—- ஜாவிட் யூசுவ் —-
எந்தவொரு எதிர்காலத் தேர்தலுக்கும் முன்னதாக அமைக்கப்படக்கூடிய அரசியல் கூட்டணிகள் குறித்து நிறைய செய்திகளை ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. சாத்தியமான ஒழுங்கமைவுகள் மற்றும் இணைவுகள் குறித்து பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற செய்திகள் பெருமளவுக்கு ஊகத்தனமானவையாக இருப்பதுடன் அரசியல் எதிராளிகள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் பூசலையும் உருவாக்குவதற்கு திட்டமிட்டு பிரசுரிக்கப்படுபவையாகவும் காணப்படுகின்றன.
நாட்டின் நிகழ்வுப்போக்குகள் தொடர்பில் மக்களுக்கு அறியத்தரும் பெறுமதியான பணியைச் செய்வது ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் பொறுப்பாக இருக்கின்ற அதேவேளை எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் ஊகத்தனமான செய்திகளை வெளியிடுவது ஏற்கெனவே இடர்பாட்டுக் குள்ளாகியிருக்கும் மக்களை எதிர்காலத் தேர்தல் ஒன்றில் அவர்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் தொடர்பில் குழப்பத்துக்குள்ளாக்க மாத்திரமே உதவும்.
இந்த ஊடகங்களின் செய்திகளில் பெருமளவானவற்றுக்கு சொந்தம் கொண்டாடுவோரோ அல்லது பொறுப்பு எடுப்பாரோ இல்லை. அத்தகைய தகவலுக்கான ஆதார மூலங்களும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. அந்த செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டால் அவற்றின் நடுநிலையையும் நம்பகத்தன்மையையும் மக்கள் எடைபோடுவதற்கு பெரிதும் உதவும்.
பொருளாதாரத் துறையில் அரசாங்கம் முன்னடு்கின்ற நடவடிக்கைகள் மீது நாட்டின் கவனம் குவிந்திருக்கின்ற அதேவேளை அரசியல் களத்தில் நாடு எடுக்கும் திசை நீண்டகால நோக்கில் அதன் எதிர்கால மார்க்கத்தை தீர்மானிக்கும்.
1978 அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கூட்டுகள் (தேர்தலுக்குப் பிறகு அவற்றை பிணைத்துவைத்திருக்கக்கூடிய முக்கியமான கொள்கை அம்சம் எதுவும் இல்லாத வகையில்) பிரதானமாக போட்டித்தவிர்ப்பு உடன்பாடுகளாகவே இருந்தன. அவை நேரடியாக தொகுதி அடிப்படையிலான தேர்தலுடன் ( First past the post electoral system ) தொடர்புடையவையாகவே இருந்தன. அந்த தேர்தல் முறை அரசியல் கூட்டுக்களில் பிரதான கட்சி அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக போதுமான ஆசனங்களை வென்றெடுப்பதை உறுதிசெய்தது. அரசாங்கத்தை அமைப்பதற்கும் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கும் பிரதான கட்சி அதன் நேசக் கட்சிகளில் தங்கியிருக்கவேண்டிய தேவை இருக்கவில்லை.
அத்தகைய போட்டித்தவிர்ப்பு உடன்பாட்டு ஏற்பாடுகளுக்கு விதிவிலக்குகளாக 1956 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1965 ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்க தலைமையில் அமைந்த 7 கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கம், 1970 ஆம் ஆண்டில் சிறிமா பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆகியவை இருந்தன.
மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த ஒரு கூட்டாக இருந்த அதேவேளை 1965 தேசிய அரசாங்கம் பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டது. அதன் விளைவாக அந்த அரசாங்கங்கள் கொள்கை அடிப்படையில் அமைந்தவையாக இருக்கவில்லை என்பதுடன் ஆரம்பம் முதலிருந்தே உட்பூசல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியும் இருந்தது.
1970 ஐக்கிய முன்னணி அரசாங்கம் இதற்கு விதிவிலக்காக இருந்தது. பொதுத்தேர்தலுக்கு வெகு முன்னதாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இடையில் ஏற்பட்ட கொள்கை இணக்கப்பாட்டின் விளைவாகவே அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டது. உண்மையில் இரு வருடங்களுக்கும் மேலாக அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் தீவிரமான பேச்சுவார்த்தைகளின் விளைவாக தயாரிக்கப்பட்ட பொதுவேலைத்திட்டம் 1970 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக கண்டி போகம்பரை மைதானத்தில் 1968 ஆம் ஆண்டு மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. அந்த கூட்டணியினால் எந்த உட்பூசலும் இன்றி 1975 வரை நாட்டை ஆட்சி செய்யக்கூடியதாக இருந்தது. அதற்கு பிறகு முரண்பாடுகள் தோன்றி இறுதியில் அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சி, சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியடைந்தன.
1978 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெரும்பாலான கட்சிகள் தேர்தலைச் சந்திப்பதற்கு அல்லது தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏதோ ஒரு வடிவிலான கூட்டணிகளிலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது. இதற்கு காரணம் 1978 அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்
முறையின் கீழ் தேர்தல் ஒன்றில் எந்தவொரு தனிக்கட்சியும் அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக வெற்றிபெற முடியாது என்ற நம்பிக்கையாகும்.
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் பெருமளவுக்கு முன்கூட்டிய கொள்கை இணக்கப்பாடு இல்லாமல் அவசர அவசரமாக கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டது என்றாலும் அந்த அரசாங்கத்தினால் அதன் முழுப்பதவிக்காலத்துக்கும் நின்றுபிடிக்கக்கூடியதாக இருந்தது. அதற்கு பிரதான காரணம் 1994 ஜனாதிபதி தேர்தலில் திருமதி குமாரதுங்கவுக்கு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மக்களால் வழங்கப்பட்ட மாபெரும் ஆணையேயாகும். 2005 ஆம் ஆண்டிலும் 2010 ஆம் ஆண்டிலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கங்களும் பிறகு கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான (2020) அரசாங்கமும் பல்வேறு கட்சிகளின் கூட்டணியாகும்.
2015 நல்லாட்சி அரசாங்கமும் கொள்கை அடிப்படையிலான கருத்தொருமிப்பு இலலாமல் அவசரமாக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டதாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற வாக்குறுதியே அந்த அரசாங்கத்தில் சகல கட்சிகளையும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே வண. மாதுளுவாவே சோபித தேரரினால் பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், அது அரசாங்கத்தை ஒன்றாக வைத்திருக்கப் போதுமானதாக இருக்கவில்லை. விரைவாகவே வெடிப்புகள் கிளம்பத் தொடங்கிவிட்டன. அதனால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்ற வாக்குறுதியையோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற வாக்குறுதியையோ அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் போனது.
கொள்கை இணைவு இல்லாத அரசியல் கூட்டணிகள் தொடர்பிலான நாட்டின் கடந்தகால அனுபவங்களின் பின்புலத்தில் நோக்கும்போது முக்கியமான கொள்கை விவகாரங்களில் முன்கூட்டியே இணக்கப்பாடு இல்லாமல் அமையக்கூடிய அத்தகைய கூட்டணிகளினால் எந்தவொரு எதிர்காலத் தேர்தலுக்கும் பி்ன்னர் நாட்டை முன்னோக்கிவழிநடத்தமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அரசியல் கட்சிகள் மத்தியில் கொள்கைக் கருத்தொருமிப்புக்கான தேடல் பல சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இதற்கு காரணம் குறிப்பாக அந்த கட்சாகளில் பலவும் தனிநபர்களும் நாடு எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் சிலவற்றில் கடுமையான வேறுபாடுகளையுடைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
நாடு அதன் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவேண்டுமானால் அந்த பொருளாதாரம் எந்த வடிவத்தை எடுக்கவேண்டும் என்பது தொடர்பில் அரசியல் சமுதாயத்திற்குள் வேறுபாடுகள் நிலவுகின்றன. அதிகாரம் பரவலாக்கப்படவேண்டுமா என்பது தொடர்பிலும் அவ்வாறு பரவலாக்கப்படவதானால் எந்த அளவுக்கு என்பது தொடர்பிலும் வேறுபாடுகள் காப்படுகின்றன.
பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறிப்பாக போரின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலும் கோட்டாபய அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்வி தொடர்பிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.
முடிவு காணப்படாத பல குற்றச்செயல்கள் உட்பட சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜுதீன் ஆகியோரின் கொலைகள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை கூறலாம். இது விடயத்தில் கட்சிக்கு கட்சி வேறுபட்ட நிலப்பாடுகள் உள்ளன.
நாட்டின் சாபக்கேடாக அமைந்திருக்கும் ஊழல் என்ற புற்றுநோயை ஒழிப்பதற்குை அல்லது குறைப்பதற்கு எடு்கப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு ஒரு சில கட்சிகளே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
எதிர்காலத் தேர்தல்களில் வெற்றிபெறக்கூடியதாக கூட்டணிகளை அமைப்பதற்காக மேற்கூறப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் பற்றி விரிவாகப் பேசுவதைத் தவிர்ப்பது அதிகாரத்தில் அமர்த்தப்பட்டதும் வெற்றிகரமான ஆட்சிமுறையை உறுதி்படுத்துவதற்கு போதுமானதல்ல. இன்றைய சீரழிவில் இருந்து நாடு மீட்சிபெற வேண்டுமானால் அதை ஆட்சிசெய்ய ஆசைப்படுபவர்களிடம் உறுதியான கொள்கை நிலைப்பாடுகளும் கடமைப்பொறுப்பும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இல்லையானால் எந்தவொரு எதிர்காலத் தேர்தலினதும் விளைவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் 2 கோடி 20 இலட்சம் சனத்தொகையின் எதிர்காலம் நம்பிக்கையற்றதாகவே இருக்கும்.
( சண்டே ரைம்ஸ், 3 செப்டெம்பர் 2023 )