ஜனாதிபதி தேர்தலின் மீது திரும்பியிருக்கும் எதிரணிக்கட்சிகள் கவனம்

ஜனாதிபதி தேர்தலின் மீது திரும்பியிருக்கும் எதிரணிக்கட்சிகள் கவனம்

    — வீரகத்தி தனபாலசிங்கம் —

    உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அணிதிரட்ட முடியாமற்போன எதிரணிக் கட்சிகள் அதைப் பற்றி பெரும்பாலும் பேசாமலே விட்டுவிட்டன. 

   இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படு்த்துவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசத்தொடங்கியதை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு அவரிடம் அந்த கட்சிகள் கேட்டன. அந்த கோரிக்கையையும் ஜனாதிபதி கவனத்தில் எடுக்காத நிலையில் அவை பிறகு எதையும் செய்யமுடியாமல் பேசாமல் இருந்தன. 

   ஆனால், முதலில் ஜனாதிபதி தேர்தலை  அடுத்த வருட முற்பகுதியில் அல்லது  நடுப்பகுதியில்  நடத்துவதற்கான சாத்தியம் குறித்து அரசாங்கம் இப்போது பேசத் தொடங்கியதும் அந்த தேர்தலில் எதிரணியின் கவனம் திரும்பியிருக்கிறது. உள்ளுராட்சி, மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்துவதை அவை கைவிட்டுவிடுமோ என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. 

   எதிரணியின்  கவனத்தை திசைதிருப்புவதில் அரசாங்கம் வெற்றிகண்டிருக்கிறது எனலாம்.

   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தங்களது ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கெனவே அறிவித்துவிட்ட  நிலையில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதன் வேட்பாளராக கடந்த வாரம் அநுரா குமார திசாநாயக்கவை  அங்கீகரித்திருக்கிறது. தொலைக்காட்சி சேவையொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரே  இதை அறிவித்தார். 

 ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.  அமைச்சர்கள்  சிலர் உட்பட அதன் பாராளுமன்றக் குழுவின் ஒரு பிரிவினர் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கான தமது விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கும் நிலையில் இன்னொரு பிரிவினர் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவரை வேட்பாளராகக் களமிறக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். முன்னர் ஒரு கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று தேர்தலில் பொதுஜன பெரமுன விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது குறித்து இடைக்கிடை பேசுகிறார். பொதுஜன பெரமுன தங்களுக்கு ஒரு அச்சுறுத்தலே இல்லை என்று கடந்த வாரம் கூறிய அவர் கூட்டணியொன்றை அமைக்க முன்வருமாறு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருக்கிறார். சுதந்திர கட்சியின் மக்கள் ஆதரவின் தற்போதைய இலட்சணத்தில் அவருடன் கூட்டுச் சேர எவர் முன்வரவார் என்பது ஒரு பிரச்சினை.

   மறுபுறத்தில், கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியை அடுத்து பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி  பாராளுமன்றத்தில் தனியான அணிகளாக செயற்படுபவர்கள் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அந்த முயற்சிகளில் கூட ஒரு தடுமாற்றத்தை அவதானிக்க முடிகிறது.

  பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்திய பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் — டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் பிறகு விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவுடனும் ஜே.வி.பி. யுடனும் பொதுநிலைப்பாடுகளுக்கு வருவதற்கான சாத்தியம் குறித்து ஆராய தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கிறது.

  ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை சுதந்திர மக்கள் காங்கிரஸ் நம்பிக்கையுடன் முன்னெடுக்கக்கூடிய சாத்தியம் குறித்து இது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

   தேசிய மக்கள் சக்தி முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கத்துக்கு எதிராக மற்றைய எதிரணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதில் கூட இதுவரையில் விருப்பத்தை வெளிக்காட்டாமல் இருந்துவரும் நிலையில் கூட்டணியொன்றை அமைக்க முன்வருவதற்கு சாத்தியமில்லை.

   ஜே.வி.பி. அதன் வரலாற்றில் மக்கள் செல்வாக்கின் உச்சநிலையில் தற்போது இருப்பதாக நம்பும் அதன் தலைவர்கள் தேசிய மக்கள் சக்தி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிடக்கூடிய எந்தவொரு  கூட்டணி ஏற்பாட்டையும் வேறு கட்சிகளுடன் செய்துகொள்ள  விரும்பப்போவதில்லை.

   ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஆதரிக்கும் ஒரு முகாம், ஆதரிக்காத இன்னொரு  முகாம் என்று இன்று நாட்டில் இரு அரசியல் முகாம்கள் மாத்திரமே இருக்கின்றன என்று  ஜே.வி.பி. தலைவர் திசாநாயக்க கூறியதாகக்கூட செய்திகள் வெளியாகின. 

   இலங்கை இதுவரையில் எட்டு ஜனாதிபதி தேர்தல்களைக் கண்டிருக்கிறது. தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வந்த பிறகே தனியாகவா அல்லது   கூட்டணி ஒன்றின்  சார்பிலா வேட்பாளரை நிறுத்துவது  என்பதை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் தீர்மானித்ததை கண்டோம். ஆனால் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, அதற்கு இன்னமும்  ஒரு வருடம் இருக்கும் நிலையிலேயே கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து  அவற்றின் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. .

  அண்மைக்காலத்தில் பல்வேறு சுயாதீன அமைப்புக்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள்  ஏனைய சகல கட்சிகளையும் விட தேசிய மக்கள் சக்தியே மக்கள் ஆதரவில் முன்னணியில் இருப்பதாக காண்பித்தாலும் கூட எந்தவொரு கட்சியுமே இன்று மக்களின் அமோக ஆதரவுடன் இல்லை.  கூட்டணிகளை அமைப்பதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியில்லை.  ஜே.வி.பி. தலைவர்கள் தங்களுக்கு இருக்கும் ஆதரவு குறித்து மிகை மதிப்பைக் கொண்டிருக்கிறார்களா இல்லையா  என்பதை ஒரு தேர்தல் மாத்திரமே நிருபிக்கும்.

    அதேவேளை எதிரணிக்கட்சிகள்   நம்பிக்கையணர்வுடன் பேசுவதாகவும் இல்லை. உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் அரசாங்கம்  தாமதிக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் அவை கிளப்புகின்றன. 

  இதுவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் 2010, 2015  தேர்தல்களில் மாத்திரமே  பதவியில் இருந்த ஜனாதிபதிக்கு எதிராக எதிரணிக் கட்சிகள் பொது வேட்பாளர்களை நிறுத்தின. அவை  முதல் தடவை தோல்வியையும் அடுத்த தடவை வெற்றியையும் கண்டன. ஆனால் அடுத்த தேர்தலில் எதிரணி பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்ட கட்சிகள் அதை வாபஸ் பெறும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. 

   கூட்டணி அமைக்கும் முயற்சிகளின்போது பொதுவேட்பாளரை நிறுத்தும் யோசனை முன்வைக்கப்படுவதை முன்கூட்டியே தவிர்க்கும் நோக்கத்துடன்தான் வேட்பாளர்களின் பெயர்களை ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் முன்கூட்டியே  அறிவித்திருக்கவும் கூடும். 

    எதிரணியின் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட இரு ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர்களுக்கு சவாலாக விளங்கிய மகிந்த ராஜபக்ச போன்று தற்போதைய ஜனாதிபதி அரசியல் ரீதியில் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளராக விளங்குவார் என்று கூறமுடியாது. ஐக்கிய தேசிய கட்சி மக்கள் செல்வாக்கைப் பொறுத்தவரை தொடர்ந்தும் மிகவும் பலவீனமான நிலையில்தான்  இருக்கிறது.

   ஜனாதிபதியாக வந்த பிறகு பொருளாதாரத்தை மீட்டெடு்க்க விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை எந்தளவுக்கு மீட்டெடுக்க உதவியிருக்கின்றன என்பதும் தெரியவில்லை.

  வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும்  பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க இலங்கை வரலாறு காணாத மாபெரும் மக்கள் கொந்தளிப்புக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்திற்குள் கணிசமானளவுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கிய திசையில் நாட்டை  வழிநடத்திச் செல்லும்  தலைவர் என்று  விக்கிரமசிங்கவை மக்கள் முன்னிறுத்த முடியும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்றாலும் கூட பரந்த கூட்டணி ஒன்று அவர்களுக்கு நிச்சயம் தேவை. 

  அத்தகைய கூட்டணியொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி பேசுகின்றபோதிலும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பதே  தற்போது ஜனாதிபதியின் பிரதான தந்திரோபாயமாக இருக்கிறது. இது எந்தளவுக்கு உருப்படியான கூட்டணியொன்றை உருவாக்க உதவும்? 

  பதவிகளை எதிர்பார்த்துப் போகக்கூடியவர்களை தவிர,  வேறு கட்சிகள் கூட்டணி சேருவதற்கு விரும்பி முன்வரக்கூடிய நிலையில் ஜனாதிபதியின் கட்சியின் மக்கள் செல்வாக்கு இல்லை.

  இரு ஜனாதிபதி தேர்தல்களில் தோல்விகண்ட பிறகு விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுதைத் தவிர்த்தார். அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்பது நிச்சயம். மக்களின் ஆணையுடன் ஒரு தடவையேனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்த பிறகு  அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது அவரது விருப்பமாக இருக்கக்கூடும்.

  கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தையேனும் வென்றெடு்க்க முடியாத அளவுக்கு தேர்தல் வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஒரு கட்சியின் தலைவர், இன்று அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு பெரிய கூட்டணிகளை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை எதிரணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்ற அளவுக்கு — அவரைத் தவிர பொருத்தமான அல்லது திறமையான வேட்பாளர் வேறு கட்சிகளில் இல்லை என்று ஒரு மருட்சி  உருவாக்கப்படுகின்ற அளவுக்கு இலங்கையின் அரசியல் நிலைவரம் விசித்திரமானதாக  மாறியிருக்கிறது.