வாக்குமூலம்-74 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

வாக்குமூலம்-74 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

      — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

26.07.2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ‘மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்று ரணிலிடம் விக்னேஸ்வரன் கூறினார்’ என்ற பொருள்படத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளராகத் தொழிற்படும் சுமந்திரன் பா. உ. ஊடகங்களில் செய்தி பரப்பி உள்ளார்.

உண்மையில் சுமந்திரன் கூறுவது சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. (தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்) ஜனாதிபதியிடம் கூறிய கூற்றுக்குப் பிழையான ‘பொருள் கோடல்’ ஆகும். பிழையான ‘பொருள் கோடல்’ என்பதை விடவும் சுமந்திரன் வேண்டுமென்றே சி.வி. விக்னேஸ்வரன் மீது பழி சுமத்துவதற்காகவும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாவதைக் குழப்புவதற்காகவும் வேண்டுமென்றே பின்னிய சோடிப்பு என்பதே பொருந்தும். எங்கே இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்ந்து விட்டால் தம்மைப் போன்ற பிழைப்பு அரசியல் நடத்துபவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகிவிடும் எனும் நோக்கில் இவர்கள் போடும் ஆட்டங்களும் குத்துக் கரணங்களும் சொல்லிமாளாது. 

வழமை போல் தமிழரசுக் கட்சியும் அதன் பேச்சாளரான சுமந்திரனும் தமிழ் மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்கித் தமிழ்த் தேசிய அரசியலைக் குழப்பி அதில் அரசியல் குளிர்காய முயல்வதற்கு இதுவுமொரு உதாரணம். 

இதுவரையில் வடக்குக் கிழக்கில் இயங்குகின்ற எந்தத் தமிழ்க் கட்சியோ அல்லது எந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரோ மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்று கூறியது கிடையாது. 

அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி-சமத்துவக் கட்சி-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி-தமிழ் மக்கள் கூட்டணி-ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய ஏழு கட்சிகள் இணைந்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனும் மொத்தம் எட்டுத் தமிழ்க் கட்சிகளுடன் இயங்கும் ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளைச் சீர் செய்வதற்கான ஆலோசனைகளை 08.05.2023 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து. அது குறித்து 15.05.2023 அன்று ஜனாதிபதிக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே நடந்த கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனும் அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவருமான கலாநிதி கா. விக்னேஸ்வரனும் 08.06.2023 அன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவைச் சந்தித்தமை; 15.07.2023 அன்று அதிகாரப் பகிர்வு இயக்கத்தினதும் செல்வநாயகம் அறக்கட்டளையினதும் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற ’13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும்-இந்தியாவின் வகிபாகமும்’ பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் பத்துத் தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலுக்கு அளித்த ஆதரவு அரசியல் பொதுவெளியில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் – பிரதிபலிப்பு; இந்தியப் பிரதமர் மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் 21.07.2023 அன்று டில்லியில் நடந்த சந்திப்பின்போது 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையும் விரைவான மாகாண சபைத் தேர்தலையும் இந்தியா வலியுறுத்தியமை-இலங்கை திரும்பிய ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான கலாநிதி கா. விக்னேஸ்வரனையும் அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் ஆலோசனைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில்காத்திரமான பங்களிப்பை வழங்குவதில் பிரதான வகிபாகத்தை வகிக்கும் சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. யும் 24.07.2023 அன்று அழைத்துப் பேசியமை; இறுதியாக 26.07.2023 அன்று நடைபெற்ற பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பு என்று எல்லாமே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலின் ‘சங்கிலிக் கோர்வை’ நிகழ்வுகளாகும். அரசியலை அறிவுபூர்வமாக அவதானிக்கும் எவருக்கும் இது எளிதில் புரியக்கூடிய ஒன்றே.  

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய எத்தனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான அரசியல் சூழ்நிலையை இலகுவாக்கிக் கொடுப்பதுதான் தமிழர் தரப்பின் இலக்காக இருக்க வேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சியும் அதனோடிணைந்து சில தமிழ்க் கட்சிகளும் சுமந்திரனை வைத்து இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதற்கான ஒரு ‘முஸ்தீபு’ தான் மாகாண சபைத் தேர்தல் வேண்டாமென்று சி.வி. விக்னேஸ்வரன் கூறியதாகச் சுமந்திரன் ஊடகங்களில் பரப்பும் பிழையான செய்தியாகும் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

சுமந்திரனிடம் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களின் மீதுள்ள அக்கறையை விடவும் தனது வித்துவங்களை விளம்பரப்படுத்தும் தன்முனைப்புத்தான் கூடுதலாகத் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ் மக்களுக்குப் பாதகமானது. 

‘யார் குத்தியும் அரிசியாகட்டும்’ என்று பரந்துபட்டுச் சிந்தியாமல், தாங்கள் செய்யாததை-தங்களால் முடியாததை வேறு எவரையும் (அதிகாரப் பகிர்வு இயக்கத்தை) செய்ய விடக்கூடாது என்ற குறுகிய அரசியல் நோக்கமே தமிழரசுக் கட்சியினதும் அதற்குத் துணை போகும் ஏனைய தமிழ்க் கட்சிகளினதும் மனப்போக்கு ஆகும்.

இவ்வருடத்திற்குள் எந்தத் தேர்தலும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல்; அதற்குப் பின்னர்தான் மாகாண சபைத் தேர்தல் என்று ஜனாதிபதியே கூறியும் உள்ளார். 

இந்த நிலையில், உத்தேச மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்படுதல் தமிழர்களுக்கு நன்மை அளிக்கின்ற ஒரு விடயம்தானே. இதன் அர்த்தம் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்பதில்லையே. 

13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள் பல மத்திய அரசினால் மீளக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பகிரப்பட்ட சில அதிகாரங்கள் ஐதாக்கப்பட்டுள்ளன. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற்ற பின்னர்-ஐதாக்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் செறிவாக்கப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதுதானே தமிழ் மக்களுக்கும் நன்மை தரும். 

இதனைத் தமிழரசுக் கட்சியினர் ஏன் எதிர்க்க வேண்டும்? உடனடி மாகாண சபைத் தேர்தல் மட்டும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தந்து விடுமா? அப்படியேயாயினும் இதற்கு முதல் எங்கேயாவது எக்காலத்திலாவது தமிழரசுக்கட்சினர்  13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டுமெனறோ, உடனடியாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றோ வலியுறுத்திக் கூறியிருக்கிறீர்களா?  

கிழக்கு மாகாண சபை மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் கழிந்துள்ள கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதிருந்த தமிழரசுக் கட்சி, அதிகாரப் பகிர்வு இயக்கம் 13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சீர் செய்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை 08.05.2023 இல் ஜனாதிபதியிடம் கையளித்து அது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட வேளையில்தான் தமிழரசுக் கட்சி தனது நெடுந் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அதனைக் குழப்பும் வகையில் முதலில் மாகாண சபைத் தேர்தலுக்கு குரல் எழுப்புவதற்கான பின்னணி என்ன? 

அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவருமான கலாநிதி கா. விக்னேஸ்வரன் 29.07.2023 அன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ‘தேர்தலை வைக்குமாறு கூறுபவர்கள் தேர்தலைக் காரணங்காட்டி வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெறுவதற்காகவே மாகாண சபைத் தேர்தலை உடனடியாக வைக்கும் படி கோருகின்றனர்’ என்று கூறியிருப்பது தமிழ் மக்களின் கவனத்திற்குரியதாகும். 

13ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர் செய்து அதனை முழுமையாக அமுல் செய்வதற்கான தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்திச் செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எத்தனங்களை ஏன் தமிழரசுக் கட்சி எதிர்க்க வேண்டும்?

கடந்த காலங்களில் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் மற்றும் ஜனாதிபதி சந்திரிகா சமர்ப்பித்த அரசியல் தீர்வுப் பொதி உட்படத் தமிழர்களுக்குக் கிடைத்த வாய்ப்பான சந்தர்ப்பங்களையெல்லாம் நேர்மறையாக அணுகாது (Positive Approach) கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு அவற்றை எதிர்த்துச் ‘சண்டித்தனம்’ பண்ணியதால் தமிழர் தரப்பின் அரசியல் மற்றும் இராணுவ சக்திகள் சாதித்தது என்ன? 

கடந்த காலத்து அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நிகழ்காலத்தைக் கையாள்வதுதான் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான அறிவுபூர்வமான செயற்பாடாகும். அதனை விடுத்து ‘வைத்தால் குடும்பி. வழித்தால் மொட்டை’ என்ற எதிர்மறையான அணுகுமுறை தமிழர்களுக்குப் பின்னடைவுகளையே ஏற்படுத்தும். 

இவற்றிற்கு மத்தியில், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை 01.08.2023 அன்று அழைத்துப் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதில் உள்ள அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் நடத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம் இந்தியப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்ற செய்தியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா தமிழர்களுக்குத் தரும் செய்தியைத் தமிழர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். நெடுங்காலமாக இந்தியா இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததொன்றே. இலங்கைத் தமிழர் தரப்புத்தான் அதனை ‘அசட்டை’ செய்து வந்திருக்கிறது. 

மேலும், இலங்கை அரசியலைப் பொறுத்த வரை இந்தியாவின் அனுசரணை இல்லாமல்-இந்தியாவின் அழுத்தம் இல்லாமல் 13 ஆவது திருத்தம் அதன் மூல அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் அரிது. 

இதற்குப் பின்னரும் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் ’13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை’ – ’13 வது திருத்தம் தீர்வாகாது’ – ‘ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம்’ – வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’ தான் அதி குறைந்தபட்சத் தீர்வு’ என்ற சொல்லாடல்களை மீண்டும் மீண்டும் நெட்டுருப் பண்ணி அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிராமல், அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முழுமையாக இந்தியாவை அனுசரிக்கும் வகையில் முதலில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதுதான் தமிழர் தரப்பிற்கு நடைமுறையில் நன்மை தருவதாகும்.  

‘இறைச்சி சாப்பிட விருப்பம் என்பதை வெளிப்படுத்துவற்காக எலும்பை மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் மாட்டிக்கொண்டு திரிய வேண்டியதில்லை’ என்ற கிராமத்துச் சொற்றொடரின் அர்த்தத்தைத் தமிழ் மக்கள் மனதில் இருத்திச் செயல்படுவதே உபாயம் நிறைந்ததாகும்.