றாலும் குறிப்பிட்டளவு இளைய தலைமுறையினரிடத்தில் இந்தத் தரப்புச் செல்வாக்குப் பெற்றுள்ளது.

அடுத்த தரப்பு மூன்றாவது. இது தமிழ் அரசியலில் புதிய முகமாக, அரசுடன் இணைந்து கொள்ளாமல் (சரணடைந்து விடாமல் அல்லது கரைந்து போகாமல்)  அதற்கு வெளியே நின்று ஆதரிக்க வேண்டிய புள்ளிகளில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்த்தும் தமது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் தரப்பாகும். இதற்கு மக்கள் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஆனால் இந்தத் தரப்பு அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அணுக முற்படுவது. ஜனநாயகத்தைத் தன்னுடைய அடிச்சட்டகமாகக் கொண்டது. இனவாதத்தை முற்றாகவே நிராகரிப்பது. அதேவேளை பால் சமத்துவம், பிரதேச சமத்துவம், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்த  அரசியல் தளத்தையும் அரசியல் உறவையும் கட்டமைக்க விளைவது. இந்தத் தரப்பு எழுச்சியடைய வேண்டும்.

இதற்கு உடனடியாக மக்கள் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. ஆனால் இந்தத் தரப்பு எதையும் அறிவுபூர்வமாக அணுக முற்படுவதாக இருக்கும். அதுதான் இதன் பலமாகும். அத்துடன் மக்களுடன் மிக நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பி, மக்களைப் புதிதாகச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அவர்களிடம் வரலாற்றுண்மைகளை எடுத்துரைத்தும், உலக அரசியலை விளக்கியும், தர்க்கித்தும், யதார்த்த நிலைகளை உணர வைத்தும் இந்த உறவைப் பலப்படுத்த வேண்டும். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளித்து, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வை விரைந்து காண வேண்டும். பிராந்திய, சர்வதேச அரசியலுறவைக் கட்டியெழுப்பவும் கையாளவும் வேண்டும். இதெல்லாம் கடினமானது, சவாலானதுதான். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இதுவரையான அரசியலில் இருந்து விலகி, வேறுபட்டு, ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க விளையும் தரப்பாக இது இருக்க வேண்டும். அதாவது போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics), தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் சமூகங்களுக்கும் ஏன், முழு இலங்கைக்கும் தேவையான – புதிய எதிர்காலத்துக்கான அரசியலை, மக்கள் அரசியலை, அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புவதாக இது இருக்கும்.

இது இனவாத அரசியலுக்கு – இனவெறுப்புக்கும் இனவொறுப்புக்கும் – முற்றிலும் எதிரானது. அதற்காக முன்னர் இடதுசாரிகள் பேசிய – முன்னெடுத்த வைதீக அரசியலாக இல்லாமல், விடுதலைக்கான அரசியலாக இருக்கும்.

இப்படியான அரசியலை முன்னெடுக்கும்போதுதான் புதிய அரசியலின் முகத்தையும் அதன் அக – புறப் பண்பாட்டையும் உலக அரங்கில் முன்வைக்க முடியும். மட்டுமல்ல, மக்களுக்கும் புதிய ஒன்றை வழங்க முடியும். அந்தப் புதியது மக்களுக்குப் பயனுள்ளதாகவே இருக்கும்.

ஆனால், இத்தகைய அரசியலை முன்னெடுப்பதற்கு உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏகப்பட்ட சவால்களும் நெருக்கடிகளும் இருக்கும். அவற்றை மதிநுட்பத்தினாலும் அர்ப்பணிப்பான செயற்பாட்டினாலும்தான் வென்றெடுக்க வேண்டும்.

அரசியல் என்பது அறிவியல்துறை. அரசியல் என்பது முழுச் செயற்பாட்டுக்குரியது. அரசியல் என்பது வளர்ந்து செல்லும் பண்பாடு. அரசியல் என்பது வெற்றி தோல்விகளில் படிக்கும் பாடத்தின் அடிப்படையில் முன்னேறிச் செல்வது. அரசியல் என்பது கட்சிகளுக்கோ தலைவர்களுக்கோ இல்லாது, மக்களுக்கானது. அரசியல் என்பது, விருப்பங்களையும் நடைமுறைகளையும் இணைத்துச் செல்வது. அரசியல் என்பது, சத்தியமானது. இத்தகைய புரிதலோடும் அறிவொழுக்கத்தோடும் இதை முன்னெடுக்க வேண்டும்.

அதாவது, இலங்கையின் பின்னடைவுகளிலிருந்து இலங்கையை மீட்கக் கூடிய அரசியல் இது. இலங்கைச் சமூகங்களின் பிளவுகளிலிருந்தும் காப்பாற்றி ஒருங்கிணைவை வழங்கக் கூடியது. ஒவ்வொரு சமூகத்தையும் அதன் சுயம், அடையாளம் – தனித்துவம், முன்னேற்றம், சமநிலை ஆகியவற்றில் நிறைவாகத் தக்க வைப்பது.

அப்படியென்றால் இந்த அடிப்படையில் சிந்திக்கக் கூடிய தரப்பை மக்கள் தேர்ந்து ஆதரிக்க வேண்டுமே!

நிச்சயமாக இந்தக் கேள்வி நியாயமானதே.

ஆனால் துரதிருஸ்டவசமாக மக்கள் அவர்களை அறியாமல் இனவாதத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளனர். என்பதால் அவர்களால் அதைக் கடந்து சிந்திக்க முடியாது.

உண்மை எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் அறிவு குருடாகி விட்டால் அதைக் கண்டுணர முடியாது. இது மிகத் துயரமான நிலையே.

இதில் இன்னும் துயரமானது படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கும் அளவுக்கு அவர்களும் இனவாத நரம்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிக மலிவான, ஒரு கறிக்குப் பயன்படும் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கும்போது கூட அதன் தரத்தைக் கவனமாகப் பரிசீலிப்பார்கள். ஒரு கீரைப்பிடியை வாங்க வேணும் என்றால் கூட அது வாடியிருக்கிறதா? இலைகள் கெட்டிருக்கின்றவா, நன்றாக உள்ளனவா? முற்றியிருக்கிறதா? என்றெல்லாம் மிகக் கவனமாக ஆராய்வார்கள்.

அப்படி மிகச் சிறிய பொருட்களில் தொடங்கி காணி வாங்குவது, கார் வாங்குவது, திருமண உறவுகளைத் தேர்வது, சீட்டுப்பிடிக்கும்போது கூட நம்பிக்கையானரா என்பது வரை எல்லாவற்றிலும் தரத்தையும் உத்தரவாதத்தையும் பார்க்கின்றவர்கள், அரசியலில் மட்டும் மொண்ணைத்தனமாக தேர்வைச் செய்கிறார்கள்.

அரசியல் ஒரு அறிவியக்க வெளிப்பாடு என்று உணராமல், உணர்ச்சி வசப்பட்ட, நட்பு, உறவு, சாதி, இனம், மதம், பிரதேசம் என்ற வகையில் தேர்கிறார்கள்.

தேர்வு செய்யப்படுகின்றவரின் அரசியல் அறிவு, துறைசார் நிபுணத்துவம், மக்கள் மீதான கரிசனை, பண்பு, செயற்பாட்டுத்திறன், உலக அரசியல் அவர் செலுத்தக் கூடிய செல்வாக்கு, கடந்த காலத்திலும் தற்போதும் குறித்த நபர் அல்லது நபர்கள் செய்த, செய்து வரும் அரசியல், சமூகப் பங்களிப்புகள் போன்றவற்றைப் பற்றிய எந்த மதிப்பீடும் இல்லாமல் அறிவுக்(?) கண்களை மூடிக் கொண்டு ஆதரித்து விடுகிறார்கள்.

மேலும் ஒன்றைச் சொல்லலாம். புதிய செல்போனை வாங்குகிறோம். புதிய காரை, புதிய செருப்பை, புதிய உடைகளை, புதிய பொருட்களை எல்லாம் வாங்குகிறோம். புதியவை தரமானவை. New Vertion என்பது முன்பிருந்ததையும் விட எப்போதும் Advance ஆக இருக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையும் கூட.

இவற்றில் நாம் காண முற்படும் பொது அம்சம் என்னவென்றால், புதியவை வேகமும் தரமும் பல்பயன்பாடும் இருக்கும் என்பதால். கூடவே இலகுத் தன்மையும் உள்ளது என்பதாகும்.

ஆனால் அரசியலில்? அரசியலில் இதற்கு மாறாகவே மக்கள் சிந்திக்கிறார்கள். செயற்படுகிறார்கள்.

தோற்றுப்போன, வெற்றிகளையே தராத அரசியல் தரப்புகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறோம்!

இது ஏன்?

தாம் பழகியவற்றிலிருந்து கடந்து புதிய பிரவேசத்துக்குள் நுழைவதற்குப் பதற்றப்படுகிறார்கள். பயங்கொள்கிறார்கள். காரணம், இனவாதமே. மீறிச் சென்றால் தாம் தனித்து விடுவோம் என்று அச்சமடைகிறார்கள்.

ஆகவேதான் இந்த அரசியலை முன்னெடுப்பது இலகுவானதல்ல என்ற நிலை உள்ளது.

ஏனென்றால் மக்கள் வழமையான – பாரம்பரியமான அரசியல் வழிமுறையின் வழியே நடந்து பழக்கப்பட்டவர்கள். இந்த இரண்டக நிலையில்தான் தமிழ்ச்சமூகம் சிக்குண்டுள்ளது.

தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, சிங்களச் சமூகமும்தான்.

சுயமாகச் சிந்திக்காத வரையில் எல்லாமே பிரச்சினைதான்.